search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway Station"

    • நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ. உ. சி. மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது
    • மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி, தீயணைப்பு வீரர்களின் சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    நெல்லை:

    76-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உற்சாகமாக கொண்டா டப்பட உள்ளது. இதை யொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

    வ.உ.சி. மைதானம்

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ. உ. சி. மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சி, தீயணைப்பு வீரர்களின் சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மேலும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கவுரவிப்பு, மாவட்டம் மற்றும் மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கி சுதந்திர தினவிழாவில் கலெக்டர் கார்த்திகேயன் வழங்குகிறார்.

    இதனையொட்டி பாளை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 2 நாட்களாக போலீசார், என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் வ.உ.சி. மைதானத்தில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையம்

    நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவின்பேரில் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வெளி மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாவட்ட எல்லைகளில் நிறுத்தி சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படட்டு வருகிறது.

    இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமயில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது தண்டவாளங்கள், பிளாட்பாரங்கள் உள்ளிட்ட பகுதியில் மெட்டல் டிரெக்டர் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து ரெயில் நிலைய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை இருப்புபாதை போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். இந்த சோதனையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ், சத்தியராஜ், சங்கரபாண்டியன், ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், அருள் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

    • கவுரி சங்கரின் மனைவியை, பிராங்கிளின் கேலி செய்தார்.
    • தலைமறைவாக உள்ள கவுரிசங்கர் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 25). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே உள்ள அவரது பெரியம்மா வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பழைய 8-வது பிளாட்பாரம் அருகே கடந்த 7-ந் தேதி இரவு பிராங்கிளின் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிராங்கிளினை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த கொலை சம்பந்தமாக 4 தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னையை சேர்ந்த கும்பல் பிராங்கிளினை வெட்டி கொன்றது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று சேலம் வழியாக செல்லும் தன்பாத் ரெயிலில் சேலத்திற்கு தப்பிய கொலையாளிகள் சென்னை ரெட்கில்ஸ் வ.உ.சி. தெருவை சேர்ந்த லோகேஷ்வரன் (28), மணலியை சேர்ந்த கார்த்தி (28) ஆகியோரை கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து பிராங்க்ளின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கூட்ரோடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பதுங்கி இருந்த சென்னையை சேர்ந்த ராகுல் (வயது 22), திவாகர் (21), அரக்கோணம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சத்யா (24), புளியமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வா (25), அம்மனூர் பகுதியை சேர்ந்த தர்மேஷ் (20) ஆகியோரை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் கொலையாளிகள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    பிராங்கிளின் மற்றும் சென்னையை சேர்ந்த அவரது நண்பர் கவுரிசங்கர் ஆகியோர் சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனர். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மேலும் கவுரி சங்கரின் மனைவியை, பிராங்கிளின் கேலி செய்தார்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு முற்றியது. கவுரி சங்கர் சென்னையிலேயே ஜான் பிராங்ளினை கொலை செய்ய திட்டமிட்டார்.

    இதனை அறிந்த பிராங்கிளின் சென்னையில் இருந்து தப்பி வந்து கடந்த ஒரு மாதமாக அரக்கோணத்தில் உள்ள தனது பெரியம்மா வீட்டில் தங்கிருந்தார்.

    இதனை அறிந்து கொண்ட கவுரி சங்கர் கூட்டாளிகளான எங்களுக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் சேர்ந்து பிராங்கிளினை வெட்டி சாய்த்தோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்.

    மேலும் தலைமறைவாக உள்ள கவுரிசங்கர் உள்பட 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் நடக்கும் இந்த பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

    அதன்படி விருதுநகர் ரெயில் நிலைய வளர்ச்சிப் பணிகள் முதல்கட்டமாக ரூ. 7.73 கோடியில் 2-ம் நுழைவு வாயில், 2-ம் நுழைவு வாயிலில் புதிய ரயில் நிலையக் கட்டடம், அணுகு சாலைகள், சுற்றுச்சுவர் புனரமைப்பு, வேலிச் சுவர்கள் புனர மைப்பு, ரெயில் நிலைய வளாகத்தை அழகு படுத்துதல், உட்புறச் சீரமைப்பு, பயணிகள் தொடர்பு கொள்ளும் பகுதி, மேம்படுத்தப்பட்ட குடிநீர்வசதி, அறிவிப்பு பலகைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலைய அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா விருதுநகர் ரெயில் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன், மாணிக்கம் தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. விருதுநகர் நகர் மன்ற தலைவர் மாதவன், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    இந்த விழா பாரம்பரிய பண்பாட்டை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சியோடு தொடங்கியது.நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு " இந்திய ெரயில்வேயின் ஆகச்சிறந்த முன்னேற்பாடுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை,ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்
    • திருச்சிரா ப்பள்ளி ரெயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளது. கடந்த காலங்களில் புதுவை ரெயில் நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை ரெயில் பாதை இந்தியாவின் பழமையான ரெயில் இணைப்புகளில் ஒன்றாகும், 1879-ம் ஆண்டு இந்தியாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது புதுவை ரெயில்வே நிறுவனத்தால் கட்டப்பட்டது.

    தென்னிந்திய ரெயில்வே யின் மேற்பார்வையில், புதுவை நகரையும், துறை முகத்தையும் தென்னிந்தியா வுடன் இணைக்க மற்றும் புதுவை மற்றும் விழுப்புரம் இடையே ரெயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    அப்போது பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே முழுப் பகை இருந்தபோதிலும் பொருளாதார வளர்ச்சியை பெற புதுவை ரெயில்வே நிலையம் கட்டமைக்க ப்பட்டது.

    இந்திய ரெயில்வேயின் தெற்கு ரெயில்வே மண்ட லத்தால் இயக்கப்படும் இந்த நிலையம் திருச்சிரா ப்பள்ளி ரெயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளது. கடந்த காலங்களில் புதுவை ரெயில் நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இல்லை.

    கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை பாழடைந்த கட்டிடம் போல மக்கள் நடமாட்டமின்றி ரெயில் நிலையம் இருந்தது.

    ஆனால், அதன் பிறகு மின்மயமாக்கப்பட்டு, புதிய பிளாட்பார்ம்கள் உருவாக்கப்பட்டு நாட்டின் தலைநகர் முதல் அண்டை மாநிலங்களுக்கு புதிய ரெயில் சேவை அறிமுகப்ப டுத்தப்பட்டது.

    தற்போது புதுவை ரெயில் நிலையத்தில் இருந்து மங்களூரு , கன்னியாகுமரி , பெங்களூரு , கொல்கத்தா , டெல்லி , புவனேஷ்வர் மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினசரி அல்லாத ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதுதவிர சென்னை , விழுப்புரம் மற்றும் திருப்பதி ஆகியவற்றுடன் தினசரி ரெயில் சேவையும் உள்ளது. புதுவை ரெயில்வே நிலையத்தை மாதிரி ரெயில்வே நிலையமாக மாற்ற ரெயில்வே துறை பணிகளை செய்து வந்தது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் 508 ரெயில்வே நிலையங்கள் ரூ.25 ஆயிரம் கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அரக்கோணம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, விழுப்புரம் சந்திப்பு உள்ளிட்ட 18 ரெயில்வே நிலையங்கள் ரூ. 515 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதுவை ரெயில் நிலையம் ரூ.93 கோடியில் நவீனமயமாக்கப்பட உள்ளது.இந்த திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், ராவ்சாகப் பாட்டில் தானாவே, தர்ஷனா ஜர்தோஸ் ஆகியோர் பங்கேற்றனர். புதுவை ரெயில்வே நிலையத்தில் பிரதமரின் காணொலி காட்சி திரையிடப்பட்டது. புதுவை ரெயில்வே நிலையத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி , வி.பி.ராமலிங்கம் , அசோக் பாபு, பா.ஜ.தா.மாநில தலைவர் சாமிநாதன், போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ரெயிவே அதிகாரிகள் பங்கேற்றனர்.

    புதுவை ரெயில் நிலையம் பழமை மாறாமல் நவீனமய மாக்கப்பட உள்ளது. இதன்படி புதுவை ரெயில் நிலைய கட்டிடஙகள் தரம் உயர்த்தப்பட்டுகூரை பிளாசா, வணிக மேண்டலம், உணவகம், சிறுவர் விளையாட்டு வதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக தனித்தனி நுழைவு மேற்றும் வெளியேறும் வழி, வாகன நிறுத்தும் இடம், நகரும் படிக்கட்டு, டிராவலேட்டர், மாற்று திறனாளிகளுக்கு வசதிகள் அமைக்கப்பட உள்ளது.

    • சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

    திருவள்ளூர் ரெயில் நிலையம் வழியாக தினந்தோறும் சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணி மற்றும் காட்பாடி வழியாக திருப்பதி, மும்பை, பெங்களூர் செல்லும் விரைவு ரெயில்களும், மின்சார புறநகர் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் என நாள் ஒன்றுக்கு 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்தும் செல்கின்றன.

    மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் இருந்து நாள்தோறும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வியாபாரிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என சுமார் 1 லட்சம் பேர் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    திருவள்ளூரில் இருந்து சென்னைக்கும், அரக்கோணத்திற்கும் செல்லும் ரெயில்களில் அதிகளவில் பயணிகள் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த ரெயில் நிலையமாக இந்த திருவள்ளூர் ரெயில் நிலையம் உள்ளது.

    திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 6 நடைமேடைகளில் இரு புறமும் மேம்பாலம் இருந்தும் ஒரு சிலரைத் தவிர ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர் என அனைத்து பொது மக்களும் ரெயில் தண்டவாளத்தை கடந்து தான் செல்கின்றனர். இதனால் அடிக்கடி ரெயில்கள் மோதி விபத்துக்களும் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மணவாளநகர் பகுதியில் இருந்து பெரிய குப்பம் செல்லும் பொது மக்களும் ரெயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் கடந்த 2019-ல் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை, மற்றும் எஸ்கலேட்டர் தானியங்கி நடை மேடை, முதியவர்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாததால் அவர்களின் வசதிக்காக லிப்ட் வசதி, ஆகியவை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

    2019 - ல் கொரோனா தொற்று காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் காலதாமதமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் ரெயில் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கை, மழை நீர் ஒழுகுதல், மின் விளக்கு, ஒலி பெருக்கி வசதி, சி.சி.டிவி கேமரா வசதி, மின்சாரம் தடைபடும் நேரங்களில் பயன் படுத்தக் கூடிய தடை இல்லா மின்சார விளக்கு வசதி, நடைமேடை செல்லும் வழி காட்டி பலகைகள், மின்னணு தகவல் பலகை, டைல்ஸ் பதிக்கப்பட்ட நடந்து செல்லும் பாதை, நீர் வடிகால் அமைப்பு, குப்பை தொட்டிகள் போன்ற ஒரு சில பணிகள் நிறைவடையாததால் மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    ரூ. 6 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த பணியானது 2 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ரெயில் பயணிகளின் அத்தியாவசிய பணிகள் முடிவடையாமல் இருப்பதால் ரெயில் பயணிகள் ஆபத்தான நிலையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலையே மேலும் தொடர்கிறது.

    அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்ல சாய்தளம் அமைக்க வலியுறுத்தியும் அது சம்மந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

    இதனால் சாய்தளம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொது மக்கள் பயணிகள் ரெயில் தண்டவா ளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மீதமுள்ள சுரங்கப்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் முதிய வர்கள் படியில் ஏறி இறங்க முடியாத காரணத்தால் லிப்ட் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்றும், எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடையை முதல் பிளாட்பாரத்திலும் அமைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏழைகளின் ரதம் என்று அழைக்கக்கூடிய ரெயில் போக்குவரத்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
    • தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்

    உடுமலை,ஜுலை.31-

    குறைவான செலவில் நிறைவான பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தி தருவது ரெயில் போக்குவரத்து. ஏழைகளின் ரதம் என்று அழைக்கக்கூடிய இந்த போக்குவரத்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.இதன் காரணமாக ஆன்மீகப் பயணம் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட நீண்ட தூர பயணம் செய்பவர்களின் முதல் தேர்வாக ரெயில் போக்குவரத்து உள்ளது. அந்த வகையில் கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு முருகனை தரிசிக்க மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.இந்த நிலையில் சனி ஞாயிறு வார விடுமுறை யொட்டி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நேற்று உடுமலை ரெயில் நிலையத்தில் திரண்டனர். இதன் காரணமாக டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியதால் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு மாற்று ஏற்பாடாக அங்கு அமைக்கப்பட்ட தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரமும் சரியாக செயல்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். நீண்ட நேர காத்திருப்புக்கு பின்பு ஒரு வழியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயிலில் ஏறிச் சென்றனர். மேலும் வார விடுமுறை, பொது மற்றும் அரசு விடுமுறைகள், பண்டிகை நாட்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்தால் பொதுமக்கள் அதிகளவில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • விருதுநகர் ரெயில் நிலையத்தில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுகிறது.
    • எம்.பி.-அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    விருதுநகர்

    மதுரை கோட்டத்தில் 4-வது பெரிய ரெயில் நிலையமான விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலை யத்தை ரூ.15 கோடியில் மேம்படுத்த அம்ருத்திட்டத்தின் கீழ் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ரூ.8 கோடி மதிப்பில் ரெயில் நிலைய முகப்பு நவீனப்படுத்தப்படு வதுடன் ரூ.17 கோடியில் ரெயில்நிலைய உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுகிறது.

    1-வது நடைமேடை முதல் 5-வது நடைமேடை வரை மேம்பாலம் அமைத்தல், நடைமேடை களுக்கு மேற்கூரை அமைத்தல், விப்ட் வசதி, நவீன கழிவறை வசதிகள் கிழக்கு பகுதியில் நுழை வாயில் டிஜிட்டல்போர்டு, மழை நீர் வடிகால், உணவு விடுதி வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப் பட உள்ளது. இத்திட்டம் வருகிற 5-ந் தேதி பிரதமரால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரை மண்டல ரெயில்வே அதிகாரிகள் மாணிக்கம்தாகூர் எம்.பி.யுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர். முதலில் ரெயில் நிலைய முகப்பு நவீனப்படுத்தப்படும் அதன் பின்னர் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தனர். அப்போது மாணிக்கம் தாகூர் எம்.பி. உள் கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்துவதில் தாமதம் கூடாது என வலியுறுத் தினார். மேலும் ரெயில் நிலையத்தின் முன்பு வாகனங்கள் நிறுத்துமிடம் முறையாக அமைக்க வேண்டும், ரெயில் நிலை யத்தில் முறையான விசாரணை அலுவலகம், ரெயில்கள் குறித்த அறி விப்பு ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும், ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகளை கிடப்பில் போடாமல் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஜங்சன் பிரதான சாலையில் இருந்து ரெயில் நிலையம் முகப்பு பகுதி வரை ஊர்வலமாக சென்றனர்.

    சேலம்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில்இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது, அதன்படி திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஜங்சன் பிரதான சாலையில் இருந்து ரெயில் நிலையம் முகப்பு பகுதி வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட முயற்சி செய்த 130 பேரை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் ரெயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
    • பொது வகுப்பு பயணிகளுக்காக இந்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரெயில் நிலையங்களில் உள்ள பொது இருக்கை பெட்டிகளுக்கு அருகில் உள்ள நடைமேடைகளில் குறைந்த விலை சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், ராயகடா, கோராபுட் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் முதல்கட்டமாக பொது வகுப்பு பயணிகளுக்காக இந்த சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    மேலும் ரெயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, விரைவில் பொது வகுப்புப் பெட்டிகளில் குறைந்த விலை உணவுகள் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் வழங்கப்பட உள்ளன.

    "பொது பெட்டிகள் ரெயிலின் இரு முனைகளிலும் அமைந்திருப்பதால், பயணிகள் தங்கள் தேவைகளுக்கு விரைந்து செல்ல வேண்டும்.

    எனவே பயணிகளின் சிக்கனமான உணவு, தின்பண்டங்கள் மற்றும் குடிநீர் சேவையை எளிதாக்கும் வகையில் இந்த பெட்டிகளின் இருப்பிடங்களுக்கு அருகில் ஸ்டால்கள் அமைக்க சிறப்பு கவனம் எடுக்கப்பட்டுள்ளது.

    ரெயில் நிலையங்களில் இதுபோன்ற ஸ்டால்களை அமைப்பதில் போதுமான கவனம் செலுத்துமாறு அனைத்து துறைகளுக்கும் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியில் மேலூர் ரெயில் நிலையம் நடைபாதை அமைக்கப்பட்டு தினமும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது.
    • இந்த பகுதியில் இருக்கும் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்கும் வகையில் மக்கள் நலன் கருதி, மாணவ-மாணவிகள், பெண்கள், வியாபாரிகள், பாதசாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ரெயில்வே கிராசிங் நடைமேடை பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. அதை ஒழுங்குப்படுத்தும் பணியில் காவல்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியில் மேலூர் ெரயில் நிலையம் நடைபாதை அமைக்கப்பட்டு தினமும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது. பொதுமக்களும் பயனடைந்து வந்தனர்.

    தற்போது ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ள தால், தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் இருபுறமும் நடைமேடை அமைக்கப்பட்டு ெரயில்கள் நின்று செல்கின்றன. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    2-ம் கேட் பகுதியில் ெரயில்கள் வந்து செல்லும் நேரங்களில் ரெயில்வே கேட் மூடப்படுகின்றன. அந்த சமயத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலக பணியாளர்கள், வியாபாரிகள், பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் அந்த பகுதியில் ெரயில்வே கிராசிங் நடைமேடை அமைத்துத் தர வேண்டுமென்று அமைச்சர் கீதாஜீவனிடம் பல்வேறு பொதுநல அமைப்புகள் கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து, செல்வநாயகபுரம், ஆண்டாள் தெரு சந்திக்கும் பகுதியிலிருந்து ஏறி, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, ரஹ்மத்துல்லாபுரம் பகுதியில் இறங்கும் வகையில் ெரயில்வே கிராசிங் நடைமேடை அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இரு இடங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், பயணிகள் நலச்சங்கம் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த பகுதியில் இருக்கும் போக்குவரத்து நெருக்கடிகளை குறைக்கும் வகையில் மக்கள் நலன் கருதி, மாணவ-மாணவிகள், பெண்கள், வியாபாரிகள், பாதசாரிகள் உள்ளிட்டோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ரெயில்வே கிராசிங் நடைமேடை பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம் என்று கூறினார்.

    அப்போது, மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின், கவுன்சிலர் சந்திரபோஸ், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், பாலகுருசாமி, ரெயில்வே துணை மண்டல பொறியாளர் முத்துக்குமார், வருவாய்துறை ரம்யா தேவி, நில அளவைபிரிவு சார் ஆய்வாளர் சக்திவேல், தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், பிரம்மநாயகம், ஆனந்தன், அந்தோணி முத்துராஜா மற்றும் கருணா, மணி, அல்பர்ட், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் இன்று சிறு வணிகர்களை வதைக்கும் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அறவழி ஆர்ப்பாட்டம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். தெற்கு மாவட்ட தலைவர் கணேசன், மாநில துணைத்தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், மாவட்ட துணைத்தலைவர் காமாட்சி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஒருங்கிணை ப்பாளர் அருண்குமார், மாநில இளைஞரணி தலைவர் ஜெயபாலன், மாவட்ட தலைவர் ராகசேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலத் தலைவர் முத்துக்குமார், மாநிலச் செயலாளர்கள் முத்துக்குட்டி, முருகன் ஆகியோர் பேசினார்கள்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைத்தலைவர் மணி கண்டன், சென்னை ஒருங்கிணை ப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்ப ப்பட்டது. இதில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் ஜெபக்கு மார், சுரண்டை ராமர், முகமது ராஜா, பாலா, பிரகாஷ், கண்ணன், கார்த்திகேயன், முருகன், பொன் பெருமாள், பொன் சசிகலா, குமரேசன், முத்துக்குமார், மைதீன், தருவை காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலம் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
    • பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடக்கிறது.

    திருமங்கலம்

    மதுரை-நெல்லை வழித்தடத்தில் திருமங்கலம் ரெயில் நிலையம் முக்கிய நிலையமாக அமைந்துள்ளது. மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பயணிகள் ரெயில்களும் நின்று செல்லும் இந்த ரெயில் நிலையங்களில் சென்னை, பெங்களூர், புனலூர் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில்கள் நின்று செல்கின்றனர்.

    சமீபத்தில் மதுரையில் இருந்து நெல்லை வரையில் அமைக்கப்பட்ட இரட்டை வழிப்பாதையும் இங்கு அமைந்துள்ளது. இதனால் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை தென்னக ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. என்.எல்.சி. நிறுவனம் சார்பில் பயணிகள் வசதிக்காக திருமங்கலம் ரெயில் நிலையம் முன்புறம் நவீன கழிப்பறை கட்டப்பட்டது.

    கட்டிடபணிகள் நிறைவடைந்த 6 மாதங்கள் கடந்துவிட்ட பின்பு இந்த புதிய கழிப்பிடம் திறக்கப் படாமல் பூட்டியே காட்சியளிக்கிறது. இதே போல் ரெயில்வே நிலையத்திற்குள் பல ஆண்டுகளாக இருக்கும் பொது கழிவறையும் திறக்கப் படாமல் காணப்படுகிறது. ரெயில்கள் வரும் வரையில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சிமெண்டால் அமைக்கப்பட்ட நாற்காலிகளும் முதல்பிளாட்பாரத்தின் பராமரிப்பு பணிக்காக இடித்து அகற்றப்பட்டு விட்டது.

    இதனால் பயணிகள் ரெயில்கள் வரும் வரையில் நிற்கவேண்டியுள்ளது. பயணி களுக்கான ஓய்வறையில் உள்ள இரும்பு நாற்காலிகளும் உடைந்து சிதைந்து போய் காணப்படுகிறது. ரெயில் பயணிகளின் முக்கிய தேவை யான குடிநீர் வசதி திருமங்கலம் ரெயில்வே நிலையத்தில் இல்லை. இங்குள்ள 2 பிளாட்பாரங்களிலும் உள்ள குழாய்களை திறந்தால் தண்ணீ ருக்கு பதில் காற்றுதான் வருகிறது.

    ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டணம் கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கி வரும் நிலை உள்ளது. இது தவிர முதலாம் பிளாட்பாரத்தை உயர்த்தவும், அகலப்படுத்தும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் மிகவும் குறுகலாக காணப்படும் முதல்பிளாட்பாரத்தில் நிற்கும் ரெயிலில் ஏறி இறங்க பயணிகள் குறிப்பாக முதியோர்கள், பெண்கள் கடும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர்.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை. சென்னைக்கு செல்லும் முத்துநகர் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரண்டுமே இரவு 10.30 மணிக்கு மேல்தான் திருமங்கலம் வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இரவு வேளையில் நிலையத்தில் நடந்து செல்ல இயலாது. ஏனெனில் இங்கு தெருவிளக்கு எரிவதில்லை. வளாகம் இருளாக காணப்படுகிறது.

    முதல்பிளாட்பாரத்தில் ரெயில்கள் நிற்பதால் குறுகலான பிளாட்பாரத்தில் இரவு வேளையில் ரெயிலில் ஏற இயலவில்லை. இங்கு பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடக்கிறது. இதை திறப்பதற்கான வழிகள் எதுவும் தென்படவில்லை.

    தற்போது மெட்ரோ ரெயில் திருமங்கலத்தில் இருந்து தான் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி காணப்படும் திருமங்கலம் ரெயில் நிலையம் வசதிகளை ஏற்படுத்தி தரத்தினை உயர்த்த வேண்டும் என்பதே நகரமக்களின் கோரிக்கையாகும்.

    ×