என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதிய காட்சி.
உடுமலை ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல திரண்ட பக்தர்கள்
- ஏழைகளின் ரதம் என்று அழைக்கக்கூடிய ரெயில் போக்குவரத்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.
- தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்
உடுமலை,ஜுலை.31-
குறைவான செலவில் நிறைவான பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தி தருவது ரெயில் போக்குவரத்து. ஏழைகளின் ரதம் என்று அழைக்கக்கூடிய இந்த போக்குவரத்து அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக உள்ளது.இதன் காரணமாக ஆன்மீகப் பயணம் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட நீண்ட தூர பயணம் செய்பவர்களின் முதல் தேர்வாக ரெயில் போக்குவரத்து உள்ளது. அந்த வகையில் கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு முருகனை தரிசிக்க மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.இந்த நிலையில் சனி ஞாயிறு வார விடுமுறை யொட்டி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் நேற்று உடுமலை ரெயில் நிலையத்தில் திரண்டனர். இதன் காரணமாக டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியதால் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு மாற்று ஏற்பாடாக அங்கு அமைக்கப்பட்ட தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரமும் சரியாக செயல்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். நீண்ட நேர காத்திருப்புக்கு பின்பு ஒரு வழியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு ரெயிலில் ஏறிச் சென்றனர். மேலும் வார விடுமுறை, பொது மற்றும் அரசு விடுமுறைகள், பண்டிகை நாட்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்தால் பொதுமக்கள் அதிகளவில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.






