search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Stalin"

    • சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    • படிப்புடன், விளையாட்டையும் அன்றாட வழக்கங்களில் இணைத்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    சென்னை:

    கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இதன்மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார். மேலும், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.

    இதற்கிடையே, சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சத்திற்கான ஊக்கத்தொகைக்கான காசாலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

    மிக இளம் வயதில் 'பிடே' கேன்டிடேட்ஸ் தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது குகேசுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.

    கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்.

    இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும் என பதிவிட்டுள்ளார்.

    • குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தார்.
    • குகேஷூக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து.

    கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் 14 சுற்றுகள் முடிவில் இந்திய வீரர் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் கைப்பற்றி வரலாறு படைத்தார்.

    ரஷிய செஸ் ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் தனது 20 வயதில் 1984-ம் ஆண்டில் கேன்டிடேட் செஸ் போட்டியில் பட்டம் வென்றதே முந்தைய இளம் வயது வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. அவரது 40 ஆண்டுகால சாதனையை தற்போது குகேஷ் தகர்த்துள்ளார்.

    இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழத்து பெற்றார்.

    தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சத்திற்கான காசோலையை குகேஷிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மேலும், குகேஷ்க்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.

    • நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் நாளை செல்கிறார்.
    • மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதற்கு முன்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கடும் வெயிலில் பயணம் செய்து, தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இதற்கிடையே தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டத்தை நடத்தி, அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரும் மே 1-ந் தேதி முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இந்த அறிவிப்பு, மக்களை மேலும் அச்சுறுத்தி உள்ளது.

    இந்த நிலையில், நல்ல சீதோஷ்ணம் நிலவும் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு செல்கிறார். மே 4-ந் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி ஏப்.29-ந்தேதி முதல் மே 4-ந்தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் பகுதிகளில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

    • 40 ஆண்டுகளாய்ப் பார்த்தும் பழகியும் வருகிறேன்.
    • பருவம் கூடக் கூடப் பக்குவம் கூடிவருகிறது.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர் என்று கவிஞர் வைரமுத்து புகழ்ந்துள்ளார்.

    இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சரை நேற்று

    முகாம் அலுவலகத்தில்

    சந்தித்தேன்

    குறித்த நேரம் காலை 10.15

    நான் அடைந்த நேரம் 10.14

    முதலமைச்சர்

    வந்து வரவேற்ற நேரம் 10.15

    நேர மேலாண்மையில்

    சர்வதேச ஒழுங்கைக்

    கடைப்பிடிக்கிறார்

    40 ஆண்டுகளாய்ப்

    பார்த்தும் பழகியும் வருகிறேன்

    பருவம் கூடக் கூடப்

    பக்குவம் கூடிவருகிறது

    வயது கூடக் கூட

    மரம்

    வைரம் பாய்வது மாதிரி

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும்.
    • குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கோடை காலமானது இரண்டு விதமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். ஒன்று அதிகப்படியான வெப்பம். இன்னொன்று குடிநீர் தேவை அதிகரிப்பு.

     வெப்ப அலை பிரச்சனை குறித்து 2 நாட்களுக்கு முன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். விரிவான அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டேன். அடுத்து குடிநீர் தேவைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், மாநிலத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்கக்கூடிய தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறைச்சூழல் குறித்து, தலைமைச் செயலாளரும், பிற துறைச் செயலாளர்களும் விளக்கினார்கள்.

     இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காலத்திலும், முதல் ஓரிரு மாதங்களில் மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. எனவே, தற்போது அணைகளில் உள்ள நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய கடினமான சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

    இதனை கருத்தில் கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களும் கவனமாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

    தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்கள் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனை தேவைக்கேற்ப மாவட்டங்களுக்கு பிரித்தளித்து, குடிநீர் வழங்கல் பணிகளையும், லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

    குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களும், நகராட்சி நிர்வாக துறை செயலாளர் உள்ளிட்ட துறை அலுவலர்களும், தற்போது செயல்பட்டு வரும் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, தடைகளின்றி பராமரித்திட வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும்போது, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று ஆணையர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

    இந்த கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் நீரேற்று நிலையங்கள் தடையின்றி தொடர்ந்து செயல்படுத்துவதற்கு, சீரான, தடை இல்லாத மின்சாரம் அவசியம். எனவே இத்தகைய திட்டப்பணிகளுக்கு மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு மின்வாரியத்தின் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.

    ஊராட்சிப் பகுதிகளில், சிறிய குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறக்கூடிய பல கிராமங்களில், ஆழ்துளை கிணறுகள் வறண்டு இருக்கின்றன. இவற்றுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்தோ அல்லது லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் கிடைக்கப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களை இப்பணிகளில் முழுமையாக ஊரக வளர்ச்சித் துறை செயலாளரும் இயக்குனரும் ஈடுபடுத்திட வேண்டும்.

    நமது மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்தும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்க கூடிய நிலையில், இந்தப் முக்கியப் பணிகளில் எந்தவிதமான சுணக்கமும் ஏற்பட்டு விடாமல் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் கண்காணித்து வருமாறு தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கின்றேன்.

     

    மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் மேற்பார்வை அலுவலர்கள் தொடர்ந்து நேரில் சென்று குடிநீர் விநியோகப் பணிகளை ஆய்வு செய்து, பற்றாக்குறை உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை பற்றி உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

    நமது மாநிலம் இத்தகைய குடிநீர் பற்றாக்குறைச் சூழலை சந்திப்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பற்றாக்குறையால் நமது மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை காலத்தில் தண்ணீரின் தேவையும் அதிகம். கோடையில் தண்ணீர் கிடைப்பதும் குறைவு. இதனை மனதில் வைத்து மக்களுக்காக அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் தலைவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி. வினய், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிருவாக இயக்குநர் எஸ். சிவராசு, ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பொன்னையா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்! காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!
    • தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர்- நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    "பார்ப்பனரல்லாதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்!

    அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்! காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!

    தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர்- நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்!"

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார்.
    • வருகிற மே 4-ந்தேதி வரை தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெறும் என்பதால் அரசியல் கட்சியினர் ஓய்வெடுக்க தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது வெப்ப அலை வீசி வரும் நிலையில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

    இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் படையெடுத்து இங்கு தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுப்பதற்காக வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில் கொடைக்கானல் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் மு.க.ஸ்டாலின் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகை தருகிறார். வருகிற மே 4-ந்தேதி வரை இங்குள்ள தனியார் விடுதியில் குடும்பத்துடன் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்கள், ரோடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் தலைமையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, டி.ஐ.ஜி. அபிநவ், எஸ்.பி. பிரதீப், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

    2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு ஓய்வுக்காக மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் பாம்பார்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் 1 வாரம் தங்கினார். பின்னர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரானார். பாராளுமன்ற தேர்தலிலும் இதே போன்ற வெற்றியை பெற வேண்டும் என்று சென்டிமெண்டாக அதே விடுதியில் தங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் அவர் தங்கும் விடுதி மற்றும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே தமிழக பா.ஜ.க. தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு வருகை தந்தார். பாம்பார்புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ள நிலையில் அண்ணாமலை இன்று கொடைக்கானலில் இருந்து தனது சொந்த ஊருக்கு செல்கிறார். மேலும் மற்ற மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கொடைக்கானலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் படையெடுத்து வருவதால் விடுதிகள் நிரம்பி வருகிறது.

    • அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்
    • பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்

    அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்ப நிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.

    இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன்.

    வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம் இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

    வெளியே செல்லும்போதும், திறந்த வெளியில் வேலை செய்யும் போதும் தலையில் பருத்தித் துணி,துண்டு,தொப்பி அணிந்துகொள்ள வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

    வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச் செல்ல வேண்டும்.

    மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர். எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சினை என்றாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இத்தகை சூழலில் அரசு நிர்வாகமானது கவனத்துடனும் பாதுகாப்பு உணர்வுடனும் செயல்பட அனைத்து அதிகாரிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நான் அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தொழிற்சாலைகள், கட்டடப் பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் போன்ற திறந்த இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் கருதி பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணியாளர்கள் வெயிலின் தாக்கத்தால் பாதிப்படையாத வகையில், பணி நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வனத்துறையினர் காட்டுத் தீ பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலையேறுபவர்கள் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். வன விலங்குகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்கிட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன்.

    அதன்படி நகர்ப்புறங்களில் இயங்கிவரும் 299 பேருந்து நிலையங்கள், 68 சந்தைகள், 338 சாலையோரங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய 277 இடங்கள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள 56 கிராம ஊராட்சிகள் என மொத்தம் 1038 இடங்களில் நிழலுடன் கூடிய தண்ணீர் பந்தல்களில் வெப்பத்தைத் தணிக்க குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 842 இடங்களில் கூடுதல் தண்ணீர் பந்தல் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட தண்ணீர் பந்தல்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக ஓ.ஆர்.எஸ். உப்புக்கரைசல் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்கு தேவையான ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் பொது சுகாதாரத்துறையின் கையிருப்பில் போதிய அளவில் உள்ளது.

    அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள் திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன். வெப்ப அலை காலத்தை விவேகமான செயற்பாடுகளால் வெல்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.
    • கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது.

    டெல்லி, ஜவஹர் பவன் உள்ள சமாஜிக் நியாயக் சம்மேளனத்தில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.

    இந்த மாநாட்டிற்கு வாழ்த்து கூறி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஓபிசி, எஸ்சி/எஸ்டி மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இடஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது.

    தமிழ்நாட்டில் தற்போது ஓபிசிஎஸ், எஸ்சி/எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கபட்டுள்ளது.

    மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினருக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஓபிசி மற்றும் எஸ்சி/எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்"

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

     

    • தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.
    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி தொடங்கி இந்த மாதம் 17-ந் தேதி வரை 20 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக சாடினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் உணர்வுபூர்வமாக இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. பொதுக் கூட்டங்களில் பேசியது மட்டுமின்றி காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோதும் மக்களை சந்தித்து வாக்கு கேட்டார்.

    தற்போது தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி கட்சியினர் மாவட்ட கழக செயலாளர்கள் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடமாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.

    இதற்காக அவரது பிரசார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது.

    • தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் ‘ஈரக்குமிழ் வெப்ப நிலை’ பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
    • மாநிலத் திட்டக் குழுவானது தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் 2024 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழக்கத்தை விட அதிகமாக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மிக அதிக வெப்பம் நிலவும். இயல்பை விட அதிகமான நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும், பல நகரங்களை நகர்ப்புற வெப்பத்தீவு பதிப்பு தாக்கக் கூடும். தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தும் 'ஈரக்குமிழ் வெப்ப நிலை' பாதிப்பு ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவானது ( தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய வெப்பத் தணிப்பு செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கையை 2023ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு அளித்துள்ளது. இந்த திட்டத்தை உருவாக்குவதற்கான உதவிகளை இங்கிலாந்து அரசு செய்துள்ளது. ஆனால், இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை முதலமைச்சராகிய தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    உள்ளூர் அளவிலான வானிலை முன்னெச்சரிக்கைகள், நகர்ப்புற பசுமையை அதிகமாக்குதல், நீர்நிலைகள் பாதுகாப்பு, குளிர்ந்த கூறைகள் திட்டம், வெப்பத்தை சமாளிக்கும் காற்றோட்டமான கட்டுமானங்கள், மருத்துவ கட்டமைப்புகள், விழிப்புணர்வு பிரச்சாரம், வெப்ப ஆபத்தில் சிக்குவோருக்கான புகலிடங்கள், போதுமான குடிநீர் வசதிகள், போக்குவரத்தில் வெப்பத்தை சமாளித்தல் மற்றும் பொதுப்போக்குவரத்தை அதிகமாக்குதல், அவசர உதவி வசதிகள், பல்துறையினர் பங்கேற்பு, போதுமான நிதி ஆதாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக வெப்பத் தணிப்பு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இவற்றை செயலாக்குவதற்கான முழுமையான பொறுப்புடைமை விதிகளை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

    வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் கருத்துக்களை கேட்டு, முழுமையான ஒரு வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறி உள்ளார்.

    • இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.
    • கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

    புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்!

    புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.

    கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    ×