search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Government"

    சபரிமலை ஐயப்பன் கோவிலை அழிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #Sabarimala #PonRadhakrishnan
    கோவை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் சிறுவயது முதலே சபரிமலைக்கு சென்று வருகிறேன். முன்எப்போதும் இல்லாத அளவுக்கு சபரிமலையின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பம்பைக்கு பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் 3 வாகனங்களில் சென்றிருந்தோம். என்னுடன் வந்த 2 வாகனங்களை நிலக்கல் காவல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தினார்.

    இதுகுறித்து கேட்டபோது நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. இதற்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? என்று அதிகாரத்தொனியில் கேள்வில் எழுப்பினார். இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய என்னுடன் வந்த கேரள பா.ஜ.க. நிர்வாகியை மிரட்டும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்.

    சபரிமலை வெறிச்சோடி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. சாலைகள் எங்கும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது சமூகவிரோதிகளை தடுக்கவே, இரும்புத் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். கடுமையான விதிமுறைகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

    இதற்கு பத்தினம்திட்டா எஸ்.பி. ‘மாஸ்டர் பிளான்’ போட்டுள்ளார். கோவிலை அழிக்கக் கூடிய வகையில் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டுமே கேரள அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. கோவில் ஐயப்பனுக்கு சொந்தமானது. ஐயப்பன் மக்களுக்கு சொந்தமானவர். எனவே சபரிமலை விசயத்தில் கேரள அரசு விதித்துள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும்.

    சபரிமலையில் தங்கி இருக்க நேரம் கிடையாது என்ற வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மத்திய மந்திரியையே கேரள அரசு இப்படி நடத்துகிறது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களது நிலைமை பரிதாபம் தான்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். தமிழக அரசு புயலுக்கு முன்னால் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. தற்போது சாலையில் உள்ள தடைகளை அகற்றினால் மட்டுமே கிராமத்துக்குள் செல்லும் நிலை உள்ளது. சிலர் கஜா புயல் விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள்.

    கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை அளித்தால் அதை தேசியப் பேரிடராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், நாகராஜன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர். #Sabarimala #PonRadhakrishnan

    வரலாற்று ரீதியாக சபரிமலை ஐயப்பன் கோவில் மதச்சார்ப்பற்றது என்றும், அனைத்து சாதி, மதத்தினரும் செல்லலாம் என்றும் உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. #SabarimalaForAll #Sabarimala
    திருவனந்தபுரம்:

    பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர் டி.ஜி.மோகன்தாஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்களையும், சிலையை வழிபடாதவர்களையும் அனுமதிப்பதை தடுக்கவேண்டும் என்று கோரி இருந்தார்.

    மேலும் இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கும், 1965-ம் ஆண்டின் கேரள அரசின் பொது இடங்கள் வழிபாட்டு நுழைவு அங்கீகார சட்டத்துக்கும் எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான கேரள அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவில் ஆதிகாலத்தில் பழங்குடியினர் வழிபடும் இடமாக இருந்தது என்று வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சரணம் அய்யப்பா என்று கோஷத்தில் உள்ள சரணம், புத்த மதத்தில் இருந்து வந்தது என்ற சிந்தனையும் உள்ளது.



    வரலாற்று ரீதியாக சபரிமலை கோவில் மதச்சார்ப்பற்றது. எனவே அங்கு சாதி, மதத்தை காரணம் காட்டி யாருக்கும் அனுமதி மறுக்கக்கூடாது. அங்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம். அய்யப்பனின் நண்பராக கூறப்படும் வாவருக்கு, சபரிமலை சன்னிதானத்தில் தனி இடம் உள்ளது. வாவரை வழிபட இங்கு ஏராளமான முஸ்லிம்களும் வருகிறார்கள். அவர்கள் அய்யப்பனையும் வழிபடுகின்றனர்.

    சபரிமலைக்கு வரும் வழியில் உள்ள எருமேலியில் வாவர் பள்ளி என்னும் ஒரு மசூதியும் உள்ளது. இங்கு அனைத்து அய்யப்ப பக்தர்களும் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். மேலும் பேட்டை துள்ளல் என்னும் நிகழ்ச்சியும் இங்கிருந்தே தொடங்குகிறது. பிறப்பால் கிறிஸ்தவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் பாடல்தான் அய்யப்பனின் தாலாட்டு பாடலாகவும் உள்ளது. அய்யப்ப பக்தரான அவரும் சபரிமலைக்கு அவ்வப்போது சென்று வருகிறார்.



    இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சபரிமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். எனவே மனுதாரரின் வேண்டுகோளை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #SabarimalaForAll #Sabarimala

    சபரிமலை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு உள்ளது. #SabarimalaTemple #KeralaGovernment
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு 2 மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. எனினும் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதில் மாநில அரசு தீவிரமாக உள்ளது.

    அதேநேரம் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் மறு ஆய்வு மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

    இதற்கிடையே, ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த மாதம் 17-ந் தேதி அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்குள் நுழைய முயன்ற 10-50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நிலக்கல் மற்றும் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதேபோல் கடந்த 5-ந் தேதி மாலை முதல் மறுநாள் மாலை வரை கோவில் நடை திறக்கப்பட்டபோதும் போராட்டங்கள் வெடித்தன.

    இந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகியவற்றுக்காக அய்யப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 17-ந் தேதி திறக்கப்படுகிறது. 2 மாதங்கள் வரை நடை திறக்கப்பட்டு இருக்கும். எனவே, மீண்டும் இந்த விவகாரம் விசுவரூபம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அனைத்து கட்சிகள் கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டமிட்டு இருக்கிறது.

    இதுபற்றி தேவசம் மந்திரி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “சபரிமலை தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது பற்றி யோசித்து வருகிறோம். எனினும் இது தொடர்பாக இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் வெளியாகும் முடிவின் அடிப்படையில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த தென் மாநிலங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. #Sabarimala #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது அங்கு சாமி தரிசனத்திற்கு செல்ல முயன்ற இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் விரட்டி அடித்தனர். இதனால் ஐயப்ப பக்தர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டு சபரிமலையில் பதட்டமான சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி திறக்கப்பட உள்ளது. மறுநாள் 17-ந்தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். டிசம்பர் 27- ந் தேதி மண்டல பூஜையும், 2019 ஜனவரி 14- ந் தேதி மகரவிளக்கு நடக்கிறது.

    மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களிலும் சபரிமலைக்கு திரளான பெண் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த காலங்களில் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென்மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலைக்கு வருவார்கள்.

    இதையொட்டி 5 தென் மாநிலங்களை சேர்ந்த அறநிலையத் துறை மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தென் மாநில அறநிலையத்துறை மந்திரிகள் யாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் பினராயி விஜயனும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

    மண்டல மகர விளக்கு சீசனை முன்னிட்டு சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி உட்பட அனைத்து இடங்களிலும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த சாலைகள் நவம்பர் 11- ந் தேதிக்கு முன்னதாக சீரமைக்கப்படும்.

    மற்ற மாநில அரசுகளின் உதவியுடன் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பெண் போலீசாரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைத்து தனியார் வாகனங்களும் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். நிலக்கல்லில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்கப்படும்.

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அனைத்து மாநிலங்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார், கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா, ஐ.ஜி. மனோஜ் ஆபிரகாம், தமிழ்நாடு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலைய துறை கூடுதல் தலைமை செயலாளர் அபூர்வா வர்மா, தமிழ்நாடு அறநிலையத்துறை இணை ஆணையர் அன்பு மணி, மக்கள் தொடர்பு துறை அதிகாரி உண்ணிகிருஷ்ணன்.

    ஆந்திரா அறநிலையத் துறை தலைமை அதிகாரி சுப்பாராவ், தெலுங்கானா அறநிலையத்துறை இணை ஆணையர் கிருஷ்ண வேணி, புதுச்சேரி அறநிலைய துறை ஆணையர் தில்லைவேல், கர்நாடகாவை சேர்ந்த பிரதீப் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். #Sabarimala #SabarimalaTemple
    சபரிமலை விவகாரத்தில் அப்பாவி மக்களை கைது செய்தால் பெரிய விலை கொடுக்க நேரிடும் என மாநில அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. #SabarimalaTemple #KeralaGovernment
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில், அங்கு ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17 முதல் 22-ந்தேதி வரை நடை திறக்கப்பட்டு இருந்தது. அப்போது தடை செய்யப்பட்ட வயதுள்ள பல பெண்கள் ஐயப்பனை தரிசிக்க வந்தனர்.



    அவர்களை பல இடங்களில் தடுத்து நிறுத்தி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பெண்கள் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    தற்போது சபரிமலையில் நடை அடைக்கப்பட்டு அமைதி திரும்பி இருக்கும் நிலையில், அங்கு போராட்டம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை மாநில அரசு கைது செய்து வருகிறது. அந்தவகையில் இதுவரை மாநிலம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 450-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நடவடிக்கைக்கு எதிராக பத்தனம்திட்டாவை சேர்ந்த சுரேஷ் ராஜ், அனோஜ் ராஜ் என்பவர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சபரிமலை போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி அப்பாவி மக்களையும் போலீசார் கைது செய்வதாக குற்றம் சாட்டியிருந்த அவர்கள், இந்த சட்டவிரோத கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி இருந்தனர்.

    இந்த மனுவை நேற்று விசாரித்த ஐகோர்ட்டு மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து நீதிபதி கூறுகையில், ‘மாநில அரசு வெறும் விளம்பரத்துக்காக பணியாற்றக்கூடாது. சபரிமலை விவகாரத்தில் நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். மாறாக அப்பாவிகளை கைது செய்தால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும். அதேநேரம் சபரிமலைக்கு பக்தர்கள் மட்டும்தான் வருகிறார்களா? என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    பின்னர் இந்த கைது நடவடிக்கை தொடர்பாக கேரள அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை 29-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக கூறி ஒத்திவைத்தார். #SabarimalaTemple #KeralaGovernment

    சபரிமலை கோவில் பிரச்சினைக்காக கேரள அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார். #Sabarimala #ArjunSampath
    நாகர்கோவில்:

    இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காரணமாக பக்தர்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

    கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகளை உதாசீனப்படுத்தி உள்ளது. குறிப்பாக முல்லை பெரியார் அணை பிரச்சினை, கூம்பு வடிவ ஒலிபெருக்கி, காவிரி பிரச்சினைகளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவில்லை.

    அய்யப்பன் கோவில் விவகாரத்தில் மட்டும் கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த ஆர்வமாக உள்ளனர். ஆனால் இதற்கு மக்கள் காட்டிய எதிர்ப்பை கண்டு இப்போது பின்வாங்கியுள்ளனர்.

    முதல்-மந்திரி பினராய் விஜயன், வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று 2 பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்வதற்கு முதல்-மந்திரி பினராய் விஜயனே காரணம். இதன்மூலம் நாடு முழுக்க கலவரம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது.

    சபரிமலை கோவில் பிரச்சினைக்காக போராடிய பந்தளம் மன்னர் குடும்பத்தினர், தந்திரிகள் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக கேரள அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

    மத்திய அரசும் இப்பிரச்சினையில் வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் உடனடியாக பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்டம் கொண்டு வர வேண்டும். இதன்மூலம் அய்யப்பன் கோவிலை மத்திய அரசே ஏற்றுநடத்த வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் போடுவது இப்பிரச்சினைக்கு தீர்வை தராது. இப்பிரச்சினை தொடர்பாக நாளை 21-ந் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடைபெறும்.

    தாமிரபரணி புஷ்கர விழா நடைபெறும் வேளையில் நதிகள் அனைத்தையும் தேசிய மயமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #ArjunSampath
    சபரிமலையில் பெண்களை அனுமதித்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி குற்றம்சாட்டி உள்ளார். #Sabarimala #OommenChandy
    திருவனந்தபுரம்:

    கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி பத்தனம் திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேரளா மத பிரச்சினைகள் இல்லாத மாநிலமாகும். இங்கு அனைத்து தரப்பு மக்களும் விழாக்களை இணைந்து கொண்டாடி வருகிறார்கள். சபரிமலை கோவிலுக்கும் மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் சென்று வருகிறார்கள். இது கேரளாவில் மட்டுமே பார்க்க முடியும்.



    கேரளாவில் கம்யூனிஸ்டு அரசு ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மத பிரச்சினைகளை தூண்டிவிட்டு மக்களை பிரித்தாள நினைக்கிறது. சபரிமலை சுவாமி ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதால் அங்கு காலம், காலமாக பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதிற்குட்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை அனுமதிக்கும் வழக்கத்தையே இனியும் பின்பற்றலாம்.

    கேரள மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கம்யூனிஸ்டு அரசு சபரிமலை பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. தேவசம்போர்டு தற்போது கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் போல மாறிவிட்டது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நடைமுறையில் ஏற்கனவே உள்ள ஐதீகத்தையே பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #OommenChandy
    சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது என கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். #SabarimalaVerdict
    திருவனந்தபுரம்:

    சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது என கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்ததும் அதை வரவேற்பதாக கேரள மாநில அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் கூறியது.

    கோர்ட்டு தீர்ப்பை ஏற்று பெண்கள் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யப் போவதாக தெரிவித்தன. நாளை மறுநாள் (புதன் கிழமை) இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது வருகிற 18-ந்தேதி முதல் பெண்களை அனுமதிப்பது பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் சபரி மலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மூன்று நாட்களுக்குள் தனது முடிவை கேரள மாநில அரசு மாற்றியுள்ளது. இதற்கு முன்பு கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கேரள மாநில அரசு தீவிரம் காட்டியது. தற்போது அரசு அதிகாரிகள் அதில் வேகத்தை குறைத்து பல்டி அடித்துள்ளனர்.

    பெண்களை சபரி மலைக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று பந்தள ராஜ குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவசம்போர்ட்டை ராஜ குடும்பத்தினர் வலியுறுத்தியபடி உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து மறு சீராய்வு மனு செய்ய தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் மறுசீராய்வு மனுவை ஆதரித்து கேரள மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-


    சுப்ரீம் கோர்ட்டின் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்தால் அதை அரசு எதிர்க்காது. அது சுதந்திரமாக செயல்படும் அமைப்பு. அரசின் நிலைப்பாட்டை தேவசம்போர்டு மீது திணிக்கப் போவதில்லை.

    இவ்வாறு மந்திரி சுரேந்திரன் கூறியுள்ளார்.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு கேரள மாநில காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ‘‘தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.

    இதன் மூலம் கேரள மாநில அரசியல் கட்சிகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. எனவே சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சிக்கல்கள் உருவாகத் தொடங்கி உள்ளன.

    இதற்கிடையே சபரி மலைக்கு குடும்ப பெண்கள், உண்மையான பெண் பக்தர்கள் வர மாட்டார்கள். பெண்ணியவாதிகள் மட்டுமே வந்து செல்வார்கள் என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

    அவரது பேச்சு சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள தேவசம் போர்டு ஆலோசனை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #Sabarimala #SabarimalaTemple #SabarimalaVerdict
    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரிய வழக்கில், கேரள அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அணையில் இருந்து திடீரென்று அதிக அளவில் தண்ணீரை தமிழகம் திறந்துவிட்டதும் வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. #KeralaFloods #SupremeCourt
    புதுடெல்லி :

    கேரளாவில் இந்த மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழை பெய்தது.

    இதனால் அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கேரள மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. அந்த மாநிலத்தில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் நிரம்பியது.

    மேலும் முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியதால், அதில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரும் இடுக்கி அணைக்கு சென்றது.

    இதனால் இடுக்கி அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி மாவட்டத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    முல்லைப்பெரியாறு அணை யில் 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி, நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், அணையில் இருந்து உபரி நீரை தமிழகம் திறந்து விட்டது.

    இதற்கிடையே, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி, அதன் உச்ச நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக் கோரி, ஜாய் ரஸ்ஸல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 17-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

    அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கேரளாவில் மேற்கொள்ளப்படும் மீட்புப்பணிகள், புனரமைப்பு பணிகள், மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் குறித்து அந்த மாநில தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 24-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

    இந்தநிலையில், கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.



    அந்த பிரமாணபத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் நிகழ்ந்த பெருவெள்ளத்தால் 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    கேரளாவில் ஏற்கனவே மழை பெய்து வந்த நிலையில், இந்த மாதம் பெருமழை பெய்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி அதிகமாகவும், அணையில் நீரை தேக்கி வைக்கும் திறன் குறைவாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து அதிகமானதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதை ஏற்கவில்லை.

    கடந்த 15-ந் தேதி நள்ளிரவில் முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் மூலம் திடீரென்று இடுக்கி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இடுக்கி அணையில் இருந்தும் நீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்துக்கு கேரள அரசு உள்ளானது.

    இதன் காரணமாக கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய உடனேயே, தமிழகம் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீரை திறந்து விட்டு இருந்தால் இவ்வளவு சேதம் ஏற்பட்டு இருக்காது. வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு தமிழகம் திடீரென்று தண்ணீரை திறந்துவிட்டதும் ஒரு காரணம் ஆகும்.

    எனவே, இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் தலைமையில் இரு மாநிலங்களின் நீர்ப்பாசனத்துறை செயலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு மேற்பார்வை குழு அமைக்கப்பட வேண்டும். பெருவெள்ளம் ஏற்படும் போது உடனடியாக தண்ணீர் திறந்து விடுவது பற்றிய முடிவை எடுக்கும் அதிகாரத்தை இந்த குழுவுக்கு வழங்க வேண்டும்.

    மேலும் இந்த மேற்பார்வை குழுவின் கீழ் இயங்கும் வகையில் மேலாண்மை குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். அந்த மேலாண்மை குழு முல்லைப் பெரியாறு அணையின் அன்றாட நீர்வரத்து, நீர்மட்ட அளவு, நீர் திறப்பு ஆகியவை குறித்த நடவடிக்கையை கண்காணிக்க வேண்டும்.

    இந்த மேலாண்மை குழு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை பொறியாளர் அல்லது மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இரு மாநிலங்களின் தலைமை பொறியாளர்கள் அல்லது மேற்பார்வை பொறியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு செயல்படவேண்டும்.

    இவ்வாறு கேரள அரசின் தலைமைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணபத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது. #KeralaFloods #SupremeCourt
    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 30 டி.எம்.சி. தண்ணீரை சுதந்திரமாக தங்கள் தேவைக்கு பயன்படுத்தவும், அதில் ஒரு பகுதியை கேரளா அரசின் பாணசுர சாகர் என்ற திட்டத்தின் கீழ் வரக்கூடிய குத்தியாடி திட்டத்துக்கு பயன்படுத்தி கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று சீராய்வு மனுவை கேரளா அரசு மார்ச் மாத இறுதியில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    இந்த மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் தங்கள் அறையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு நேற்று விசாரித்தனர். ஏற்கனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதை சுட்டிக் காட்டி கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
    முதியோர் உள்ளிட்ட பல தரப்பினருக்கு அரசு வழங்கும் ஓய்வூதியத்தை கால தாமதம் இன்றி வழங்க தனி நிறுவனம் அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. #Keralagovernment #SpecialCompanyForPension
    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும், பணி ஓய்வு பெற்றவர்கள், முதியோர், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட பல பிரிவினருக்கும் ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட தொகை மாதாமாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியங்கள் சரிவர கிடைக்காத காரணத்தால் பயனாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    பல்வேறு காரணங்களினால் மாதாமாதம் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம் 3 மாதங்களுக்கு ஒருமுறையும், பண்டிகை நாட்களில் மட்டும் என வழங்கப்படும் நிலை உள்ளது.



    இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியத்தை மாதம் தோறும் தவறாமல் வழங்குவதற்கு என புதிய நிறுவனம் ஒன்றை நிதித்துறையின் கீழ் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியம் வழங்கப்படும் அவல நிலை மாறும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிறுவனமானது முழுவதுமாக மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரள அரசின் இந்த முடிவால் ஓய்வூதியத்தை ஆதாரமாக கொண்டு வாழும் பல்வேறு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். #Keralagovernment #SpecialCompanyForPension
    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் திண்டாடி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஒரு ரூபாய் குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்தது. தற்போது நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி நிர்ணயித்து வரும் நிலையில் கா்நாடகா சட்டசபை தோ்தலுக்கு பின்னா் பெட்ரோல், விலை கடுமையாக உயா்ந்து வருகிறது. தொடர்ந்து 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்தது.

    இந்நிலையில் 16 நாட்களுக்கு பின்னர் இன்று பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டது. சென்னையில் வெறும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்ட பெட்ரோல் லிட்டருக்கு 81.42 ரூபாய்க்கு இன்று விற்கப்படுகிறது. டீசலும் ஒரு பைசா விலை குறைக்கப்பட்டு 73.17 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் திண்டாடி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலையை ஒரு ரூபாய் குறைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் குறைக்கப்படும் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    எரிபொருள் மீதான மாநில அரசு வரியை கேரளா குறைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கேரளாவில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வரி எத்தனை சதவீதம் குறைக்கப்பட உள்ளது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

    கடந்த நவம்பர் 2017 நிலவரப்படி, டீசல் மீது 24.52 சதவீதமும், பெட்ரோல் மீது 31.8 சதவீதம் வரியும் கேரளா வசூல் செய்கிறது. இவை போக கூடுதலாக ஒரு சதவீத செஸ் வரியும் கேரளாவில் வசூலிக்கப்படுகிறது. 2017-2018 நிதி ஆண்டில் எரிபொருட்கள் வரி மூலம் கேரள அரசு ரூ 7,795 கோடியை வருவாயை ஈட்டியதாக தகவல்கள் கூறுகின்றன. #Petrol #Diesel #PetrolPrice
    ×