search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவிலை அழிக்க கேரள அரசு திட்டம் - பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலை அழிக்க கேரள அரசு திட்டம் - பொன்.ராதாகிருஷ்ணன்

    சபரிமலை ஐயப்பன் கோவிலை அழிக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #Sabarimala #PonRadhakrishnan
    கோவை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் சிறுவயது முதலே சபரிமலைக்கு சென்று வருகிறேன். முன்எப்போதும் இல்லாத அளவுக்கு சபரிமலையின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பம்பைக்கு பஸ்கள் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் 3 வாகனங்களில் சென்றிருந்தோம். என்னுடன் வந்த 2 வாகனங்களை நிலக்கல் காவல் கண்காணிப்பாளர் தடுத்து நிறுத்தினார்.

    இதுகுறித்து கேட்டபோது நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. இதற்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? என்று அதிகாரத்தொனியில் கேள்வில் எழுப்பினார். இதை எதிர்த்து கேள்வி எழுப்பிய என்னுடன் வந்த கேரள பா.ஜ.க. நிர்வாகியை மிரட்டும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம்.

    சபரிமலை வெறிச்சோடி போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. சாலைகள் எங்கும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கேட்டபோது சமூகவிரோதிகளை தடுக்கவே, இரும்புத் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். கடுமையான விதிமுறைகளால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது.

    இதற்கு பத்தினம்திட்டா எஸ்.பி. ‘மாஸ்டர் பிளான்’ போட்டுள்ளார். கோவிலை அழிக்கக் கூடிய வகையில் திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டுமே கேரள அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. கோவில் ஐயப்பனுக்கு சொந்தமானது. ஐயப்பன் மக்களுக்கு சொந்தமானவர். எனவே சபரிமலை விசயத்தில் கேரள அரசு விதித்துள்ள கெடுபிடிகளை தளர்த்த வேண்டும்.

    சபரிமலையில் தங்கி இருக்க நேரம் கிடையாது என்ற வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மத்திய மந்திரியையே கேரள அரசு இப்படி நடத்துகிறது என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களது நிலைமை பரிதாபம் தான்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு சென்றுள்ளேன். தமிழக அரசு புயலுக்கு முன்னால் எடுத்த நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. தற்போது சாலையில் உள்ள தடைகளை அகற்றினால் மட்டுமே கிராமத்துக்குள் செல்லும் நிலை உள்ளது. சிலர் கஜா புயல் விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார்கள்.

    கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை அளித்தால் அதை தேசியப் பேரிடராக அறிவிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன், நாகராஜன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர். #Sabarimala #PonRadhakrishnan

    Next Story
    ×