search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala High Court"

    • துணையை கணவர் என்று அழைக்க முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கருத்து.
    • இளைஞருக்கு எதிராக இளம்பெண் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.

    லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதேபோல், துணையை கணவர் என்று அழைக்க முடியாது என்றும், சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    "லிவிங் டு கெதர் உறவில் பங்குதாரர் என்று மட்டுமே கூற முடியும். பங்குதாரர்களிடம் இருந்து உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால், அது குடும்ப வன்முறை வரம்பிற்குள் வராது" என்று எர்ணாகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணுடன் லிவிங் டு கெதர் உறவில் வாழ்ந்தது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இளைஞர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப வன்முறை வழக்கு தவறானது எனவும் கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், குடும்ப வன்முறை செய்ததாக, இளைஞருக்கு எதிராக இளம்பெண் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவிப்பு.
    • ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.

    சபரிமலை கோவில் பிரசாதமான அரவணை பாயசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என ஐயப்பா மசாலா நிறுவனம் கடந்தாண்டு கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

    இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில், ஏலக்காயின் தரம் குறித்து திருவனந்தபுரம் அரசு ஆய்வகம் பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

    இந்த அறிக்கையில், அரவணை பாயசத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றது எனவும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதால், ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல என தெரிவிக்கப்பட்டது.

    அதனால் ஏலக்காய் சேர்க்காமல் அரவணை பாயாசம் தயாரிக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஏலக்காய் சேர்க்கப்படாமல் கடந்தாண்டு பக்தர்களுக்கு அரவணை வழங்கப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் ஏலக்காய் கலக்காமல் இருந்தது குறித்து பல பக்தர்கள் அதிருப்தி அடைந்ததாகவும் பக்தர்களின் கோரிக்கையை அடுத்து தற்போது எந்த விதமான கெமிக்கலும் கலக்காத ஏலக்காய் கலக்க முடிவு செய்து இருப்பதாகவும் தேவஸ்தான வட்டாரத்தில் கூறப்பட்டது.

    அதன்படி சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தில் மீண்டும் ஏலக்காய் சேர்க்கப்பட உள்ளது.

    இதற்காக தீங்கு தரும் எந்த ரசாயனமும் இல்லாத 12,000 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்ய தேவசம் போர்டு டெண்டர் விடுவித்துள்ளது.

    • பதினெட்டாம்படி மற்றும் நடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தாண்டியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது.
    • சபரிமலையில் உடனடி முன்பதிவு வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தில் இருந்ததுபோன்றே, தற்போதும் பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

    கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், சன்னிதானம், பதினெட்டாம்படி மற்றும் நடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தாண்டியே சாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதனால் வயது முதிர்ந்த பக்தர்கள், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கணிசமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. உடனடி முன்பதிவு வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் அவதிப்படுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே பல்வேறு யோசனைகளை தெரிவித்திருக்கும் கேரள மாநில ஐகோர்ட், தற்போது மேலும் ஒரு அறிவுரையை கூறியிருக்கிறது.

    சபரிமலையில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக செயல்பட்டு வரும் நிலக்கல் பகுதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரீஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.

    நிலக்கல் வாகன நிறுத்தம் தொடர்பாக தேவசம்போர்டு மற்றும் பத்தினம்திட்டா போலீஸ் சூப்பிரண்டுகளிடம் இருந்து பிரமாண பத்திரங்களை நீதிமன்றம் கேட்டிருந்தது. அதனை அவர்கள் தாக்கல் செய்ததன் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

    • நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
    • பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர்.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆன்லைனில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்த நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள். இதன் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது.

    நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டதால், சாமி தரிசனத்துக்கு பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர். மரக்கூட்டம், பதினெட்டாம் படி, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கடும் நெரிசலும் ஏற்பட்டது. தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஆன்லைன் முன்பதிவு முறையில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்த நிலையில், உடனடி முன்பதிவு வசதியையும் பயன்படுத்தி ஏராளமானோர் வந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியவில்லை. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்தவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை ஐகோர்ட்டு உத்தரவுப்படி குறைத்தும், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்லாமலேயே திரும்பிச் சென்ற சம்பவமும் அரங்கேறியது.

    நேற்று பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தி அனுப்பப்பட்டனர். இதனால் 10 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிலக்கல்லியேயே பக்தர்கள் அதிக நேரம் நிறுத்தப்பட்டனர்.

    சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடியே பக்தர்களின் அவதிக்கு முக்கியமாக காரணமாக கூறப்படுகிறது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசு மற்றும் தேவசம் போர்டை கேரள ஐகோர்ட்டு வலியுறுத்தியது.

    அதனடிப்படையில் பல்வேறு திட்டங்களை வகுத்தபோதிலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் இடுக்கியில் நடந்த நவ கேரள சதாஸ் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், சபரிமலை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் வனத்துறை மந்திரி சுசீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், கேரள டி.ஜி.பி.ஷேக் தர்வேஷ்சாகிப் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

    சபரிமலையில் கடந்த 6-ந்தேதி முதல் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி 88 ஆயிரமாக உயர்ந்தது. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம். அதன்பிறகு தரிசன நேரம் 18 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    நிலக்கல்லில் நடந்துவரும் உடனடி முன்பதிவை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால் மட்டும் உடனடி முன்பதிவை தொடர்ந்து நடத்தலாம். பெண்கள், குழந்தைகளுக்கான தரிசனத்தில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பம்பை முதல் சன்னிதானம் வரை மலையேறும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் கிடைக்க தேவஸ்தான தலைவர் தலைமையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்ய வேண்டும். பக்தர்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சபரிமலைக்கு கடந்த ஆண்டைப்போல பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். மெய்நிகர் வரிசையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் கூட்ட நெரிசலை குறைக்க உதவும்.

    பக்தர்களின் யாத்திரை அமைதியாக நடந்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது சிறுசிறு பிரச்சனைகள் எழுகின்றன. யாத்ரீகர்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-

    கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடிகள் ஏற்பட்டது. அந்த குறுபடிகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எல்லா வருடமும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான்.

    கூட்டம் அதிகரிக்கும்போது அனைவருக்கும் எல்லாம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதனை வரும் ஆண்டுகளில் எப்படி நிவர்த்தி செய்யவேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களது வாகனங்களை நிறுத்த போதிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருப்பதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் கூட்டம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வரிசை வளாகத்தில் பக்தர்களின் கூட்டத்தை அனுமதிக்க வேண்டாம். அதனை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களின் மூலமாக அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு பரிசீலிக்கும். குழந்தைகள் உள்ளிட்ட யாத்ரீகர்களுக்கு கோவிலில் கூடுதல் வதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் வேன், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருவார்கள்.
    • தடையை மீறி ஏராளமானோர் தங்களது வாகனங்களை அலங்காரம் செய்துகொண்டு வருவதாக கேரள ஐகோர்ட்டில் புகார் கூறப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கிறது.

    இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் வேன், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருவார்கள்.

    பஸ்கள் மற்றும் வேன்களில் வரக்கூடிய பக்தர்களில் பலர், தங்களது வாகனங்களை அலங்கார விளக்குகள், தோரணங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்திருப்பார்கள். அதுபோன்று வரக்கூடிய வாகனங்களால் விபத்து ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

    ஆகவே சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்ய கேரள ஐகோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இருந்த போதிலும் தடையை மீறி ஏராளமானோர் தங்களது வாகனங்களை அலங்காரம் செய்துகொண்டு வருவதாக கேரள ஐகோர்ட்டில் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து பக்தர்கள் தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்து வரக்கூடாது என்றும், அதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேரள ஐகோர்ட் மீண்டும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

    • விசாரிக்க சென்ற போலீசார், புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராகவே வழக்குப்பதிவு செய்தனர்.
    • பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2019-ம் ஆண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், தன்னுடைய வீட்டின் அருகில் உள்ள ஒரு ஆராதனை கூடத்தில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து விசாரிக்க சென்ற போலீசார், புகார் கொடுத்த பெண்ணுக்கு எதிராகவே வழக்குப்பதிவு செய்தனர். அதாவது விசாரிக்க சென்றபோது தங்களை தரக்குறைவாக பேசியதாக அந்த பெண் மீது போலீசார் குற்றம்சாட்டினர். போலீசாரின் இந்த பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட பெண் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி பி.வி.குஞ்சு கிருஷ்ணன் முன்னிலையில் நடந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் நீதிபதி முன்பு கும்பிட்டபடி நின்றார். இதை கண்ட நீதிபதி, "நீதியின் கோவிலாக கோர்ட்டு உள்ள போதிலும் நீதிபதிகள் தெய்வங்கள் அல்ல. எனவே கோர்ட்டிற்கு வரும் பாதிக்கப்பட்டவர்கள், வக்கீல்கள் யாரும் நீதிபதிகள் முன் சாமியை கும்பிடுவது போன்று நிற்க வேண்டியது இல்லை. கோர்ட்டு அறைக்குள் அதற்குரிய மரியாதை, கண்ணியத்துடன் நடந்து கொண்டாலே போதும்" என்றார்.

    பின்னர் பாதிக்கப்பட்ட பெண் மனு மீதான விசாரணை முடிவில், புகார் அளித்த பெண் தவறான வார்த்தைகளால் போலீசாரிடம் பேசினார் என்பதை நம்ப முடியவில்லை. எனவே போலீசார் தொடர்ந்த இந்த வழக்கை ரத்து செய்கிறேன் என நீதிபதி பி.வி.குஞ்சு கிருஷ்ணன் கூறினார்.

    மேலும் புகார் அளித்த பெண்ணுக்கு எதிராக போலீசார் பதிவு செய்த வழக்கின் பின்னணி குறித்து விசாரணை நடத்தவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டார்.

    • கொச்சியில் உள்ள வீட்டில் இருந்து 2 ஜோடி யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
    • மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, வழக்கு விசாரணைக்காக நவம்பர் 3-ந்தேதி மோகன்லால் உள்பட 4 பேரும் ஆஜராக உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    பிரபல நடிகர் மோகன்லால் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள வீட்டில் இருந்து 2 ஜோடி யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதனை வீட்டில் வைத்திருக்க மோகன்லால் உரிய அனுமதி பெறவில்லை என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த தந்தங்கள் கேரள வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக மோகன்லால், அவருக்கு தந்தங்களை விற்பனை செய்தவர்கள் உள்பட 4 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மோகன்லால் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கேரள அரசு சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, வழக்கு விசாரணைக்காக நவம்பர் 3-ந்தேதி மோகன்லால் உள்பட 4 பேரும் ஆஜராக உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து மோகன்லால், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு நீதிபதி குஞ்சு கிருஷ்ணன் விசாரித்து, மோகன்லால் மீதான வழக்கை விசாரிக்க 6 மாதத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    • மைனருக்கு சம்மதமின்றி பாலியல் அறுவை சிகிச்சை செய்வது, அந்த குழந்தையின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
    • ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வது குழந்தையின் கண்ணியம் மற்றும் தனியுரிமையை மீறவதாகும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தெளிவற்ற பிறப்புறுப்பு கொண்ட தங்களது 7 வயது குழந்தைக்கு பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரள ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனு விசாரணைக்கு வந்தது. அதில் மைனருக்கு சம்மதமின்றி பாலியல் அறுவை சிகிச்சை செய்வது, அந்த குழந்தையின் தனியுரிமை மற்றும் கண்ணியத்தை சீர்குலைக்கும் என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    பிறப்புறுப்பு மறு சீரமைப்பு அறுவை சிகிச்சைக்குஅனுமதி வழங்குவது இந்திய அரசியலமைப்பு சட்டம் 14, 19 மற்றும் 21-வது பிரிவுகளின கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை தடுக்கும். ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வது குழந்தையின் கண்ணியம் மற்றும் தனியுரிமையை மீறவதாகும்.

    இந்த அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை மாற்றப்பட்டதை தவிர, இளமை பருவத்தை அடைந்ததும், குழந்தை பாலினத்தை நோக்கிய நோக்கநிலையை வளர்த்துக் கொண்டால் அத்தகைய அனுமதியை வழங்குவது கடுமையான உணர்ச்சி மற்றும் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

    மனுதாரர்களின் குழந்தையை மருத்துவ வாரியம் 2 மாதங்களுக்குள் பரிசோதித்து, தெளிவற்ற பிறப்புறுப்பு காரணமாக குழந்தை உயிருக்கு ஏதேனும் ஆபத்தான் சூழ்நிலையை எதிர்கொள்கிறதா? என்பதை தீர்மானிக்க வேண்டும். அப்படியென்றால் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி வழங்கலாம்.

    இவ்வாறு ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

    • வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.
    • அபீபாவை கண்டு பிடித்து தருமாறு கேரள ஐகோர்ட்டில் சுமையா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர்கள் சுமையா செரின், அபீபா. பள்ளி தோழிகளான இவர்களுக்கு இடையே பிளஸ்-2 படிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது. பெரியவர்களாக ஆன பிறகும் அது நீடித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனியாக வாழ்வதற்காக இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் எர்ணாகுளத்திற்கு சென்று லெஸ்பியன் ஜோடியாக வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இருவரும் கொளஞ்சேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக தங்கி இருந்தனர். இது அபீபாவின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் அவர்கள் அங்குச் சென்று அபீபாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    அபீபாவை கண்டு பிடித்து தருமாறு கேரள ஐகோர்ட்டில் சுமையா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அபீபாவை அவரது பெற்றோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சுமையா மனுவில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது அபீபா, சுமையாவுடன் உறவில் இருந்த போதிலும் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதையடுத்து சுமையாவின் ஆட்கொணர்வு மனுவை ஐகோர்ட் பெஞ்ச் முடித்து வைத்தது. மேலும் லெஸ்பியன் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்பாத அந்த தம்பதி, விவாகரத்து கோரி ஒரு குடும்ப கோர்ட்டை நாடினர்.
    • குறிப்பிட்ட ஜோடி, தங்களுக்கான தீர்வை வேறு இடத்தில் தேடிக்கொள்ள அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது.

    கொச்சி:

    கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்து-கிறிஸ்தவ ஜோடி கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதற்காக அவர்கள் ஒரு ஒப்பந்தத்தையும் பதிவு செய்துள்ளனர். அந்த தம்பதிக்கு ஒரு 16 வயது குழந்தை உள்ளது.

    இந்நிலையில் தொடர்ந்து சேர்ந்து வாழ விரும்பாத அந்த தம்பதி, விவாகரத்து கோரி ஒரு குடும்ப கோர்ட்டை நாடினர். அவர்களின் திருமணம், சிறப்பு திருமண சட்டத்தின்படி நடைபெறவில்லை என்று கூறி அந்த தம்பதியின் மனுவை குடும்ப கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    அதை எதிர்த்து அவர்கள் கேரள ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'சேர்ந்து வாழ்வதை (லிவ்-இன் ரிலேசன்ஷிப்) இன்னும் திருமணமாக சட்டம் அங்கீகரிக்கவில்லை. தனிநபர் சட்டம் அல்லது சிறப்பு திருமண சட்டம் போன்ற மதச்சார்பற்ற சட்டத்தின்படி நடைபெற்ற திருமணத்தைத்தான் சட்டம் அங்கீகரிக்கிறது.

    ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ முடிவெடுத்த ஒரு ஜோடி, அதை திருமணம் என்று கூறவும், அதன் அடிப்படையில் விவாகரத்து கோரவும் முடியாது.

    ஒப்பந்த அடிப்படையில் செய்துகொள்ளப்பட்ட எந்த திருமணமும், விவாகரத்து வழங்குவதற்கான சட்டத்தின்கீழ் இதுவரை அங்கீகாரம் பெறவில்லை. எனவே, இந்த மனுவை குடும்ப கோர்ட்டு விசாரணைக்கே ஏற்றிருக்க கூடாது. அதை தள்ளுபடி செய்ததற்குப் பதிலாக, விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என்று திருப்பி அனுப்பியிருக்க வேண்டும்.

    குறிப்பிட்ட ஜோடி, தங்களுக்கான தீர்வை வேறு இடத்தில் தேடிக்கொள்ள அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சபரிமலை கோவிலுக்கு சென்ற நாராயணன் நம்பூதிரி தலைமையிலான குழுவினர் பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர்.
    • திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த நாராயணன் நம்பூதிரி தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்து பூஜை செய்தனர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்திலும் பதிவிட்டனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய திருவிதாங்கூர் தேவசம்போர்டு, பொன்னம்பலமேட்டில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இந்த சம்பவத்திற்கு துணை போனதாக வனத்துறை ஊழியர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டு இந்த பிரச்சினையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்தது. பின்னர் இதுதொடர்பாக அரசு மற்றும் தேவசம்போர்ட்டு நிர்வாகத்திடம் உரிய விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டும்.
    • மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.

    திருவனந்தபுரம்:

    சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டும். மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும்.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின் என்பவர் திருவனந்தபுரம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தான் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய மனு அளித்து உள்ளேன்.

    ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாட்டில் உள்ள தனது காதலனால் உடனடியாக ஊருக்கு வர முடியாது என்பதால் காணொலி மூலம் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். வேறு சிலரும் இதேபோல காணொலி மூலம் திருமணத்திற்கு அனுமதி கோரி கேரளாவில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் மனு தாக்கல் செய்தனர்.

    அதை ஏற்க மறுத்த கோர்ட்டுகள் இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டின் பரிசீலனைக்கு மனுக்களை அனுப்பி வைத்தன. இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் முகமது முஷ்டாக், சோபி தாமஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணங்களை காணொலி மூலம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மின்னணு ஆவணங்களுக்கு சட்டத்தில் அனுமதி உண்டு என்பதால் காணொலி மூலம் திருமணம் நடத்துவதில் தவறில்லை என்று நீதிபதிகளின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×