search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kangeyam"

    • திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன.

    தாராபுரம் :

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, பழனி முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்து விட்டு சேலத்திற்கு புறப்பட்டார்.

    உற்சாக வரவேற்பு :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கயம் வழியாக சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று முதல் முறையாக வருகை தந்ததால் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காங்கயம் பஸ் நிலையம் அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை அணி வித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

    பிளக்ஸ் பேனர்கள் :

    தாராபுரம் பஸ் நிலையம் அருகே திருப்பூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையொட்டி உடுமலை ரவுண்டானாவில் இருந்து அமராவதி சிலை வரை தாராபுரம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. எடப்பாடி பழனிசாமி வருகையால் தாராபுரம், காங்கயம் நகரம் இன்று விழாக்கோலம் பூண்டன. காங்கயம் நகர்ப்பகுதி முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் அருகே பெரிய அளவில் 40 அடி நீள பேனரும், மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. காங்கயத்தில் இருந்து சென்னிமலை வழியாக எடப்பாடி பழனி சென்றதால் அந்த சாலையின் இருபுறங்களிலும் அ.தி.மு.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக .அதி.மு.க. நிர்வாகிகள்,தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மாரத்தான் போட்டி காலை 5.30 மணிக்கு நடக்கிறது.
    • காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பழனிப்பா திருமண மண்டபத்தில் நிறைவு பெறுகிறது.

    காங்கயம் :

    காங்கயம் டவுன் ரோட்டரி நடத்தும் மாரத்தான் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் தமிழக முன்னாள் காவல்துறை தலைமை இயக்குனர் ரவிமுத்துசாமி, திருச்சி போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.இளங்குமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டியை தொடங்கி வைக்க உள்ளார்கள்.

    மாரத்தான் போட்டி காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி, காங்கயம் - தாராபுரம் சாலையில் உள்ள பழனிப்பா திருமண மண்டபத்தில் நிறைவு பெறுகிறது.

    • உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி காலை 9 மணிக்கு நடக்கிறது.
    • செப் தாமு பங்கேற்று தனது சமையல் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் காங்கயத்தில் வருகிற 7-ந் தேதி சமையல் போட்டியுடன் திருப்பூர் உணவுத்திருவிழா நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா வருகிற 7-ந் தேதி காங்கயத்தில் நடைபெற உள்ளது. பெண்கள், கல்லூரி மாணவ-மாணவியர்கள், வணிகர்கள், பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்ளும் 'உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி' காங்கயத்தில் காலை 9 மணிக்கு நடக்கிறது.

    அமைச்சர்கள் என்.எஸ்.என். மண்டபத்தில் 'திருப்பூர் உணவுத் திருவிழாவை தொடங்கி வைக்க உள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டத்தின் சுவை அடையாளமாக இருக்கும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள் என 50 அரங்குகள் இடம்பெறுகிறது.

    அனைவரையும் கவரும் விதமாக, உணவு அரங்குகளும், உணவு பாதுகாப்பு குறித்த கிராமிய கலை நிகழ்ச்சிகள், புதிய உலக சாதனைகள், யோகாசனப் பயிற்சிகள், கலைமாமணி சுகிசிவம் தலைமையில் பட்டிமன்றம், சலங்கை ஆட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மியாட்டம் என மேடை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக உலக சாதனை சமையல் கலைஞரான செப் தாமு, பங்கேற்று தனது சமையல் ரகசியங்களை பகிர்ந்து கொள்கிறார். சமையல் போட்டிகளுக்கு நடுவர் பொறுப்பேற்று சிறந்த சுவைகளை தேர்வு செய்கிறார்.

    சமையலில் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென்இந்திய சமையல், சிறுதானிய சமையல், பால் வகை சமையல், மறந்து போன உணவுகள், சமையல் அலங்காரம் ஆகிய 10 தலைப்புகளில் உணவு வகைகளை தயார் செய்யலாம். போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் உணவு வகைகளை வீட்டிலேயே தயாரித்து எடுத்து வரலாம். ஒருவர் எத்தனை போட்டியிலும் பங்கேற்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

    சமையல் கலை நிபுணர்கள் முன்னிலையில் மண்டபத்தில் போட்டி நடக்கும். இந்தபோட்டியில் வெற்றி பெறுபவருக்கு திருப்பூரின் அறுசுவை அரசி என்ற பட்டம், பரிசு வழங்கப்படும். சாப்பாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளது.

    விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கலெக்டர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் 1ஆண்டு பயிற்சி முடித்தவர்.
    • நேரடியாக காங்கயம் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளராக பாா்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.இவருக்கு முன் காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த குமரேசன் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா்.

    தற்போது பொறுப்பேற்றுக் கொண்ட பாா்த்திபன் குரூப் 1 தோ்வில் தோ்வாகி, வண்டலூா் தமிழ்நாடு போலீஸ் அகாதெமியில் 1ஆண்டு பயிற்சி முடித்த பின், சிவகங்கை மாவட்டத்தில் பயிற்சி டி.எஸ்.பியாக பணியாற்றி வந்தநிலையில், தற்போது நேரடியாக காங்கயம் டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ளாா்.இவருக்கு காவல் துறை அதிகாரிகள் வாழத்து தெரிவித்தனா்.

    • மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

     காங்கேயம் :

    காங்கேயம் நாட்டான்வலசு அருகே உள்ளது என். காஞ்சிபுரம். இந்த ஊரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது35) , விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை மனைவியிடம் குளிக்கச் சென்று வருவதாக கூறிச்சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடிச்சென்ற போது நாட்டான்வலசு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான 12 அடி தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்தார். இது குறித்து ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விவசாயி பிரகாஷ் குளிக்க வரும் போது குடிபோதையில் இருந்துள்ளார்.

    தண்ணீர் தொட்டி நிறைய தண்ணீர் நிரம்பி இருந்தது. அதில் குளிக்கும்போது மூச்சு திணறி உயிர் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • காங்கேயம் வாரச்சந்தையில் 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன.
    • இயற்கை சீற்றங்கள் எதிலிருந்தும் பாதுகாப்பாக வியாபாரம் செய்யவும், பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் சந்தை அமைக்கப்படுகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வாரச்சந்தை மிக பழமையானதாகும். இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் திங்கள் தோறும் நடக்கும் சந்தையில் பொருட்களை வாங்கி விற்று வருவது வழக்கம். ஆனால் சந்தை பல ஆண்டாக அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்டது.

    இதனை மேம்படுத்த வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன. சாய்வு தளத்துடன் விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்ய ஏதுவாக கடைகள் அமைக்கப்படும். இதில் தினசரி மார்க்கெட்க்கு 67 கடைகள் அமைக்கப்படுகின்றன.

    இந்தக் கடைகளுக்கு வந்து செல்ல வசதியாக அகலமான தடம் அமைக்கப்படும். மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்கள் எதிலிருந்தும் பாதுகாப்பாக வியாபாரிகள் வியாபாரம் செய்யவும், பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

    மேலும் 27 கறிக்கடைகள் அமைக்க இடம் தனியாக ஒதுக்கப்பட்டு, முறைப்படி இந்த கடைகள் அங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரு பெரிய அளவிலான குடோனும் அமைக்கப்பட உள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ஏடிஎம். சென்டர் ஒன்றும் இதில் அமைய உள்ளது. மேலும் பாத்ரூம், டாய்லெட் 20 அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதியும் இதில் செய்யப்பட உள்ளது. இதனால் மக்கள் எளிதில் வந்து செல்ல முடியும்.

    இந்த சந்தைக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு என நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. கடந்த 10 வருடத்திற்கு மேல் சந்தையில் அடிப்படை வசதி செய்து தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சாமிநாதன் சந்தையை மேம்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதனை அடுத்து தற்போது சந்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சந்தை பணிகள் ஒரு வருடத்தில் முடிக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பிலிருந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார நிறுத்தம் செய்யப்படும்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அவசர கால மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காங்கயம் நகரம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகள்.

    சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், படியூர், மொட்டரபாளையம், ராசாப்பாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர் வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசி பாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டு தோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம், ஆலாம்பாடி, நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்தி ரெட்டிபாளையம் நெய்க்காரன் பாளையம், கல்லேரி.

    முத்தூர் கடைவீதி, காங்கயம் சாலை, ஈரோடு சாலை, வெள்ளகோவில் சாலை, கொடுமுடி சாலை, ஈரோடு சாலை, நத்தக்காடையூர் சாலை, வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலாம்பாளையம், சக்கரபாளையம், புதுப்பாளையம், செங்கோடம்பாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டுக்கடை, கரட்டுப்பாளையம், மலையத்தாபாளையம், வேலம்பாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • காங்கயம் நகராட்சிப் பகுதியில் குடிநீா் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • வாரச் சந்தை வளாகத்தில் இருக்கும் நூலகத்துக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமையில்மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.இதில் காங்கயம் நகராட்சிப் பகுதியில் குடிநீா்க் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு குடிநீா்க் கட்டணமாக ரூ.100 மட்டுமே நிா்ணயிக்க வேண்டும். வாரச் சந்தை வளாகத்தில் இருக்கும் நூலகத்துக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும். நகரில் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை பொதுமக்கள் வலியுறுத்தினா்.

    பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் உறுதியளித்தாா்.கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளா் எம்.மகேந்திரகுமாா், நகா்மன்ற நோ்முக உதவியாளா்சுப்பிரமணி மற்றும் நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • தனியாா் வேலை வேண்டி காத்திருக்கும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
    • மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காங்கயம் கரூா் சாலையில் உள்ள ஸ்ரீ மகாராஜா மஹாலில் இன்று நடைபெற்றது.

    இம்முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூா் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 15,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.

    இம்முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு படித்தவா்கள் மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் படிப்புகளிலும் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள் மற்றும் முந்தைய ஆண்டு படிப்பை முடித்த மாணவா்கள், தனியாா் வேலை வேண்டி காத்திருக்கும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

    முகாமில் வேலை வாய்ப்புகளோடு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியன வழங்கப்பட்டது.

    முகாமில் இன்று மாலை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சி.வி.கணேசன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று பணிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகின்றனர். கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர். 

    • காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த 19 விவசாயிகள் 190 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.71க்கும், சராசரியாக ரூ.84 க்கும் ஏலம்போனது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.7.87 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கட்கிழமை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த 19 விவசாயிகள் 190 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 9,611 கிலோ.காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.

    கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.71க்கும், சராசரியாக ரூ.84 க்கும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.7.87 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    • 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 40 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட சலங்கையாட்டமும் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காங்கயம் :

    காங்கேயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சார்பில் ஒயிலாட்டம் மற்றும் சலங்கையாட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு ஒயிலாட்டமும், 40 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட சலங்கையாட்டமும் அரங்கேற்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம்மருதாசல அடிகளார்,ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பனர் விடியல் சேகர்,சலங்கையாட்ட பயிற்சி வழங்கிய ஜெ.கே கலை குழுவின் தலைவரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமானஜெயக்குமார், வேளாண் விஞ்ஞானி மயில்சாமி, ஒயிலாட்டம் பயிற்சி வழங்கிய சங்கமம் கலை குழுவின் ஆசிரியர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் காங்கேயம் ஒன்றிய சேர்மன் மகேஷ் குமார் ஆகியோர் கலைஞர்களோடு சேர்ந்து சலங்கைகட்டி மேடையில் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.இந்த நிகழ்ச்சியை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்து செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

    • தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
    • அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடபெற்று வருகிறது

    காங்கயம் :

    காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை பலரும் அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது.

    தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.

    இந்த நிலையில் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது. இதனால் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.

    ×