

காங்கயம் :
காங்கயம் பகுதிகளில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை பலரும் அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது.
தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும்.
இந்த நிலையில் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது. இதனால் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டது.