search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் வாரச்சந்தையில் மேம்பாட்டு பணிகள் - வியாபாரிகள் மகிழ்ச்சி
    X

    கோப்புபடம்.

    காங்கயம் வாரச்சந்தையில் மேம்பாட்டு பணிகள் - வியாபாரிகள் மகிழ்ச்சி

    • காங்கேயம் வாரச்சந்தையில் 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன.
    • இயற்கை சீற்றங்கள் எதிலிருந்தும் பாதுகாப்பாக வியாபாரம் செய்யவும், பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் சந்தை அமைக்கப்படுகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வாரச்சந்தை மிக பழமையானதாகும். இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் திங்கள் தோறும் நடக்கும் சந்தையில் பொருட்களை வாங்கி விற்று வருவது வழக்கம். ஆனால் சந்தை பல ஆண்டாக அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்டது.

    இதனை மேம்படுத்த வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன. சாய்வு தளத்துடன் விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்ய ஏதுவாக கடைகள் அமைக்கப்படும். இதில் தினசரி மார்க்கெட்க்கு 67 கடைகள் அமைக்கப்படுகின்றன.

    இந்தக் கடைகளுக்கு வந்து செல்ல வசதியாக அகலமான தடம் அமைக்கப்படும். மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்கள் எதிலிருந்தும் பாதுகாப்பாக வியாபாரிகள் வியாபாரம் செய்யவும், பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

    மேலும் 27 கறிக்கடைகள் அமைக்க இடம் தனியாக ஒதுக்கப்பட்டு, முறைப்படி இந்த கடைகள் அங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரு பெரிய அளவிலான குடோனும் அமைக்கப்பட உள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ஏடிஎம். சென்டர் ஒன்றும் இதில் அமைய உள்ளது. மேலும் பாத்ரூம், டாய்லெட் 20 அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதியும் இதில் செய்யப்பட உள்ளது. இதனால் மக்கள் எளிதில் வந்து செல்ல முடியும்.

    இந்த சந்தைக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு என நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. கடந்த 10 வருடத்திற்கு மேல் சந்தையில் அடிப்படை வசதி செய்து தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சாமிநாதன் சந்தையை மேம்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதனை அடுத்து தற்போது சந்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சந்தை பணிகள் ஒரு வருடத்தில் முடிக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பிலிருந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×