search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacto Geo protest"

    சென்னை எழிலகம் வளாகத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 300 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    சென்னை:

    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கோர்ட்டு மற்றும் அரசின் கோரிக்கைகளை ஏற்காமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    1 வாரமாக நீடித்து வரும் இந்த போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அரசு அழைத்து பேசும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து அரசு ஊழியர்கள் இன்றும் மறியலில் ஈடுபட்டனர்.

    சென்னை எழிலகம் வளாகத்தில் சுமார் 500 பேர் திரண்டனர். அதன் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், அந்தோணிசாமி, பக்தவச்சலம் ஆகியோர் தலைமையில் திரண்டு அரசு ஊழியர்கள் சிறிது நேரம் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி பேசினார்கள்.

    அதன் பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர். எழிலகம் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் அரசு ஊழியர்களை சாலையில் அமர விடாமல் தடுத்து மறித்து பஸ்களில் ஏற்றி சென்றனர்.

    இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அதிகமானோர் இருந்தாலும் கைது செய்ய முற்பட்டவுடன் 100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பின்பக்கம் வழியாக ஓட்டம் பிடித்தனர்.

    ஆனாலும் போராட்டத்தில் தீவிரம் காட்டிய ஆண்- பெண் ஊழியர்கள் தாமாக முன்வந்து கைதானார்கள். சிலர் தங்களது குடும்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி எழிலகம் வளாகத்தில் இருந்து கைது நடவடிக்கைக்கு பயந்து தப்பி சென்றனர்.

    கைது செய்யப்பட்ட ஊழியர்கள் புதுப்பேட்டை, பெரம்பூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    பொதுமக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் சாலையில் அமராமல் கைதானார்கள். இதனால் அவர்கள் இன்று மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

    இதற்கிடையில் அரசு அலுவலர் ஒன்றியம் (என்.ஜி.ஓ.), தலைமை செயலக சங்கம், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இன்று மாலையில் முடிவு செய்கிறார்கள்.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்து வந்த தலைமை செயலக ஊழியர்கள் இன்று காலை 11 மணி அளவில் தங்கள் பணிகளை விட்டு விட்டு ஒன்று கூடினார்கள். தீவிரம் அடைந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது பற்றி இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று சங்க நிர்வாகிகள் அவர்கள் மத்தியில் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo
    போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய ஊருக்கு பணி இடமாற்றம் செய்து தரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. #JactoGeo #TeachersProtest
    சென்னை:

    ஓய்வூதியத் திட்டம், சம்பள முரண்பாடு ஆகியவை தொடர்பாக உள்ள பிரச்சனைகளை தீர்க்க கோரி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று அவர்களது போராட்டம் 7-வது நாளை எட்டியுள்ளது.

    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து போராட்டத்தை ஒடுக்க முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் ஆசிரியர்கள் தொடர்ந்து போராடுவோம் என்று அறிவித்தனர். பிரச்சனைகளை தீர்க்கும் வரை எந்தவித பாதிப்பையும் எதிர்கொள்ள தயார் என்றும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    இந்த நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை இன்று மதியம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. அதன்படி உடனடியாக பணிக்கு திரும்புவோர்களுக்கு அவர்கள் விரும்பும் ஊருக்கு பணியிட மாற்றம் செய்து தரப்படும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீண்ட நாட்களாக பணியிட மாற்றம் கேட்டு வரும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo #TeachersProtest
    அரசு ஊழியர்கள் போராட்டத்தை தி.மு.க. தூண்டிவிடுகிறது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
    பொள்ளாச்சி:

    துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது-

    இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 14,700 கோடி சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது உள்ள சூழலில் வழங்கமுடியவில்லை. இதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசு , அரசு ஊழியர்களுக்கு எதிரி கிடையாது.

    மாணவர்களின் நலன் கருதி சமுதாய அக்கறையுடன் உடனடியாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும். தேர்வுகள் நெருங்குவதால் மாற்று ஏற்பாட்டை கண்டிப்பாக அரசு செய்யும்.

    இந்தபோராட்டத்தை சில அரசியல் கட்சிகள் குறிப்பாக தி.மு.க. தூண்டிவிடுவது கண்டிக்கத்தக்கது.

    கஜானாவிற்கு வரும் வருவாயை முழுமையாக ஆசிரியர்களுக்கு வழங்கமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசின் போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக இன்று மாலை முக்கிய முடிவு எடுக்க உள்ளது. #JactoGeo
    சேலம்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி தமிழக அரசின் 56 துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகம் முழுவதும் 25-ந்தேதி மறியில் ஈடுபட்டவர்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை மட்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டம் தொடரும் என்றும், இன்றும் (28-ந்தேதி) சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் எங்களது கோரிக்கையும், அவர்களின் கோரிக்கையும் ஒன்றாக இருப்பதால் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தமிழக அரசின் போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அறவித்துள்ளது.

    மேலும் வரும் நாட்களில் போராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளனம் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள எச்.எம்.எஸ். அலுவலகத்தில் இன்று மாலை 3 மணியளவில் அவசர கூட்டம் நடக்கிறது.

    அதில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், காலவரையற்ற போராட்டத்தில் இறங்குவது குறித்து ஆலோசித்து அறிவிக்கப்பட உள்ளது.

    போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் இன்று மாலை முதல் இறங்கினால் அரசு பஸ்கள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து போராட்டத்தை முறியடிக்கவும் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

    இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் பத்மநாபன் கூறியதாவது:-


    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்தாமல் அடக்கு முறையை அரசு கையாண்டு வருகிறது. இன்று முதல் தலைமை செயலக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளதால் போராட்டம் மேலும் தீவிரம் அடையும்.

    போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ. 8 ஆயிரம் கோடியை வேறு செலவுக்கு அரசு எடுத்து கொண்டது. இதே போல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த 50 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என்று தெரியவில்லை.

    அரசு ஊழியர்களை போல போக்குவரத்து கழகத்தில் 76 ஆயிரத்து 600 பேர் புதிய பென்சன் திட்டத்தில் பணியில் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதிய குழுவில் 21 மாதம் நிலுவை பாக்கி உள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தில் 14 மாத நிலுவை உள்ளது.

    240 நாட்கள் பணி முடித்ததும் போக்குவரத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஆனால் 12 ஆயிரத்து 611 பேர் 1700 நாட்கள் பணி முடித்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதனால் எங்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒரே பிரச்சனை என்பதால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

    முதலில் ஜாக்டோ-ஜியோ மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துவோம், அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    சென்னையில் இன்று மாலை நடைபெறும் அவசர கூட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., பாட்டாளி தொழிற்சங்கம் உள்பட 10 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 90 சதவீத பேர் போராட்டத்தில் இறங்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo
    நாளை பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

    6-வது நாளாக தொடரும் போராட்டத்தால் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு  உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையிலுள்ள 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.

    இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், நாளை பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுப்பவர்கள் மீது காவல் துறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் புகார் அளிக்க வேண்டும். ஆசிரியர்களிடம் இருந்து புகார்கள் வந்தால் காவல் நிலையத்தில் பதிவுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

    இந்த போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 400க்கு மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.



    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை விடுத்துள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். நாளைக்குள் பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இருக்காது.

    அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம். அப்படி வர தவறினால் புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள். ஜனவரி 28ம் தேதிக்கு பிறகு தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducation
    பல்வேறு மாவட்டங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. #TNGovt #JactoGeo
    சென்னை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

    இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 14 ஆசிரியர்கள் உட்பட 15 பேரை சஸ்பெண்ட செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதேபோல், திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட 6 ஆசிரியர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 57 ஆசிரியர்களும், விருதுநகரில் 22 ஆசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #TNGovt #JactoGeo
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்பவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #EdappadiPalanisamy #JactoGeo
    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதையடுத்து, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு அதிகமான ஊதியமும், சலுகையும் வழங்கப்படுகிறது. அதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.



    இளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் நிதி இருந்தால் தான் அதிக ஊதியமும், சலுகையும் வழங்க முடியும்.

    எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். ஆசிரியர்களை குறை சொல்வதாக நினைக்கக் கூடாது. நிலைமையை எண்ணிப்பார்த்து ஒத்துழைப்பு தரவேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ற இரு சக்கரமும் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும்.

    சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மேசையின் மீது ஏறி தி.மு.க.வினர் நாட்டியம் ஆடுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டப்பேரவையில் திமுகவினரை சபாநாயகர் மன்னித்தது தான் அதிமுகவின் பெருந்தன்மை என தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy #JactoGeo
    தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.7,500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #JactoGeo
    சென்னை:
     
    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் குறிப்பாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    வேலை நிறுத்தத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்றுள்ளனர். பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளில் வெறும் 2 ஆசிரியர்களே உள்ளனர். அவர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 



    இதையடுத்து, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அளிக்க முடிவானது. 

    இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. #JactoGeo
    தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடைபெற்றது. #JactoGeo
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.

    நேற்று தாலுகா அளவில் மறியல் போராட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கைதானார்கள். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் ஒன்று திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோ‌ஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு திரண்டு சிறிது நேரம் போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கி பேசினர். பின்னர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 3-வது நாள் வேலை நிறுத்தத்தால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை மூடிவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

    ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள் வராததால் மாணவர்கள் மட்டுமே பாடம் நடத்தும் நிலை இருந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை போல சென்னையிலும் அரசு அலுவலகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இன்று சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர்கள் வின்சென்ட், சங்கர பெருமாள் ஆகியோர் அரசு ஊழியர்கள் மத்தியில் போராட்டம் குறித்து விளக்கி பேசினார்கள். தடை உத்தரவை மீறி போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இந்த போராட்டத்தில் 500 பெண்கள் உள்பட 1,000 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் சாலை மறியலுக்கு முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அதையும் மீறி சாலையில் நின்று மறியல் செய்தனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். #JactoGeo

    போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். #Congress #Thirunavukkarasar
    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் பா.ஜனதா ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா நியமிக்கப்பட்டிருப்பதை தமிழக காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன். பிரியங்கா இப்போது அரசியலுக்கு வரவில்லை. அவருக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே இந்திரா காந்தியுடனும், சோனியா காந்தியுடனும் உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு வெற்றியும் பெற்று தந்திருக்கிறார்.

    ராகுல் காந்திக்கு பக்க பலமாக பிரியங்கா இருப்பார். பிரியங்காவுக்கு பதவி வழங்கியதால் மோடிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் பிரியங்காவை கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். பிரியங்காவை குடும்ப வாரிசு, திடீரென்று அரசியலுக்கு வந்து விட்டார் என்று சொல்கிறார்கள்.

    ஆனால் பா.ஜனதாவில் சீரியல், சினிமா நடிகைகளான ஸ்மிரிதிஇரானி, ஹேமமாலினி ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.


    தெகல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூஸ் சாமுவேல் தனக்கு கிடைத்த தகவலின் பேரில் முதல்-அமைச்சர் எடப்படி பழனிசாமி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

    ஏற்கனவே மேத்யூஸ், பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான பங்காரு லட்சுமண் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். அதை ஏற்றுக்கொண்டு அவரை நீக்கினார்கள். அதேபோல் மேத்யூஸ், எடப்பாடி பழனிசாமி மீது சொல்லி இருக்கும் ஆதாரங்களை வைத்து அவரை கவர்னர் ஏன் பதவி விலக சொல்லவில்லை.

    போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்திருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அவர்களை அழைத்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் திருப்பூர் பள்ளியில் 2 தற்காலிக ஆசிரியர்களை பெற்றோரே நியமித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் சின்னிய கவுண்டன் புதூரில் மாநகராட்சி தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

    முதல் நாளன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டனர். இதனால் மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆசிரியர் பயிற்சி முடித்த 2 ஆசிரியர்களை மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்க நியமனம் செய்வது என முடிவு செய்தனர்.

    அதன்படி 2 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்தனர். இதனையடுத்து தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.
    ×