search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் - முதல்வர் பழனிசாமி
    X

    ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் - முதல்வர் பழனிசாமி

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அதை கைவிட்டு உடனே வேலைக்கு திரும்பவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். #EdappadiPalanisamy #JactoGeo
    சென்னை:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    இதையடுத்து, தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    இந்நிலையில் முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு அதிகமான ஊதியமும், சலுகையும் வழங்கப்படுகிறது. அதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.



    இளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் நிதி இருந்தால் தான் அதிக ஊதியமும், சலுகையும் வழங்க முடியும்.

    எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். ஆசிரியர்களை குறை சொல்வதாக நினைக்கக் கூடாது. நிலைமையை எண்ணிப்பார்த்து ஒத்துழைப்பு தரவேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ற இரு சக்கரமும் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும்.

    சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மேசையின் மீது ஏறி தி.மு.க.வினர் நாட்டியம் ஆடுகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டப்பேரவையில் திமுகவினரை சபாநாயகர் மன்னித்தது தான் அதிமுகவின் பெருந்தன்மை என தெரிவித்துள்ளார். #EdappadiPalanisamy #JactoGeo
    Next Story
    ×