search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol smuggling"

    தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார். #IGPonManickavel #PonManickavel
    சென்னை:

    போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தமிழக போலீஸ் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    காவல் துறையில் நேர்மையான அதிகாரி என்று பெயர் வாங்கிய இவர் கடந்த சில ஆண்டுகளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் பொறுப்பேற்ற பின்னர்தான் அந்த துறையின் செயல்பாடுகள் வெளியில் தெரிந்தன. அதிரடியாக செயல்பட்டு தமிழகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால சிலைகளை மீட்டார். அவரது செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிந்தன.

    அதே நேரத்தில் தமிழக அரசு, சிலை கடத்தல் தொடர்பான தகவல்களை அவர் அரசிடம் சரியாக தெரிவிப்பது இல்லை என்று குற்றம் சாட்டியது. இதன் காரணமாக அவர் ரெயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டார்.

    இருப்பினும் கோர்ட்டு தலையிட்டு, சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிப்பார் என்று உத்தரவிட்டது. இதனால் 2 பணிகளையும் அவர் செய்து வருகிறார்.

    தமிழக போலீசில் நேரடி டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த பொன் மாணிக்கவேல் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்குவதிலும் திறமையாக செயல்பட்டார். செங்கல்பட்டு கிழக்கு போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார். சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது தற்கொலை வழக்கு ஒன்றை தூசு தட்டி கொலை வழக்காக மாற்றினார். இதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் வாங்கி கொடுத்தார்.


    டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவு பிரிவிலும் பணியாற்றியுள்ளார். சென்னை மத்திய குற்ற பிரிவு இணை ஆணையராகவும் இருந்துள்ளார். தான் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கண்டிப்பான அதிகாரி என்று பெயர் எடுத்த பொன் மாணிக்கவேல் நாளையுடன் ஓய்வு பெற உள்ளார்.

    சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பாக விசாரித்து வருவதால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி உள்ளனர். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்பது நாளை தெரியும்.

    இந்த நிலையில் சென்னை எழும்பூரில் பொன் மாணிக்கவேலுக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    ரெயில்வேயில் வழிப்பறியில் ஈடுபட்டால் 14 ஆண்டு வரையில் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகள் உள்ளன. சாட்சிகள் இல்லாத நிலையில் குற்றவாளிகளிடம் வாக்கு மூலம் வாங்கினாலே செல்லுபடியாகும், அதனை யாரும் செய்வது இல்லை. கீழ்நிலை காவலர்களுக்கு அது சொல்லிக் கொடுக்கப்படுவது இல்லை.

    குற்றவாளிகளுக்கு எதிராக 9 எம்.எம். துப்பாக்கியை காட்டுவதை விட போலீசார் தங்களது செல்போனில் அவர்களின் வாக்கு மூலத்தை வீடியோவாக பதிவு செய்வது நல்லது. நல்லது, கெட்டது இரண்டையும் ஏற்கும் மனநிலைக்கு போலீசார் வரவேண்டும். சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்.ஐ.ஆர். போடுவதற்கு பயப்படக் கூடாது.

    இவ்வாறு பொன் மாணிக்கவேல் பேசினார். #IGPonManickavel #PonManickavel
    பழமை வாய்ந்த சிலைகளை யாராக இருந்தாலும் சரி, இன்னும் 15 நாட்களில் சிலைகளை தங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். #PonManickavel #IdolSmuggling
    மேல்மருவத்தூர்:-

    ரன்வீர்ஷாவின் பண்ணை வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தொடர்பாக தவறு செய்யாத யாரையும் நாங்கள் கைது செய்வது இல்லை. குற்றம் சாட்டப்பட்டு அது நிரூபணம் ஆனால் மட்டுமே கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எனவே தவறு செய்யாதவர்கள் அச்சப்பட தேவையில்லை.

    அறநிலையத்துறை அதிகாரிகள் 9 பேரை கைது செய்ய வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.


    ஐகோர்ட்டில் அதிகாரி ஒருவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்து அது தள்ளுபடியாகி விட்டது. இருந்தாலும் அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டாமல் உள்ளோம். பொறுமையாகவே நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    ஒரு சில பணக்காரர்கள் வீட்டிலும் சிலைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இன்னும் 15 நாட்களில் சிலைகளை எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonManickavel #IdolSmuggling
    கோயில் சிலைகளை மீட்கும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் முயற்சிக்கு தமிழக அரசு முட்டுக்கட்டைப் போடுவதா? என்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தள்ளார். #Seeman #IdolSmuggling #PonManickavel
    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவினர் 60 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பெரிய கோயிலில் காணாமல் போன பல நூறு ஆண்டுகள் பழமையான ராஜராஜசோழன், உலக மாதேவியின் சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

    சைதாப்பேட்டையிலுள்ள ரன்வீர்ஷா என்பவரது வீட்டில் சிலைகள், கோயில் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு இடமில்லை என்றும், சிலைகளை எடுத்துச்செல்ல அரசு சார்பாக எந்தப் பொருளாதார உதவியும் செய்யப்பட மாட்டாது எனவும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. எனவே தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். #NaamTamilarKatchi #Seeman #IdolSmuggling #PonManickavel
    சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சென்னையில் நேற்று தொழிலதிபர் வீட்டில் தனது குழுவினருடன் சோதனை செய்வதற்கு முன்பாக தன்னையே சோதனைக்கு உட்படுத்தியது வியப்பை ஏற்படுத்தியது. #IdolSmuggling #PonManickavel #StatueSmuggling
    சென்னை:

    ஒரு இடத்தில் போலீசார் சோதனையிட செல்லும் போது சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்கிற விதி உள்ளது.

    குறிப்பாக சோதனையிடச் செல்லும் போலீசாரை, வீட்டில் இருப்பவர்கள் சோதனை செய்துதான் உள்ளே அனுப்ப வேண்டும். இது பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதே இல்லை.

    நேற்று ரன்வீர்ஷாவின் வீட்டில் நடந்த சோதனையின் போது ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இதனை முழுமையாக கடை பிடித்தார்.

    சிலை தடுப்பு பிரிவு போலீஸ் படையுடன் ரன்வீர் ஷாவின் வீட்டுக்கு பொன்.மாணிக்கவேல் சென்றபோது, அங்கு வக்கீல்கள் இருந்தனர். ரன்வீர்ஷாவின் செயலாளராக பணியாற்றும் பெண் ஒருவரும், பணியாட்கள் சிலரும் வீட்டில் இருந்தனர்.


    அவர்களிடம் பொன்.மாணிக்கவேல், என்னையும், என்னோடு வந்துள்ள சக போலீசாரையும் நீங்கள் முதலில் சோதனை நடத்த வேண்டும். அதன் பின்னரே நாங்கள் உள்ளே செல்வோம் என்று கூறினார்.

    இதனை ஏற்று, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் முதலில் சோதனைக்குட்படுத்தப்பட்டார். பின்னர் அவருடன் சென்ற போலீசாரும் சோதனை செய்யப்பட்டனர். இதன் பிறகு ரன்வீர்ஷாவின் வீட்டில் சோதனை நடைபெற்றது.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் எப்போதுமே வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளும் அதிகாரி ஆவார். நேற்று அது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. #IodlSmuggling #PonManickavel #StatueSmuggling
    நெல்லை பழவூர் நாறும்பூநாதர் கோவில் சிலை கடத்தப்பட்ட வழக்கில் ஆஜராக மாதாவரம் இன்ஸ்பென்க்டர் ஜீவானந்தம், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காசிப், சஸ்பெண்ட் ஆன டி.எஸ்.பி காதர் பாட்ஷா 19-ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #IdolSmuggling #IGPonmanikavel
    சென்னை:

    நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு 13 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த சிலைகளின் மதிப்பு ரூ.30 கோடியாகும்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை வழக்கு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளில் ஆடல் நடராஜன், சிவகாமி அம்மாள், காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், அஸ்திரதேவர், வெயில் காத்த அம்மன், கோமதி அம்மன், சுப்பிரமணியர் என 9 சிலைகள் மீட்கப்பட்டன.

    மற்ற சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டதாக தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த நிலையில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் சிலர் தப்ப விடப்பட்டு இருப்பதாகவும், வெளிநாடுகளைச் சேர்ந்த சிலர் வழக்கில் சேர்க்கப்படாமல் இருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மனு செய்தார். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டது.

    அதோடு இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணையை தொடங்கியதும் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் பழவூர் கோவிலுக்கு வந்து பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சாமி சிலைகளை போட்டோ எடுத்தது தெரிய வந்தது. அவர் அவ்வாறு போட்டோ எடுத்து சென்றபிறகுதான் 13 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பதை பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்தார்.

    மேலும் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் சென்னை, டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளன என்பதும் தெரிய வந்தது. அதோடு 4 சிலைகளில் இருந்த தங்கத்தை பிரித்தெடுக்க அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் அமிலம் ஊற்றி அழித்து விட்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து மேலும் 8 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே சுபாஷ்கபூர் போலீசாரிடம் சிக்கினார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வல்லப்பிரகாஷ், ஆதித்திய பிரகாஷ், தீனதயாளன் உள்பட 10 பேர் ஏற்கனவே ஜெயிலில் உள்ளனர்.

    சிலை கடத்தலில் தொடர்புடைய மேலும் 6 பேர் வெளிநாடுகளில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்கிடையே பழவூர் சாமி சிலைகள் கடத்தப்பட்டது பற்றி ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்மன் அனுப்பி வரவழைத்து அவர் விசாரித்து வருகிறார்.

    அந்த வகையில் இந்த வழக்கில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காசிப் மற்றொரு டி.எஸ்.பி. காதர்பாட்சா, மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மூவரையும் விசாரணைக்கு வருமாறு தற்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இந்த 3 போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற உள்ளது. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேரிடையாக இவர்களிடம் விசாரணை நடத்த உள்ளார்.

    சிலைகள் கடத்தப்பட்ட போது போலீஸ் அதிகாரிகள் வெளிநாட்டுக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டது பற்றிய தகவல்களை உரிய முறையில் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதுபற்றி விசாரணை நடைபெற உள்ளது.

    இதுமட்டுமின்றி பழவூர் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளுக்கு பதிலாக போலி சிலைகளை செய்து வைத்து பிரச்சனையை தீர்த்து விடலாம் என்று போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றியும் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜீவானந்த்திடம் அதிரடி விசாரணை நடத்த பொன்.மாணிக்கவேல் முடிவு செய்துள்ளார்.

    இந்த விசாரணைக்கு பிறகு பழவூர் கோவில் சாமி சிலைகள் கடத்தல் வழக்கில் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IdolSmuggling #IGPonmanikavel
    தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி நிர்வாகிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தென்காசி:

    தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மீட்டு காப்பாற்ற வேண்டும், தமிழக கோவில்களில் சிலைகள் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி நிர்வாகிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து உண்டியலில் கோரிக்கை மனுவை போட்டனர்.

    நிகழ்ச்சிக்கு தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குற்றாலநாதன் கலந்து கொண்டார். அப்போது பேசியதாவது :-

    தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோவில்களில் மொத்தம் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்களை காணவில்லை. சுமார் 7 ஆயிரம் சாமி சிலைகளை காணவில்லை. 1700 சிலைகள் போலியானவை என்று தெரியவந்துள்ளது. அத்துடன் பல்வேறு கோவில்களில் உள்ள நகைகள், சொத்துக்கள் களவாடப்பட்டுள்ளன.

    இந்த கொள்ளை சம்பவங்களை தீர விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய தயார் நிலையில் இருந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் என்ற அதிகாரியை தடுக்கும் நோக்கத்தில் இந்த விசாரணையை தேவையில்லாமல் இவரிடம் இருந்து பறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில் பல்வேறு தீய சக்திகள் இயங்கி கொண்டு இருக்கின்றன. எனவே இந்து கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி காசிவிசுவநாதரிடம் பிரார்த்தனை செய்து கோவில் உண்டியலில் மனுவை சமர்பித்துள்ளோம்.

    சம்பந்தப்பட்ட கோவில் நிலங்கள் மற்றும் சுவாமி சிலைகளை திருடிய உண்மை குற்றவாளிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறியதால் இந்த புகாரை காசிவிசுவநாதரிடம் கொடுத்துள்ளோம். அவர் நிச்சயம் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சாமி கடத்தல் வழக்கில் கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #IdolSmuggling #HighCourt
    சென்னை:

    தமிழகத்தில் பழமையான கோவில்களில் இருந்து பல சாமி சிலைகள் கடத்தப்பட்டன.

    இதுகுறித்து ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை விசாரித்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உட்பட பலரை இந்த தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதாக தமிழக அரசு கடந்த 1-ந்தேதி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன். ஆதிகேசவலு ஆகியோர், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதற்கிடையில், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் திருமகள் மீதும், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவரை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இதையடுத்து கூடுதல் ஆணையர் திருமகள், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், பதில் அளிக்கும் படி போலீசாருக்கு உத்தரவிட்டனர். முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை திருமகளை கைது செய்யவும் தடை விதித்தனர். #IdolSmuggling #HighCourt
    தங்கச் சிலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
    சென்னை:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு  தங்கச் சிலைகள் செய்ததில் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை (52) கைது செய்தனர்.

    இதையடுத்து ஜாமீன் கேட்டு கவிதா தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த ஐகோர்ட், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி கவிதாவுக்கு எதிரான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதையடுத்து இன்று உத்தரவு பிறப்பித்த  உயர்நீதிமன்றம், கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. திருச்சியில் 30 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #EkambaranatharTemple #MisappropriationOfGold #SwindlingGold
    கோவில்களில் கோடிக்கணக்கில் ஊழல், சிலை கடத்தல் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். #LaGanesan #idolsmuggling
    சென்னை:

    இந்து அறநிலையத்துறையில் ஆன்லைன் மூலம் பக்தர்கள் கோவில்களுக்கு வழங்கிய காணிக்கையில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து இல.கணேசன் எம்.பி.யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ரூ.500 கோடிதான் ஊழல் நடந்திருப்பதாக கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் நடந்தது இன்னும் எவ்வளவோ? அறநிலையத்துறையில் ஊழல் நடப்பது புதிது அல்ல. கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

    அறநிலைய துறையில் பொறுப்புக்கு வருபவர்களுக்கு தெய்வ நம்பிக்கை கட்டாயம் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளுக்கு அளிக்கும் காணிக்கைகள் உரிய முறையில் செலவிடப்படுவது இல்லை. வருமானத்தில் 20 சதவீதம் மட்டுமே கோவில்களுக்கு செலவிடப்படுகிறது. மீதம் உள்ள 80 சதவீதம் நிர்வாக செலவுகளுக்காக எடுக்கப்படுகிறது.

    ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்ற எங்களது கோரிக்கை வலுவடைந்து வருகிறது. கோவிலையும் அதன் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டவர்களே அதை சூறையாடி வருவது வேதனைக்குரியது.


    திருட்டு போன சிலைகளை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், உண்மையான உணர்வோடு கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு அறநிலையத்துறையின் முக்கிய நிர்வாகிகளே ஒத்துழைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது தெய்வத்துக்குத் தான் வெளிச்சம்.

    காணாமல் போன சிலைகள் மீட்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஆண்டவன் தண்டனை ஒரு புறம் இருக்கட்டும், குற்றவாளிகளை கோர்ட்டு மூலம், ஆள்பவர்கள் தண்டிக்க வேண்டும்.

    இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். தெய்வ நம்பிக்கை கொண்டவர்களிடம் கோவில்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு இல.கணேசன் எம்.பி. கூறினார். #BJP #LaGanesan #idolsmuggling
    அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை காப்பாற்றவே சிலை கடத்தல் வழக்கை அரசு சிபிஐக்கு மாற்றம் செய்துள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார். #Idolsmuggling

    திருத்துறைப்பூண்டி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு, ஷேல் கேஸ் அதிகம் இருப்பதாகவும், அதனை எடுப்பதில் அரசு கொள்கையில் தங்களை மாற்றிக் கொள்ளாது என்றும் மத்திய அமைச்சர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    இதில் மாநில அரசு தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது. கோவில்களில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. வெளிநாடுகளில் இருந்த சிலைகள் மீட்கப்பட்டது. அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கடத்தலில் ஈடுட்டுள்ளதை கண்டுபிடித்து பலர் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் அவரை செயல் படவிடாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதில் அதிகாரிகளையும், அரசியல் வாதிகளையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையே.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் தூர் வாரும் பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. இதனால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்காததால் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    சேலம் 8 வழிச்சாலையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். எனவே உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார். #Jayakumar #Idolsmuggling

    சென்னை:

    கிண்டியில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதில் அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. குற்றத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சிலை கடத்தல் விசாரிப்பு உள்நாடு முதல் வெளிநாடு வரை தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ.க்கு மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Jayakumar #Idolsmuggling

    ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்த சிலை கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம் திருடர்களை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது என்று விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார். #IdolSmuggling
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பல ஆண்டுகளாக கோவில் சிலைகளும், விலை உயர்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை விசாரிப்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சாமி சிலைகளையும், பொருட்களையும் மீட்டுள்ளனர். உதாரணமாக வெளிநாடுகளில் இருந்தும், குஜராத்திலிருந்தும் ராஜராஜசோழன் சிலையை மீட்டு கொண்டுவந்தார்கள்.

    இதை பாராட்டி தமிழக அமைச்சரே நேரடியாக சென்று வரவேற்றார். பல சாமி சிலைகள் திருடு போயிருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து 100 கிலோ தங்கத்திற்கு மேலாக காணிக்கையாக பெறப்பட்டு, முழுமையாக திருடப்படிருப்பதை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு கண்டுபிடித்து இருக்கிறார்கள்.


    இதைத் தொடர்ந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் அவர்களை கைதும் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நேர்மையான அதிகாரிகளிடம் இருந்து, சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைக்க கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் கண்டனத்திற்குறியது.

    ஒரு துறையில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றி, அதில் நடந்திருக்கும் குற்றங்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலையில், நேர்மையான அதிகாரிகளுக்கு தமிழக அரசு துணைநின்று ஊக்கப்படுத்தாமல், திருடர்களுக்கு சாதகமாக அரசு முடிவு எடுப்பது, திருடர்களை காப்பாற்ற முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சாமி சிலைகளையும், கோவில் சொத்துக்களையும் கொள்ளையடிப்பவர்களை சட்டத்தின் படி இரும்புக்கரம் கொண்டு தடுக்கவேண்டும்.

    மேலும் கோவில் சொத்துக்களை திருடுபவர்களையும், அவர்களை காப்பாற்ற நினைப்பவர்களையும் “அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்”.

    இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றாமல், தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைகள் செயல்படுவதன் மூலம் தான் உண்மையான குற்றவாளிகள் கண்டரியப்படுவார்கள். பல ஆண்டுகளாக கடத்தப்பட்ட சிலைகள், சிற்பங்கள் மீட்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடத்திலே ஏற்பட்டுள்ளது. ஆகவே நேர்மையான அதிகாரிகள் பணியில் தொடரவேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #IdolSmuggling #Vijayakanth
    ×