search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hingu munnani"

    தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி நிர்வாகிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தென்காசி:

    தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மீட்டு காப்பாற்ற வேண்டும், தமிழக கோவில்களில் சிலைகள் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி நிர்வாகிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்து உண்டியலில் கோரிக்கை மனுவை போட்டனர்.

    நிகழ்ச்சிக்கு தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் குற்றாலநாதன் கலந்து கொண்டார். அப்போது பேசியதாவது :-

    தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோவில்களில் மொத்தம் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்களை காணவில்லை. சுமார் 7 ஆயிரம் சாமி சிலைகளை காணவில்லை. 1700 சிலைகள் போலியானவை என்று தெரியவந்துள்ளது. அத்துடன் பல்வேறு கோவில்களில் உள்ள நகைகள், சொத்துக்கள் களவாடப்பட்டுள்ளன.

    இந்த கொள்ளை சம்பவங்களை தீர விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய தயார் நிலையில் இருந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் என்ற அதிகாரியை தடுக்கும் நோக்கத்தில் இந்த விசாரணையை தேவையில்லாமல் இவரிடம் இருந்து பறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில் பல்வேறு தீய சக்திகள் இயங்கி கொண்டு இருக்கின்றன. எனவே இந்து கோவில்களையும், கோவில் சொத்துக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி காசிவிசுவநாதரிடம் பிரார்த்தனை செய்து கோவில் உண்டியலில் மனுவை சமர்பித்துள்ளோம்.

    சம்பந்தப்பட்ட கோவில் நிலங்கள் மற்றும் சுவாமி சிலைகளை திருடிய உண்மை குற்றவாளிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறியதால் இந்த புகாரை காசிவிசுவநாதரிடம் கொடுத்துள்ளோம். அவர் நிச்சயம் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×