search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire"

    • தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
    • தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தக் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை குப்பை கிடங்கு மாற்றப்படவில்லை. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதால் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று அதிகாலையில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலம் வந்தது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    காற்றும் வீசியதால் அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள். நேரம் செல்ல செல்ல புகை அதிகரித்து இருளப்பபுரத்திலிருந்து பீச் ரோடு வரும் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    அந்த பகுதி வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் தக்கலையில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தற்பொழுது போராடி வருகிறார்கள். ஜே..சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ந்து வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மூக்கை பிடித்து கொண்டு வாழ வேண்டிய நிலை உள்ளது. குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக குப்பை கிடங்கை மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    • சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார்.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் நேற்று மாலை ஆனந்தபாபுவிற்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி (வயது 48), தர்மராஜ் (25), ஜீவானந்தம் (25), மணியரசன் (35), சித்திரைவில் (43) மற்றும் தரங்கம்பாடி தாலுகா வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (34) ஆகிய 6 மீனவர்கள் திருமுல்லைவாசல் மீன்பிடி தளத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    சுமார் 20 கடல் மைல் தூரத்தில் நள்ளிரவில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பைபர் படகில் இருந்த என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் அது தீ பிடித்து எரிந்தது. அப்போது என்ஜீனில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது. மேலும் இந்த தீ பைபர் படகிலும் பிடித்து எரிந்தது.

     

    இந்த தீவிபத்தில் படகில் இருந்த மீனவர்கள் ஜீவானந்தம், மணியரசன் சித்திரைவேல் உள்ளிட்ட 6 பேரும் தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் 6 பேரும் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சக மீனவர்கள் இதனை பார்த்து உடனடியாக விரைந்து வந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் பைபர் படகு மற்றும் ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, ஐஸ்பெட்டி உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக மீனவர் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் தீ விபத்தில் சேதமான பைபர் படகையும் கரைக்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

    • ஒரு பிக்கப் வேன் சேதமடைந்துள்ளது.
    • திடீர் தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பர்ம் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல்வேறு இருசக்கர வாகனங்கள், பிக்கப் வேன், 15-க்கும் அதிக பட்டாசு கடைகள் தீயில் கருகியதாக காவல் துறை தெரிவித்து இருக்கிறது.

    தீ விபத்தை ஒட்டி தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் 14 பட்டாசு கடைகள், 13 இருசக்கர வாகனங்கள், ஒரு பிக்கப் வேன் சேதமடைந்துள்ளது. தீ விபத்து காரணமாக ரூ. 15 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    வார சந்தை நாள் மற்றும் திங்கள் கிழமை அன்று துசு பண்டிகை வர இருப்பதை அடுத்து பொது மக்கள் அதிகம் கூடிய நிலையில், திடீர் தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

    • ஷார்க் சர்க்யூட் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
    • தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாக கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர்.

    மும்பை அருகே தானே டோம்பிவலியில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கட்டிடங்கள் முழுவதும் தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாகவே கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர். பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், தீயை அணைக்கும் முயற்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லோதா குடியிருப்பு வளாகத்தில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து ஷார்ச் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 11 வது தளத்தில் ஏற்பட்ட தீ, 18 வது மாடி வரை பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

    • சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    களியக்காவிளை:

    களியக்காவிளை அருகே திருத்தோபுரம் காக்கோட்டு விளை பகுதியில் ரேசன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரேசன் கடையில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 2-வது நாளாக பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு ரேசன் கடை ஊழியர் கடையை பூட்டி விட்டு சென்றார்.

    இன்று அதிகாலை ரேசன் கடையில் இருந்து புகை மண்டலங்கள் வந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் ரேசன் கடை ஊழியர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஊழியர்கள் அங்கு வந்தனர். அப்போது ரேசன் கடையில் தீ எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கும், களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ரேசன் கடையின் பூட்டை உடைத்து தீயை அணைத்தனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தில் ரேசன் கடையில் இருந்த ஆவணங்கள், பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்கப்பட இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து நாசமாகி இருந்தது. ரேசன் கடையில் தீ விபத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் எரிந்து நாசமானது குறித்து ரேசன் கடை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொங்கல் பரிசு தொகுப்புகள் வாங்குவதற்கு இன்று காலையிலும் பொதுமக்கள் வந்திருந்தனர். கடையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

    • ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • நல்ல வேலையாக தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இரவு 11.15 மணியளவில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கல்லூரியில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    மாணவர் சிகிச்சை முடிந்து மீண்டும் ஆம்புலன்சில் ஏற முயன்றார். அப்போது ஆம்புலன்சில் இருந்து கரும்புகை வெளிவருவதை கண்டு மாணவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மாணவருடன் வந்தவர் வேகமாக கீழே இறங்கிவிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் தீ பிடித்து எரிய தொடங்கியது.

    இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 20 நிமிடம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருக்கைகள் எரிந்து நாசமானது. நல்ல வேலையாக தீ விபத்து நடப்பதற்கு முன்பாக ஆம்புலன்சில் இருந்தவர்கள் இறங்கி விட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 

    • மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டியும், அடுத்த தீபாவளி பண்டிகைக்காகவும் பட்டாசு தயாரிப்பு தொழில் தற்போது முதலே மும்முர மாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் சிவகாசியை அடுத்த எம்.மேட்டுப்பட்டியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஆர்.ஜி.எஸ். பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 10 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது. இதைப்பார்த்த தொழிற் சாலைக்கு வந்தவர்கள் உள்பட அனைவரும் அவச ரம், அவசரமாக வெளியேறி னர். அடுத்த ஒருசில விநாடிகளில் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

    தொழிலாளர்கள் பணிகளை தொடங்கு முன்பாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீ அருகில் உள்ள அறைகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை பட்டாசு உற்பத்தி பணியின்போது எஞ்சிய மூலப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக மூலப் பொருட்கள் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு வசதிகளை கொண்ட விசைப்படகு ஒன்று இருந்தது.
    • சேதமடைந்துள்ள படகுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் பிரான்சிஸ் நகரை சேர்ந்தவர் காலின்ஸ். ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வரும் இவருக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு வசதிகளை கொண்ட விசைப்படகு ஒன்று இருந்தது.

    அடுத்தடுத்த புயல் சின்னம் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை எதிரொலியாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காலின்ஸ் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகினை தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.

    இதற்கிடையே கடந்த சில தினங்களாக படகில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இன்று முதல் கடலுக்கு செல்ல காலின்ஸ் திட்டமிட்டு இருந்தார். அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் அவர் மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருந்தார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு திடீரென படகில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வந்தது. அடுத்த ஒருசில விநாடிகளில் தீ பிடித்துள்ளது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதைப் பார்த்த மீன்பிடி தொழிலுக்கு தயாராகிக்கொண்டிருந்த சக மீனவர்கள் காலின்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் பதறியடித்துக்கொண்டு அவர் கட லுக்கு ஓடி வந்தார். மேலும் மற்ற மீனவர்கள் உதவியுடன் தீயை அணைக்க போராடினார். இருந்தபோதிலும் படகு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. படகில் ஏற்பட்ட விபத்து முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதா அல்லது எதிர்பாரத விதமாக தீ பிடித்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டிருந்த படகில் ஒரு படகு தீ விபத்துக்குள்ளானது சக படகு உரிமையாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. படகில் இருந்த பேட்டரிகளில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    தீ விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சேதமடைந்துள்ள படகுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீ வேகமாக பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து பொருட்களை அப்புறப்படுத்தினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் அரங்கபாலா நகர் ஆட்கொல்லி பாலம் அருகே ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பேரீச்சம்பழம் மற்றும் உலர் பழவகை கடை உள்ளது. இந்த கடையில் பேரீச்சம்பழம் மற்றும் பாதாம், முந்திரி உள்ளிட்ட உலர் பழ வகைகள் மொத்தமாகவும், சில்லைரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடை உரிமையாளர் ரவிச்சந்திரன் கோவிலுக்காக வெளியூர் சென்ற நிலையில் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் வழக்கம்போல் இரவு பணியை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.

    இன்று காலையில் கடையிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதை கண்டு அவ்வழியே சென்ற பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ கடை முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து தீ வேகமாக பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து பொருட்களை அப்புறப்படுத்தினர். இருந்தபோதிலும் கம்ப்யூட்டர், ஏ.சி. உள்ளிட்ட சாதனங்கள் உள்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதும் எரிந்து சேதமாகின. தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்க கூடும் என தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி:

    ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டராக ஷாபுதீன் உட்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பணி புரிகின்றனர்.

    இந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் வழிப்பறி, திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பைக்குகளை, போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மேலும், மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு பாதுகாப்பு பணிக்காக இங்குள்ளபோலீசார் சென்றனர்.

    ஒரு சில போலீசார் இரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நள்ளிரவு மர்ம நபர்கள் 2 பேர், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பைக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று 50-க்கும் மேற்பட்ட, பைக்குகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு' தப்பித்து சென்றனர்.

    சிறிது நேரத்தில் பைக்குகள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. திடீரென உள்ளே பைக்குகள் தீப்பற்றி எரிவதை கண்ட போலீசார் விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் பல பைக்குகள் எரிந்து நாசமானது.

    இதுகுறித்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது.

    திருவொற்றியூர்:

    மணலி ஆண்டார் குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான டயர் போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் குடோன் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

    அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். குடோனில் உள்ளே இருக்கக்கூடிய மூலப் பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பற்றக்கூடியவை கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    தீயிலிருந்து வெளியேறிய புகை திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர் போன்ற சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியது. மணலி, எண்ணூர், மாதவரம் போன்ற பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 100-க் கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தண்ணீர், தீயணைப்பான் திரவம் போன்றவர்களைக் கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனால் 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தொடர்ந்து ரசாயன புகை சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளதால் பொது மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

    • செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    ×