search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண்டிகை"

    • நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
    • போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டியும், அடுத்த தீபாவளி பண்டிகைக்காகவும் பட்டாசு தயாரிப்பு தொழில் தற்போது முதலே மும்முர மாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் சிவகாசியை அடுத்த எம்.மேட்டுப்பட்டியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஆர்.ஜி.எஸ். பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 10 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது. இதைப்பார்த்த தொழிற் சாலைக்கு வந்தவர்கள் உள்பட அனைவரும் அவச ரம், அவசரமாக வெளியேறி னர். அடுத்த ஒருசில விநாடிகளில் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

    தொழிலாளர்கள் பணிகளை தொடங்கு முன்பாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீ அருகில் உள்ள அறைகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை பட்டாசு உற்பத்தி பணியின்போது எஞ்சிய மூலப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக மூலப் பொருட்கள் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கோவில்களில் கூட்டம் அலைமோதியது.
    • வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி புதுமணத் தம்பதியினர் புத்தாடைகளை அணிந்து பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடைகள் அணிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள். குழந்தைகளுடன் பெற்றோர்கள் மற்றும் அவர்களது தாத்தா, பாட்டிகள் பட்டாசுகள் வெடித்தனர். வானை அலங்கரிக்கும் வகையில் பட்டாசுகள் இருந்தது. நாகர்கோவில் மாநகர பகுதியில் ராக்கெட்டுகள் பறக்க விடப்பட்டது. இரவை பகலாக்கும் வகையில் பட்டாசு வெளிச்சங்கள் இருந்தது. பட்டாசு சத்தங்கள் காதை பிளக்கும் வகையில் இருந்தன.

    சுசீந்திரம், கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், தக்கலை, குலசேகரம், குளச்சல், களியக்காவிளை, மார்த்தாண் டம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் தீபாவளி பண்டிகையை யொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தது. தீபாவளி பண்டிகையையடுத்து சுசீந்திரம் தாணு மாலய சாமி கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்தோடு வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

    சொத்தவிளை கடற்கரை, வட்டக்கோட்டை கடற்கரை, முட்டம் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நேற்று மாலை பொதுமக்கள் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். கன்னியாகுமரியில் சூரியன் மறைவதை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். பத்நாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    • முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை சீராக இல்லாததால், நூல் விலை அடிக்கடி உயர்கிறது.
    • தீபாவளி உள்ளிட்ட பண்டிகை ஆர்டர்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    திருப்பூர்:

    கடந்த ஓராண்டாக ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.பஞ்சு விலை சீராக இல்லாத நிலையில் வியாபாரிகள் இருப்பு வைத்து பஞ்சு விற்பனை செய்வது வழக்கத்தில் உள்ளது.இருப்பினும் விலை குறைவாக இருக்கும் போது பஞ்சை வாங்கி இருப்பு வைத்து செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை உயர்த்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.

    முக்கிய மூலப்பொருளான பஞ்சு விலை சீராக இல்லாததால், நூல் விலை அடிக்கடி உயர்கிறது. உற்பத்தியை சீராக செய்ய முடியாமல், உள்நாடு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக, நூல் விலை காரணமின்றி உயர்வதால், தீபாவளி பண்டிகை ஆர்டர் கையை கடித்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது.

    அக்டோபர் 1 முதல் 2023-24ம் பருத்தி ஆண்டு துவங்கியுள்ளது. விரைவில் இந்திய பருத்தி கழகம் ஆலோசனை செய்து நடப்பு ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட உள்ளனர்.வழக்கமாக பருத்தி சீசனில் வரத்து அதிகரித்து விலை சீராக இருக்கும். இனிவரும் சில மாதங்களுக்கு, நூல் விலையிலும் ஏற்றம் இருக்காது என, உற்பத்தியாளர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

    கடந்த 2 மாதங்களாக, 15 நாட்கள் இடைவெளியில் நூல் விலை உயர்ந்தது. தற்போது நூல் விலையில் மாற்றம் இல்லையென, முன்னணி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதன் மூலம் இனிவரும் சில மாதங்களுக்கு, நூல் விலையில் உயர்வு இருக்காது என்று பின்னலாடை உற்பத்தியாளர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இதனால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை ஆர்டர்கள் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
    • திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமணன் அவதரித்த நாளும் அன்றுதான் எனவும் குறிப்புகள் கூறுகின்றன.

    மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

    தன் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    ஓணம் ஸ்பெஷல் உணவுகள்

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பை கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா"என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

    புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும்.

    ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்

    ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாக கொண்டாடுவர்.

    புத்தாடை

    கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள். 10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப்போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.

    திருவிழா பத்து நாட்கள் நீடிக்கும், முதல் நாள் அத்தம் என்றும் மற்றவை சித்திரை, சோதி, விசாகம், அனிசம், திருக்கேடா, மூலம், பூராடம், உத்ராடம் மற்றும் திருவோணம் என்றும் வரிசையாக முத்திரை குத்தப்பட்டு, திருவோணம் மிக முக்கியமானது. இந்த ஆண்டு ஓணம் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 31 வரை கொண்டாடப்படும்.

    • இன்று ஆடி 1-ந் தேதி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில், பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.
    • ஆடி முதல் நாளான்று சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேங்காய் சுடும் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும்.

    சேலம்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பிறப்பான 1-ம் தேதி சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.

    அன்றைய தினம் புதுமண தம்பதியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பெண் வீட்டிற்கு சென்று ஆடிப்பண்டிகையை கொண்டாடுவார்கள். மேலும், புதுமணத் தம்பதியினர் புத்தாடை அணிந்து கோவில்களுக்கு செல்வது வழக்கம்.

    இன்று ஆடி 1-ந் தேதி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில், பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம், ஆடி முதல் நாளான்று சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேங்காய் சுடும் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும்.

    இதையொட்டி சேலம் உழவர் சந்தை, பால் மார்க்கெட், தாதாகப்பட்டி கேட், உட்பட முக்கிய பகுதிகளில் அதிகளவில் அழிஞ்சி குச்சி தேங்காய், அவல், வெல்லம், நாட்டுக் சர்க்கரை, பழம் விற்பனை குவிக்கப்பட்டிருந்தன. இதன் விற்பனை நேற்று காலை முதலே களைக்கட்டியது. ஒரு குச்சி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். தேங்காயை தரையில் தேய்த்து, பின்னர் அதிலுள்ள 3 கண்களில் ஒன்றில் ஓட்டை போட்டு, அதற்குள் எள், நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை, அவல், உள்ளிட்டவைகளை நுழைப்பார்கள்.

    பின்னர், அந்த தேங்காயை அழிஞ்சி மரக்குச்சியில் சொருகி நெருப்பில் சுடுவார்கள்.

    சுட்ட அந்த தேங்காயை விநாயகருக்கு மற்றும் இதர கோவிலில் வைத்து படைய லிட்டு நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கி உண்பது வழக்கம்.

    சேலம் மாநகரில் இன்று காலை முதலே பலர் தேங்காயை சுட்டு பண்டிகை உற்சமாக கொண்டாடினார். இதே போல் சேலம் மாவட்டம் முழுவதும் தேங்காய் சுட்டு பண்டிகையை பொதுமக்கள் உற்சமாக கொண்டாடி வருகின்றார்கள்.

    இதையொட்டி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தார்கள்.

    • தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப்படுகிறது.
    • ஜூன் 30 வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறியிப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29 அன்று கொண்டாடப்படவிருக்கும் நிலையில் ஜூன் 30 வெள்ளிக்கிழமை அன்று அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் எனச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

    ஜூலை 1 மற்றும் ஜூலை 2 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் பள்ளிக் செல்லும் மாணவ, மாணவியர்கள் மற்றும் முஸ்லிம் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் தனது சொந்த ஊர்களுக்கு பண்டிகை கொண்டாடித் திரும்புவதில் சிரமம் இருக்காது.

    மேலும் ஒருசில கல்வி நிறுவனங்களில் ஜூன் 30 அன்று தேர்வுகளும் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சொந்த ஊருக்குச் செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகைக்கு அடுத்த நாளான ஜூன் 30-ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

    சென்னை:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தென்னக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.

    வேளாங்கண்ணிக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை மதியம் புறப்பட்டு அன்று நள்ளிரவு வேளாங்கண்ணி சென்றடைகிறது. அதே ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு இரவு நாகர்கோவில் வந்தடைகிறது.

    ஆகையால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையை மாற்றி சனிக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை நாகர்கோவில் வந்தடையும் வகையிலும் மாற்ற வேண்டும்.

    அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தது போல் மதுரை-புனலூர் ரெயில் ஆரவ்வாய் மொழி பள்ளியாடி குழித்துறை மேற்கு போன்ற நிலையங்களில் நிறுத்த வேண்டும். நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் நாகர்கோவில் டவுன், பள்ளியாடி குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • 3-ந் தேதி சேகர அளவிலான பெண்கள் பண்டிகை நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகே மேட்டூர் பரி.திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் ஆயத்த ஆராதனை நடைபெற்றது. இதில் செங்கோட்டை சேகர தலைவர் கலந்து கொண்டு செய்தி அளித்தார். பின்னர் ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 3-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் சேகர அளவிலான பெண்கள் பண்டிகை நடைபெற்றது. இதில் அருள் சோபா குழுவினர் கலந்து கொண்டு பண்டிகையை நடத்தினர். இதையடுத்து நேற்று காலையில் நடை பெற்ற பண்டிகை ஆராதனையில் இந்திய மிஷனெரி சங்க தேசிய பணித்தள ஒருங்கிணைப்பாளர் குரு இம்மானுவேல் பால் செய்தி அளித்தார். தொடர்ந்து ஐக்கிய விருந்து நடை பெற்றது. பண்டிகை ஆரா தனையில் சேகர தலைவர் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கவுரவ குரு லதா கிங்ஸ்லி, குரு வானவர்கள் சில்வா ன்ஸ், ராபர்ட் ,ஜெயமணி மேட்டூர் சேகர குரு ஜோயல் ஷாம் மெர்வின்,ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், சேகர செயலர் செல்வராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் டேவிட் செல்வராஜ், சிம்சோன் தேவதாசன் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ண அவதாரம் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும்.
    • நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.

    மஹா விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண அவதாரம் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது.

    இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    கிருஷ்ண ஜெயந்தியைப் பற்றி சில விவரங்கள்...

    கிருஷ்ணரின் பிறப்பு

    தேவகியும், கம்சனும் சகோதர சகோதரிகள். தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் கூற, அதனால் அச்சமுற்ற கம்சன் தேவகியையும், வாசுதேவரையும் சிறையில் அடைத்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.

    இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சன் ஈவு-இரக்கமின்றி கொன்று வந்தான். இவ்வாறாக 7 குழந்தைகளையும் கம்சனே கொன்றான். தேவகி 8வது முறையாக கர்பமுற்றாள். அதே சமயம் வாசுதேவரின் நண்பரும் ராஜாவுமான நந்தாவின் மனைவி யசோதாவும் கர்பமுற்றாள்.

    இந்நிலையில் ஆவணித் திங்கள் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று இரவு நேரத்தில் கிருஷ்ணர் பிறந்தார் (அவதரித்தார்). அதே சமயம் யசோதாவும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

    அப்போது சிறைக்குள் விஷ்ணு தோன்றி, இக்குழந்தையை கோகுலத்தில் உள்ள யசோதாவின் வீட்டில் கொண்டு சென்று சேர்த்துவிடு. அங்கு அவளுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடு என்று வாசுதேவருக்கு ஆணையிட்டார்.

    வாசுதேவரும் கிருஷ்ணரை கூடையில் சுமந்தபடி கொட்டும் மழையில் கோகுலத்தை நோக்கிச் சென்றார். அங்கு கிருஷ்ணரை வைத்துவிட்டு, பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தார் வாசுதேவர்.

    அந்த பெண் குழந்தை வந்ததும், 8வது குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்கு எட்டியது. உடனடியாக விரைந்து வந்த கம்சன், அந்த பெண் குழந்தையை கொல்ல முயன்றபோது, அது அவனது பிடியில் இருந்து விலகிச் சென்று காளித் தோற்றம் கொண்டு பேசியது, கம்சனே உன்னைக் வதம் செய்வதற்கான 8வது குழந்தை கிருஷ்ணன் பிறந்துவிட்டான். அவன் வேறொரு இடத்தில் வளர்ந்து உன்னைக் கொல்ல வருவான் என்று கூறி மறைந்தது.

    இதையடுத்து தேவகியையும், வாசுதேவரையும் கம்சன் விடுதலை செய்தான்.

    அதே நேரத்தில், நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.

    அந்த தினத்தை கோகுலமே கொண்டாடியது. தற்போது இந்தியாவிலும், உலக நாடுகளில் வாழும் இந்தியர்களும் கிருஷ்ண ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

    கிருஷ்ணருக்குப் பிடித்த இனிப்புகள்: அவல் லட்டு, சேமியா பாயசம்.

    • பள்ளிவாசலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    கடலூர்:

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அஞ்சுமனே நூரே முஹம்மதியா ஜாமியா பள்ளிவாசலில் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கி பள்ளி வாசலில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஏழை, எளிய முஸ்லிம்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இதில் பள்ளிவாசல் முக்தவல்லி ரபீக், செயலாளர் நஜீர் அகமது, ராமலிங்கம், முருகன், அஷ்ரப் அலி, செந்தில், சிலம்பு, அப்துல் ரஷீத், சதிஷ், ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராதனைகள் நடந்தன.

    மதுரை

    கிறிஸ்தவ பண்டிகை களில் குறிப்பிடத்தக்கது ஈஸ்டர். இது கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று முதல் தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்தவர்கள் பிப்ரவரி 22-ந் தேதி சாம்பல் புதன் முதல் தவக்காலத்தை தொடங்கினர். இந்த நிகழ்வு ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவுடன் நிறைவுக்கு வந்தது.

    இதையொட்டி நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் திருப்பலி மற்றும் ஆராத னைகள் நடத்தப்பட்டன. மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ், ஞானஒளிவு புரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ஆனந்த், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், அஞ்சல்நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தத்தை லூர்து, உதவி பங்குத்தந்தை ஜான்சன் ஆகியோர் நள்ளிரவு திருப்பலி நிறைவேற்றினர்.

    செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன்ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம். எல்லீஸ் நகர் தூய செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவால யங்களிலும் திருப்பலி நடத்தப்பட்டது. சி.எஸ்.ஐ மற்றும் புதிய ஜீவிய சபை உள்ளிட்ட பிற அனைத்து சபைகளிலும் அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராத னைகள் நடந்தன.

    இவற்றில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பம்- குடும்பமாக கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் 'குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று பங்குத்தந்தை அறிவித்ததும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நின்றது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வாக அமைந்தது.

    ×