search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "complaint"

    • பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.
    • வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66). இவர் வணிக நோக்கில் பூட்டர் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி அந்த அலுவலகத்தையும் பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்தி வந்தார்.

    இது தொடர்பாக பல்கலைக்கழக சட்ட ஆலோசகர் இளங்கோ என்பவர் கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜெகநாதன், பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு தங்கவேல், பேராசிரியர்கள் சதீஷ்குமார், ராம் கணேஷ் ஆகிய 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

    இதில் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே பூட்டர் நிறுவனம் செயல்பாடு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணையில் பூட்டர் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களை இணைத்து பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டதும் தெரியவந்தது.

    இதை ஒட்டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இதழியல் துறை அலுவலகத்தில் உள்ள பூட்டர் நிறுவன அலுவலகத்தில் நேற்று 3 மணி நேரம் சோதனை நடத்தினர். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கனரா வங்கியில் பதிவாளர் தங்கவேல் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர்.

    குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சூர்யா தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட போலீசார் தங்கவேலுவின் மனைவி வெண்ணிலா முன்னிலையில் அவரது வங்கி கணக்கையும் ஆய்வு செய்தனர். அப்போது வங்கி லாக்கரில் 93 பவுன் நகைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மேலும் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் ராம் கணேஷ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் பிடிக்க உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்கள் சென்னையில் கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை பிடிக்க சென்னையில் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் துணைவேந்தர் ஜெகநாதனின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென கோரி அரசு தரப்பில் வாதாடப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுவரை ஐகோர்ட்டில் அது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் அவரது ஜாமீனை ரத்து செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    • புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மேல்சபை எம்.பி.யான இவர் கடந்த அக்டோபர் மாதம் கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது ஒரு தனியார் டி.வி. பெண் நிருபரின் தோளில் தொட்டு பேசி உள்ளார். அந்த பெண் நிருபர் விலகிய போதும், மீண்டும் அவரை சுரேஷ் கோபி தொட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அந்த பெண் நிருபர், கோழிக்கோடு நடக்காவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்கோபி மீது 35 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தனது செயலுக்கு சுரேஷ் கோபி வருத்தம் தெரிவித்தார்.

    இருப்பினும் புகாரின் அடிப்படையில் அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் நோட்டீசு அனுப்பினர். அதன்பேரில் சுரேஷ்கோபி, நடக்காவு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு சுரேஷ்கோபி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனுவில் அரசின் அனுமதியை ஐகோர்ட்டு கேட்டுள்ளது.

    • விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    • போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சென்னை:

    புதுச்சேரி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் கல்யாண சுந்தரம் . இவர் கடந்த 2011-ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்திய பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார் இந்த தேர்வில் தனித் தேர்வலராக அவர் பங்கேற்றார். அப்போது இவருக்கு பதில் வேறு ஒருவர் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.

    இது குறித்து விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு சிறை தண்டனை வழங்கியது. இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட கோர்ட்டு அவரை விடுதலை செய்தது. இதை எதிர்த்து விழுப்புரம் போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பித்தார்.

    போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

    சண்முகசுந்தரம் அமைச்சராக இருந்த போது என்.ஆர்.காங்கிரசில் இருந்தார். தற்போது காலாபட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    • ஒரு மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள தனது சித்தி முத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.
    • இதில் வீட்டின் பகுதியளவு தீயினால் எரிந்து சாம்பலானது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடி மாரியம்மன் கோவில் 11-வது வார்டை சேர்ந்தவர் ஜெகன்(30).பெயிண்டர். இவரது மனைவி அபிராமி. இவர் தனது கணவர் ஜெகனிடம் கோபித்துக் கொண்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள தனது சித்தி முத்தாள் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 30 -ந் தேதி ஜெகன் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்தார். ஆனால் அபிராமி வரமறுத்தார். இதன் காரணமாக அசிங்கமாக திட்டி வீட்டை கொளுத்திவிடுவதாக கூறி கூரை வீட்டிற்கு தீவைத்து கொளுத்தினர். இதில் வீட்டின் பகுதியளவு தீயினால் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து மனைவி அபிராமி கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் -இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குபதிவு செய்து ஜெகனை கைது செய்தனர். 

    • 3 பேர்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • லோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராயர் (வயது 80) இவர் தனது மகன்களான ராமமூர்த்தி, லோகநாதன், அன்பழகன் ஆகிய 3 பேர்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அன்பழகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். இந்நிலையில் மற்ற 2 மகன்களும் தன்னை பராமரிக்கவில்லை என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன்படி தியாகதுருகம் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். சம்பவத்தன்று ராயர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த பாத்திரங்களை அவரது மகன் லோகநாதன் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ராயர் கொடுத்த புகாரின் தந்தையை முறையாக பராமரிக்காத ராமமூர்த்தி மற்றும் லோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தந்தை வீட்டில் இருந்து பணம் மற்றும் பாத்திரங்களை திருடிய லோகநாதனை கைது செய்தனர்.

    • இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • தேர்வு எழுதிவிட்டு பையை எடுத்துப்பார்த்தபோது செல்போன்களை காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வேதியியல் மற்றும் கணிதவியல் துறை மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டு இருந்தனர். அவர்கள் வராண்டாவில் தங்களது பையில் 8 செல்போன்களை வைத்து சென்றனர். தேர்வு எழுதிவிட்டு பையை எடுத்துப்பார்த்தபோது செல்போன்களை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி முசிறி சொக்கம்பட்டி துறையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 49). விவசாயியான இவர் ஆட்டுப்பண்ணை வைத்துள்ளார்.

    இவரது பண்ணையில் 200 ஆடுகள் உள்ளன. வழக்கமாக கணவன் மனைவி இருவரும் காலை சமையல் பணிகளை முடித்துவிட்டு ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள வேளாண் தோட்டங்களுக்கு கொண்டு செல்வார்கள்.

    நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு வடிவேல் தனது மனைவியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அங்குள்ள வேளாண் தோட்டத்துக்கு சென்றார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் வடிவேல் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கொள்ளையடிக்கபட்ட நகையின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து உடனடியாக வடிவேல் தா.பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இதில் 4 பேரின் ரேகைகள் பதிவாகியுள்ளது. மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆட்டுப்பண்ணை அதிபர் வீட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வடகிழக்குப் பருவமழையின் போது நாள் ஒன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 1000 எம்.எல்.டிக்கு மேலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக் கப்பட்டு குடிநீரின் தரம் ஆய்வகம் மூலம் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில் வடகிழக்குப் பருவமழையின் போது நாள் ஒன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    குடிநீர் வினியோக நிலையங்களில் குடிநீரில் தேவையான அளவு பிளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் சேர்த்து வழங்கப்படுகிறது.

    குடிநீர் வினியோக நிலையங்களில் பெரிய நீர் உறிஞ்சும் எந்திரங்கள் மற்றும் சிறிய நீர் உறிஞ்சும் மற்றும் ஜெனரேட்டர்களைக் கொண்டு தேங்கும் மழைநீர் இறைக்கப்படுகிறது.

    குடிநீர் வினியோக நிலையங்களிலும் கழிவுநீரிறைக்கும் நிலையங்களிலும் மணல் மூட்டைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பாக புகார்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

    இம்மையத்தை தொடர்பு கொள்வதற்கு பொதுமக்கள் 044-45674567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916-ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    • சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
    • தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த சிவனாகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அமராவதி (வயது 48).

    இவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    அதனைத் தொடர்ந்து அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு வரும் மின்சாரம் தடைப்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயலிழந்துவிட்டது. இதனால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். உயிரிழந்த அமராவதியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமராவதியின் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.

    இது குறித்து ஆஸ்பத்திரி டீன் கூறுகையில், 10 நிமிடங்களுக்குள் தடைபட்ட மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மின்சாரம் தடைபட்டாலும் வென்டிலேட்டர் கருவிகள் இயங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்து வருகிறது. உயிரிழப்புக்கு மின் தடை காரணமில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    • இளம்பெண் தன்னை யாரும் கடத்தவில்லை என போலீசில் தெரிவித்துள்ளார்.
    • வாலிபர் போலீஸ்நிலையத்தில் கண்கலங்கியபடி நின்றார்.

    கோவை,

    கோவை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது வாலிபர். கூலி வேலை பார்த்து வருகிறார்.

    இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    இந்தநிலையில் அவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடியினர் கடந்த 20-ந் தேதி அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாலிபரின் வீட்டுக்கு புதுமண தம்பதி சென்றனர்.

    மறுநாள் வாலிபர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் வாலிபரின் தாயாரும், புதுப்பெண்ணும் இருந்தனர். அப்போது பெண்ணின் பெற்றோர் வந்துள்ளனர். அவர்களிடம் அந்த பெண் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது வாலிபரின் தாயார் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பெண்ணும், அவரது பெற்றோரும் மாயமாகி இருந்தனர்.

    வேலை முடிந்து வீட்டுக்கு வந்த வாலிபர், இளம்பெண் மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கோட்டூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் திருமணம் ஆன மறுநாளே எனது மனைவியை அவரது பெற்றோர் கடத்திச் சென்று விட்டதாக கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இளம்பெண்ணையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் தன்னை யாரும் கடத்தவில்லை எனவும், தன்னை திருமணம் செய்த வாலிபருடன் வாழ இஷ்டமில்லை என்றும், பெற்றோருடன் செல்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.

    இளம்பெண்ணின் முடிவை கேட்டு அவரை திருமணம் செய்த வாலிபர் போலீஸ்நிலையத்தில் கண்கலங்கியபடி நின்றார்.

    • பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
    • மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களுக்கு சென்று கமிஷனர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக செய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இவற்றை வெளியேற்றி சுகாதார சீர்கேடு ஏற்படா மல் தடுக்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மாநகர பகுதியில் உள்ள 4 மண்ட லங்களிலும் பெரும்பாலான தெருக்களில் சமீபத்தில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலைகள் 2 நாட்கள் பெய்த கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் சேதமடைந்து விட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கி கிடப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

    இதையடுத்து கமிஷனர் அவ்வப்போது மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்க ளுக்கு சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • தனியார் பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலித்த கண்டக்டரிடம் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை.
    • இதுகுறித்து டி.எஸ்.பி., ஆர்.டி.ஓ.விடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    திருச்செந்தூர் முருகன் கோவில் அர்ச்சகராக பணிபுரிபவர் கண்ணன். இவர் வத்தலக்குண்டுவில் இருந்து கெங்குவார்பட்டிக்கு அரசு பஸ்சில் வந்தார்.

    ரூ.10 டிக்கெட் எடுத்து பயணித்த கண்ணன் மீண்டும் திரும்பி வரும்போது ஒரு தனியார் பஸ்சில் ஏறினார். அந்த பஸ்சில் ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    தான் வரும்போது ரூ.10 மட்டுமே கொடுத்ததாகவும், எதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்று கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால்அவர் முறையான பதில் அளிக்கவில்லை. இதனை யடுத்து வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். அங்கும் அங்கும் சரியான பதில் கிடைக்க வில்லை என்பதால் நிலக்கோட்டை டி.எஸ்.பி. முருகனிடம் புகார் அளித்தார்.

    விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.

    ×