search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை"

    • திருத்தணி பகுதியில் கடைகளில் துளைபோட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள வள்ளியம்மாபுரம், அரக்கோணம் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் மதுக்கடையை பூட்டிச் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் மதுக்கடையின் பக்கவாட்டு சுவரில் துளைபோட்டு உள்யே புகுந்தனர். அவர்கள் கடையில் இருந்து சில்லறையாக இருந்த ரூ.14 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் அங்கிருந்த லாக்கரை உடைக்க முடியாததால் ஏராளமான மதுபாட்டில்களை மூட்டை கட்டி அள்ளிச் சென்றுவிட்டனர். லாக்கரில் பல லட்சம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை மதுக்கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசுக்கும், கடையின் சூப்பர்வைசர் கிரிராஜூக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    திருத்தணி பகுதியில் கடைகளில் துளைபோட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் மத்தூர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கடையின் சுவற்றில் துளை போட்டு புகுந்து அங்கிருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை அள்ளிச்சென்றனர்.

    மேலும் அங்கேயே உட் கார்ந்து விடிய விடிய மது குடித்துவிட்டு சென்று இருந்தனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்களின் கைவரிசை தெரியவந்தது.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமுடியை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டும் போது வீடுகளில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து செல்வதை கேள்விபட்டிருப்போம். சில நேரங்களில் வீடுகளில் நகை, பணம் இல்லாவிட்டால் அங்கு இருக்கும் பொருட்களையாவது திருடி செல்வார்கள்.

    இந்நிலையில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஒரு வீட்டில் நடந்த வினோத கொள்ளை சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பகுதியை சேர்ந்த ரஞ்சித் மண்டல் என்பவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இதற்காக அவர் தனது வீட்டில் அதிகளவில் பெண்களின் தலை முடியை மூலப்பொருளாக வாங்கி வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அங்கிருந்த 150 கிலோ எடை கொண்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள பெண்களின் தலைமுடி மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். வெளியில் சென்றிருந்த ரஞ்சித் மண்டல் வீடு திரும்பிய போது கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் பக்கத்து அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது கொள்ளையர்களின் கைவரிசை தெரியவந்தது. இதுகுறித்து அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தலைமுடியை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
    • ரவிக்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி தர்மாபுரி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ராஜாமுகமது, (வயது 49). இவர், நடேசன் நகர், 2-வது குறுக்கு தெருவில், குளிசாதன பெட்டி சர்வீஸ் மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    கடந்த 5-ந் தேதி வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். 6-ந் தேதி கடையை திறக்க வந்த போது கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    கடையின் உள்ளே உள்ள மேசை டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.19 ஆயிரம் மற்றும் கை கடிகாரம் திருடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, மேஜை டிராயரை திறந்து பணம் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாாணை நடத்தினர்.

    விசாரணயில் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் கைகடிகாரத்தை திருடியவர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஓகை கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் என்ற ஓகை குமார் (வயது 68) என தெரியவந்தது.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுவையில் இதுபோன்று 15-க்கும் மேற்பட்ட கடைகளை உடைத்து நகை-பணம் திருடியவர் என்பதும் அதோடு கோவில் உண்டியலை உடைத்தும், வீடு புகுந்தும் திருடிய வழக்குகள் உள்ளது.

    இதுதவிர தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

    இதைதொடர்ந்து ரவிக்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    • 8 பேர் நகைப் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
    • தமிழ்நாட்டில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை;

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது.

    நேற்று ஒரே நாளில் சென்னை தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் நகைப் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    ஒரு பெண் உதவி ஆய்வாளர், இரண்டு மளிகைக் கடை மற்றும் உணவகத்தில் இருந்த மகளிர்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், இருசக்கர வாகனத்தில் பயணித்தோர் என்று அனைவரும் தங்களது நகைகளை பறிகொடுத்திருப்பது, இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை; இந்த நிலைக்கு காரணமான நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனிய வேண்டும்.

    நகைப் பறிப்பு போன்ற குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனதற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்டாலின் அவர்களே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்!

    நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சுய விளம்பரங்களில் செலுத்தும் அதே கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் செலுத்துமாறு விடியா திமுக-வின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார். 

    • சைஃப் அலி கானை 6 இடங்களில் கத்தியால் குத்தியவர் இன்று பிடிபட்டார்
    • இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக் கொண்டார்.

    பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந் தேதி அதிகாலை இவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் சைஃப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மர்மநபர் கத்தியால் குத்தியதில் சைஃப் அலிகானின் கழுத்து, கை உள்ளிட்ட 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த சைஃப் அலிகான் லீலாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது உடல்நலம் தேறி வரும் அவரும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, சைஃப் அலிகானை கத்தியால் குத்திய மர்ம நபரை பிடிக்க 30 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    13 மாடிகள் கொண்ட வீட்டில் 4-வது மாடியில் சைஃப் அலிகான் வசித்து வந்தார். மர்மநபர் வீட்டுக்குள் நுழைந்தது எப்படி? என்பது புரியாத புதிராக இருந்தது. மேலும் வீட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே கண்காணிப்பு காமிராக்கள் இருந்ததும், அதில் மர்மநபரின் உருவம் தெள்ளத்தெளிவாக பதிவாகாததும் மர்மநபரை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக இருந்தது.

    இந்நிலையில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வாலிபர் ரெயிலில் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தப்பிச்செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மும்பை போலீசார் சத்தீஸ்கரில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து சந்தேக நபரான ஆகாஷ் கனோஜியா என்பவரை மடக்கி பிடித்தனர்.

    இவர் தான் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் என முதலில் தகவல் பரவியது. ஆனால் போலீசார் அதனை மறுத்தனர். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.

    சைஃப்  அலிகான் வீட்டில் இருந்த சில சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாக இருந்த காட்சிகளின் பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

    இதனடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், சைஃப் அலிகானை கத்தியால் குத்திய முகமது என்பவரை இன்று அதிகாலை போலீசார் தானேவில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைதான முகமது தானேவில் உள்ள ஒரு மதுபாரில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.  போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியின் புகைப்படத்தை சேகரித்து மும்பையில் பல்வேறு இடங்களிலும் ஒட்டி தீவிரமாக தன்னை தேடுவதை அறிந்த முகமதை தானேவிலேயே பதுங்கி இருக்க திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி தானேவில் உள்ள ஹிராநந்தினி தோட்டத்தில் உள்ள மெட்ரோ கட்டுமான பகுதிக்கு அருகே உள்ள தொழிலாளர் முகாமில் தங்கி உள்ளார். இரவு நேரத்தில் அங்குள்ள முட்புதர்களுக்குள் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

    போலீசார் அவரை சுற்றி வளைத்ததும், முதலில் தனது பெயர் விஜய் தாஸ் என கூறியுள்ளார். பின்னர் பிஜோய் தாஸ் எனவும், அதன் பிறகு முகமது சஜித் எனவும் கூறியுள்ளார்.

    இறுதியாக விஜய் தாஸ் என பெயரை மாற்றிக்கூறி போலீசை ஏமாற்றி உள்ளார். எனினும் சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் பணிப்பெண்களின் வாக்குமூலம் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட முகமதை போலீசார் மும்பை பாந்த்ராவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து மும்பை போலீஸ் துணை கமிஷனர் தீக் ஷித் குமார் நிருபர்களிடம் கூறியதாவது,

    நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய 30 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்காள தேசத்தை சேர்ந்த அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சைஃப் அலிகான் வீட்டுக்குள் நுழைந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவரது பெயர் முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷேசாத். கடந்த 6 மாதங்களாக இந்தியாவில் வசித்து வந்துள்ளார். அவரிடம் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படும் அரசு ஆவணங்கள் எதுவுமில்லை.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் மும்பை வந்துள்ளார். இங்குள்ள வீட்டு வேலை பணிக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தியபிறகு போலீஸ் விசாரணைக்கு எடுக்க திட்டமிட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    • கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் ஏராளமான திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன.
    • போலீசார் கூடுதல் ரோந்து மேற்கொண்டு திருட்டு ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. சம்பவத்தன்று இரவு இங்குள்ள செல்வ விநாயகர் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். அதில் பணம் இல்லாமல் சில்லரை காசுகள் மட்டுமே இருந்ததால் உண்டியலை அருகில் உள்ள புதரில் வீசி சென்றுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

    கடந்த சில மாதங்களில் இப்பகுதியில் ஏராளமான திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் சொந்த ஊர் மற்றும் வெளியூர் சென்றுள்ளனர்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய திருட்டு ஆசாமிகள் தங்களது கைவரிசையை காட்ட முயன்றுள்ளனர். முதலில் இங்குள்ள காட்டு பெருமாள் கோவிலில் பூட்டை உடைக்க முயன்றனர். முடியாததால் அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்துள்ளனர்.

    சமீபத்தில்தான் இக்கோவில் உண்டியல் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதனால், சில்லரை காசுகள் மட்டுமே இருந்த நிலையில் ஏமாற்றம் அடைந்த திருடர்கள் உண்டியலை காட்டுக்குள் வீசி சென்றனர். அதன்பின் கோவில் அருகில் உள்ள வீட்டின் கதவை உடைக்க முயன்று அதுவும் தோல்வியடைந்ததால், திரும்பிச் சென்றுள்ளனர்.

    வீடுகள் அதிகமுள்ள இப்பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது எங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே போலீசார் கூடுதல் ரோந்து மேற்கொண்டு திருட்டு ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
    • கடந்த 4 மாதங்களில் 7 கொள்ளை சம்பவம் நடை பெற்று உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சாலாமேடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் அருண் லியோ கிங் (வயது 47).

    இவர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    அருண் லியோ கிங் மனைவி ஜான் ஜாக்குலின். இவர் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கிராமம் என்ற ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    அருண் லியோ கிங் சகோதரருக்கு பெங்களூருவில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    அவரை பார்ப்பதற்காக அருண் லியோ கிங் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த திங்கட்கிழமை பெங்களூருவிற்கு சென்றார்.

    நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன் பக்க கிரீல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த 17 அரை பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது குறித்து அருண் லியோ கிங் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். தகவலின் பேரில் விழுப்புரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர நாத் குப்தா, தாலுகா இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மன்னார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு. அது கொள்ளை நடைபெற்ற வீட்டை மோப்பம் பிடித்து 3 தெருக்கள் வழியாக சென்று போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நின்றது.

    தடயவியல் நிபுணர்களும் கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

    விழுப்புரம் சாலா மேடு பகுதியில் கடந்த 4 மாதங்களில் 7 கொள்ளை சம்பவம் நடை பெற்று உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே புதியதாக பொறுப் பெற்றுள்ள போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடர் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த இலக்கியனை மடக்கி பிடித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சட்டைநாதர் சுவாமி கோவில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆபத்து விநாயகர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நள்ளிரவு வெளிப்புறம் உள்ள சில்வர் கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரவு ரோந்து சென்ற பெட்ரோல் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், தலைமை ஏட்டு ஸ்டாலின் ஆகியோர் கோவில் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு அங்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் தப்பி ஓடினார். அங்கே இருந்த மற்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கொளஞ்சி (வயது 42 ), அவரது சகோதரர் முத்து (35) என்பதும் தப்பி ஓடியவர் விளந்திடசமுத்திரம் அஞ்சலை நகர் பகுதியை சேர்ந்த இலக்கியன் (29) என்பதும் தெரியும் வந்தது.

    இவர்களிடம் இருந்து கோவில் உண்டியலில் கொள்ளையடித்து மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சம் மற்றும் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனிடையே தப்பி ஓடிய இலக்கியன் சீர்காழி விளந்திட சமுத்திரம் வில்வா நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றபோது சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளரை தாக்கி தப்பி ஓடினார். இந்த தாக்குதலில் உரிமையாளர் காயமடைந்தார்.

    இதனை அறிந்த இன்ஸ்பெக்டர் புயல். பாலசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, தலைமை ஏட்டு அன்பரசன், காவலர்கள் மணிகண்டன், ரஞ்சித்,ரம்யா, தனிப்பிரிவு காவலர் சார்லஸ் ஆகியோர் விளந்திடசமுத்திரம் பகுதிக்கு உடனடியாக சென்று தப்பி ஓடிய இலக்கியனை தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த இலக்கியனை மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து கொளஞ்சி, முத்து, இலக்கியன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோவில் உண்டியல் திருட்டு, வீட்டில் திருட முயற்சி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் உடனடியாக போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

    • கொள்ளையர்களை பிடிக்க உடனடியாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய தெருவான நகர எல்லைக்குள் நடந்த கொள்ளை சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 27). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து நெல் வியாபாரம் செய்து வருகிறார். காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வெளிச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இன்று காலை ரூ.30 லட்சம் பணத்தை நகை வியாபாரி ஒருவரிடம் இருந்து அரவிந்தன் வாங்கினார். பின்னர் அந்த பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் வைத்துக்கொண்டு புதுவயல் நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரும்பாலான சமயங்களில் அதிக பணத்தை வசூல் செய்ய செல்லும்போது உதவிக்காக உறவினர், நண்பர்கள் யாரையாவது துணைக்கு அழைத்து செல்வதை அரவிந்தன் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தான் மட்டும் வசூல் பணத்துடன் தனியாக சென்றார். அவர் காரைக்குடி செக்காலை சாலை, ஜாகிர் உசேன் தெருவில் வந்த போது இரண்டு இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

    அவர்கள் திடீரென்று பின்னால் வந்து அரவிந்தனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதினர். இதில் நிலை குலைந்த அரவிந்தன் கீழே விழுந்தார். அடுத்த விநாடி அந்த 4 பேரும் சேர்ந்து அரவிந்தன் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்தனர். இதனால் கண் எரிச்சலுடன் நடுரோட்டில் துடித்த அவரை மிரட்டி இருசக்கர வாகனத்தில் இருந்து ரூ.30 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் அவரை தாக்கி விட்டு அவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தையும் திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் அரவிந்தன், காரைக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் விசாரணை நடத்தினார்.

    அரவிந்தன் பணம் வசூலுக்கு வழக்கமாக சென்று வருவதை தொடர்ந்து நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். அது தெரிந்த நபர்களாகவும் இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க உடனடியாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த முக்கிய தெருவான நகர எல்லைக்குள் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்
    • ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளார்.

    குஜராத்தில் 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

    கடந்த நவம்பர் 14 ஆம் தேதி குஜராத் உத்வாடா ரயில் நிலையத்திற்கு அருகே செல்லும் தண்டவாளத்திற்கு அருகில் 19 வயது இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் பரிசோதனையில் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கொலை தொடர்பாக வல்சாத் மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. உத்வாடா ரெயில் நிலைய சிசிடிவிகள் ஆராயப்பட்டன. பெண்ணின் உடல் அருகே மீட்கப்பட்ட அதே மாதிரியான ஆடைகளை அணிந்த நபர் ஒருவர் கொலை நடந்ததற்குப் பின்னர் ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

     

    அந்த சந்தேகத்துக்கிட்டமான நபரை தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. தேடுதல் வேட்டையின் இறுதியில் கடந்த நவம்பர் 24 ஆம் தேதி குஜராத்தின் வல்சாத்தில் உள்ள வாபி ரயில் நிலையத்திலிருந்து கைது செய்யப்பட்டார். அந்த நபர் ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கை சேர்ந்த ராகுல் கரம்வீர் ஜாட் என்று கண்டறியப்பட்டது.

     

    கொலை நடந்த அன்றைய தினம் அப்பகுதியில் தான் வேலை செய்த ஓட்டலில் தனது சம்பளத்தை வாங்குவதற்காக வந்திருந்த அவர் டியூசன் முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த 19 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு ரெயில் நிலையத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார் . அந்த பெண் தனது செல்போனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது தன்னைப் பார்த்து சிரிப்பது போல் இருந்ததாக கருதி அவரை கொலை செய்ததாக ராகுல் தெரிவித்துள்ளார். 

    ராகுல் கரம்வீர் ஜாட் இந்த ஒரு கொலை மட்டுமல்லாது குறைந்தது 5 பேரை கொலை செய்ததைப் போலீசிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கைது செய்யப்படும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு முந்தைய தினம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரிடம் கொள்ளையடித்து அவரை கொலை செய்திருக்கிறார்.

    கடந்த அக்டோபர் இறுதியில்  மகாராஷ்டிராவில் சோலாப்பூர் ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் மேற்கு மேற்கு வங்காளம் ஹவுரா ரெயில் நிலையம் அருகே காதிஹார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பீடி கேட்டு குடுக்கவில்லை என முதியவர் ஒருவரை கொலை செய்துள்ளார். கர்நாடகா மாநிலம் முல்கி பகுதியில் ரெயில் பயணி ஒருவரை கொலை செய்துள்ளார்.  

    பெரும்பாலும் ஒரு இடத்தில் இருக்காமல் பயணித்துக் கொண்டே இருப்பதால் அவரை பிடிப்பதில் அந்தந்த மாநில காவல்துறையினருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சமயங்களில் ரெயில் நிலைய நடைமேடைகளிலேயே அவர் இரவில் தூங்கியுள்ளார்.

    சுமார் 2000 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த பின்னர் அவர் தற்போது போலீசில் சிக்கியுள்ளார். ரெயிலில் மாற்றுத்திறனாளி பெட்டிகளில் பயணிக்கும் பெண்களையே இவர் குறிவைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் இருந்த இவர் இந்த ஆண்டு சமீபத்தில்தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

    ராகுல் கரம்வீர் ஜாட்-டின் தந்தை காலமான பின்னர் குற்ற செயல்களில் ஈடுபட இவரை குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஐந்தாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டு, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் இவர் ஈடுபட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். தற்போது இவர் மீது 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

    • வீடுகள் மற்றும் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள்.
    • குருவா கும்பலை சேர்ந்த ஒருவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து தரிசனம் செய்வார்கள்.

    இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு கும்பல் பக்தர்களிடம் மட்டுமின்றி கேரளாவின் பல பகுதிகளிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. குருவா கும்பல் என போலீசாரால் அழைக்கப்படும் இந்த கும்பல், இந்த ஆண்டும் கேரளாவில் நடமாட தொடங்கி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    இது தொடர்பாக ஆலப்புழா சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மதுபாபு கூறியதாவது:-

    சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குருவா கும்பல் தற்போது ஆலப்புழாவில் நடமாடி வருகிறது. இவர்களை போலீசார் பார்த்துள்ளனர். அந்த கும்பலின் நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்தக் கும்பல் அம்பலப்புழா, காயம்குளம் போன்ற ரெயில் நிலையங்களுக்கு அருகில் தங்கி சிறு குழுக்களாக பிரிந்து சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இவர்கள் பகலில் உளவுப் பணிகளை செய்து சாத்தியமான இலக்குகளை கண்காணிப்பார்கள்.

    பின்னர் வீடுகள் மற்றும் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் குருவா கும்பலை சேர்ந்த ஒருவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ் என தெரியவந்துள்ளது.

    • உண்டியல் திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பரைக்கோடு பகுதியில் உள்ள ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவு வந்து தரிசனம் செய்து செல்வார்கள்.

    இவர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில்களில் 4 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 20-ந் தேதி இரவு இதில் ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில் செயலாளர் அனூஸ் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் கோவிலுக்குள் புகுந்தது தெரிய வந்தது. அவர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் பள்ளியாடி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு நின்ற ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் எடுத்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், தக்கலை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவர், கோவில் உண்டியல் கொள்ளை சம்பவத்தில் கேமராவில் சிக்கிய உருவம் போல் இருந்ததால் அதுபற்றி போலீசார் விசாரித்தனர்.

    இதில், அவன் கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடித்தவன் என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்தனர். விசாரணையில் அவன் பள்ளியாடியை சேர்ந்த தங்கமணி என்ற ஜேம்ஸ் என தெரியவந்தது.

    இதேபோல் 10 நாட்களுக்கு முன்பு கன்னிமூல கணபதி கோவிலில் நடைபெற்ற உண்டியல் கொள்ளை சம்பவத்திலும் தங்க மணி தான் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது.

    இந்த 2 சம்பவங்களிலும் தான் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவன் வாக்குமூலம் கொடுத்து உள்ளான். இவன் மீது ஏற்கனவே 4 உண்டியல் திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×