என் மலர்
உள்ளூர் செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டியில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை
- புஞ்சைபுளியம்பட்டி ஒளவை இணை வீதியை சேர்ந்தவர் அப்துல் வாஹாப். இவரது மனைவி ஜோகரா பேபி (70).
- கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி ஒளவை இணை வீதியை சேர்ந்தவர் அப்துல் வாஹாப். இவரது மனைவி ஜோகரா பேபி (70). இவர்களுக்கு சுல்தான் என்ற மகன் உள்ளார். சுல்தானுக்கு திருமணமாகி கோவையில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் அப்துல் வாஹாப் இறந்து விட்டதால் ஜோகரா பேபி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கோவையில் உள்ள தனது மகன் சுல்தான் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகரா பேபி சென்றார். அங்கு தனது மகனுடன் இருந்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினார்.
வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. நல்ல வேளையாக ஜோகரா பேபி மகன் வீட்டுக்கு செல்லும் போது அனைத்து நகைகளையும் கழுத்தில் அணிந்து சென்றார். இதனால் நகைகள் தப்பின.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






