search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "accident"

    • விமானத்தில் பயணம் செய்த ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இறுதி சடங்கு காரணமாக அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவி துணை அதிபர் சொலோஸ் சிலிமா பயணம் செய்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் துணை அதிபர் உள்பட விமானத்தில் பயணம் செய்த ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    துணை அதிபர் சொலோஸ் சிலிமா உடல் அவரது சொந்த கிராமமான சைப்-க்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அந்நாட்டு தலைநகர் லிலோங்-இல் இருந்து இந்த கிராமம் 180 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தில் வைத்தே அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இன்று நடைபெறும் இறுதி சடங்கு காரணமாக அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில், துணை அதிபர் உடலை கொண்டு செல்லும் போது அவரது கான்வாய் வாகனம் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கான்வாயில் ராணுவம், காவல் துறை மற்றும் இதர வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

    துணை அதிபரின் சவப்பெட்டியை காண ஏராளமானோர் வீதிகளில் திரண்டு வந்திருந்தனர். சில பகுதிகளில் மக்கள் சாலையில் வழிமறித்து, கான்வாயை நிறுத்தி சவப்பெட்டியை பார்த்தால் தான் வழிவிடுவோம் என்று கோரிக்கை விடுத்தனர். சில பகுதிகளில் இதுபோன்ற சம்வங்கள் அரங்கேறிய நிலையில், கான்வாய் வாகனம் வழியில் காத்திருந்தவர்கள் மீது மோதியது.

    வாகனம் மோதியதில் 2 பெண், 2 ஆண் உள்பட நான்கு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், நான்கு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர்.

    • சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதி விபத்தை ஏற்படுத்தியது.
    • விபத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஆட்டோ மீது பைக் ஒன்று வேகமாக மோதியது. இதில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் சுழன்றடித்தது.

    இதனால், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்," ஆட்டோ ஒன்று யு டர்ன் எடுக்க முயல்கிறது. அப்போது அந்த வழியாக வந்த பைக் ஆட்டோ மீது மோதியது.

    இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.

    அப்போது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து ஓட்டுனர் இல்லாமலேயே வேகமாக சுற்றி தாறுமாறாக ஓடியது. இதில், பொது மக்கள் மீது மோதி கீழே விழுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    • குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளித்து முடித்து விட்டு ஒரே காரில் சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    சென்னை ஆவடி அருகே அன்னனூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 65). இவரது மனைவி ஹேமலதா (60). இவர்களது மகன் மாதவன்(29).

    அதே பகுதியில் வசந்தம் நகர் குறிஞ்சி தெருவை சேர்ந்தவர்கள் தங்கராஜன்(35), அவரது மனைவி பூங்கொடி(30), மகன்கள் வெற்றிச்செல்வன்(7), மோகித்தம்(5), வெங்கடேசன் மனைவி சசிகலா (48), அவரது மகள் காவியா (24) ஆகிய 6 பேரும் மாதவன், அவரது தாயார் ஹேமலதாவுடன் சேர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி நேற்று தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வந்துள்ளனர்.

    அவர்கள் 8 பேரும் ஒரே காரில் வந்த நிலையில், நேற்று நள்ளிரவில் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளித்து முடித்துவிட்டு ஒரே காரில் சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

    கடையநல்லூரை அடுத்த புன்னையாபுரத்தில் தென்காசி- ராஜபாளையம் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தவிடு ஏற்றி வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 8 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காரின் இடிபாட்டில் சிக்கி கத்தி கூச்சலிட்டனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இடிபாட்டுக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த குருசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    மற்றொரு சம்பவம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அக்ரகார தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் பாஸ்கர் என்ற பாஸ்கரன் (வயது 36). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவர் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க செல்ல முடிவு செய்தார். அவர் தனது நண்பர்களான விருதுநகர் மாவட்டம் சேத்தூரை சேர்ந்த மாரிமுத்து (33), தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த கிருஷ்ணராஜா (35) ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று இரவு காரில் குற்றாலத்திற்கு வந்தார்.

    பின்னர் அங்கு குளித்து முடித்து விட்டு இன்று அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் 3 பேரும் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். காரை கிருஷ்ணராஜா ஓட்டி வந்தார்.

    புளியங்குடியை அடுத்த நவாச்சாலை பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தின் மீது கார் மோதியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கிருஷ்ணராஜா, ராணுவ வீரரான பாஸ்கர் ஆகிய 2 பேரும் காரின் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது நண்பரான மாரிமுத்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற புளியங்குடி போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரி

    சோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த மாரிமுத்துக்கு தென்காசி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.
    • இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

    பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய நிதிஷ் குமார் என்ற அந்த இளைஞர் முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மினாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அட்டைப்பெட்டிகளை வைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர் முஸாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.

    இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு விரைவில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அரசு மருத்துவர்களின் மெத்தனப் போக்குக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது. 

    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போளூர்:

    ஆந்திர மாநிலம், குண்டூர் பெண் குறையாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சசிதருர் (வயது 39). இவரது மனைவி கல்யாணி (33). இவர்களுக்கு பின்கா ராமச்சந்திரன் (11) என்ற மகனும், ஸ்ரீ ரித்திஷா என்ற மகளும் உள்ளனர்.

    இவரது உறவினர்கள் பெங்களுருவை சேர்ந்த ரவி (24), ஈஸ்வரி (62).

    இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று அதிகாலை குண்டூரில் இருந்து இவர்கள் 6 பேரும் காரில் புறப்பட்டனர்.

    காரை சசிதருர் ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவிமலை அருகே வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் உள்ள புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் நொறுக்கியது.

    காரில் பயணம் செய்த கல்யாணி, ரவி, சிறுமி ஸ்ரீ ரித்திஷா ஆகியோர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    மனைவி, மகள் தனது கண்முன்பே இறந்ததால் சசிதருர் கதறி அழுதார். இதனை பார்த்தவர்களின் கண்களில் கண்ணீரை வர வழைத்தது. ஈஸ்வரி, பின்கா ராமச்சந்திரன் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போளூர் போலீசார் கல்யாணி, ரவி, ஸ்ரீ ரித்திஷா உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

    • காரில் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

    காங்கயம்:

    திருப்பூரில் இருந்து ஒரு காரில் 500 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி செல்லப்படுவதாகவும், எனவே அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷாராக இருக்கும் படியும், சோதனை சாவடியை கடந்து செல்லும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்யுறுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய போலீசாரும், சோதனை சாவடிகளில் பணியில் இருந்த போலீசாரும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர்.

    இந்தநிலையில் திருப்பூர்-காங்கயம் சாலையில் காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூர் போலீஸ் நிலைய பகுதி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் தாராபுரம் நோக்கி அதிவேகமாக சென்றது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் அந்த காரை பின்னால் விரட்டி சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை கவனித்த கார் டிரைவர், காரின் வேகத்தை அதிகப்படுத்தினார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது.

    இதையடுத்து கார் டிரைவரை போலீசார் பிடித்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அருள் (வயது 24) என்பதும், அவர் ஓட்டி வந்த காரில் 500 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பதும், பெங்களூரில் இருந்து பழனிக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் அருளை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் இருந்து 500 கிலோ புகையிலை பொருட்களுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. சினிமா பாணியில் காரில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்த சம்பவம் காங்கயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாகனங்கள் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
    • தமிழக-கர்நாடகா இடைய போக்குவரத்து முடங்கி விடும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. திம்பம் மலைப்பாதை 21 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்வதற்கான மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.

    திம்பம் மலைப்பகுதியில் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நிற்பதும், விபத்து ஏற்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. விபத்து ஏற்படும் நேரங்களில் தமிழக-கர்நாடகா இடைய போக்குவரத்து முடங்கி விடும்.

    இந்நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு காய்கறி லோடுகளை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று திம்பம் மலைப்பகுதியில் உள்ள 7-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விழுந்தது.

    இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினர். 7-வது கொண்டை ஊசி வளைவில் விழுந்ததால் தமிழக-கர்நாடக இடையேயான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பிறகு பண்ணாரியில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ரோட்டில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வேன் மீட்கப்பட்டது. அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அமைச்சரவை கூட்டம் கூடியது.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் தமிழர்களும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதனிடையே, தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும், மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், குவைத் தீவிபத்து தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அமைச்சரவை கூட்டம் கூடியது.

    இந்த கூட்டத்தில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை இந்தியா கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், மீட்பு பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக கேரளா அமைச்சர்கள் குவைத் செல்ல வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

    • உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலர் உயிரிழந்தனர்.
    • ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் என்று தகவல்.

    தெற்கு குவைத்தை அடுத்த மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி இந்தியாவை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

    கிட்டத்தட்ட 195 பேர் வசித்து வந்த குடியிருப்பில் தீ விபத்தின் போது உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலர் உயிரிழந்தனர். இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி உயிரிழந்தவர்கள் அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனையின் போது அங்குள்ள கள நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

    • பலியான தம்பதி மற்றும் குழந்தையின் பெயர் மற்றும் முகவரி எதுவும் தெரியவில்லை.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலத்தில் இன்று காலை தனியார் பேருந்து மோதி தம்பதி மற்றும் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் இன்று காலை வழக்கம்போல் பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டது. வலசையூர் அருகே சுக்கப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிக் கூடம் எதிரே சாலையில் வேக தடை போடப்பட்டுள்ளது.

    இந்த வேகத்தடை அருகே பஸ் சென்றபோது முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சுக்கும், லாரிக்கும் இடையே சேலம் வீராணம் அருகே உள்ள பூமனூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (35) மற்றும் அவரது மனைவி வேதவள்ளி (26), இவர்களது குழந்தைகள் திலிப் (4), சின்னதுரை (7) ஆகியோர் ஒரு மோட்டார்சைக்கிளிலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி மற்றும் 3 வயது குழந்தை உள்பட 3 பேர் சென்று கொண்டிருந்தனர்.

    இதில் தனியார் பஸ் வேகமாக வேக தடையில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி 2 மோட்டார் சைக்கிள்களிலும் அடுத்தடுத்து வேகமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளும் பஸ்சுக்கு அடியில் சிக்கியது. இருப்பினும் பஸ் நிற்கவில்லை. தரதரவென மோட்டார் சைக்கிள்களை இழுத்து சென்று முன்னால் சென்ற லாரியில் மோதி பஸ் நின்றது.

    இந்த கோர விபத்தில் வேதவள்ளி, மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி மற்றும் அவர்களுடன் வந்த 3 வயது குழந்தை ஆகியோர் பஸ் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதில் வேதவள்ளி உடல் பஸ்சின் முன்பகுதியில் சிக்கி ரத்தம் வழிந்தோடியது. இந்த பதபதைக்கும் கோர விபத்து காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.

    லட்சுமணன், அவரது 2 குழந்தைகள் திலிப், சின்னதுரை ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அக்கம், பக்கத்தினர், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் திரண்டு லட்சுமணன் மற்றும் 2 குழந்தைகளையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே விபத்தில் தனியார் பஸ்சில் பயணம் செய்த ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த லதா (51), கல்பனா (28), தனம் (28), கிருத்திக் (3), கார்த்திக் சூர்யா கலா ( 4), ஜெயசிங் ( 7), பெரியசாமி (34) ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தம்பதி மற்றும் குழந்தையின் பெயர் மற்றும் முகவரி எதுவும் தெரியவில்லை. இதனால் அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் பதிவெண் கொண்டு அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய வீராணம் போலீசார் தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே காயம் அடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பலியான 4 பேரின் உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே பெரிய மருதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது45). விவசாயி. இவரது மகன் மகன் லோகேஷ் (17). அதே பகுதியை சேர்ந்த ராமசாமியின் நெருங்கிய உறவினர் ரமேஷ் (42). இவரமு மகன் சுதர்சன் (14).

    நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சுதர்சன், லோகேஷ் ஆகிய இருவரும் ஆம்னி வேனை ஓட்டி பழகுவதற்காக வீட்டில் இருந்து எடுத்தனர். ஆம்னி வேனை சிறுவன் சுதர்சன் ஓட்டினார். இருவரும் பரமத்தி சென்றுவிட்டு மீண்டும் கபிலர்மலை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். கபிலர்மலை பாகம்பாளையம் பிரிவு ரோடு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில் லோகேஷ், சுதர்சன் ஆகியோர் உடல் நசுங்கி பலியாகினர். காரை ஓட்டி வந்த கபிலர்மலை அருகே கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரும் பலத்த காயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்த தகவல் அறிந்த நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் பரமத்தி போக்குவரத்து ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது சுதர்சன் ஓட்டுநர் உரிமம் இன்றி காரை ஓட்டி விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.

    இது குறித்து மோட்டார் போக்குவரத்து அலுவலர் கூறுகையில், 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் ஓட்டுவதற்கு அனுமதி இல்லை. இதனால் காரை ஓட்டி சென்று விபத்து நிகழ்ந்ததற்காக சுதர்சனின் தந்தை ரமேஷ் என்பவருக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிவித்தார்.

    • லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.
    • மோசமான வானிலையால் ஏற்பட்ட திடீர் குலுக்கலில் ஒருவர் உயிரிழந்தார்.

    லண்டன்:

    லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்றுகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலையால் கடும் குலுக்கலை எதிர்கொண்டது. நடுவானில் நிலைதடுமாறி குலுங்கிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர்.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தது. இதனால் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என தெரிவித்தது.

    இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை.

    இந்நிலையில், கடந்த மாதம் நடந்த விமான குலுக்கலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

    சிறிய காயங்கள் உள்ள பயணிகளுக்கு 10,000 டாலர் வழங்கப்படும். கடுமையான காயங்கள் உள்ளவர்கள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பைப் பற்றி விவாதிக்கலாம். கடும் காயங்களுக்கு ஆளாகி இருப்பதாக மருத்துவ ரீதியாக மதிப்பிடப்பட்ட பயணிகளுக்கு நீண்டகால மருத்துவ பராமரிப்பு தேவை மற்றும் நிதி உதவி கோரும் அவர்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்ய 25,000 டாலர் முன்பணமாக வழங்கப்படும். பயணிகள் அனைவருக்கும் விமானச்சீட்டுக்கான முழுத்தொகை திருப்பித் தரப்படும் என தெரிவித்துள்ளது.

    ×