search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election campaign"

    • சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது.
    • சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு டான் சபாவில் வாகனத்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது.

    அப்போது மர்ம நபர்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை தாண்டி திடீரென சந்திரபாபு நாயுடுவின் பிரசார வாகனத்தில் மீது ஏறினர்.

    இதனைக்கண்ட பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கட்சி மேலிட உத்தரவின் பேரில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
    • ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் 10 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதற்காக அவர் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றார். தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக தெலுங்கானா மாநிலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக பணியாற்றி வந்தார்.

    அரசு திட்டங்கள் மற்றும் மக்களை நேரடியாக சந்திப்பதில் அவர் தீவிரம் கவனம் செலுத்தினார். தமிழிசை சவுந்தரராஜனுக்கு தெலுங்கானாவில் செல்வாக்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கட்சி மேலிட உத்தரவின் பேரில் அவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.

    ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் நடிகை குஷ்பு பா.ஜ.க.வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நடிகை ஜெயப்பிரதா ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என நேற்று தெரிவித்தார். வெளிமாநிலங்களில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டி வருவதால் அங்குள்ள பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    • தேர்தலில் யார் மிரட்டல் விடுத்தாலும் பவன் கல்யாணை வெற்றி பெற செய்ய வேண்டும்.
    • பவன் கல்யாண் எப்போதும் மக்களின் குரலாகவும், அநீதியை எதிர்க்கும் அரசியல்வாதியாகவும் இருப்பார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    ஒரு புறம் அரசியல்வாதிகளும், மறுபுறம் சினிமா நடிகர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பவன் கல்யாணை ஆதரித்து நேற்று ஆந்திராவில் பிரபல நடிகரும், பவன் கல்யாணின் அண்ணன் மகனான வருண் தேஜ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோடாவாலியில் ரோடு ஷோ நடத்தினார்.

    அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வருண் தேஜ் பேசியதாவது, எனது தந்தையை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    அதிகாரத்தை பொருட்படுத்தாமல் மக்களுக்காக போராடும் தலைவர் பவன் கல்யாண். எம்.பி., எம்.எல்.ஏ. யாகவோ இல்லாவிட்டாலும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக போராடியவர்.

    தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு துணை நின்றவர். எப்போதும் மக்கள் மத்தியில் வளம் வரும் தலைவர் வெற்றி பெற வேண்டும்.

    பவன் கல்யாண் மகனாக தேர்தல் பிரசாரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிதாபுரம் பகுதி மக்களின் அன்பும், பாசமும் தந்தையின் மீது என்றும் இருக்க வேண்டும்.

    தேர்தலில் யார் மிரட்டல் விடுத்தாலும் பவன் கல்யாணை வெற்றி பெற செய்ய வேண்டும். பிதாபுரம் மக்களை பவன் கல்யாண் தனது குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகிறார்.

    இங்குள்ள வாக்காளர்கள் பவன் கல்யாணை ஆசீர்வதித்து சட்டப்பேரவைக்கு அனுப்பினால் அவர் அனைவருக்கும் சேவகம் செய்வார். பவன் கல்யாண் எப்போதும் மக்களின் குரலாகவும், அநீதியை எதிர்க்கும் அரசியல்வாதியாகவும் இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஏற்கனவே பிதாபுரத்தில் பவன் கல்யாண் சார்பில் நடிகர் நாகபாபு பிரசாரம் செய்து வரும் நிலையில் வரும் நாட்களில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நடிகர் பவன் கல்யாணை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.

    • பல்வேறு சமுதாயங்களின் தலைவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பா.ஜனதா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் முதல்கட்டமாக பெங்களூரு, மைசூரு உள்பட 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், 2-வது கட்டமாக வருகிற 7-ந் தேதி பெலகாவி, பல்லாரி, உத்தரகன்னடா, தார்வார், பாகல்கோட்டை, சிவமொக்கா, தாவணகெரே, கலபுரகி உள்பட 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    ஏற்கனவே முதல்கட்ட தேர்தலுக்காக பெங்களூரு, மங்களூரு, சிக்பள்ளாப்பூர், மைசூருவில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதுடன், வாகன பேரணியும் நடத்தி இருந்தார். 2-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள சிவமொக்கா, கலபுரகி தொகுதிகளிலும் பிரதமர் மோடி ஏற்கனவே பிரசாரம் செய்திருந்தார். இந்த நிலையில், கர்நாடகத்தில் 2-வது கட்ட தேர்தலிலும் பிரதமர் மோடி சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    அதன்படி, பெலகாவி, உத்தரகன்னடா, தாவணகெரே, பாகல்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஒரேநாளில் பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக கர்நாடகத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். நேற்று மாலை கோவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து இரவில் பெலகாவி சாம்புரா விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்திறங்கினார். அவருக்கு, பல்வேறு சமுதாயங்களின் தலைவர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பெலகாவியில் உள்ள ஐ.டி.சி. ஓட்டலில் இரவு பிரதமர் மோடி ஓய்வெடுத்தார்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் பெலகாவி மாலினி சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு பெலகாவி மற்றும் சிக்கோடி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேச உள்ளார். பின்னர் பெலகாவியில் இருந்து மதியம் உத்தரகன்னடா மாவட்டம் சிர்சிக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    மதியம் 1 மணியளவில் சிர்சியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி பேச உள்ளார். அதன்பிறகு, சிர்சியில் இருந்து தாவணகெரே மாவட்டத்திற்கு அவர் செல்ல உள்ளார். தாவணகெரேவில் மதியம் 3 மணியளவில் நடக்கும் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். அங்கு கூட்டம் நிறைவு பெற்றதும், தாவணகெரேயில் இருந்து பல்லாரி மாவட்டத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டேயில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் பா.ஜனதா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு முன்னாள் மந்திரி ஸ்ரீராமுலுக்கு அவர் ஆதரவு திரட்ட உள்ளார். பின்னர் இன்று இரவு ஒசப்பேட்டேயில் உள்ள ஓட்டலிலேயே பிரதமர் மோடி தங்குகிறார். நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் ஒசப்பேட்டேயில் இருந்து பாகல்கோட்டைக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். பின்னர் பாகல்கோட்டையில் மதியம் 12.15 மணியளவில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். கர்நாடகாவில் பிரதமர் மோடி தொடர்ந்து 2 நாட்கள் பிரசாரம் செய்வதால் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • இன்றைக்கு இளைஞர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது.
    • கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் குமாரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்-மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடியார் தமிழக முழுவதும் மக்களின் தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தலை திறந்து மக்களுக்கு சேவை செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

    அவர் அறிவித்த 24 மணி நேரத்தில் சோழவந்தான் தொகுதியில் உள்ள குமாரம், அலங்காநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் மக்களை தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர், இளநீர், சர்பத் உள்ளிட்ட நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே எடப்பாடியார் நீர் மோர் பந்தலை திறக்க தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று உள்ளார்.

    மதுரை சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் 7000 போலீசார் காவல் பணியில் இருந்தனர். ஆனால் அப்படி இருந்தும் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது.

    சித்திரை திருவிழாவில் ராமராயர் மண்டபத்தின் அருகே பட்டாக்கத்தியுடன் ரவுடிகள் மோதி ஒரு இளைஞரை கொலை கொலை செய்தனர். இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அதேபோல் மதுரையில் வேலை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பிய ஒருவரை மது, கஞ்சா அருந்தியவர்கள் அவரை தாக்கியுள்ளார். தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில், ஜாபர் சாதிக் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் கஞ்சா கடத்தியுள்ளார். தற்போது சென்னை விமான நிலையத்தில் ரூ.50 கோடி அளவில் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    எங்கு பார்த்தாலும் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் நடைபெற்று ஆயுதக்கிடங்காக தமிழகம் மாறியது மட்டுமல்ல, தற்போது போதை பொருள் கிடங்காக மாறிவருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இன்றைக்கு இளைஞர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று கவலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை, தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து தொடர்ந்து சட்டமன்றத்திலும், தேர்தல் பிரசாரத்திலும் எடப்பாடியார் எடுத்துரைத்து வருகிறார். அவர் எடுக்கின்ற தியாக வேள்விக்கு மக்கள் அனைவரும் கரம் கொடுக்க வேண்டும்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் மக்களை மதரீதியாக பிரித்துப் பார்த்து பேசக்கூடாது, சட்டம் அனைவருக்கும் சமம். உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல, இது போன்று நாடு சந்தித்தது இல்லை தற்போது மரபை மீறி உள்ளார்களா? என்று அச்சம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 1 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து300 வாக்குச்சாவடி உள்ளது. இதில் அதிமுகவிற்கு அனைத்து இடங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர். பி.ஜே.பி.க்கு வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தால் முன்கூட்டியே தெரிவித்து இருப்பார்கள். இதன் மூலம் கட்டமைப்பு இல்லை என்று தெரிகிறது.

    தற்போது தேர்தல் தோல்வி காரணமாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் ஆனாலும் தேர்தல் ஆணையம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    கடந்த 15 ஆண்டுகளாக தேனி மக்களை புறக்கணித்த டிடிவி தினகரனை இந்த தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, போட்டியிடவில்லை என்றாலும் சரி, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன்.
    • ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா சித்தாந்தத்தை முறியடிக்கும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியாது என்று பலமுறை கூறி இருக்கிறேன்.

    பெங்களுரு:

    பாராளுமன்ற தேர்தல் 2-வது கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை நடக்கிறது.

    இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையோடு ஓய்ந்தது. 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கலபுர்கி தொகுதியில் (குல்பர்கா) போட்டியிட்டு தற்போதைய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தோல்வி அடைந்தார். இந்த முறை இதே தொகுதியில் அவரது மருமகன் ராதாகிருஷ்ண தொட்டாமணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மல்லிகார்ஜூன கார்கே பிரசாரம் செய்கிறார்.

    அப்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை எனது இறுதி ஊர்வலத்துக்காவது வாருங்கள் என்று உணர்ச்சிகரமாக பேசினார். தனது சொந்த மாவட்டமான கலபுர்கியின் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே இது தொடர்பாக பேசியதாவது:-

    இந்த முறை இந்த தொகுதியில் காங்கிரசுக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் இனி எனக்கான இடம் இங்கு இல்லை என்றும், உங்களின் மனங்களை என்னால் வெல்ல முடியாது என்றும் நினைப்பேன்.

    நீங்கள் காங்கிரசுக்கு ஓட்டு போடுகிறீர்களோ இல்லையோ, கலபுர்சிக்காக நான் பாடுபட்டு இருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் என்னுடைய இறுதி சடங்கிற்கு வாருங்கள்.

    நான் அரசியலுக்காக பிறந்தவன். தேர்தலில் போட்டியிட்டாலும் சரி, போட்டியிடவில்லை என்றாலும் சரி, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன். அதுவரை அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன்.

    அதே போல் ஒருவர் தனது கொள்கையில் இருந்து ஒருபோதும் ஓய்வு பெறக்கூடாது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் சித்தாந்தங்களை வீழ்த்துவதற்காக நான் பிறந்தேனே தவிர, அவர்கள் முன் சரண் அடைவதற்காக அல்ல.

    சித்தராமையாவிடம் கூட நீங்கள் முதல்-மந்திரி, எம்.எல்.ஏ. போன்ற பதவிகளில் இருந்து ஓய்வு பெறலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா சித்தாந்தத்தை முறியடிக்கும் வரை அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியாது என்று பலமுறை கூறி இருக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே உருக்கமாக பேசினார்.

    • மக்களின் எதிர்காலத்துடன் விளையாடி, எப்படியாவது நாற்காலியைப் பெற வேண்டும் என்று பல்வேறு விளையாட்டுகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை வரி மூலம் உங்கள் வருமானத்தில் பாதிக்கும் மேல் பறித்து விடும்.

    போபால்:

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவுக்கு நாட்டை விட பெரிது எதுவுமில்லை. காங்கிரசுக்கு அதன் சொந்த குடும்பமே முக்கிய அளவுகோல். நாட்டிற்காக அதிகபட்ச பங்களிப்பையும், உழைப்பையும், அர்ப்பணிப்பையும் செய்பவரை பின்னால் நிறுத்த வேண்டும் என்பதே காங்கிரசின் கொள்கை. எனவே, பல ஆண்டுகளாக, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் போன்ற ராணுவ வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் அனுமதிக்கவில்லை.

    எங்களது அரசு அமைந்தவுடன் ஒன் ரேங்க்-ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தினோம்.

    காங்கிரஸ், வளர்ச்சிக்கு எதிரான கட்சி. காங்கிரஸ் மீண்டும் மதத் துவேஷத்தை கைக்கூலியாகப் பயன்படுத்துகிறது. கர்நாடக காங்கிரஸ் அரசு அங்குள்ள முஸ்லிம் சமுதாய மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் என்று அறிவித்துள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் சமூகத்தில் பல புதிய நபர்களை காங்கிரஸ் சேர்த்தது. முன்பு இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் கல்வி, அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பெற்றனர். ஆனால் தற்போது அவர்கள் பெற்ற இட ஒதுக்கீடு ரகசியமாக அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.

    முஸ்லிம்களை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பிரிவில் சட்டவிரோதமாக காங்கிரஸ் சேர்த்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரின் உரிமையை கர்நாடக காங்கிரஸ் அரசு பறித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கான ஒதுக்கீட்டை தடுக்க காங்கிரஸ் விரும்புகிறது.

    பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்க காங்கிரஸ் பல ஆண்டுகளாக சதி செய்து வருகிறது. நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை என்று காங்கிரஸ் சொல்கிறது, அதே சமயம் ஏழைகளுக்குத் தான் முதல் உரிமை என்று நான் சொல்கிறேன்.

    பா.ஜ.க. அரசு 80 கோடி மக்களுக்கு மத பாகுபாடு இல்லாமல் இலவச ரேஷன் வழங்கியுள்ளது. ஒரு முஸ்லிம் என்பதற்காக ஒருவருக்கு இலவச ரேஷன் கிடைப்பதில்லை என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அம்பேத்கர் மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை எதிர்த்தார். ஆனால் அதை காங்கிரஸ் பின்வாசல் வழியாக அளித்துள்ளது.

    மக்களின் எதிர்காலத்துடன் விளையாடி, எப்படியாவது நாற்காலியைப் பெற வேண்டும் என்று பல்வேறு விளையாட்டுகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பரம்பரை வரி மூலம் உங்கள் வருமானத்தில் பாதிக்கும் மேல் பறித்து விடும். மக்களின் சொத்துக்கள் மற்றும் விலை மதிப்பற்ற பொருட்களை எக்ஸ்ரே மூலம் சோதனை செய்து, மக்களின் நகைகள் மற்றும் சிறு சேமிப்புகளை பறிமுதல் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது. உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
    • தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க தனித்துப் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது.

    இந்த முறை கூடுதல் இடங்களில் வெற்றி பெற பா.ஜ.க. திட்டமிட்டு அதற்கேற்றவாறு பிரசார பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

    தெலுங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். 30-ந்தேதி ஜாகீராபாத் தொகுதியில் நடக்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்கும் மோடி அன்று மாலை ஸ்ரீரங்கம் பள்ளி தொகுதியில் ஐடி ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    மே 3-ந்தேதி வாரங்கல் தொகுதியில் பிரசாரம் செய்கிறார். 4-ந்தேதி மகபூபாத் தொகுதிக்குட்பட்ட 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து 5-ந்தேதியும் அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    • பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 4 முறை பிரசாரம் செய்தார்.
    • பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    பெங்களுரு:

    கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக நாளை (26-ந்தேதி) 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக 14 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (மே-7-ந்தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது.

    பிரதமர் மோடி பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சியான ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 4 முறை பிரசாரம் செய்தார். இந்த நிலையில் மீண்டும் 5-வது முறையாக பிரதமர் மோடி வருகிற 28-ந் தேதி கர்நாடக வருகிறார்.

    மதியம் 1 மணியளவில் தாவணகெரே தொகுதி பா.ஜனதா வேட்பாளர் காயத்ரி சித்தேஷ்வர், ஹாவேரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பசவராஜ் பொம்மை ஆகியோரை ஆதரித்து நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    • தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.
    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் 40 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்திருந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி தொடங்கி இந்த மாதம் 17-ந் தேதி வரை 20 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக சாடினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் உணர்வுபூர்வமாக இருந்ததாக பரவலாக பேசப்பட்டது. பொதுக் கூட்டங்களில் பேசியது மட்டுமின்றி காலையில் நடைபயிற்சிக்கு சென்றபோதும் மக்களை சந்தித்து வாக்கு கேட்டார்.

    தற்போது தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடந்து தேர்தல் முடிந்து விட்ட நிலையில் வட மாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணி கட்சியினர் மாவட்ட கழக செயலாளர்கள் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடமாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என தெரிகிறது.

    இதற்காக அவரது பிரசார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது.

    • 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் கடந்த 19-ந்தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • ராஜஸ்தான் எம்எல்ஏ சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 26 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 23 இடங்களிலும், அதன் இந்திய கூட்டணிக் கட்சியான ஆம் ஆத்மி கட்சி பரூச் மற்றும் பாவ்நகர் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் கடந்த 19-ந்தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இப்பட்டியலில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் ராஜஸ்தான் எம்எல்ஏ சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    • உங்களின் சொத்துக்களை பறித்து தனி நபர்களிடம் அளிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை முன் வைத்தேன்.
    • வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்கியது.

    ஜெய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் டோங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

    ஒற்றுமையே ராஜஸ்தானின் செல்வம். நாம் பிளவுபடும் போது எல்லாம் நாட்டின் எதிரிகள் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான, நேர்மையான அரசு என்ன செய்ய முடியும் என்பதை கடந்த 10 ஆண்டுகளில் அனைவரும் பார்த்திருக்கிறார்கள்.

    2014-ல் மோடிக்கு சேவை செய்ய நீங்கள் வாய்ப்பு கொடுத்த போது யாரும் நினைத்து கூட பார்க்காத முடிவுகளை நாடு எடுத்தது.

    காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தது. அனுமன் மந்திரம் கேட்பது காங்கிரஸ் ஆட்சியில் குற்றமாகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் அனுமன் மந்திரம் கேட்ட கடைக்காரர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    2 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நான் சில உண்மைகளை நாட்டின் முன் வைத்தேன். நான் கூறிய உண்மைகளை கேட்டு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் அச்சம் அடைந்துள்ளன.

    உங்களின் சொத்துக்களை பறித்து தனி நபர்களிடம் அளிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை முன் வைத்தேன்.

    காங்கிரசை அம்பலப்படுத்தியதால் என்னை அவமதிக்கிறார்கள். உண்மையை ஏன் மறைக்கிறார்கள். நீங்களே கொள்கைகளை உருவாக்கி விட்டு தற்போது அதை ஏற்க பயப்படுவது ஏன்? தைரியம் இருந்தால் உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நான் தயார்.

    நாட்டின் அரசியல் சாசனத்துடன் காங்கிரஸ் நாடகமாடியுள்ளது. அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது உரையில் நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உள்ளது என்று கூறி இருந்தார்.

    காங்கிரசின் சிந்தனை எப்போதுமே சமாதானம் மற்றும் வாக்கு வங்கி அரசியலாகவே இருந்து வருகிறது. 2004-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவில் எஸ்.சி. எஸ்.டி. இட ஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முயற்சிப்பதுதான் அதன் முதல் பணியாக இருந்தது.

    இது ஒரு முன்னோடி திட்டமாகும். இதை நாடு முழுவதும் முயற்சி செய்ய காங்கிரஸ் விரும்பியது. 2004 மற்றும் 2010-க்கு இடையில் ஆந்திராவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் 4 முறை முயற்சி செய்தது.

    ஆனாலும் சட்ட தடைகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் விழிப்புணர்வு காரணமாக அவர்களால் அந்த திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக எஸ்.சி.,எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை பறித்து மற்றவர்களுக்கு வழங்கியது.

    இவை அனைத்தும் அரசியலமைப்பின் அடிப்படை தன்மைக்கு எதிரானது என்பதை அறிந்துள்ள காங்கிரஸ் இந்த முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தை பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுடைய சொத்துக்களை பகிர்ந்து அளித்து விடும் என்று முஸ்லிம்கள் குறித்து பேசினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் தான் சொன்னது எல்லாம் உண்மை என்று மீண்டும் காங்கிரஸ் மீது மோடி குற்றம் சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×