search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumavalavan"

    • அ.தி.மு.க. போட்டியிடாமல் பின் வாங்கியிருப்பது என்ன ராஜதந்திரம் என்று தெரியவில்லை.
    • எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அமரப்போகிறது.

    மாமல்லபுரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை வழங்கி உள்ளனர். நீட் தேர்வின் எதிர்ப்பு நாடு முழுவதும் வலுப் பெற்று வருகிறது. எங்களது எதிர்ப்பு குரலும் இனி தேசிய அளவில் இருக்கும்.

    பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளை போன்று, தற்போது முடிவு எடுக்க முடியாது. நீட் தேர்வில் நடைபெற்றுள்ள குளறுபடிகளை கண்டித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி வலியுறுத்தும்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாமல் பின் வாங்கியிருப்பது என்ன ராஜதந்திரம் என்று தெரியவில்லை. அ.தி.மு.க.வுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

    தமிழக மக்களின் நலனுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். நீட் தேர்வை எதிர்த்து தமிழக மக்களின் குரலாக இதை முன்னெடுப்போம். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

    வலுவான ஒரு எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அமரப்போகிறது. மக்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம். மத்தியில் கூட்டணி ஆட்சியாக அமைந்துள்ள பா.ஜ.க.வின் ஆட்சி 5 ஆண்டுகள் வரையில் நீடிக்குமா? என்பது சந்தேகம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.
    • கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

    எனவே 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் தொடங்கியது. 

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பங்கேற்றுள்ளனர்.

    மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

    இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பாஜகவை தமிழகத்தில் கால்பதிக்க விமாமல் சாதித்து காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் போன்ற தலைமை அரசியலில் அபூர்வம், அற்புதம்.

    கேரளாவில் ஒரு நடிகரை வைத்து, ஒரு இடத்தை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆனால், எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பாஜகவால் தமிழகத்தில் வேரூன்ற முடியாது.

    ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யானை வளைத்துப்போட்டு சில இடங்களில் பாஜக வென்றுள்ளது.

    இந்திய கூட்டணி தலைவர்களே, முதல்வர் ஸ்டாலினை வியந்து பார்க்கிறேன்றனர். சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.

    முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.

    2019க்கு முன் காவிரியை வைத்து முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய கூட்டணி இன்றும் தொடர்கிறது.

    மழைக்கால தவளை போல் ஒருவர் தாமரை மலரும் மலரும் என்று கத்திக் கொண்டே இருக்கிறார். கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது.
    • 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

    சென்னை:

    மாநிலத்தில் உள்ள கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற அக்கட்சி 8 சதவீத வாக்குகளை பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது. இதே போல் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இவ்விரு கட்சிகளுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,


    நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    • தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை.
    • 2019ம் ஆண்டு ஒரு தொகுதியில் மட்டுமே தனிச்சின்னத்தில் போட்டியிட்டதால் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும், கன்னியாகுமரியில் அ.தி.மு.க. வேட்பாளரையும் பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

    மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 4-ம் இடத்தையே பிடித்தது. மொத்தத்தில் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகிறது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில் அதனை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி.


    கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.5 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி இம்முறை மைக் சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.


    இதே போல் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது. 2019ம் ஆண்டு ஒரு தொகுதியில் மட்டுமே தனிச்சின்னத்தில் போட்டியிட்டதால் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

    • பிரதமர் மோடி குமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.
    • விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கன்னியாகுமரிக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி நேற்று மாலையில் இருந்து குமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், அவர் விவேகானந்தா! இவர் வெறுப்பானந்தா! என்று பிரதமர் மோடியை திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    நரேந்திரா ×

    நரேந்திரமோடி

    அவர் விவேகானந்தா!

    இவர் வெறுப்பானந்தா!

    அவர் வெறுப்பை உமிழவில்லை!

    அதனால்-

    விவேகானந்தா ஆனார்.

    இவருக்கு வெறுப்பு அரசியல் தான் பெருமுதலீடு.

    அதனால்- 'வெறுப்பானந்தாவாக'

    வலம் வருகிறார்.

    வானுயர்ந்து நிற்கும் வள்ளுவனின் புகழ்நிலத்தில்..

    எளியோரை ஏய்க்கும் எத்தர்களின் வித்தைகள்

    ஒருபோதும் எடுபடாது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடி அண்மைக் காலமாக பேசி வரும் கருத்துக்கள் யாவும் அவர் பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார்.
    • 'இந்தியா' கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

    சென்னை புரசைவாக்கத்தில் அனைத்திந்திய பாங்க் ஆப் பரோடா ஓ.பி.சி. தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் சார்பில், 8-வது 'ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம்' நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    கருத்தரங்கிற்கு பிறகு அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி அண்மைக் காலமாக பேசி வரும் கருத்துக்கள் யாவும் அவர் பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

    குறிப்பாக காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களின் தாலியை பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுத்துவிடுவார்கள் என்றும், அயோத்தி ராமர் கோவிலை இடித்து விடுவார்கள் என்றும் பா.ஜ.க.வினர் பேசி வருவது அவர்களின் பதற்றத்தைக் காட்டுகிறது.

    'இந்தியா' கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருக்கிறார். 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்கப் போகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அவ்வாறு இருப்பதில் என்ன தவறு?

    'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் கட்டுக்கோப்பாக இருக்கும். அதுவும் ஒரு ஜனநாயக முறையிலான முன்னெடுப்புதான். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை. அப்படி ஒரு நடைமுறை வந்தால் அதை வரவேற்கவும், அங்கீகரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்."

    இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

    • ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், சமுதாயமே கோழையாகிவிடும்.
    • இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் தெய்வக்குழந்தை ஆகிவிட்டார்.

    எம்.பி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது.

    அந்த விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. விருது வாங்கிய பின்பு பேசிய அவர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    விருது விழாவில் பேசிய அவர், "உடம்புக்கு காயமானால் நாங்கள் சும்மா இருந்தாலும் அது ஆறிடும். ஆனால், ஒரு நாட்டுக்கு காயமானால் நாம் பேசாமல் இருந்தால் அது அதிகமாகிவிடும். இன்றைக்கு இந்த மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு மக்கள்தான் காரணம். அந்த மக்களுக்கு ஒரு பிரச்சனை என்கிறபோது, ஒரு கலைஞன் கோழையாகிவிட்டால், சமுதாயமே கோழையாகிவிடும். என்றும் மக்களின் குரலாக இருப்பேன்.

    கடந்த 10 வருடங்களாக இந்த மன்னரை நான் எதிர்த்து கொண்டு இருக்கிறேன். இனி மோடியை மன்னர் என்று சொல்லமுடியாது. அவர் தெய்வக்குழந்தை ஆகிவிட்டார். இனிமேல் நாம் அவரை தேர்ந்தெடுக்கமுடியாது. அவரால் நாட்டுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் நம்மால் அவரை திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்றுதான் சொல்லமுடியும்.

    மறைந்த கவுரி லங்கேஷ் உடைய தந்தை லங்கேஷ் தான் என்னுடைய ஆசான். அவர்தான் எங்களை செதுக்கியவர். அம்பேத்கர் அரசியலமைப்பை எழுதாமல் இருந்திருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. அவருடைய சிந்தனைகள் பசியால், வறுமையால் பிறந்ததல்ல. அவமானத்தில் பிறந்தது.

    மோடியை கொஞ்சம் பாருங்களேன்.. ஒரு ஃபாசிஸ்ட். ஒரு சர்வாதிகாரி. அவர் தேரில் தான் நிற்பார். விமானத்தில் தான் வருவார்; மக்கள் பூ போடுவார்கள். அவர் மக்கள் பக்கத்தில் நிற்க மாட்டார். மக்கள் வேலிக்கு அந்த பக்கம் நிற்பார்கள். மக்களின் ஸ்பரிசம் தெரியாதவன், மக்களின் வியர்வையை தொடாதவன், மக்களின் பசியை அறியாதவனுக்கு மக்களை பற்றி எப்படி புரியும். அவர் தெய்வ மகன் கிடையாது. டெஸ்ட் டியூப் பேபி.

    அவரை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் வெற்றி அல்ல. இந்த 10 வருட காலமாக அவர் பல இடங்களில் தனது விதையை விதைத்திருக்கிறான் அல்லவா. நான் ஆர்எஸ்எஸ் காரன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ஓய்வுபெறும் போது சொல்கிறார்.. அப்படியென்றால், அந்த நபர் நீதிபதியாக இருக்கும் போது எத்தகைய தீர்ப்புகளை கொடுத்திருப்பார் என்று நமக்கு தெரியாதா.

    இது ஒரு நிரந்தரமான போராட்டம். ஹிட்லர் மாதிரி ஆட்களில் இருந்து வந்தவர் தான் இவரும். ஆனால் இந்த மாதிரி ஆட்கள் வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. ஏனென்றால், இதுபோன்ற ஆட்களை இயற்கையே ஜீரணிக்காது. வெளியே துப்பி விடும். மீண்டும் மீண்டும் இவர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் போகும் போது கிடைக்கும் பாடங்கள் இருக்கிறது அல்லவா. அதுதான் அதுபோன்ற ஆட்கள் மீண்டும் வருவதற்கு நீண்டகாலத்தை உருவாக்கும். ஆனால் அவர்களை நாம் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் பேசினார்.

    • 2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படுகிறது.
    • பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    இந்த விழாவில் நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு அம்பேத்கர் சுடர் விருது, வழக்கறிஞர் அருள் மொழிக்கு பெரியார் ஒளி விருது, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது, பேராயர் எஸ்றா சற்குணத்திற்கு காமராஜர் கதிர் விருது, பேராசிரியர் ராஜ் கவுதமனுக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, முனைவர் எஸ்.என். சிக்கந்தருக்கு காயிதே மில்லத் பிறை விருது சுப்பராயலுக்கு செம்மொழி ஞாயிறு விருது வழங்கப்படுகிறது.

    விருது வழங்கும் விழா விற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    விருது வழங்கும் நிகழ்ச்சி குறித்து தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

    ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டு வரும் தலித் அல்லாத சான்றோரை போற்றும் வகையில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் அம்பேத்கர் சுடர் விருது முதன் முதலில் 2007-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழங்கப்பட்டது.

    2008-ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர் விருதுடன் பெரியார் ஒளி, அயோத்தி தாசர் ஆதவன், காமராஜர் கதிர், காயிதே மில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளும் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்து வரும் சான்றோர்களுக்கு பாராட்டு பட்டயம், நினைவு கேடயம், ஆகியவற்றுடன் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகின்றன.

    2022-ம் ஆண்டு முதல் கார்ல்மார்க்ஸ் பெயரில் மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்படுகிறது.

    விளிம்பு நிலை மக்களுக்காக பாடுபடும் தலித் இல்லாத ஜனநாயக சக்திகளை அடையாளப் படுத்துவதிலும், அவர்களை ஊக்கப்படுத்துவதும் பிற சமூகத்தினருக்கு இடையில் நல்லிணக்கத்தை வளர்த்தெடுப்பதும் சமூக நீதி, சமத்துவம், பண்மைத்துவம், மதசார்பின்மை, மொழி-இன உரிமைகள் போன்றவற்றை முன்னிறுத்தி பாடுபடும் சான்றோரை சிறப்பிப்பதும் விடுதலை சிறுத்தைகளின் கடமை என்கிற வகையில் இந்த விழா ஆண்டு தோறும் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைக்கப்படுகிறது.

    கடந்த 15 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயண சாமி, இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திபங்கர் பட்டாச்சார்யா உள்பட 99 சான்றோருக்கு இதுவரை விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தை நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.

    விருதுகளை பெரும் சான்றோர்கள் ஏற்புரை நிகழ்த்துகிறார்கள்.

    • தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இதுவே பெரிய ஆதாரமாக அமையும் என நம்புகிறேன்.
    • வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கள ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

    இந்த கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.

    சித்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த திருமாவளவன் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாநிலத் தலைவர் சர்மிளாவை சந்தித்தோம் ஆனால் கூட்டணி அமையவில்லை.

    விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம்.

    தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வருகிறோம்.

    வருகிற 9-ந் தேதி நெல்லூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜுவை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறேன். 11-ந் தேதி மும்பை சென்று சிவசேனா கட்சி வேட்பாளர் அணில் தயா சாயை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

    மோடியை 3-வது முறையாக பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதால் இந்திய அளவில் பா.ஜ.க. மீது அதிருப்தி மேலோங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இதுவே பெரிய ஆதாரமாக அமையும் என நம்புகிறேன்.வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கள ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்கட்ட வாக்குப்பதிவின் தரவுகள் 10 நாட்களுக்கு பிறகே வெளியானது; ஆணையம் தாமதம் செய்தது ஏன்?
    • வாக்குப்பதிவு முடிவுகளை சிலமணி நேரங்களில் வெளியாகும் சூழலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஏன் தாமதமாகிறது?

    வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

    வாக்காளர்களின் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அசாதாரணமான அணுகுமுறை குறித்து பின்வரும் கேள்விகளையும் சந்தேகங்களையும் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சமர்ப்பிக்கிறோம்:

    1. இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 மக்களவைக்கான முதல் 2 கட்டத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகளை 2024 ஏப்ரல் 30 அன்றுதான் வெளியிட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவின் (19 ஏப்ரல் 2024) தரவுகள் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப் பதிவின் தரவுகள் (26 ஏப்ரல் 2024) 4 நாட்களுக்குப் பிறகுதான் வெளியாயின. இது சம்பந்தமாக, தேர்தல் ஆணையத்திடம் எங்களின் முதல் கேள்வி : வாக்காளர்களின் வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் இவ்வளவு தாமதம் செய்தது ஏன்?

    2. முந்தைய சந்தர்ப்பங்களில், வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு விவரங்களை ஆணையம் வெளியிட்டது. இப்போது ஏன் இந்த மாற்றம்? அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் பலமுறை கேள்வி எழுப்பிய போதிலும், தாமதத்தை நியாயப்படுத்துவதற்கான எந்த விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கத் தவறியது ஏன்? நாடு முழுவதும் பதிவான வாக்குகளை சில மணி நேரத்தில் எண்ணி முடிக்க முடியும் என்ற நிலையில், முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சாவடி வாரியான எண்களை ஏன் கொடுக்க முடியவில்லை?

    3. 19.04.2024 அன்று மாலை 7 மணி நிலவரப்படி முதல் கட்ட வாக்குப் பதிவில் (102 இடங்கள்) பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 60% என்று ஆணையம் கூறியது, அதேபோல இரண்டாம் கட்டத்தில் (88 இடங்கள்) மதிப்பிடப்பட்ட வாக்குப்பதிவு சுமார் 60.96%. ஆக இருந்தது. இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டன. 20.04.2024 அன்று, ஆணையத்தின் கணிக்கப்பட்ட முதல் கட்ட வாக்குப்பதிவு 65.5% ஆகவும், 27.04.2024 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 66.7% ஆகவும் இல்லாதது ஏன்?

    இறுதியாக, 30.04.2024 அன்று, புள்ளிவிவரங்கள் முதல் கட்டத்திற்கு 66.14% மற்றும் இரண்டாம் கட்டத்திற்கு 66.71% என உறுதிப்படுத்தப்பட்டது. வாக்குப்பதிவு வெளியானபோதும் அது சதவீதத்தில்தான் கொடுக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை வாக்காளர்களின் எண்ணிக்கையை சரியாகக் காட்டுகிறதா என்ற அச்சம். இந்தத் தாமதம் மற்றும் அறிக்கையிடல் வடிவத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.

    4. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்பது இதுதான்: முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நாளிலிருந்து (19.04.2024 அன்று மாலை 7 மணிக்கு) வாக்குப்பதிவு தாமதமாக வெளியிடப்பட்டதில் இருந்து ஏன் 5.5% அதிகரித்தது? இரண்டாம் கட்டமாக, வாக்குப்பதிவு முடிவடைந்த நாளிலிருந்து (26.04.2024 )தரவுகள் தாமதமாக வெளியிடப்படுவதற்குள் (30.04.2024 ) இறுதி வாக்காளர் எண்ணிக்கை எப்படி 5.74% அதிகரித்துள்ளது?

    5. இவ்வாறு தாமதம் செய்யப்பட்டது மட்டுமின்றி , தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகள் , ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதி, சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் போன்ற முக்கியமான, இத்துடன் தொடர்புடைய புள்ளிவிவரங்களைக் குறிப்பிடவில்லை. வாக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் முக்கியப் புள்ளி விவரங்களுடன் வாக்காளர்களின் வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்பட்டிருந்தால், வாக்குப்பதிவு அதிகரிப்பு (5%) அனைத்துத் தொகுதிகளிலும் நடந்ததா அல்லது ஆளும் கட்சி 2019 இல் சரியாக வாக்கு வாங்காத தொகுதிகளில் மட்டுமே இந்த வாக்கு அதிகரிப்பு காணப்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கும்.

    6. பொது வெளியில் எழுந்துள்ள இந்த சந்தேகங்களைப் போக்க, தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தொகுதி (மற்றும் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகள்) தரவுகளை வெளியிடுவதோடு, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களையும் வெளியிட வேண்டும். உண்மையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குச் சாவடியிலும் அரசியல் கட்சிகளால் ஏதேனும் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அவற்றையும் குறிப்பிட வேண்டும். (நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில், வாக்குச் சாவடி மட்டத்தில் இப்படி புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன.

    7. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தலைமை அதிகாரி ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சரியான வாக்காளர் எண்ணிக்கையைப் படிவம் 17C இல் பதிவு செய்கிறார். இதன் பொருள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கான வாக்களித்தோரின் எண்ணிக்கையின் தேவையான தரவுகள் ஆணையத்திடம் உள்ளன என்பதாகும். இப்போது தேர்தல் ஆணையத்திடம் நாம் கேட்கும் கேள்வி என்னவென்றால், வேட்பாளர்களின் வாக்குச் சாவடி முகவர்களிடமும் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் இருப்பதாகக் கூறி பொறுப்பை வேட்பாளர்களிடம் மாற்றுவதற்குப் பதிலாக, மக்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் அதை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன தடை ?

    8. ஒரு தொகுதியில் எத்தனை வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர், வாக்களித்தவர்களின் சரியான எண்ணிக்கை, வாக்காளர்களின் எண்ணிக்கையை தொகுதி வாரியாக பிரிப்பது போன்ற தகவல்களையும் தேர்தல் ஆணையம் வெளியிடாமல் தவிர்த்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இணையதளத்தில் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஆகியவை மட்டுமே காட்டப்பட்டுள்ளன. சட்டமன்றத் தொகுதிகள் அல்லது நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான விவரங்கள் தொகுக்கப்படவில்லை.

    இந்த சூழலில், இந்த வெளிப்படையான குளறுபடிகளுக்கான காரணங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம். இறுதி முடிவுகளை மாற்றும் முயற்சி நடப்பதாக மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகத்தை நீக்குவதும் தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.

    எஞ்சிய கட்டங்களில் நடக்கும் தேர்தல்களின் வாக்குப்பதிவு விவரங்களை வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் படிவம் 17C இல் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.

    தேர்தல் ஆணையம் தனது கடமையை நியாயமான முறையில் நிறைவேற்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கும் என்று நாங்கள் உண்மையாக நம்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காவல் துறையினரும் வழக்கம் போல பாதிக்கப்பட்ட எளிய ஆதிதிராவிட மக்கள் மீதே தாக்குதல் நடத்தி தமது அதிகார மேலாதிக்க ஆணவப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.
    • சாதிவெறியர்கள் தாக்கியதிலும் காவல்துறையினர் தாக்கியதிலும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிபட்டியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாதியவாத சமூகவிரோதிகள் ஆதிதிராவிட மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர். காவல் துறையினரும் வழக்கம்போல பாதிக்கப்பட்ட எளிய ஆதிதிராவிட மக்கள் மீதே தாக்குதல் நடத்தி தமது அதிகார மேலாதிக்க ஆணவப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.

    சாதிவெறியர்களின் கல் வீச்சிலும் காவல்துறையினரின் தடியடித் தாக்குதலிலும் படுகாயமடைந்த ஆதிதிராவிடர்கள் பலரைப் பொய்வழக்கில் கைதுசெய்து சிறைப்படுத்தியுள்ளனர்.

    சாதிவெறியர்கள் தாக்கியதிலும் காவல்துறையினர் தாக்கியதிலும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் மற்றும் பலர் 'என்னும் பெயரில் ஆதிதிராவிட இளைஞர்களைக் கைது செய்வதில் காவல்துறையினர் இன்னும் தீவிரம் தீட்டிவருகின்றனர்.

    காவல்துறையின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன், மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
    • நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு எந்திரங்கள் பெட்டி அரியலூரில் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன்.

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இதுபற்றி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா செயல் இழந்துள்ளது சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சி.சி.டி.வி. எந்திரங்களை கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    பிரதமர் மோடி சமீபகாலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அதிக இடங்களீல் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

    அவருடைய நிலையை மறந்து பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    வருகிற 9-ந்தேதி ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரசாரம் மேற்கொள்கிறேன்.

    இதே போல் மகாராஷ்டிராவில் தாராவில் போட்டியிடுகிற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

    தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

    இதுவரையில் அரசியல் வரலாற்றிலேயே டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

    அதேபோல ஹேமன்சோரளை பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது தவறான ஒரு தவறான முன் மாதிரி என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

    நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.

    வழக்கு செய்த பிறகு அதன் பிறகு கைது செய்ய வேண்டிய துறையினரால் தான் கடந்த காலங்களில் கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அமலாக்கதுறையினர் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது அதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

    இதனால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×