என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பா.ம.க. தலைவர்களுடன் பல்வேறு வகைகளில் அ.தி.மு.க. ரகசிய பேச்சுவர்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
- ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் விரைவில் தனது முடிவை அறிவிக்கப் போவதாக கூறியுள்ளது.
சென்னை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
தேர்தல் நெருங்கி விட்டதால் பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் மற்றும் மாநில கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. பாராளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் முடிந்ததும் பிப்ரவரி 2-வது வாரத்தில் இருந்து அரசியல் கட்சிகள் முழுமூச்சாக தேர்தல் பணிகளை தொடங்கி விடும்.
அதற்கு முன்னதாக தற்போது எல்லா கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்த தொடங்கி உள்ளன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. நேற்று இரு கட்சி தலைவர்களும் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது என்றும் மீண்டும் பிப்ரவரி 2-வது வாரம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளுடனும் பிப்ரவரி 2-வது வாரத்தில் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து விட்டு வேட்பாளர்களை அறிவிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் நீடிக்கும் என்பது உறுதியாக உள்ள நிலையில் வேறு கட்சிகளை சேர்க்க வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியின் வலுவான கூட்டணியை எதிர்க்க அ.தி.மு.க.வும் தயாராகி வருகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா இடம்பெற்று இருந்தது. தற்போது பாரதிய ஜனதாவை கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலக்கி உள்ளது.
இதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சி தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா தீவிரமாக உள்ளது. இதற்காக மறைமுக முயற்சிகளும் நடந்து வருகின்றன.
இதை அறிந்துள்ள அ.தி.மு.க.வும் கூட்டணியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பென்ஜமின் ஆகிய 5 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். இந்த குழுவினர் இன்று (திங்கட்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை இடம் பெற செய்ய பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம் என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பூவை ஜெகன் மூர்த்தியின் புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ. கட்சி, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய 3 கட்சிகள் மட்டுமே இருக்கின்றன.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் கணிசமான அளவுக்கு வாக்குகள் இருப்பதால் அந்த கட்சியை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள பாரதிய ஜனதா தீவிரமாக இருக்கிறது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. உள்ளது என்று ஏற்கனவே அதன் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று மதுரையில் பேட்டியளித்த அவர், "பா.ம.க.வின் முடிவு விரைவில் வெளியிடப்படும்" என்று கூறியுள்ளார். பா.ம.க.வை பாரதிய ஜனதா பக்கம் செல்ல விட்டு விடக்கூடாது என்று அ.தி.மு.க. தலைவர்கள் காய்களை நகர்த்தி வருகிறார்கள். இதுபற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பா.ம.க. தலைவர்களுடன் பல்வேறு வகைகளில் அ.தி.மு.க. ரகசிய பேச்சுவர்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் பா.ம.க. தலைவர்களுடன் பாரதிய ஜனதா தலைவர்களும் பேசி வருகிறார்கள். எனவே பா.ம.க. முடிவு என்ன என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.
இதற்கிடையே கூட்டணிக்கு பா.ம.க.வை அழைக்கலாமா? வேண்டாமா? என்பதில் அ.தி.மு.க. தலைவர்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் உருவாகி இருக்கின்றன. பா.ம.க.வை அழைத்தால் முக்குலத்தோர் வாக்குகளை இழக்க நேரிடலாம் என்று அ.தி.மு.க. தலைவர்களில் ஒரு சாரார் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஆனால் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுகீட்டை அ.தி.மு.க. அறிவித்து இருப்பதால் வட மாவட்டங்களில் முழுமையான வெற்றி பெற முடியும் என்று அ.தி.மு.க.வில் மற்றொரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே பா.ம.க.வை அழைப்பது தொடர்பாக அ.தி.மு.க.வில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
பா.ம.க. உண்மையில் தி.மு.க.வுடன் கைகோர்த்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டாக்டர் ராமதாஸ் சந்தித்த போது இந்த யூகங்கள் அதிகரித்தது.
ஆனால் பா.ம.க.வுக்காக விடுதலை சிறுத்தைகளை வெளியேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராக இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் நடத்திய திருச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று அதை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதனால் பா.ம.க. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் சாய்வதா? பா.ஜ.க. பக்கம் சாய்வதா? என்று ஆலோசித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தே.மு.தி.க.வை இழுக்கவும் பாரதிய ஜனதா முயற்சி செய்கிறது. தே.மு.தி.க.வை சேர்ந்த ஒருவரை டெல்லி மேல்சபை யில் எம்.பி. ஆக்குவதாக பா.ஜ.க. உறுதி அளிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி உறுதி அளிக்கும்பட்சத்தில் தே.மு.தி.க. பாரதிய ஜனதா பக்கம் சாய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு தே.மு.தி.க.வையும் அணி மாற விட்டு விடக்கூடாது என்று அ.தி.மு.க. கருதுகிறது. இன்று நடந்த கூட்டத்தில் இதுபற்றி அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் நீண்ட நேரம் விவாதித்தனர்.

ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் விரைவில் தனது முடிவை அறிவிக்கப் போவதாக கூறியுள்ளது. அந்த கட்சி சமீபகாலமாக பாரதிய ஜனதாவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறது. எனவே தேசிய அரசியலை கருத்தில் கொண்டு ஜி.கே.வாசன் பாரதிய ஜனதா பக்கம் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதுபோல ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் போன்றவர்களும் பாரதிய ஜனதா பக்கம் நோக்கிதான் நடந்து கொண்டு இருக்கிறார்கள். இதை பற்றியும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. உள்பட ஏற்கனவே கூட்டணியில் இருந்த பெரும்பாலான கட்சிகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இன்னமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதையும் வெளியிடவில்லை. எனவே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இவர்கள் செல்வார்களா? என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
அப்படியே சென்றாலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்பதும் தெளிவற்ற நிலையில் உள்ளது. இந்த சிக்கல்களை நிவர்த்தி செய்வது பற்றியும் அ.தி.மு.க. தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
தொகுதி பங்கீடு சிக்கல் நீடிக்கும் நிலையில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை தலைமையிலான பிரசாரக் குழுவும் இன்று ராயப்பேட்டை தலைமை கழகத்தில் ஆலோசனை நடத்தியது. பிரசார திட்டங்களை எப்படி அமல்படுத்துவது என்பது பற்றி அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அது போல அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலான தேர்தல் விளம்பர குழுவும் ஆலோசனை நடத்தியது. இன்று நடந்த அ.தி.மு.க. குழுக்கள் கூட்டத்தில் முதல் கட்ட ஆய்வுதான் நடந்துள்ளது. முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
- இனி தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிக மிக கடினம் என்பதை உணர்ந்தார்.
- ஈரோடு இடைத்தேர்தலில் தாமாக முன்சென்று தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு இதுவரை தேர்தலில் எந்த வெற்றியும் பெறவில்லை.
சட்டசபை தேர்தலில் கோவைக்கு சென்று களம் இறங்கிய அவருக்கு தோல்வி தான் பரிசாக கிடைத்தது. என்றாலும் மனம் தளராமல் மக்கள் நீதி மய்யத்தை நடத்தி வருகிறார்.
தமிழக அளவில் மிக குறைந்த அளவு சதவீத வாக்குகளே தனக்கு இருப்பதை உணர்ந்த கமல்ஹாசன் இனி தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிக மிக கடினம் என்பதை உணர்ந்தார். இதையடுத்து அவர் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தார்.
நீண்ட ஆலோசனைக்கு பிறகு தி.மு.க.வுடன் நட்பாக இருப்பதற்கு காய்களை நகர்த்தினார். இதை கருத்தில் கொண்டுதான் ஈரோடு இடைத்தேர்தலில் தாமாக முன்சென்று தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதியை கமல்ஹாசன் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.
காங்கிரசுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அடுத்து 3-ந்தேதி ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளுடன் பேச்சு நடத்த உள்ளன. ஆனால் இதுவரை கமல்ஹாசன் கட்சிக்கு தி.மு.க. தரப்பில் இருந்து எந்த அழைப்பும் விடப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், "தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கிறதா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தேர்தலில் போட்டியிட இடம் கேட்காமல் புதிய கட்சிகள் யார் வேண்டும் என்றாலும் கூட்டணிக்கு வரலாம்" என்று தெரிவித்தார்.
இதன் மூலம் கமல்ஹாசன் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது என்பதை டி.ஆர்.பாலு சூசகமாக சுட்டிக்காட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இது கமல்ஹாசன் கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- பட விளம்பரத்திற்காக எதுவும் இல்லை.
- லால் சலாம் படம் சூப்பரா வந்துருக்கு.
சென்னை:
சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
படப்பிடிப்பிற்காக ஆந்திர மாநிலம் கடப்பா செல்கிறேன்.
சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை. சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை.
அப்பா ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும் விரும்ப கூடியவர் என்றுதான் ஐஸ்வர்யா கூறினார். பட விளம்பரத்திற்காக எதுவும் இல்லை. லால் சலாம் படம் சூப்பரா வந்துருக்கு. படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள் என்றார்.
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்?
- முதலமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், முத்துக்குமார் 15-வது ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று முத்துக்குமார், பழனிபாபா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
கட்சி தொடங்கிய அன்று முதல் இன்று வரை கூட்டணி இல்லை என்றும் தனித்து தான் எங்கள் பயணம் தொடர்கிறது. மக்களை நம்புகிறோம். எங்களை மக்கள் கைவிடமாட்டார்கள். தோற்றாலும், வெற்றி பெற்றாலும் தனித்து தான் என்று வரலாறு பேசும். நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர்.
இது கொள்கைக்காக கூடும் கூட்டம். தி.மு.க. என்பது கட்சி கிடையாது. அது ஒரு கம்பெனி. கருணாநிதி குடும்பத்தின் சொத்து. ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் மற்ற கட்சிகளால் ஓட்டோ அல்லது கூட்டத்தையோ கூட்ட முடியாது. நாம் தமிழர் செய்வது தான் புரட்சி.
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் 2026-க்கு பிறகு ஒரு குச்சியாக கூட இருக்காது. ஒத்தையடி பாதையில் செல்லும் என்னை 8 வழிச்சாலையில் அழைத்துச் செல்வது தி.மு.க., பா.ஜ.க. தான். ஒரு தீவிரவாதியாகவோ, பயங்கரவாதியாக என்னை மாற்றி விடாதீர்கள், ஜனநாயகவாதியாகவே என்னை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை (பனை-தென்னை பால்) திறப்போம். டாஸ்மாக் கடைகளை மூடுவோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றி விட்டார்களா? கூட்டுறவு வங்கியில் வைத்த நகைக் கடன் தள்ளுபடி செய்து விட்டார்களா?.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்? கேலோ என்பது இந்தியில் விளையாட்டு என்று அர்த்தம். இந்தி தெரியாது போடா என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் இந்தியை வாடா என்கின்றனர். முதல்-அமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது.
- வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 70 அடிக்கு மேல் எட்டியது. அதன் பிறகு கடந்த 6-ந் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியதால் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டது.
இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது. இருந்த போதும் வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 70.10 அடியாக உள்ளது. வரத்து 910 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5873 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.70 அடியாக உள்ளது. வரத்து 134 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6294 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.75 அடி. வரத்து 21 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 430.23 மி.கன அடி.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 25 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.
- தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் வந்தனர்.
- 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார், கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், வருகிற 9-ந்தேதி காங்கிரசுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மற்றும் தமிழக குழுவினர் பங்கேற்ற நிலையில், 9-ந்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக நிர்வாகிகள் மட்டும் பங்கேற்கின்றனர்.
- ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.
- கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள காவனூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 38 ). தொழிலாளி.
இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று அவரது கையில் கடித்தது.
கண்ணாடிவிரியன் பாம்பு அவரை கடித்தது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கதிரவனை கொண்டு சென்றனர்.
மேலும் கண்ணாடிவிரியன் பாம்பையும் பிளாஸ்டிக் கவரில் போட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அங்கு கதிரவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
- பொருளாதார வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம்.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழ் சேவா சங்கம் சார்பில் தமிழர் திருவிழா, கிராமப்புற பொருளாதார மேம்பாடு, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடு வழங்குதல் மற்றும் மீனவர் மேம்பாட்டு திட்டம் வழங்கும் விழா நாகை பொரவாச்சேரியில் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு முதல்கட்டமாக 25 பேருக்கு வீட்டிற்கான சாவி, 250 பேருக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-

தமிழ் சேவா சங்கம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தல், மகளிருக்கு தையல் எந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த பணிகள் தொடர வேண்டும்.
நான் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு சென்றேன். பூர்வகுடி மக்களையும், மீனவர்களையும் சந்தித்தேன். அவர்களுடைய ஏழ்மை நிலை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலைமாற வேண்டும்.
நமது நாடு உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் 5-வது நிலையை எட்டி உள்ளோம். தமிழ்நாடும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதும் இங்கு இருக்கக்கூடிய ஏழ்மை நிலையை பார்க்கும் போது வருத்தம் அளிக்கிறது. கீழவெண்மணி கிராமத்திற்கு சென்று அங்கு தியாகி பழனிவேலை சந்தித்து உரையாடினேன்.

நமது நாடு உலக அளவில் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. புதிய கோட்பாட்டின்படி மனிதர்கள் அனைவரையும், உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் பயணிக்கின்றோம்.
எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் அதன் நோக்கம். மத்தியில் உள்ள தலைமை இதை நோக்கிய வீரநடை போட்டு வருகிறது. இந்த புதிய பாரத அவதாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உள்ளனர்.
புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு இங்குள்ள பூர்வகுடி மக்களின் பங்களிப்பும், மீனவர்களின் பங்களிப்பும் முக்கியத்துவமாக உள்ளது. அப்படிப்பட்ட பங்களிப்புடன், இருந்தால் நமது நாட்டை 25 ஆண்டுகளில் நாம் முன்னேறிய நாடாக மாற்றிவிடலாம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிடும் போது பல நிலைகளில் நம் நாடு முன்னேறி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களை நம் நாட்டின் முன்னேற்றத்தின் சிற்பிகளாக உருவாக்கும் பணியை ஸ்ரீதர் வேம்பு திறமையாக செய்து வருகிறார். அரசியலால் நாம் பிரச்சினைகளையும், பிரிவைவும் மட்டுமே செய்ய முடியும்.
ஆனால் சேவை செய்யக்கூடிய நல்ல உள்ளங்கள், அமைப்புகள் மூலம் தான் நமது நாட்டை முன்னேற்ற முடியும். அந்த சேவையை தமிழ் சேவா சங்கம் திறமையாக செய்து வருகிறது. இளைஞர்களின் புதிய கனவுகளுடன் புதிய தமிழ்நாட்டை படைப்போம்.
இவ்வாறு கவர்னர் ஆர்.என். ரவி பேசினார்.
- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை தோலுரித்து காட்டுவோம்.
- தி.மு.க. கூட்டணி கட்சிக்குள் பல முரண்பாடுகள் உள்ளன.
சென்னை:
அ.தி.மு.க. பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரக் குழு, விளம்பரக் குழுவினர் கூட்டம் இன்று நடந்தது.
கூட்டம் முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. உரிய நேரத்தில் அறிவிப்போம். மத்திய, மாநில அரசுகள் தவறு செய்தால் சுட்டிகாட்டுவோம்.
அ.தி.மு.க. யாருக்கும் பயப்படாது. கூட்டணிக்காக அ.தி.மு.க.வினர் டெல்லி சென்று காலில் விழுந்ததாக அண்ணாமலை கூறுகிறார். இதனை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
பா.ஜ.க.வில் தன்னை முன்நிறுத்தி கொள்ள அண்ணாமலை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். நடக்காத விஷயத்தை அவர் கூறுகிறார்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை தோலுரித்து காட்டுவோம். கடந்த 10 ஆண்டுகளில் மாநில நலன்களை பா.ஜ.க. மறந்து விட்டது. பா.ஜ.க.வுடன் இனி ஒட்டும் இல்லை... உறவும் இல்லை.
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். இந்தயா கூட்டணியை போல தி.மு.க. கூட்டணியும் சிதறும். தி.மு.க. கூட்டணி கட்சிக்குள் பல முரண்பாடுகள் உள்ளன. நெல்லிக்காய் மூட்டை போல சிதறும்.
அண்ணாமலை, அண்ணே... அண்ணே... என்று ஊளை கும்மிடு போடும் நபர்கள் நாங்கள் இல்லை. மத்திய, மாநில அரசுகள் தவறு செய்தால் அவர்களை அடையாளப்படுத்துவது அ.தி.மு.க.வின் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி காலை நடக்கிறது.
- முதல்கால வேள்வி பூஜை இன்று நடக்கிறது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் போன்ற பல்வேறு சிறப்பு வாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி காலை நடக்கிறது.
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இ்ரவு 7 மணிக்கு முதல்கால வேள்வி பூஜை நடக்கிறது. முன்னதாக கடந்த 24-ந்தேதி மூத்த பிள்ளையார் வழிபாடும், கணபதி ஹோமமும் நடந்தது. இதையடுத்து 25-ந்தேதி சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் முன்னிலையில் லஷ்மி ஹோமம் ஸ்ரீசூத்தம் ஜபம் நடந்தது.
இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு தல காவிரி தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கடந்த சனிக்கிழமை அவிநாசியில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கர்நாடக மாநிலம் தலைக்காவேரி சென்ற நிலையில் அங்கு தீர்த்தம் எடுத்து இன்று அதிகாலை அவிநாசி வந்தடைந்தனர்.
இதனை தொடர்ந்து அவினாசி வீர ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் வலம் வரும் ரத வீதிகளின் வழியாக 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்தனர். தீர்த்தக் கூட ஊர்வலத்துக்கு முன்பு மேளதாளங்கள் முழங்க இசைக்கேற்றவாறு குதிரை நடனமாட பெண்கள் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
இதில் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்தடைந்த தீர்த்தர்கள் கும்பாபிஷேகத்தன்று அவிநாசிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது.
காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச் செய்து தூய்மை செய்தல் பணி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருட்சத்திகளை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளி ஆனந்தம் அருளும் அவினாசியப்பருக்கு முதல்கால வேள்வி பூஜை தொடங்குகிறது. நாளை காலை 9 மணிக்கு 2-ம் காலமுறை விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
காலை 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண்வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 3-ம் கால வேள்வி பூஜை , பேரொளி வழிபாடு ஆகியவை நடக்கிறது.
31-ந்தேதி காலை 6 மணிக்கு 4-ம் கால வேள்வி, மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வியும், 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வியும் நடக்கிறது.அன்று காலை 10 மணிக்குள் அவினாசியப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு கும்பாபிஷேக பெருவிழாவும், மாலை 6 மணிக்கு 7-ம் கால வேள்வி 108 மூலிகை பொருட்கள் வேள்வி ஆகியவை நடக்கிறது.
வருகிற 2-ந்தேதி காலை 8-ம் கால வேள்வி பூஜை, திருமுறைவிண்ணப்பம், பேரொளி ஆராதனை ஆகியவை நடக்கிறது. காலை 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும், 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது.
அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், 8 மணிக்கு அவினாசி அப்பருடன் ஐம்பெரும் தெய்வங்களும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
- 4-ந்தேதி திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
- தொகுதி பங்கீடு தொடர்பாக வருகிற 4-ந்தேதி மாலை திமுக - மதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது. வருகிற 3-ந்தேதி தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 4-ந்தேதி திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருச்சி தொகுதியில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 4-ந்தேதி மாலை திமுக - மதிமுக இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போது மதிமுக திருச்சி தொகுதியை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதிமுக அலுவலகத்தில் இன்று மாலை கட்சி நிர்வாகிகளோடு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனை நடத்த உள்ளார்.
- தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது.
- அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது.
திருப்பூா்:
சந்தா்ப்பவாத அரசியலின் அடையாளம் நிதிஷ்குமாா் என்று மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வு மான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்லடத்தில் தனியாா் தொலைக்காட்சி செய்தியாளா் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. இன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சந்தா்ப்பவாத அரசியலின் பேராபாயத்தை உற்று நோக்கி அதனைப் பற்றிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.
பீகாா் மாநில முதல்வா் நிதீஷ்குமாா் கடந்த காலங்களில் கூட்டணி, அரசியல் நிலைபாடுகளை மாற்றியுள்ளதை தவறு என்று சொல்ல முடியாது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுப்பதும், நிா்வாகிகளின் முடிவுக்கு ஏற்ப கூட்டணி நிலைபாடுகளை மாற்றிக் கொள்வதும் தவிா்க்க முடியாதது. ஆனால் நிதிஷ்குமாா் பச்சை சந்தா்ப்பவாதத்தின் அடையாளமாக அரசியலில் காணப்படுகிறாா்.

18 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.வுடன் இருந்தவா் முதல்வா் பதவிக்கு ஆபத்து என்றவுடன், லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி ஏற்படுத்தி புதிய ஆட்சியை நடத்தப்போவதாக கூறினார்.
இதன் பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி என்ற களத்தை அமைத்தாா். கடந்த ஒரு வாரத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. முதல்வா் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க. கூட்டணியுடன் முதல்வா் பதவியை ஏற்று புதிய பாதையை த்தொடங்கியுள்ளாா். இத்தகைய அரசியல்வாதிகளை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
திருச்சி மத்திய சிறைச்சாலையை வரும் பிப்ரவரி 10- ந்தேதி பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மனிதநேய ஜனநாயக கட்சி முற்றுகையிட உள்ளது. தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளைக் கடந்து சமூக வழக்குகள் தொடா்பாக வாடிவதங்கிக் கொண்டிருக்கும் 36 கைதிகள் உள்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 2024 பாராளுமன்ற தேர்தல்தான் கடைசி தேர்தலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவா் ராயல் ராஜா, மாநில செயலாளா்கள் ஷபி, ஜாபா் அலி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.






