search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு தி.மு.க.வில் இடம் உண்டா? இல்லையா?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு தி.மு.க.வில் இடம் உண்டா? இல்லையா?

    • இனி தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிக மிக கடினம் என்பதை உணர்ந்தார்.
    • ஈரோடு இடைத்தேர்தலில் தாமாக முன்சென்று தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

    கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய பிறகு இதுவரை தேர்தலில் எந்த வெற்றியும் பெறவில்லை.

    சட்டசபை தேர்தலில் கோவைக்கு சென்று களம் இறங்கிய அவருக்கு தோல்வி தான் பரிசாக கிடைத்தது. என்றாலும் மனம் தளராமல் மக்கள் நீதி மய்யத்தை நடத்தி வருகிறார்.

    தமிழக அளவில் மிக குறைந்த அளவு சதவீத வாக்குகளே தனக்கு இருப்பதை உணர்ந்த கமல்ஹாசன் இனி தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிக மிக கடினம் என்பதை உணர்ந்தார். இதையடுத்து அவர் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்தார்.

    நீண்ட ஆலோசனைக்கு பிறகு தி.மு.க.வுடன் நட்பாக இருப்பதற்கு காய்களை நகர்த்தினார். இதை கருத்தில் கொண்டுதான் ஈரோடு இடைத்தேர்தலில் தாமாக முன்சென்று தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இதன் தொடர்ச்சியாக பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதியை கமல்ஹாசன் கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

    ஆனால் தி.மு.க. தரப்பில் இருந்து இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது.

    காங்கிரசுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அடுத்து 3-ந்தேதி ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகளுடன் பேச்சு நடத்த உள்ளன. ஆனால் இதுவரை கமல்ஹாசன் கட்சிக்கு தி.மு.க. தரப்பில் இருந்து எந்த அழைப்பும் விடப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கூறுகையில், "தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கிறதா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. தேர்தலில் போட்டியிட இடம் கேட்காமல் புதிய கட்சிகள் யார் வேண்டும் என்றாலும் கூட்டணிக்கு வரலாம்" என்று தெரிவித்தார்.

    இதன் மூலம் கமல்ஹாசன் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது என்பதை டி.ஆர்.பாலு சூசகமாக சுட்டிக்காட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இது கமல்ஹாசன் கட்சி மூத்த நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×