search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறப்பு
    X

    வைகை அணையில் இருந்து குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறப்பு

    • மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது.
    • வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 70 அடிக்கு மேல் எட்டியது. அதன் பிறகு கடந்த 6-ந் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியதால் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது. இருந்த போதும் வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 70.10 அடியாக உள்ளது. வரத்து 910 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5873 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.70 அடியாக உள்ளது. வரத்து 134 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6294 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.75 அடி. வரத்து 21 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 430.23 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 25 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    Next Story
    ×