என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பண்டிகை, தொடர் விடுமுறை காலங்களில் வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
- சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் உள்ள 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை ஓவியங்கள், சமணர் படுக்கைகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை. இவற்றை மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது.
அதனருகே தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வரும் படகு சவாரி செய்வதற்கான படகு குழாம் உள்ளது. மேலும், அறிவியல் பூங்கா, சிறுகல் பூங்கா உள்ளிட்டவையும் உள்ளன.
இங்கு தினசரி சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பண்டிகை, தொடர் விடுமுறை காலங்களில் வழக்கத்துக்கு மாறாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சித்தன்ன வாசல் சுற்றுலாத்தலத்தை பார்வையிட உள்ளார். இதைத்தொடர்ந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை:
சென்னையில் தற்போது கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளிப்பதை தொடங்குமாறு மலேரியா ஒழிப்பு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2,600 தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை நகரம் முழுவதும் புகை அடித்தும், மருந்துகளை தெளித்தும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சென்னையில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மழைநீர் வடிகால்கள் இருப்பதால் அங்கு தொடர்ந்து மருந்து தெளிக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகும் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்றினாலும் கூட அந்த வழியாக கழிவுநீர் செல்கிறது. எனவே கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது.
- ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.
விழுப்புரம்:
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், அந்த பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர். இதனிடையே முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள், இவ்வழக்கை வேறு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, இம்மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு தடை எதுவும் இல்லை என்றும், ஜனவரி 24-ந் தேதிக்குள் இவ்வழக்கை முடிக்க வேண்டும் என்றும் விழுப்புரம் கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு மேல்முறையீடாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் கடந்த 24-ந்தேதி நடந்தது. பின்னர் வழக்கு விசாரணை இன்று (29-ந்தேதி) ஒத்திவைக்கப்பட்டது. அன்று ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜர் ஆகி வாதாடுவதற்கு கோர்ட் அனுமதி வழங்கி இருந்தது.
அதன்படி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர்.
- கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் அக்கரைபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 9 பேரும் கடந்த மாதம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கனை கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வழக்கு அங்குள்ள இலங்கை பருத்திதுறை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட 10 பேரும் பருத்திதுறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி நிபந்தனையுடன் அவர்கள் 10 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது.
- வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
சென்னை:
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக மீன்வாங்க பொதுமக்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலை கரை திரும்பினர். சுமார், 500-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர். மீனவர்களுக்கு கடலில் அதிக அளவு மீன்கள் கிடைத்ததால், காசிமேடு மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் விற்பனைகளை கட்டியது.
வஞ்சிரம், வவ்வால், சீலா, பாறை, சூறை, பால் சுறா உள்ளிட்ட பெரிய வகை மீன்களும் மற்றும் சிறிய வகை மீன்களான சங்கரா, நண்டு, இறால், கானாங் கத்தை, நவரை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் வரத்தும் அதிகமாக காணப்பட்டது. காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஏலம் முறையில் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன்களின் விலையும் அதிகரித்தது.
இதுவரை கிலோ ரூ.700-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் கிலோ ரூ.900 ஆக அதிகரித்தது. வெள்ளை நிற வவ்வால், கொடுவா மீன் ஆகியவை ரூ.600-க்கும், சிறிய வகை வவ்வால், சங்கரா மீன் ஆகியவை ரூ.500-க்கும், பாறை ரூ.400-க்கும், சீலா, இறால், நண்டு, கடமா பெரியது ஆகியவை தலா ரூ.300-க்கும், நவரை, கானாங்கத்தை, நெத்திலி மீன்கள் தலா ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, காசிமேடு மீனவர்கள் கூறியதாவது:-
விடுமுறை நாளான நேற்று மீன்களை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். இதனால், மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. கடலில் எண்ணெய் கசிவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை சரிவை சந்தித்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. வாடிக்கையாளர்கள் மீன் வாங்க பயந்ததால் மீன்களை விலையை குறைத்து விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த வாரத்தை விட நேற்று மீன் விலை அதிகமாக காணப்பட்டது. மீன்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் வாரங்களிலும் மீன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
- செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 22ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.
சென்னை:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜனவரி 31வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 29ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கடந்த ஜனவரி 22ம் தேதி உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பாதை வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
- பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 26.1 கி.மீ. வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரெயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. தற்போது, உயர்மட்ட பாதை பணிகள், சுரங்கப் பாதை பணிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆகியவை முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட பாதை வழித்தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் உயர்மட்டப் பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும். இதுவரை 598 தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் உயர்மட்ட இரும்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. ஆலப்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, சாலிகிராமம், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, கரையான்சாவடி, பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் உயர்மட்டப்பாதையில் 18 ரெயில் நிலையங்களில் 13 ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிர மடைந்துள்ளன. மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கான நுழைவு வாயில், வெளியேறும் பகுதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடைய வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து பவர் ஹவுஸ்- பூந்தமல்லி இடையே உள்ள பாதையை மக்கள் பயன்பாட்டுக்காக, 2025-ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் அடுத்த ஆண்டு மெட்ரோ ரெயில் ஓடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு பாதையில் கட்டுமானப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்காக, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில்நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் எந்திரமான 'பிளமிக்கோ' கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி பணியை தொடங்கியது. இதையடுத்து, 2-வது சுரங்கம் தோண்டும் எந்திரமான 'கழுகு' தனது பணியை கடந்த 18-ந்தேதி தொடங்கியது. இது கலங்கரை விளக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்கி, கச்சேரி சாலை, திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழியாக போட்கிளப்பை 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடைய உள்ளது.
இதற்கிடையில், தி.நகர் பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி 'பிகாக்' என்ற எந்திரம் மூலமாக, சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது. தற்போது, இந்த எந்திர பாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பூமிக்கடியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை கணிசமான அளவுக்கு எம்.பி.க் கள் ஜெயிக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் விரும்புகிறது.
- ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை:
தேர்தல் காலங்களில் கூட்டணிகள் உறுதிப்படுத்தப்பட்டு வேட்பாளர்கள் அறி விக்கப்பட்ட பிறகுதான் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்படும்.
ஆனால் இந்த முறை பா. ஜனதாவில் வேட்பாளர் பட்டியல் வரும் பின்னே. அலுவலகங்களை திறக்க வேண்டும் முன்னே என்ற ரீதியில் தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகத்தை உடனே திறக்கும்படி டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி எல்லா தொகுதிகளிலும் தேர்தல் அலுவலகங்கள் தயாராகி வருகின்றன. சமீபத்தில் திருநெல்வேலி தொகுதிக்கான அலுவலகம் திறக்கப்பட்டது.
இன்று தென்சென்னை பாராளுமன்ற தொகுதியின் தலைமை தேர்தல் பணிமனை வேளச்சேரியில் ராம் நகர் 6-வது மெயின் ரோட்டில் இன்று திறக்கப்பட்டது. அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் கரு.நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், பொறுப்பாளர் பாஸ்கர், இணை பொறுப்பாளர் முனியசாமி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை கணிசமான அளவுக்கு எம்.பி.க் கள் ஜெயிக்க வேண்டும் என்று டெல்லி மேலிடம் விரும்புகிறது. அதற்கு ஏற்ற வகையில் வேட்பாளர்களையும் தேர்வு செய்கிறார்கள்.
தென்சென்னையில் போட்டியிட கரு.நாகராஜன், திருப்பதி நாராயன், ரமேஷ் சிவா, எஸ்.ஜி.சூரியா உள்பட சிலர் விருப்பம் தெரிவித்து உள்ளார்கள்.
ஆனால் டெல்லி மேலிடம் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தென்சென்னை தொகுதியில் நடிகை குஷ்பு களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அவருடைய பெயரும் பரிசீலனை பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி குஷ்புவை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூறியதாவது:-
எனக்கு எதுவும் தெரியாது. எப்படியாவது கட்சி வெற்றி பெற ணே்டும் என்பதே எல்லோரது எண்ணம். தமிழ்நாட்டில் இருந்தும் பா.ஜனதா எம்.பி.க்கள் பலர் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஆசைப்படுகிறார். அதற்காகத்தான் எல்லோரும் உழைக்கிறோம். கட்சி என்ன கட்டளையிடுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் எங்கள் கடமை என்றார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.
- சென்னையில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
சென்னை:
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து சனிக்கிழமை புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்-உடன் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில், வானத்தில் ஆச்சர்யம். ஸ்பெயின் செல்லும் விமானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்சை சந்தித்ததாக பதிவிட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
Surprise in the skies: Met #Tennis legend @DjokerNole en route to #Spain! ? pic.twitter.com/VoVr3hmk5b
— M.K.Stalin (@mkstalin) January 29, 2024
- சென்னை மாநகரில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
- பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோயம்பேட்டில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட விருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
கோயம்பேடு பஸ் நிலையத்தின் மொத்தப்பரப்பு 36 ஏக்கர், தனியார் பேருந்து நிலையம் 6.8 ஏக்கர், கோயம்பேடு சந்தைப் பூங்கா 7.6 ஏக்கர், கூடுதலாக உள்ள நிலம் 16 ஏக்கர் ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.13,200 கோடி ஆகும்.

இது அபுதாபி நிறுவனம் தமிழகத்தில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள ரூ.3500 கோடி முதலீட்டை விட 4 மடங்கு அதிகம் ஆகும். இவ்வளவு அதிக மதிப்புள்ள மக்களுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடி யாது. மாறாக அந்த நிலத்தை பூங்காவாக மாற்றுவதே சரியாகும்.
சென்னை மாநகரில் தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல்பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள் தேவை.
எனவே, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், சந்தைப் பூங்கா, கூடுதல் நிலம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து 66 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய பூங்காவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது.
- அடுத்த கட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் கோரிக்கை வைத்தன.
இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை தொடங்கினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் 221 பேரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமானவர்களாக கருதப்பட்ட 31 பேரிடம் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனை மாதிரிகள், மனிதக்கழிவு கலக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார், அடுத்த கட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டனர்.
இதற்காக நீதிமன்ற அனுமதியை கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெயந்தி 10 பேருக்கு தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி அடுத்த மாதம் 12-ந்தேதி முடிவு செய்யப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
- பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
- 2-வது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 1 மற்றும் 2-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்படுகிறது.
பின்னர் அங்கிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் பிரிந்து வழங்கப்படுகிறது.
மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எரிபொருள் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக கூடன்குளத்தின் முதல் 2 அணு உலைகள் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாட்கள் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் அந்த அணு உலைகளில் மின் உற்பத்தி தொடங்கும்.
இந்நிலையில் முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று ( திங்கட்கிழமை) மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணியானது இன்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறும் என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.






