என் மலர்
உள்ளூர் செய்திகள்
- சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
- ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
மதுரை:
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவரது மனைவி ஆனந்தி (வயது 26). கடந்த 2014 ஆம் ஆண்டு குபேந்திரனுக்கும், ஆனந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக குபேந்திரன், மனைவி ஆனந்தியை பிரிந்து சென்று விட்டார். ஆனாலும் மாமியார் இருளாயி மருமகள் ஆனந்தியுடன் மிகுந்த பாசமாக இருந்து வந்தார். அவரும் கடந்த 2023 மார்ச் மாதம் இறந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து தன் மீது பாசமாக இருந்த மாமியார் கனவிலும், நேரடியாகவும் தோன்றி அழைப்பதாக கூறி ஆனந்தி அடிக்கடி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் புலம்பி கொண்டிருந்தார். இதனால் அவரை கோவில்களுக்கு அழைத்து சென்று தண்ணீர் தெளித்தனர். மேலும் சாமியார்கள், மந்திரவாதிகளிடமும் அழைத்து சென்று மந்திரித்தும் வந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஆனந்தி, பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு மாமியாரிடம் செல்வதாக கூறி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண் ஆனந்தியின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தி.மு.க.வில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
- ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க.வில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க.வில் கடந்த வாரம் தேர்தல் அறிக்கைக் குழு கூடி ஆலோசனை நடத்தியது. தொகுதி பங்கீட்டுக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அதிமுக பிரசாரக் குழு, விளம்பரக் குழுவின் ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நாளை ஆலோசனை நடத்துகிறது.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
அப்போது தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என ராமதாஸ் கருத்து கேட்க உள்ளார்.
- உணவகத்தில் இத்தாலிய உணவுகள், ஆசிய உணவுகள் மற்றும் சீன உணவு வகைகளை ருசிக்கலாம்.
- உணவகத்தின் பெயர் 'என்.எச் 32' ஆகும்.
சென்னை:
சென்னை பொத்தேரி ஜி.எஸ்.டி. சாலையில் ரெயில் பெட்டி உணவகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் இன்னும் 10 நாட்களில் திறக்கப்பட உள்ளது. ஜி.எஸ்.டி. சாலையில் சென்னையை நோக்கி வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் இந்த உணவகத்தில் இத்தாலிய உணவுகள், ஆசிய உணவுகள் மற்றும் சீன உணவு வகைகளை ருசிக்கலாம். பொத்தேரி ரெயில் நிலையத்திற்கு வெளியே அழகிய முறையில் ரெயில் பெட்டி போல இந்த உணவகம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த உணவகம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும். ஜி.எஸ்.டி. சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரெயில் பெட்டி உணவகம் , பொத்தேரியில் வசிப்பவர்களையும், ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும் பயணிகளையும் வெகுவாக கவரும். இந்த உணவகத்தின் பெயர் 'என்.எச் 32' ஆகும்.
ரூ.1.5 கோடி மதிப்பில் இந்த உணவகத்தை தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரெயில்வே அமைத்துள்ளது. 2,000 சதுர அடி பரப்பளவில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ரெயில்வேயால் அமைக்கப்பட்டுள்ள 2-வது ரெயில் பெட்டி உணவகம் ஆகும். இந்த உணவகத்தில் பயணிகள் அமர்ந்து சாப்பிட மர பெஞ்சுகள் மற்றும் கிரானைட் டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சோபாக்களும் போடப்பட்டு உள்ளன. இந்த ரெயில் பெட்டி உணவகம் வாடிக்கையாளருக்கு அசல் ரெயில் பெட்டியின் உணர்வை வழங்குகிறது. இதற்காக இந்த ரெயில் பெட்டி உணவகம் பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.
இந்த உணவகத்தில் பீட்சா, பர்கர், நூடுல்ஸ், சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காட்டாங்கொளத்தூரில் மேலும் ஒரு ரெயில் உணவகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
- பல்கலைக்கழக மானியக் குழுவின் பணி என்பது உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது தான்.
- இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது ஏன்?
சென்னை :
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்ப அனுமதிக்கும் திட்டம் இல்லை என்றும், பல்கலைக்கழக மானியக்குழுவால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது. தகுதியானவர்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதி கைவிடப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவும் அறிவித்திருக்கிறது. இரு அமைப்புகளும் வெளியிட்டுள்ள விளக்கங்கள் வரவேற்கத்தக்கவை.
உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காவிட்டால், அப்பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பொதுப்பிரிவினரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்புவது குறித்த வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை முதன்முதலில் கண்டித்த நான், பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட வரைவு விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இதே குரல் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு அதன் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியது. மத்திய அரசும் விளக்கமளித்தது. அதன் காரணமாக சமூகநீதி தொடர்பான சர்ச்சைக்கு முடிவு கட்டப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி.
அதே நேரத்தில் தேவையே இல்லாமல் இத்தகைய சர்ச்சை எழுப்பப்பட்டது ஏன்? அதிகார வரம்பை மீறி அத்தகைய சர்ச்சையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழு மீது என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கப் போகிறது? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும். இந்த சர்ச்சையில் விளக்கமளித்துள்ள மத்திய அரசின் கல்வி அமைச்சகம், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் நிலையிலான அனைத்துப் பணியிடங்களுக்கும் 2019 ஆம் ஆண்டின் மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு) சட்டத்தின்படி தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது என்று கூறியிருக்கிறது. அப்படியானால், இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பான வரைவு விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது ஏன்?
பல்கலைக்கழக மானியக் குழுவின் பணி என்பது உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டு, பாராளுமன்ற சட்டத்தின் மூலம் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது தெரிந்திருந்தும் பல்கலைக்கழக மானியக்குழு வரைவு விதிகளை வெளியிட்டது ஏன்? அதன் மீது கடந்த ஒரு மாதமாக கருத்துகள் கேட்கப்பட்டதை மத்திய அரசு வேடிக்கைப் பார்த்தது ஏன்? ஒருவேளை எந்த எதிர்ப்பும் எழுந்திருக்காவிட்டால், வரைவு விதிகள் இறுதி விதிகளாக மாற்றப்பட்டு, உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு சட்டவிரோதமாக ரத்து செய்யப்பட்டிருக்குமா, இல்லையா?
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் நிர்வாகிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை எழுப்புவது தேன்கூட்டில் கல் வீசுவதற்கு ஒப்பானது. அத்தகைய செயல்களில் எந்த அமைப்பும் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
- உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
- சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மகராஜாகடை கிராமத்தை சாம்பசிவம் (வயது 55). விவசாயியான இவர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கொள்ளு பயிரை அறுவடை செய்வதற்கு இன்று அதிகாலை 4மணி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை திடீரென்று வந்து சாம்பசிவத்தை தாக்கி கொன்றுள்ளது. பின்னர் காலையில் தோட்டத்திற்கு சென்ற குடும்பத்தினர் அங்கு சாமபசிவத்தின் உடல் சிதைந்து உயிரிழந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் மகாராஜா கடை போலீசாருக்கும் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது யானை தாக்கி உயிரிழந்த சாம்பசிவத்தின் உடலை உறவினர்கள் மீட்டு சாலையில் வைத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக ஒற்றை யானையை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிருஷ்ணகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு மற்றும் கிருஷ்ணகிரி உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன்.
- தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஸ்பெயின் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!
ஸ்பெயின் நாட்டிற்கான இந்திய தூதர் தினேஷ் கே. பட்நாயக், தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.
இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களைச் சந்திக்கிறேன்.
தமிழ்நாட்டில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்கவுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஸ்பெய்ன் வந்தடைந்தேன்! ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக ஐரோப்பியப் பயணம்!@IndiainSpain தூதர் திரு @DineshKPatnaik அவர்கள் தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.
— M.K.Stalin (@mkstalin) January 29, 2024
இன்று மாலை ஸ்பெய்ன் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில்… pic.twitter.com/GmmKbwfVpi
- சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
புதுக்கோட்டை:
காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சித்தன்ன வாசல் சுற்றுலாத்தலத்தை பார்வையிட இருந்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் 120 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
சித்தன்னவாசல் சுற்றுலா தலம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் கருப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் சித்தன்னவாசல் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. சித்தன்னவாசலுக்கு பிற்பகல் 3 மணியளவில் கவர்னர் செல்ல இருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களால் கவர்னர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- கால்நடை உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதும் என தெரிவிக்கப்பட்டது.
- அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை.
திண்டுக்கல்:
நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. படித்தால் வேலை கிடைக்கும் என நம்பி பட்டப்படிப்புகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பின்னர் அதனை புதுப்பித்து வேலை கிடைக்காத நிலையில் கிடைத்த வேலையை செய்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்த படிப்பு படித்திருந்தாலும் வேலை கிடைக்காத நிலையில் ஓட்டல், டீக்கடைகளுக்கு வேலைக்கு செல்லும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் 66 காலியிடங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்த பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தோல்வியே தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கடந்து இளநிலை, முதுநிலை, எஞ்ஜினீயரிங், டிப்ளமோ, பி.ஹெச்.டி படித்த மாணவர்கள் விண்ணப்பம் அளித்திருந்தனர்.

விண்ணப்பம் செய்திருந்த 6167 பேர்களில் தினசரி 1200 பேர் வீதம் நேர்காணல் தேர்வு வருகிற 3ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேர்முகத் தேர்வுக்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அந்த இடமே கடும் போக்குவரத்து நெரிசலானது. போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் ராம்நாத் தலைமையில் நேர்காணல் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு வந்த மாணவர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
கால்நடை உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதும் என தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பட்டதாரி இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பம் செய்திருந்தனர். செய்முறை தேர்வாக சாணி அள்ளுதல், மாடுகளுக்கு ஊசி போடுதல், நோய்தொற்று ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளித்தல், மாடுகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கயிறு மூலம் இழுத்து கட்டுதல் ஆகியவையே போதுமானது. மேலும் மாடுகளின் பால் கறக்கும் மடிகளில் புண்கள் இருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த பணிகளை கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்களே எளிதாக செய்ய முடியும்.
ஆனால் வேலை இல்லாத காரணத்தால் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இருந்த போதும் அனைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு முடிந்த பிறகு தகுதியின் அடிப்படையில் 66 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்றார்.
இதுகுறித்து நேர்காணலுக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள் தெரிவிக்கையில்,
படித்த படிப்புக்கு வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கிறோம். வேலை இல்லாததால் திருமணம் கூட நடைபெறவில்லை. அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை. பெற்றோருக்கு பாரமாக இருப்பதைவிட ஏதேனும் ஒரு வேலையை பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதுவும் இந்த பணி அரசு வேலை என்பதால் ஏராளமான இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பையும் நினைக்காமல் வந்துள்ளனர்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,900 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு கட்டுபடியான சம்பளம் என்பதால் பலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். அனுபவம் இல்லையென்றாலும் போகப்போக சரியாகிவிடும் என நினைக்கிறோம் என்றனர். ஆண்கள் மட்டுமின்றி பட்டதாரி பெண்களும் இந்த நேர்காணலுக்கு வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:
கடந்த 2020-ம் ஆண்டு கொரோான பரவல் அதிகரித்த போது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பின்னர் நிலைமை சீரானதும் சென்னைக்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், மீண்டும் படிப்படியாக விமான சேவைகளை தொடங்கின. ஆனால் ஹாங்காங், மொரிஷியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஹாங்காங்- சென்னை- ஹாங்காங், இடையே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விமான சேவையை, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து, இயக்க உள்ளது. முதலில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும், இந்த விமான சேவைகள், பயணிகள் வரவேற்பை பொறுத்து, வாரத்தில் 7 நாட்களும், தினசரி இயக்கப்பட இருக்கிறது.
இதேபோல் சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு, ஏர் மொரிஷியஸ் விமான சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளன. வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்கள் இயக்கப்பட்ட இந்த விமான சேவைகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விமான சேவையை தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஹாங்காங், மொரிஷியஸ் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட இருப்பது பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக ஹாங்காங் விமான சேவை, தொழில்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவைகளாக விளங்கி இருந்தது. அதோடு ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு, இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் தொழில் துறையினர் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைப்போல் ஏர் மொரிஷியஸ் விமானம், மாணவ மாணவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவையாக செயல்பட்டது. மொரிசியஸ் நாட்டில் பல்வேறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், ஏராளமான மாணவ மாணவிகள், மொரிஷியசில் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக, விமான சேவைகள் இல்லாததால், இந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் சென்று மொரிசியஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அதிகம் பண செலவு, பயண நேரம் ஏற்பட்டு மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணமும் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 26-ந்தேதி கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று 29-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணமும் நடைபெற்றது.
பின்னர் காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு மகா தரிசனம், சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஊத்துக்குளி நகரம் களை கட்டியுள்ளது. நாளை 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.
- கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சரவர வினியோகிக்கபப்டவில்லை என தெரிகிறது.
- ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் திடீரென்று ஆலங்குடி சாலையில் திரண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் காந்தி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த பகுதிக்கு குடிநீர் சரவர வினியோகிக்கபப்டவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இன்று காலையும் குடிநீர் சரிவர வரவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் இன்று காலை திடீரென்று ஆலங்குடி சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்டநேர பேச்சு வார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
- செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வந்தன.
- டோக்கன் முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
செஞ்சி:
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 30 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். இதனால் அடுத்த 2 நாட்களுக்கு நெல்மூட்டைகளை விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாமென கமிட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது.
செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு கடந்த வாரத்தில் அதிக அளவு நெல் மூட்டைகள் வந்தன. தினமும் 15 ஆயிரம் மூட்டை அளவுக்கு நெல் மூட்டைகள் வந்தன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்பதால் இன்றைய விற்பனைக்காக நேற்று மதியத்தில் இருந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வரத்தொடங்கினர். நேற்று இரவு வரை சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இரவு 8.00 மணிக்கு மேல் வந்த நெல் மூட்டைகளை இறக்கி வைக்க இடம் இல்லாததால், விற்பனை கூடத்துக்கு வெளியே டிராக்டர் மற்றும் வாகனங்களில் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்து கிடக்கின்றனர். ஏற்கனவே ஆள்பற்றாக்குறையால் திணறும் கமிட்டி நிர்வாகம் என்ன செய்யும் என்று தெரியவில்லை. தற்காலிகமாக கூடுதலான ஆட்களை நியமித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். டோக்கன் முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள முப்பதாயிரம் மூட்டைகள் விற்பனையாவதற்கு 2 நாட்களுக்கு மேலாகும். இதனால் விவசாயிகள் 2 நாட்களுக்கு நெல்மூட்டைகளை கொண்டு வரவேண்டாம் எனவும், நாளை மறுநாள் புதன்கிழமை அன்று நெல்மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தால் போதும் எனவும் கமிட்டி கண்காணிப்பாளர் வினோத் குமார் விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.






