என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்துவதென வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.
    • 25 நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    கோவை:

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்துவதென வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.

    தொடர்ந்து வனஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 25 குழுக்களை சேர்ந்த 140 பேர் கணக்கெடுப்பு பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு பிரத்யேக அம்சங்கள், எப்படி கணக்கெடுப்பு நடத்துவது ஆகியவை தொடர்பான பயிற்சிகள், கோவை மாவட்ட வனத்துறை சார்பில் வழங்கப்பட்டன. அடுத்தபடியாக கடந்த 27, 28-ந்தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.


    இதன் ஒரு பகுதியாக வாளையார் அணை, உக்கடம் குளம், குறிச்சிகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம், சிங்காநல்லூர் குளம், கண்ணம்பாளையம் குளம், பள்ளபாளையம் குளம், இருகூர் குளம், பேரூர் குளம், கிருஷ்ணாம்பதி, கோளராம்பதி, நரசாம்பதி, செல்வாம்பதி, வேடப்பட்டி, சூலூர் குளம், ஆச்சான்குளம், சாளப்பட்டி, செம்மேடு குளம், பெத்திகுட்டை உள்ளிட்ட மொத்தம் 25 நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அங்கு ஒருசில அரியவகை பறவை இனங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அதிலும் குறிப்பாக 2 நாட்கள் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 201 பறவை இனங்கள் மற்றும் 16 ஆயிரத்து 69 பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. மேலும் 60 இனங்களை சேர்ந்த 7234 நீர்ப்பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன.


    இதுதவிர உக்கடம் குளத்தில் 2288, வாளையார் 1797, கிருஷ்ணாம்பதி 1387 ஆகிய நீர்நிலைகளில் அதிக பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்து உள்ளது. மேலும் இருகூர், வேடப்பட்டி, நரசம்பதி உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் பறவைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இருகூரில் 31, வேடப்பட்டியில் 32 என குறைந்த எண்ணிக்கையில் பறவை இனங்கள் பதிவாகி உள்ளன. பெத்திக்குட்டை, கிருஷ்ணாம்பதி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 101 பறவை இனங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பறவை இனங்களின் சராசரி 54 முதல் 75 வரை அதிகரித்து உள்ளது. அதன்படி கடந்தாண்டு 20 நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 9494 ஆக இருந்தது. ஆனால் தற்போது 25 நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பறவைகளின் எண்ணிக்கை 16069 ஆக உயர்ந்து உள்ளது.

    மேலும் நத்தைகுத்தி நாரை, கருந்தலை மீன்கொத்தி, நீர்க்கோழி, இந்திய காட்டு காகம், தவிட்டு குருவி, சின்னத்தோல் குருவி, வண்ணநாரை, செந்நாரை, நீலச்சிறகி, சிறு முக்குளிப்பான், தாழைக் கோழி, வெண்கழுத்து நாரை, வயல்கதிர் குருவி போன்ற பறவைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் நிலப்பகுதிகளில் வசிக்கும் பறவைகளுக்கான கணக்கெடுப்பு பணி வருகிற மார்ச் மாதம் 1,2-ந்தேதிகளில் நடைபெற உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

    • தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,845-க்கு விற்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனையானது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

    நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,760-க்கு விற்கப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்கப்படுகிறது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,845-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,860-க்கு விற்கப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.78-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.

    • பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது.
    • மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

    சங்கராபுரம்:

    என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திற்கு பாத யாத்திரையாக வந்தார்.

    சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    சங்கராபுரம் தொகுதி வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது. கல்வராயன் மலை, வெள்ளிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த 15 பேர் இந்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளனர்.

    சங்கராபுரம் நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி பாதுகாப்பாக சென்றுவர முடியும். கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கழிவறைகள், ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 2013-ம் ஆண்டுக்கு முன் 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி புஸ்வானமாக ஆகியுள்ளது. மீண்டும் ஊழலற்ற ஆட்சி அமைய நீங்கள் 3-வது முறையாக மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

    • திருவான்மியூர் பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர், சிறுசேரி பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • திருவான்மியூர் பகுதியில் இருப்பவர்களுக்கு கோயம்பேடு வந்தாலும் ஒரே தூரம்தான். கிளாம்பாக்கம் வந்தாலும் ஒரே தூரம்தான்.

    சென்னை:

    வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து இன்று பஸ்கள் இயக்கப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. அதனால் கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் 80 சதவீத பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    அந்த வகையில், இப்போது மாதவரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 20 சதவீத பஸ்களை இன்று துவக்கி வைத்துள்ளோம்.

    வடசென்னை பகுதியை சேர்ந்த மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு சிரமப்படுகிறார்கள் என்பதை அறிந்து மாதவரத்தில் இருந்து இந்த பஸ்களை இயக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    மாதவரத்தில் இருந்து திருச்சிக்கு 18 நடைகள், சேலத்துக்கு 17 நடைகள், விருதாச்சலத்துக்கு 6 நடைகள், கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரம் 16, கும்பகோணம் 14, சிதம்பரம் 5, நெய்வேலி 11, புதுச்சேரி வழியாக கடலூருக்கு 5 நடைகளும், திண்டிவனத்துக்கு 10 நடைகள், திருவண்ணாமலை, செஞ்சி வழியாக 22 நடைகள், போளூர், வந்தவாசிக்கு 20 நடைகளும் என 160 நடைகள் இயக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே இங்கிருந்து திருப்பதிக்கு 90 நடைகள் இயக்கப்படுகிறது. எனவே இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கிளாம்பாக்கத்திற்கு சென்று அங்கிருந்து பஸ் மாற வேண்டும் என்ற சூழல் இல்லாமல், இங்கிருந்தே மக்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல வாய்ப்பாக அமையும்.

    குறிப்பாக திருவொற்றியூர், ராயபுரம், ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஒருநிலை இருந்ததை மாற்றி மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் புறப்படும். மாதவரம் பைபாஸ் வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படும்.

    2 ஆயிரம் நடைகள் கிளாம்பாக்கத்தை தொட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் கூடுதலாக 1400 நடைகள் இயக்கப்படுகிறது.

    கிளாம்பாக்கத்தில் இருந்து இப்போதைக்கு கோயம்பேட்டுக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும், தாம்பரத்திற்கு 2 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு 3 நிமிடத்துக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி, திருவான்மியூர் பகுதியில் இருந்து சோழிங்கநல்லூர், சிறுசேரி பகுதிகளில் இருந்தும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேட்டுக்கு எப்படி இணைப்பு இருந்ததோ அதேபோல கிளாம்பாக்கம் சென்று பஸ் பிடிப்பதற்கு எல்லா பகுதியில் இருந்தும் பஸ் இயக்கப்படுகிறது.

    கேள்வி:- பொதுமக்கள் வீட்டில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்வது பெரிய சவாலாக உள்ளது என்கிறார்கள். பெரும்பாலான மக்களுக்கு கிளாம்பாக்கம் எங்கிருக்கு என்பதே தெரியாது என்கிறார்களே?

    பதில்:- ஏற்கனவே பாரிமுனையில் இருந்து கோயம்பேடுக்கு பஸ் நிலையத்தை மாற்றிய போதும் இதுபோன்ற சிரமம் இருந்தது. மக்களுக்கு புரிதல் வரும் வரை அந்த சிரமம் இருந்தது. அதேபோல்தான் இப்போது கிளாம்பாக்கம் பஸ் முனையத்துக்கு செல்லும்போது சிரமம் இருக்கலாம்.

    இந்த பேருந்து முனையத்தை அ.தி.மு.க. ஆட்சியில்தான் திட்டமிட்டார்கள். ஆனாலும் நாங்கள் அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை கைவிடவில்லை.

    ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைந்தால் சென்னை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்கிற காரணத்தால் அதில் செயல்படுத்தபடாமல் இருந்த 70 சதவீத பணிகளை செயல்படுத்தி முழு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.

    ஒரு விமான நிலையத்துக்கு இணையான தரத்தில் புதிய பேருந்து முனையம் அமைந்துள்ளது. ஏற்கனவே தாம்பரம் போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் கோயம்பேடுக்கு வந்து பஸ் ஏற எவ்வளவு தூரம் இருந்ததோ அதே தூரம் தான் கிளாம்பாக்கம் செல்வதற்கும் ஆகிறது.

    திருவான்மியூர் பகுதியில் இருப்பவர்களுக்கு கோயம்பேடு வந்தாலும் ஒரே தூரம்தான். கிளாம்பாக்கம் வந்தாலும் ஒரே தூரம்தான்.

    வடசென்னை பகுதியில் இருப்பவர்களுக்கு இப்போது அந்த பிரச்சனை வராமல் இருப்பதற்காகத் தான் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

    எனவே சிரமம் இல்லாமல் அவர்கள் செல்வதற்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.
    • இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆானலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபாஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள். சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை இன்னும் 350 ருபாயாக நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
    • ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டன.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

    அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் எவ்வளவு?, அறிவிப்புகள் எப்போது வரும்?, தேர்வு எப்போது நடக்கும்?, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்ற தகவல்கள் அடங்கிய ஆண்டு திட்டங்களை அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும்.

    இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

    இதற்காக விண்ணப்பம் செய்வோர் www.tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிவுறுத்தல்களை நன்றாகப் படித்து கொள்ள வேண்டும். அவர்கள் தேர்வுக்கான அனைத்து தகுதிவாய்ந்த நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.

    விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது.

    தேர்வுக்கான நாள் 09.06.2024 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

    விண்ணப்பம் செய்யும் நபர் முதலில், அதற்குரிய இணையதளத்திற்கு சென்று தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    04.03.2024 முதல் 06.03.2024 வரையிலான 3 நாட்களில், தேர்வு எழுதுவோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். அதன்பின் எந்த அனுமதியும் கிடையாது.

    அவர்கள், தமிழக வனத்துறைக்கு உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் (பழங்குடியின இளைஞர்) போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

    மொபைல் போன்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தங்களுடன் கொண்டு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மதிப்பெண் அடிப்படையிலேயே பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

    பல்வேறு துறைகளில் மொத்தம் 6,244 காலி பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

    3 மணிநேரம் நடைபெறும் தேர்வானது 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 10-ம் வகுப்பு அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும்.

    பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும்.

    பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

    மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். 200 கேள்விகள் இடம் பெறும்.

    அனைத்து சமூகத்தினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 என உள்ளது. அதற்குரிய இணையதளத்தில் சென்று பிற விவரங்களைப் படித்துத் தெரிந்து கொள்ள முடியும்.

    • டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு.
    • 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    இந்நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறித்துள்ளது.

    • தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
    • ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச் செயலாகும்.

    கோயம்பேடு புறநகர் பேருந்து முனையத்தை காலி செய்துவிட்டு, அங்கு லுலு மால் அமைப்பதாக வரும் தகவல்கள் வதந்தியே என்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும்," கோயம்பேட்டில் லுலு மால் என்பது முற்றுலும் தவறான தகவல், சித்தரிக்கப்பட்டது" என்றார்.

    இதுதொடர்பாக, அரசால் உருவாக்கப்பட்டுள்ள உண்மை சரிபார்ப்பு குழு குறிப்பிடுகையில், "அடிப்படை ஆதாரமற்ற பொய் தகவலை உண்மை என நம்பி, அரசியல் கட்சியினர் சிலர், தனிநபர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

    ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச் செயலாகும்" என தெரிவித்துள்ளது.

    • பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
    • எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

    கேரளம், தெலங்கானா, தமிழ்நாடு ஆளுநர்களுக்கு இடையே யாருடைய பெயர் ஊடகங்களில் அதிகம் வருகிறது என மறைமுகப் போட்டி நடக்கிறது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் அவர், மூவரும் ஆளுநர் என்பதையே மறந்து, பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை பற்றி ஆளுநர் விமர்சித்துள்ளார். அரசு திட்டத்தில் விளக்கம் தேவைப்பட்டால் அது குறித்து கேட்டறியலாம்.

    அதைவிட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?" என்றார். 

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது. தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார்.

    அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது.

    மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பா.ஜ.கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். 

    நேற்றைய தினம் நாகப்பட்டினம் சென்ற ஆளுநர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வீடுகள் சரியில்லை என்றும் இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை என்றும், ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

    அரசு திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம். அதை விட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா?

    எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் என்று கூறுகின்றார்? வாய்க்கு வந்ததைப் பேசிடவும் எழுதிடவும் அவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே?

    கீழ்வெண்மணி தியாகிகள் மணிமண்டபத்தையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார் ஆளுநர். குடிசைகளுக்கு மத்தியில் கான்கிரீட் கட்டுமானம் கட்டி இருக்கிறார்களாம். இது தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமாம்.

    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிலப்பிரபுத்துவ - ஜாதியவாத சக்திகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் எழுப்பட்ட நினைவுச் சின்னம் அது.

    அத்தகைய கொடூர சம்பவத்தில் கொல்லப்பட்ட தியாகிகளைப் போற்றும் வகையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தச் சின்னத்தை அமைத்துள்ளது. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? சுற்றிலும் இருக்கிற குடிசைகளை அகற்றச் சொல்கிறாரா?

    அயோத்தியில் இப்போது ஆயிரம் கோடியில் கோயில் கட்டி இருக்கிறார்கள். அயோத்தி நகர் இப்போது எப்படி இருக்கிறது என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு முறை அங்கு போய் பார்த்துவிட்டு திரும்பட்டுமே. உலகத் தலைவர்கள் வரும்போது குஜராத் மாநிலத்து ஏழைகளின் வாழ்விடங்களை பச்சை 'ஸ்கிரீன்' போட்டு மறைத்ததை இந்த நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை.

    எந்தப் பணிக்காக வந்தாரோ, அதைவிட்டுவிட்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி. 

    'தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது, தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார் ஆளுநர். வரலாற்றில் காலம் காலமாக இருக்கும் பெயரை மாற்றும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று சொன்னதும், அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் ஆளுநர்.

    சில நாட்களுக்கு முன்னால், 'மகாத்மா காந்தியால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை' என்றார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், ' நான் அப்படிச் சொல்லவில்லை' என்று சொல்லி விட்டார்.

    தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்த ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டின் நன்மைக்காக இதுவரை ஏதாவது செய்துள்ளாரா என்றால் இல்லை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றிய பா.ஜ.க அரசிடம் இருந்து ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாரா என்றால் இல்லை.

    குடும்ப வேலையாக அடிக்கடி டெல்லி செல்லும் அவர், தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைக்காக எப்போதாவது டெல்லி சென்றுள்ளாரா என்றால் இல்லை. அவர்தான், சொந்தமாக எந்த நன்மையும் செய்யவில்லை.

    நாட்டு மக்களுக்கு நன்மைகள் செய்யும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் அவர்களுக்கும் உதவியாக இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இடைஞ்சலாகவும், மாநிலத்துக்கு அதிக கெடுதல் செய்பவராகவும், கெடுதல் நினைப்பவராகவும் இருக்கிறார் ஆளுநர். 

    ஆன்லைன் ரம்மி தடை சட்டமசோதாவுக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தது முதல், ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளில் சிக்கி கைதான சேலம் பல்கலைக் கழக துணைவேந்தரைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் வரை ஆளுநரின் அனைத்து நடவடிக்கைகளும் சர்ச்சைக்குரியதாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியதாகவும் அமைந்துள்ளன.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப் பட்ட சட்டமுன்வடிவுகளையும், உத்தரவுகளையும், கோப்புகளையும் பல மாத காலமாக ஊறுகாய்ப் பானையில் ஊற வைப்பதைப் போல கிண்டி மாளிகையில் ஊற வைத்துக் கொண்டு இருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம்.

    "ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவர் பெயரளவில்தான் மாநிலத்தின் தலைவராக இருக்கிறார். ஆளுநர் என்பவருக்கு அரசியல் சட்டப்படி சில அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன.

    அந்த அதிகாரங்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைகள் சட்டமியற்றும் வழக்கமான பணிகளை முறியடித்துவிட முடியாது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியாகத் தெரிவித்தார்கள். அதன்பிறகும் ஏதோ அதிகாரம் பொருந்தியவராக, தன்னை மன்னரைப் போல நினைத்துக் கொண்டு ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார்.

    ஆளுநராக இருந்து அரசியல் செய்வதை விடுத்து, நேரடியாக அவர் அரசியல் களத்துக்கு வரலாம். அவரது அந்த ஆசைக்கு அகில இந்திய பா.ஜ.க தலைமை அனுமதி அளித்தால், 'அவருக்கும் நல்லது தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது' என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து சேவை தொடங்குகிறது.
    • விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்கிற்கு 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் நேரடி விமானத்தை இயக்கி வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜநிலை திரும்பியபின் சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை -ஹாங்காங் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் , 4 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 2- ஆம் தேதியில் இருந்து 'கேத்தே' பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மீண்டும் சென்னை- ஹாங்காங் இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமானம் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கபட்ட சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை, 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்படுவது தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இது இணைப்பு விமானமாக இருக்கும்.

    அதேபோல, சென்னை-மொரீஷியஸ் இடையே 'ஏர் மொரீஷியஸ்' ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

    31.01.2024 முதல் 02.02.2024 வரை: தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    03.02.2024 மற்றும் 04.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.
    • பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

    சென்னை:

    சென்னையில் மாநகர பஸ்களில் டிக்கெட்டுகளுக்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக பல்லாவரம் பஸ் டெப்போவில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக பல்லாவரத்தில் உள்ள மாநகரபோக்குவரத்து கழக பஸ் கண்டக்டர்களுக்கு, யுபிஐ மற்றும் கார்டு மூலம் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் புதிய கையடக்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டம் படிப்படியாக சென்னையில் உள்ள மற்ற டெப்போக்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த தொடுதிரை சாதனங்கள் மூலம், பயணிகள் ஏறும் பஸ் நிறுத்தத்தின் பெயரையும் அவர்கள் சேருமிடத்தையும் கண்டக்டர் தேர்வு செய்யலாம். அவர்கள் தேர்வு செய்தவுடன், பயணிகள் பணம், கார்டுகள் மற்றும் யுபிஐ உள்ளிட்ட பல்வேறு வகைகளில் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம். யுபிஐ முறை தேர்ந்தெடுக்கப்பட்டால், கியூஆர் குறியீடு திரையில் காட்டப்படும். பயணிகள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தி ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம்.

    மேலும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அனைத்து மாநகர போக்குவரத்து கழக பஸ்களுக்கும் கியூஆர் அடிப்படையிலான டிக்கெட் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பயணிகள் தங்கள் மொபைல் செயலியை பயன்படுத்தி தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்யலாம். மேலும் பயணிகள் தங்களுக்கான கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரெயில் மற்றும் உள்ளூர் ரெயில்களிலும் பயணிக்கலாம்.

    இதற்காக அனைத்து பஸ்கள் மற்றும் ரெயில்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் கியூஆர் ஸ்கேனர்கள் நிறுவப்பட உள்ளது. மேலும் பயணிகள் பயணம் செய்யும் போது கியூஆர் குறியீடுகளை பஸ் கண்டக்டர்கள் மற்றும் ரெயில் டிக்கெட் பரிசோதகர்களிடம் காண்பிக்கலாம்.

    ×