என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்பட்டு வருகிறது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள் மற்றும் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்பட்டு வருகிறது. கடலோர காவல் படையினர், இந்திய கடற்படையினர் அதனை கண்டுபிடித்து பறிமுதல் செய்து வந்தபோதிலும் சட்டவிரோத கடத்தல்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் நேற்று இரவு இந்திய கடற்படை லெப்டினன்ட் கர்னல் விஜய்குமார் நர்வால் தலைமையில் கடலோர காவல் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் சுமார் 20 கிலோ எடை கொண்ட இரண்டு பிளாஸ்டிக் மூட்டைகள் மற்றும் சுமார் 10 கிலோ எடை கொண்ட ஒரு பிளாஸ்டிக் மூட்டையையும் கொண்டு சென்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போது மூட்டைகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த டிராவல் பேக்கையும் அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
அவர்கள் விட்டுச்சென்ற மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் சுமார் 45 கிலோ ஏலக்காய் இருந்தது. இதையடுத்து அவற்றை கைப்பற்றி அவர்கள் மண்டபம் கடலோர காவல் படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதேபோல், டிராவல் பேக்கை பரிசோதனை செய்த போது அதில் திருவள்ளுர் காரம்பாக்கம் பொன்னிநகர் சி.வி.கே. தெருவை சேர்ந் ஜான்சன் மகன் மார்ட்டின் (40) என்பவரது முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை மற்றும் ஆடைகள் மற்றும் இலங்கை பணம் 1,500 இருந்தது.
இதுகுறித்து மண்டபம் மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான நபர்களையும் தேடி வருகின்றனர்.
- தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
- மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன்.
சென்னை:
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அரசு சார்பில் அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பதிவில்,
மகாத்மா காந்தியின் புண்ணிய திதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- மாநகராட்சி மூலம் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- 6 கடைகள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் மாநகர ஆணையாளர் சினேகா உத்தரவின் பேரில், மாநகர நல அலுவலர் பிரபாகரன், உதவி ஆணையாளர் டிட்டோ ஆகியோர் தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஓசூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 20 நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தினர்.
மேலும் மாநகராட்சி கடைகளில் கடை நடத்தும் 42 கடைக்காரர்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக வெளிப்புறத்தில் கடைகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட எல்லை, பெயிண்ட் மூலம் வரையப்பட்டு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே கடைகள் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே கடைகள் வைக்கப்பட்டால், அவை மாநகராட்சி மூலம் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெறாமல் ஓசூர் எம்.ஜி. ரோடில் இயங்கி வந்த 6 கடைகள் மாநகராட்சி மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
- சிட்டுக்குருவிகள், குயில் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி ஆகியவை கண்டறியப்பட்டது.
- 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட வனத்துறையின் சார்பாக வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் ஆகியோர்களுடன் இனைந்து 27, 28 ந்தேதி ஆகிய நாட்கள் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 6 மணி வரை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.
அவ்வாறு நடந்து முடிந்த ஈர நில பறவைகள் கணக்கெடுப்பில் தருமபுரி வனக்கோட்டத்தில், தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், தீர்த்தமலை, அரூர், மொரப்பூர் மற்றும் கோட்டப்பட்டி ஆகிய 8 வனச்சரகங்களில் 27 ஈர நிலங்களை அடையாளம் கண்டு, தேர்வு செய்து பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 109க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கணக்கெடுப்பில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக பறவைகள் காணப்பட்டது. அதிலும், அழிந்து வருகின்ற இனமான சிட்டுக்குருவிகள், குயில் மற்றும் சாம்பல் நிற காட்டுக்கோழி ஆகியவை கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கிளி, மயில், நாரை, கொக்கு, இரட்டை வால் குருவி, நீர் காகம், கழுகு, காகம், தூக்கனாங்குருவி, மீன்கொத்தி பறவை, நீர்கோழி, மைனா மற்றும் காட்டுக் காகம் ஆகியவை தோராயமாக 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது என மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, தெரிவித்துள்ளார்.
- மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினமான இன்று அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்று உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
சென்னை:
காந்தியடிகள் நினைவு நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க திமுக முடிவு செய்திருந்தது. அதன்படி, மத வெறியர்களால் காந்தி கொல்லப்பட்ட நாளை மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
தமிழகம் முழுவதுமே திமுக சார்பில் இன்று மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினமான இன்று திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தியும், மதவெறியை விலக்கி மத நல்லிணக்கம் பேணுவோம் என்றும் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
- உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
- கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.
சேலம்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பல்லடம், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த 1-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5-ந் தேதி 92 ரூபாய், 10-ந் தேதி 82 ரூபாய், 15-ந் தேதி 98 ரூபாய், 20-ந் தேதி 82 ரூபாய், 25-ந் தேதி 88 ரூபாய் என படிப்படியாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.
கடந்த 27-ந் தேதி 98 ரூபாய், நேற்று 107 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 20-ந் தேதி 82 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 107 ரூபாயாக உயர்ந்ததால் 10 நாட்களில் கொள்முதல் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
பொங்கல், தைப்பூசம் முடிந்துள்ளதால் தமிழகத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. ஒரு கோழி 3 கிலோ, 2.7 கிலோ, 2.5 கிலோ என்ற நிலையில் இருந்தது. தற்போது 2 கிலோ, 2.2 கிலோவாக குறைந்துள்ளது. அதன் காரணமாக, 40 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழிகள், 41 நாட்கள் கழித்து பிடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் போது விற்பனை இருக்காது என்பதை கருத்தில் கொண்டு 5 வாரத்துக்கு முன்பே, 4 வாரம் கோழிக்குஞ்சு விடுவதை நிறுத்திவிட்டனர்.
அதனால் வரும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். தற்போது வாரம் 4.50 கோடி கிலோ விற்பனையாகும் நிலையில், 50 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி சரிந்துள்ளது. அதன் காரணமாக கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது.
- கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அம்பை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை, கரடி, மிளா என பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை சேதப்படுத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மேலும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடியும் வருகின்றன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பாபநாசம் அருகே மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரது மகன் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்தில் புகுந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த சுமார் ஒரு வயதுடைய கன்றுக்குட்டியை கழுத்து பகுதியில் பிடித்து கடித்துள்ளது. இதில் அந்த கன்று குட்டியின் முகம் மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

வலி தாங்க முடியாமல் கன்றுக்குட்டி சத்தம் போட்டது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சத்தம் போட்டதால் சிறுத்தையானது வனப்பகுதியை நோக்கி சென்றது. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நிரந்தர தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்தில் வனத்துறையினர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். குட்டி சிறுத்தை வந்திருக்கலாம் எனவும், பெரிய சிறுத்தையாக இருந்திருந்தால் கன்று குட்டியை அடித்து இழுத்து சென்று இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
- மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
- நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 177-வது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது.
இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவானது கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி காலை 6 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் இருந்து அவரது சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனையுடன் புறப்பட்டது.
மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
பின்னர் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.
பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், அருண், அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்பட 1000-க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாலை வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தியாக பிரம்ம மகோத்சப சபை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார். 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீமகாதேவன் பாடுகிறார். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.
- தோப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27-ல் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
- மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை:
மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
தோப்பூரில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 27-ல் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது.
- கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்துவதென வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.
- 25 நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
கோவை:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி கோவை மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை நடத்துவதென வனத்துறை நிர்வாகம் முடிவுசெய்தது.
தொடர்ந்து வனஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 25 குழுக்களை சேர்ந்த 140 பேர் கணக்கெடுப்பு பணிக்கு தேர்வுசெய்யப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு பிரத்யேக அம்சங்கள், எப்படி கணக்கெடுப்பு நடத்துவது ஆகியவை தொடர்பான பயிற்சிகள், கோவை மாவட்ட வனத்துறை சார்பில் வழங்கப்பட்டன. அடுத்தபடியாக கடந்த 27, 28-ந்தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக வாளையார் அணை, உக்கடம் குளம், குறிச்சிகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம், சிங்காநல்லூர் குளம், கண்ணம்பாளையம் குளம், பள்ளபாளையம் குளம், இருகூர் குளம், பேரூர் குளம், கிருஷ்ணாம்பதி, கோளராம்பதி, நரசாம்பதி, செல்வாம்பதி, வேடப்பட்டி, சூலூர் குளம், ஆச்சான்குளம், சாளப்பட்டி, செம்மேடு குளம், பெத்திகுட்டை உள்ளிட்ட மொத்தம் 25 நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகள் தொடர்பாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அங்கு ஒருசில அரியவகை பறவை இனங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அதிலும் குறிப்பாக 2 நாட்கள் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 201 பறவை இனங்கள் மற்றும் 16 ஆயிரத்து 69 பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன. மேலும் 60 இனங்களை சேர்ந்த 7234 நீர்ப்பறவைகள் கண்டறியப்பட்டு உள்ளன.

இதுதவிர உக்கடம் குளத்தில் 2288, வாளையார் 1797, கிருஷ்ணாம்பதி 1387 ஆகிய நீர்நிலைகளில் அதிக பறவைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்து உள்ளது. மேலும் இருகூர், வேடப்பட்டி, நரசம்பதி உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் பறவைகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இருகூரில் 31, வேடப்பட்டியில் 32 என குறைந்த எண்ணிக்கையில் பறவை இனங்கள் பதிவாகி உள்ளன. பெத்திக்குட்டை, கிருஷ்ணாம்பதி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 101 பறவை இனங்கள் இருப்பது தெரியவந்து உள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பறவை இனங்களின் சராசரி 54 முதல் 75 வரை அதிகரித்து உள்ளது. அதன்படி கடந்தாண்டு 20 நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 9494 ஆக இருந்தது. ஆனால் தற்போது 25 நீர்நிலைகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பறவைகளின் எண்ணிக்கை 16069 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் நத்தைகுத்தி நாரை, கருந்தலை மீன்கொத்தி, நீர்க்கோழி, இந்திய காட்டு காகம், தவிட்டு குருவி, சின்னத்தோல் குருவி, வண்ணநாரை, செந்நாரை, நீலச்சிறகி, சிறு முக்குளிப்பான், தாழைக் கோழி, வெண்கழுத்து நாரை, வயல்கதிர் குருவி போன்ற பறவைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கோவை மாவட்டத்தில் நிலப்பகுதிகளில் வசிக்கும் பறவைகளுக்கான கணக்கெடுப்பு பணி வருகிற மார்ச் மாதம் 1,2-ந்தேதிகளில் நடைபெற உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
- தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
- நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,845-க்கு விற்கப்பட்டது.
சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.46,760-க்கு விற்கப்பட்டது. இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்கப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,845-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,860-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.78-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,000-க்கு விற்பனையாகிறது.
- பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது.
- மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரம்:
என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திற்கு பாத யாத்திரையாக வந்தார்.
சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
சங்கராபுரம் தொகுதி வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது. கல்வராயன் மலை, வெள்ளிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த 15 பேர் இந்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளனர்.
சங்கராபுரம் நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி பாதுகாப்பாக சென்றுவர முடியும். கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கழிவறைகள், ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2013-ம் ஆண்டுக்கு முன் 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி புஸ்வானமாக ஆகியுள்ளது. மீண்டும் ஊழலற்ற ஆட்சி அமைய நீங்கள் 3-வது முறையாக மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.






