search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் அருகே நள்ளிரவில் கன்றுக்குட்டியை கடித்துச்சென்ற சிறுத்தை
    X

    பாபநாசம் அருகே நள்ளிரவில் கன்றுக்குட்டியை கடித்துச்சென்ற சிறுத்தை

    • மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது.
    • கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அம்பை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையில் யானை, சிறுத்தை, கரடி, மிளா என பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.

    இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அவற்றை சேதப்படுத்தி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மேலும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடியும் வருகின்றன.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு பாபநாசம் அருகே மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த சிறுத்தை அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பவரது மகன் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்தில் புகுந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த சுமார் ஒரு வயதுடைய கன்றுக்குட்டியை கழுத்து பகுதியில் பிடித்து கடித்துள்ளது. இதில் அந்த கன்று குட்டியின் முகம் மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.


    வலி தாங்க முடியாமல் கன்றுக்குட்டி சத்தம் போட்டது. இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சத்தம் போட்டதால் சிறுத்தையானது வனப்பகுதியை நோக்கி சென்றது. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நிரந்தர தீர்வுகான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்தில் வனத்துறையினர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். குட்டி சிறுத்தை வந்திருக்கலாம் எனவும், பெரிய சிறுத்தையாக இருந்திருந்தால் கன்று குட்டியை அடித்து இழுத்து சென்று இருக்கும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×