என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அன்றைய தினம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைத்து மோடி பேசுகிறார்.
    • கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தாராபுரத்தில் அதிமுக மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர்:

    பிரதமர் மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி) தமிழகம் வருகிறார். திருப்பூரில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்'என்ற பெயரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் இருந்து யாத்திரை தொடங்கினார். இந்த யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    பல்வேறு கட்டங்களாக சட்டமன்ற தொகுதி வாரியாக செல்லும் அண்ணாமலை 83-வது நாளான நேற்று திருவண்ணாமலையில் நிறைவு செய்தார். 84-வது நாளான இன்று கலசபாக்கத்தில் இருந்து யாத்திரையை தொடங்கினார்.

    100 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை நிறைவில் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் அதில் பிரதமர் மோடி பங்கேற்பதாகவும் இருந்தது. அதற்காக சென்னை புறநகர் பகுதியில் இடங்கள் பார்த்தனர். ஆனால் 5 லட்சம் பேர் கூடும் வகையில் பெரிய இடங்கள் எதுவும் கிடைக்கவில்லை.


    இதனால் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தை திருப்பூரில் நடத்த முடிவு செய்துள்ளார்கள். இதற்காக திருப்பூர் அருகே பெருமாநல்லூர் மற்றும் பல்லடம் அடுத்து உள்ள பொங்கலூர் ஆகிய இடங்களில் இடம் பார்த்துள்ளார்கள். இந்த இரு இடங்களிலும் 200 ஏக்கருக்கு மேல் இட வசதி இருப்பதாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடவும், வாகனங்கள் நிறுத்தவும் வசதி இருப்பதாக கூறப்படுகிறது.

    டெல்லியில் இருந்து வரும் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு தேர்வு செய்வதை பொறுத்து இந்த இரண்டு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

    பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நேற்று மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மலர் கொடி, சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பின்னர் நிர்வாகிகள் கூறும்போது, "பிரதமர் மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி) திருப்பூர் வருவது உறுதியாகி இருக்கிறது. ஆனால் தேதி முடிவாகவில்லை" என்றனர்.

    அடுத்த மாத இறுதியில் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20-ந்தேதிக்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் வருவார் என்று கூறப்படுகிறது.


    அன்றைய தினம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைத்து மோடி பேசுகிறார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தாராபுரத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    அண்ணாமலையின் பாத யாத்திரை திருப்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி நடைபெற இருந்தது. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக நடைபயணம் ஒத்தி வைக்கப்பட்டது. அண்ணாமலையை வர வேற்றும் பாத யாத்திரையை வெற்றி பெற செய்யவும் தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது திருப்பூர் பா.ஜ.க.வினரை கவலையில் ஆழ்த்தியது.

    இதையடுத்து மற்றொரு நாள் கண்டிப்பாக நடைபயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அண்ணாமலை உறுதியளித்தார். ஆனால் சென்னை, தென் மாவட்ட மழை காரணமாக அண்ணாமலை நடை பயணம் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திருப்பூரில் நடைபயணம் எப்போது நடைபெறும் என நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.

    இதற்கிடையே கடந்த 19-ந்தேதி கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்க வருவதாக இருந்த பிரதமர் மோடி , அன்றைய தினம் திருப்பூரில் புதிதாக கட்டப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த திருப்பூர் பா.ஜ.க.வினர் அதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொடங்க இருந்தனர்.

    இந்தநிலையில் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால், திறப்பு விழா அன்று பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி திருப்பூரில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். ஆனால் அந்த நடைபயணமும் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாத யாத்திரை நிறைவு மற்றும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ப.ஜனதாவினர் உற்சாகம் அடைந்து உள்ளார்கள்.

    • அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • 2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.35 முதல் 40 வரை ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ரூ.25, ரூ.20 என படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பல்லாரி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரிப்பால் அதிகளவில் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை ரூ.10 முதல் ரூ.15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் போதிய விற்பனை நடை பெறாததாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை ஓரங்களில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடுகள் இறக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    • வருஷாபிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
    • இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிசேகம் இன்று நடைபெற்றது.

    இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டது.

    தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான் தேவசேனா அம்பாள் தனித்தனி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வருஷா பிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது.
    • கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து இன்று பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று முதல் முழுமையாக செயல்படுகிறது. அதனால் கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் 20 சதவீத பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில் வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து துறை சார்பில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

    * மாதவரத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் ரெட்டேரி, அம்பத்தூர், மதுரவாயல் பைபாஸ் வழியாக பெருங்களத்தூர் செல்லும்.

    * மாதவரத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை 40 ரூபாயும், ரெட்டேரியில் இருந்து கிளாம்பாக்கம் வரை 35 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    * அம்பத்தூரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 30 ரூபாயும், மதுரவாயலில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 25 ரூபாயும், பெருங்களத்தூரில் இருந்து 10 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    * கிளாம்பாக்கத்தில் இருந்து வழக்கமாக பல்வேறு ஊர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்துடன் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கு ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
    • ஜனவரி 30, 31ந் தேதிகளில் ஆஜராகி சாட்சியம் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    சாட்சியங்களை பதிவு செய்வதற்காக இந்த வழக்கு ஐகோர்ட்டில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    ஆனால், மாஸ்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வக்கீல் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை ஏற்ற தனி நீதிபதி, நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்தோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வக்கீல் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் கோர்ட்டில் ஆஜராக அறிவுறுத்தியதை தொடர்ந்து, ஜனவரி 30, 31ந் தேதிகளில் ஆஜராகி சாட்சியம் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் இன்று வழக்கு மாஸ்டர் கோர்ட்டில் பட்டியலிடப்படவில்லை. அத்துடன் பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துக்களை நீக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவர் இன்று மாஸ்டர் கோர்ட்டில் சாட்சியம் அளிக்க ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.

    • 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.
    • திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கட்ட பொம்மன் சிலை சந்திப்பில் இன்று காலை ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்பு களில் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மறியல் செய்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். பிப்ரவரி 10-ந் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஆயத்த மாநாடு நடத்தப்படும். தொடர்ந்து பிப்ரவரி 15-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். 26-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். 

    • இந்திய ஒன்றியத்தை பாசிசத்திடம் இருந்து மீட்டெடுப்போம்.
    • சென்னையில் ராபின்சன் பூங்கா அருகில் இருந்து இந்த பேரணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று கோவை பீளமேடு சுகுணா கலையரங்கில் மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.

    இதில் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மாநில உரிமைகளை மீட்போம் வளமான தமிழ் நாட்டை உருவாக்குவோம் வலிமைமிக்க இந்தியாவை காப்போம் என்ற பணியினை கழக மாணவர் அணியினர் வருங்கால தலைமுறையினராய் விளங்குகின்ற மாணவர்களிடம் கொண்டு சேர்ப்போம். வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலை வென்று காட்டுவோம். இந்திய ஒன்றியத்தை பாசிசத்திடம் இருந்து மீட்டெடுப்போம்.

    தேசிய கல்விக்-கொள்கை 2020 மற்றும் அதை கொண்டு வந்த பாசிச பா.ஜ.க. அரசை நிராகரிப்போம் இந்தியாவை காப்போம் கல்வி உரிமையை காப்போம் என்ற முழக்கத்தோடு, கடந்த 12.1.2023 அன்று தலைநகர் டெல்லியில்-பாராளுமன்றம் நோக்கிய மாபெரும் மாணவர் பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.

    அப்பேரணியில் பல்வேறு மாணவர் அமைப்புகள் பங்கேற்றிருந்தாலும், நமது கழக மாணவர் அணியினரின் பங்களிப்பு பெருமளவு எழுச்சியை தந்தது.


    இந்தியாவின் வடக்கே நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து, தெற்கே சென்னையில் "மாபெரும் மாணவர் பேரணி" யுனை டெட் ஸ்டூடென்ஸ் ஆப் இந்தியா கூட்டமைப்பு நடத்த முடிவெடுத்ததன் அடிப்படையில், வருகிற 1-ந்தேதி சென்னையில் மாபெரும் மாணவர் பேரணி நடைபெற உள்ளது. இப்பேரணியில் இந்திய அளவிலான பல்வேறு மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், பேரணியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கிறார்.

    பேரணியின் நிறைவில், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சியுரை ஆற்ற உள்ளார்.

    இந்தியாவை காக்கவும், மாணவர்களின் கல்வி உரிமையை காக்கவும் நடைபெறும் இம்மாபெரும் பேரணியில், தி.மு.க.மாணவர் அணியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள், மாணவர் அணியினர், தமிழ்நாடு, புதுவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளின் தி.மு.க. மாணவர் அமைப்பைச் சார்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொள்வது.

    இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சென்னையில் ராபின்சன் பூங்கா அருகில் இருந்து இந்த பேரணியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    • மற்றொரு நாள் கண்டிப்பாக நடைபயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அண்ணாமலை உறுதியளித்தார்.
    • பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதுடன் அதில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளதால் திருப்பூர் பாஜக நிர்வாகிகள் மகிழ்ச்சியில் ஆழந்துள்ளனர்.

    திருப்பூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை திருப்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி நடைபெற இருந்தது. திருப்பூர் தெற்கு, வடக்கு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து திருப்பூர் மாநகர் மாவட்ட பா.ஜ.க.வினர் அண்ணாமலையை வரவேற்று பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரை வழிநெடுக கட்சி கொடி, தோரணங்கள் கட்டினர். பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்களும் வைத்தனர். திருப்பூர் அருகே உள்ள பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அக்டோபர் மாதம் 19-ந்தேதி நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலை 20-ந்தேதி திருப்பூரில் நடைபயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக 20-ந்தேதி நடைபெற இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது. அண்ணாமலையை வரவேற்றும் பாத யாத்திரையை வெற்றி பெற செய்யவும் தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது திருப்பூர் பா.ஜ.க.வினரை கவலையில் ஆழ்த்தியது.

    இதையடுத்து மற்றொரு நாள் கண்டிப்பாக நடைபயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அண்ணாமலை உறுதியளித்தார். ஆனால் சென்னை, தென் மாவட்ட மழை காரணமாக அண்ணாமலை நடைபயணம் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திருப்பூரில் நடைபயணம் எப்போது நடைபெறும் என நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.


    இதனிடையே கடந்த 19-ந்தேதி கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்க வருவதாக இருந்த பிரதமர் மோடி, அன்றைய தினம் திருப்பூரில் புதிதாக கட்டப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த திருப்பூர் பா.ஜ.க.வினர் அதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொடங்க இருந்தனர்.

    இந்தநிலையில் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால், திறப்பு விழா அன்று பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி திருப்பூரில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். ஆனால் அந்த நடை பயணமும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திருப்பூரில் அண்ணாமலை நடைபயணம் தொடர்ந்து 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் திருப்பூர் பா.ஜ.க.வினர் ஏமாற்றமடைந்தனர். இந்தநிலையில் அவர்கள் உற்சாகமடையும் வகையில் திருப்பூரில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதுடன் அதில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளதால் திருப்பூர் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழந்துள்ளனர். மேலும் தமிழகமே உற்றுபார்க்கும் வகையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது குறித்து திருப்பூர் மாநகர பா.ஜ.க. நிர்வாகிகள் கூறுகையில், திருப்பூரில் நடைபெற இருந்த அண்ணாமலை நடைபயணம் 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தோம். தற்போது பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டமே நடைபெற உள்ளதால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளோம். தி.மு.க., அ.தி.மு.க. மாநாடுகளை வெல்லும் வகையில் பிரம்மாண்ட மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்தி காட்டுவோம். அதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தற்போது பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்லடம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இது மேலும் மேலும் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.

    • தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து கொடுக்கிறது.

    அந்த வகையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. 6,244 காலி பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர் 2442 உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

    விண்ணப்பத்தினை அளிப்பதற்கு மார்ச் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் 441 பணியிடங்கள், தட்டச்சர்-1653, வனக் காவலர்-526, பல்வேறு துறை பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.

    கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்வர்கள் 1.7.2024 அன்று 18 வயது நிரம்பியதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனகள் விதிக்கப்பட்டுள்ளன.

    • இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.
    • இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் பழனியில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 ஆம் ஆண்டின்படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோவிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது. இந்து அல்லாத எவரும் கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது.

    தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும், மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் திருக்கோவிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உள்ள சூழலில் பழனி தேவஸ்தானத்தில் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது.

    இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. இது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது.

    எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உபகோவிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது இந்து அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும், இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் ஏற்கனவே நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி விரிவான வாதம் செய்தனர். பின்னர் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர்கள் கோவிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்றும், இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என்றும்,

    மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோவிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும் என்றும், அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாதம் "உறுதிமொழி" எழுதிக்கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, இந்து அறநிலையத்துறை ஆணையர் கோவிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

    • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.
    • அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி அலுவலகம் முன்பு மறியல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு கல்லூரி சாலையில் நூற்றுக்கும் மேலான போலீசார் குவிக்கப்பட்டனர். பள்ளிக் கல்வி துறையின் அலுவலக வளாக கதவுகள் பூட்டப்பட்டு தடுப்பு வேலிகள் போடப்பட்டது.


    ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், மாயவன், அன்பரசு ஆகியோர் தலைமையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கு திரண்டனர். போலீசார் முன் எச்சரிக்கையாக அவர்களை ஒன்று சேர விடாமல் உடனடியாக கைது செய்து பஸ்சில் ஏற்றினர்.

    மறியலில் ஈடுபட வந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக கைது செய்யப்பட்டதால் மறியல் போராட்டத்தில் அவர்களால் ஈடுபட முடியவில்லை. மறியலுக்கு முன்பே 200 பேர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.


    போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறியதாவது:-

    போராட்டம் நடத்தக்கூட அரசு அனுமதி மறுக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றித் தாருங்கள் என்று வலியுறுத்துகிறோம்.

    பாராளுமன்ற தேர்தலில் அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை நிச்சயமாக வீசும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை. அடுத்த மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
    • திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 5வது நாளாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் இன்று தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனையில் ஈடுபட்டது.

    ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

    தொகுதியின் கள நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

    திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 5வது நாளாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் மீண்டும் திமுக வேட்பாளராக கனிமொழியை அறிவிக்க வேண்டுமென திமுக நிர்வாகிகள் ஒரு மனதாக கோரிக்கை விடுத்தனர்.

    கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இந்த முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் கனிமொழியை வெற்றி பெற வைக்க முழு முயற்சியில் உழைக்க வேண்டும் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் இடம் பெற்றுள்ள ஐவர் குழுவினர் அறிவுறுத்தினர்.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு உரிய நிவாரணம் பெற்று தருவதில் கவனம் செலுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர்.

    ×