என் மலர்
உள்ளூர் செய்திகள்
- செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
- கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட்.
ஜாமின் கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் 2வது மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விசாரணையின்போது, 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்திற்கு சொல்கிறீர்கள்? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பினார்.
கடைநிலை ஊழியர் 48 மணி நேரம் சிறையில் இருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரே? என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.
- ரெயில் நிலையத்தில் ரூ.28.82 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
- நடைமேடை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.
திருவள்ளூர்:
சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை அம்ரித் திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரூ.28.82 கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. நடைமேடை கூரைகளை மேம்படுத்துதல், கூடுதலாக நடைமேடை அமைத்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம், ரூ.10.13 கோடியில் 3 லிப்ட் மற்றும் நகரும்படிக்கட்டுகளுடன் கூடிய புதிய 12 மீட்டர் நீளம் கொண்ட நடைமேம்பாலம், மேம்படுத்தப்பட்ட தகவல் தரும் திரை, புதிய சி.சி.டி. கேமராக்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒருபகுதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் பாதைகளை சீரமைக்க தோண்டப்பட்டது.
இதனால் நடைமேடை முழுவதும் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. பணிகளை விரைந்து முடிக்காததால் முதலாவது நடைமேடையில் வந்து நிற்கும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் சென்று ஏறவும், இறங்கவும மற்றும் நடந்து செல்லவும் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். சென்னை-திருப்பதி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து நிற்கும்போது பயணிகள் பெட்டிகளுடன் ஏறி, இறங்க கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மேலும் டிக்கெட் கவுண்டர் இடம் முதல் நடைமேடையில் உள்ளதால் கற்குவியலுக்கு நடுவே பயணிகள் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நடைமேடை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 2024-25-ம் ஆண்டு நீர்ப்பாசன திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தும் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- காவிரி-தருமபுரி உபரிநீர்த்திட்டம், அரியலூரில் சோழர் பாசனத்திட்டம் அடிக்கல் நாட்டப்படும்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை (மாதிரி வேளாண் பட்ஜெட்) அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த அறிக்கையில் 60 ஆயிரம் கோடி வேளாண் துறை மூலமாகவும், ரூ.20 ஆயிரம் கோடி நீர்ப்பாசனத்துறை மூலமாகவும் செலவிடப்படும். இதில் ரூ.12,500 கோடி விவசாயிகள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்படும். பயிர் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.27,500 கோடி செலவிடப்படும் வகையில் மாதிரி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2024-25-ம் ஆண்டு நீர்ப்பாசன திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தும் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
சாகுபடி பரப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 15 ஆயிரம் ஏரிகளில் சாத்தியமானவை மீட்டெடுக்கப்படும். இதற்காக ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,600-ல் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, நெல் சேமிப்பு கிடங்குகள் 400 ஆக உயர்த்தப்படும். வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும். காவிரி-தருமபுரி உபரிநீர்த்திட்டம், அரியலூரில் சோழர் பாசனத்திட்டம் அடிக்கல் நாட்டப்படும்.
கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறட்சியை போக்க நடைபெறும் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். ஆறுகளில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தும் ஜூலை மாதத்திற்குள் மூடப்படும்.
சேலத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும், வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியமும் உருவாக்கப்படும்.
பாலாறு நீர்ப்பாசனத் திட்டம், தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம், தென்பெண்ணையாறு-துரிஞ்சலாறு இணைப்பு திட்டம் போன்றவைகள் செயல்படுத்தப்படும். வேளாண் துறை 3 ஆக பிரிக்கப்பட்டு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை என 3 அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
கோயம்பேடு சந்தைபோல அனைத்து மாநகரங்களிலும் தோட்டக்கலை பொருட்களுக்கான சந்தைகள் அமைக்கப்படும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்பு சத்து குறைந்த முயல்கறியை பிரபலப்படுத்தி, ஆடு, மாடு இறைச்சிகளின் பயன்பாடு குறைக்கப்படும்.
வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல், தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை, உணவு தன்னிறைவு, ஊரக பொருளாதார மறு மலர்ச்சிக்கான மும்முனை திட்டம் போன்றவைகள் உருவாக்கி நிறைவேற்றப்படும் என்பன போன்ற 110 அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.
- பெட்ரோல் குண்டு வீட்டு வாசல் முன்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது.
- கிச்சா என்கிற பிரவீன், சூர்யா என்கிற ஜூட் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராயபுரம்:
புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 6-வது தெருவில் வசித்து வருபர் சிவா (34).நேற்று இரவு இவரது வீட்டு வாசல் முன்பு நின்றபடி 3 வாலிபர்கள் கஞ்சா புகைத்து கொண்டு இருந்தனர்.
இதனை கவனித்த சிவாக அவர்களை கண்டித்தார். மேலும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் வேறு இடத்திற்கு செல்லுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் 3 வாலிபர்களும் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்தநிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வந்த மர்ம கும்பல் திடீரென பெட்ரோல் குண்டை சிவாவின் வீட்டின் மீது வீசினர். இதில் அந்த பெட்ரோல் குண்டு வீட்டு வாசல் முன்பு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தது.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்ததும் பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவா போலீஸ் கட்டுப்பாட்டு அறிக்கைக்கு தகவல் தெரிவித்தார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் 3 வாலிபர்கள் பெட்ரோல் குண்டை வீசுவது பதிவாகி இருந்தது.
இதனை வைத்து அதே பகுதி வெங்கடேசன் தெருவை சேர்ந்த மனோஜ் குமார் என்கிற மாயாண்டி என்வரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 8 கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்டதால் சிவாவின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி இருப்பது தெரியவந்தது.
இதில் தொடர்புடைய கிச்சா என்கிற பிரவீன், சூர்யா என்கிற ஜூட் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேரை ஆயுதங்களை காட்டி மிரட்டினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே உள்ளது பூங்கொடி கிராமாம். இந்த ஊரை சேர்ந்த செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேர் காரில் பைபாஸ் சாலையில் வந்தனர். புதுக்கோட்டை அருகே அண்டகளூர் பகுதியில் வந்தபோது 2 பெரும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றனர்.
அப்போது சுமார் 8 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் கத்தி, அரிவாள் வைத்திருந்தனர். திடீரென்று அவர்கள் செந்தில், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் ஆயுதங்களை காட்டி மிரட்டினர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த செயின்களை பறித்தனர்.
பின்பு சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக அவர்களை அங்கேயே கட்டிப்போட்டு சித்ரவதை செய்ததாக தெரிகிறது. பின்பு அந்த வழிப்பறி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட செந்தில், சீனிவாசன் ஆகிய இருவரும் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் இதுபோன்று தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபற்றி தகவல் அறிந்த பூங்கொடி கிராம மக்கள் பைபாஸ் சாலையில் திரண்டனர்.
அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த அவ்ழியாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து டி.எஸ்.பி. ராகவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேலுசாமி, மருது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வழிப்பறி கும்பலை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது. இதனிடையே கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த செந்தில், சீனிவாசன் ஆகியோர் புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளையர்கள் குறித்து அவர்கள் கொடுத்த அடையாளங்களின் பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.
- தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி:
தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து திரளான மக்கள் பழனி பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். நிர்வாக வசதிக்காக பல்வேறு குழுக்களாக இவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.
நாச்சியூர் காவடிக்குழு, ஆலச்சம்பாளையம் காவடி குழு, மேட்டுத்தெரு காவடி குழு, சித்தூர் அனைத்து சமூக காவடி குழு, புளியம்பட்டி காவடி குழு உள்ளிட்ட பல்வேறு காவடி குழுவினர் பெரும் திரளாக பழனி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், 8-வது காவடி குழுவான புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவடி குழுவினர் நேற்று மாலை எடப்பாடியில் இருந்து பழனி பாதயாத்திரை தொடங்கினர். முன்னதாக அவர்கள் ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி பாதயாத்திரை தொடங்கினர். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி பாதயாத்திரை மேற்கொண்ட நிலையில் நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரில் பெரும்பாலான குடும்பத்தினர் பழனி பாதயாத்திரை சென்றதால் எடப்பாடி நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப வசதியாக எடப்பாடியிலிருந்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
- ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
தோவாளை அருகே தோவாளைபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன்கள் செந்தில் முருகன் (வயது 32), அருள் அய்யப்பன் (28). செந்தில் முருகன் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
நேற்று வழக்கம்போல் செந்தில் முருகன் சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அருள் அய்யப்பன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.
இன்று அதிகாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த செந்தில் முருகன், அருள் அய்யப்பன் இருவரும் வெளியே வந்து பார்த்தனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.
ஆனால் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஆட்டோ, மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக செந்தில் முருகன், அருள் அய்யப்பனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவருக்கும் யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
போலீசார் உடனே அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிப்புக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தோவாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சுவரொட்டிகள் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
- மதவெறி கும்பலின் வன்மம் காந்தியார் மீது இன்னும் தீரவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.
மதுரை:
தேசப்பிதா என்று நாட்டு மக்களால் போற்றப்படும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. மத நல்லிணக்க நாளாகவும் இன்றைய தினம் கடைபிடிக்கப்படுவதுடன் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மத நல்லிணக்க உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் என்ற பெயரில் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டியில் "மதவெறிக்கு மகாத்மா பலியான ஜனவரி 30" என்று ரத்தத்துளிகள் சிதறும் படத்துடன் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம், மத நல்லிணக்கம் பேணுவோம் என்றும், தமிழ்நாடு முழுவதும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம் என்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த சுவரொட்டிகள் மதுரையில் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. காந்தியின் சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பாக சமீபத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அறிக்கையும் வெளியிட்டு இருந்தார்.
அதில் மதவெறி கும்பலின் வன்மம் காந்தியார் மீது இன்னும் தீரவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் காந்தியின் நினைவு தினத்தையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சிகள் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அனைத்து அரசு பஸ்களும், ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் முழுமையாக இயக்கப்படுகிறது.
- பஸ் நிலையத்தில் மொத்தம் 16 நடைமேடைகள் உள்ளன.
வண்டலூர்:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து அரசு பஸ்களும், ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் முழுமையாக இயக்கப்படுகிறது.
இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் பரபரப்புடன் காணப்படுகிறது.
இந்த பஸ் நிலையத்தில் மொத்தம் 16 நடைமேடைகள் உள்ளன. இதில் மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நடைமேடை எண் 1:-கன்னியாகுமரி, செங்கோட்டை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மார் தாண்டம்.
நடைமேடை எண் 2:-உடன்குடி, கருங்கல், குட்டம், கன்னியாகுமரி, குலசேரகம், சிவகாசி, செங்கோட்டை, திசையன்விளை, திருச்செந்தூர், திருநெல்வேலி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில், பாபநாசம், மார்த்தாண்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
நடைமேடை எண் 3:-ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, காரைக்குடி, கீரமங்கலம், சாயல்குடி, சிவகங்கை, தேவகோட்டை, தொண்டி, பரமக்குடி, பொன்னமராவதி, மதுரை, வீரசோழன், ஒப்பிலன்.
நடைமேடை எண் 4:-கம்பம், குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, பட்டுக்கோட்டை, போடிநாயக்கனூர், பொள்ளாச்சி, பேராவூரணி, மன்னார்குடி.
நடைமேடை எண் 5:-அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், துறையூர், நன்னிலம், நாகப்பட்டினம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பெரம்பலூர், பேராவூரணி, மயிலாடுதுறை, மன்னார்குடி, வேளாங்கண்ணி, கும்பகோணம்.
நடைமேடை எண் 6:- ஈரோடு, ஊட்டி, எர்ணாகுளம், கரூர், குருவாயூர், கோவை, சேலம், திருப்பூர், திருவாரூர், நாமக்கல், பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம்.
நடைமேடை எண் 7:-செங்கம், செஞ்சி, திருவண்ணாமலை, போளூர், மேல்மலையனூர், வந்தவாசி.
நடைமேடை எண் 8:-அரியலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், விழுப்புரம், ஜெயங்கொண்டம்.
நடைமேடை எண் 9:-கடலூர், காட்டுமன்னார் கோல், சிதம்பரம், திட்டக்குடி, நெய்வேலி, புதுச்சேரி, வடலூர், விருத்தாசலம்.
- மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை உலகம் என்றும் மறவாது.
- மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திட, காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
30.1.1948 அன்று மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை உலகம் என்றும் மறவாது. அதனை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு பொதுமேடை எனும் அமைப்பின் சார்பில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய இடங்களில் "காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா?" எனும் தலைப்பில் ஒன்று கூடல் - கலை நிகழ்ச்சிகளை நடத்திட உள்ளதை அறிந்து பாராட்டுகிறேன்.
முன்னாள் நீதியரசர் திரு து.அரிபரந்தாமன், முன்னாள் கலெக்டர் கோ.பாலச்சந்திரன் ஆகியோர் வள்ளுவர் கோட்டத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்த உள்ளதை அறிந்து மனநிறைவு அடைகிறேன்.
மதவெறிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி மதச் சிறுபான்மையினரை பாதுகாக்கவும், மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திடவும், காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அன்றைய தினம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைத்து மோடி பேசுகிறார்.
- கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தாராபுரத்தில் அதிமுக மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
பிரதமர் மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி) தமிழகம் வருகிறார். திருப்பூரில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்'என்ற பெயரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி ராமேஸ்வரத்தில் இருந்து யாத்திரை தொடங்கினார். இந்த யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.
பல்வேறு கட்டங்களாக சட்டமன்ற தொகுதி வாரியாக செல்லும் அண்ணாமலை 83-வது நாளான நேற்று திருவண்ணாமலையில் நிறைவு செய்தார். 84-வது நாளான இன்று கலசபாக்கத்தில் இருந்து யாத்திரையை தொடங்கினார்.
100 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை நிறைவில் சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் அதில் பிரதமர் மோடி பங்கேற்பதாகவும் இருந்தது. அதற்காக சென்னை புறநகர் பகுதியில் இடங்கள் பார்த்தனர். ஆனால் 5 லட்சம் பேர் கூடும் வகையில் பெரிய இடங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தை திருப்பூரில் நடத்த முடிவு செய்துள்ளார்கள். இதற்காக திருப்பூர் அருகே பெருமாநல்லூர் மற்றும் பல்லடம் அடுத்து உள்ள பொங்கலூர் ஆகிய இடங்களில் இடம் பார்த்துள்ளார்கள். இந்த இரு இடங்களிலும் 200 ஏக்கருக்கு மேல் இட வசதி இருப்பதாகவும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடவும், வாகனங்கள் நிறுத்தவும் வசதி இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து வரும் பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு தேர்வு செய்வதை பொறுத்து இந்த இரண்டு இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நேற்று மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மலர் கொடி, சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் நிர்வாகிகள் கூறும்போது, "பிரதமர் மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி) திருப்பூர் வருவது உறுதியாகி இருக்கிறது. ஆனால் தேதி முடிவாகவில்லை" என்றனர்.
அடுத்த மாத இறுதியில் மோடி வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20-ந்தேதிக்கு பிறகு ஏதாவது ஒரு தேதியில் வருவார் என்று கூறப்படுகிறது.

அன்றைய தினம் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைத்து மோடி பேசுகிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தாராபுரத்தில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையின் பாத யாத்திரை திருப்பூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி நடைபெற இருந்தது. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு காரணமாக நடைபயணம் ஒத்தி வைக்கப்பட்டது. அண்ணாமலையை வர வேற்றும் பாத யாத்திரையை வெற்றி பெற செய்யவும் தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டது திருப்பூர் பா.ஜ.க.வினரை கவலையில் ஆழ்த்தியது.
இதையடுத்து மற்றொரு நாள் கண்டிப்பாக நடைபயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என அண்ணாமலை உறுதியளித்தார். ஆனால் சென்னை, தென் மாவட்ட மழை காரணமாக அண்ணாமலை நடை பயணம் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திருப்பூரில் நடைபயணம் எப்போது நடைபெறும் என நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையே கடந்த 19-ந்தேதி கேலோ இந்தியா போட்டியை தொடங்கி வைக்க வருவதாக இருந்த பிரதமர் மோடி , அன்றைய தினம் திருப்பூரில் புதிதாக கட்டப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த திருப்பூர் பா.ஜ.க.வினர் அதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொடங்க இருந்தனர்.
இந்தநிலையில் திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால், திறப்பு விழா அன்று பொதுக்கூட்டம் நடத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி திருப்பூரில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். ஆனால் அந்த நடைபயணமும் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பாத யாத்திரை நிறைவு மற்றும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ப.ஜனதாவினர் உற்சாகம் அடைந்து உள்ளார்கள்.
- அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
- 2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.35 முதல் 40 வரை ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ரூ.25, ரூ.20 என படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பல்லாரி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரிப்பால் அதிகளவில் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை ரூ.10 முதல் ரூ.15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் போதிய விற்பனை நடை பெறாததாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை ஓரங்களில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடுகள் இறக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.






