என் மலர்
நீங்கள் தேடியது "வேளாண் நிழல் பட்ஜெட்"
- 2024-25-ம் ஆண்டு நீர்ப்பாசன திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தும் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- காவிரி-தருமபுரி உபரிநீர்த்திட்டம், அரியலூரில் சோழர் பாசனத்திட்டம் அடிக்கல் நாட்டப்படும்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை (மாதிரி வேளாண் பட்ஜெட்) அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று வெளியிட்டனர்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த அறிக்கையில் 60 ஆயிரம் கோடி வேளாண் துறை மூலமாகவும், ரூ.20 ஆயிரம் கோடி நீர்ப்பாசனத்துறை மூலமாகவும் செலவிடப்படும். இதில் ரூ.12,500 கோடி விவசாயிகள் மூலதன மானியத்திற்கு செலவிடப்படும்.
வேளாண் கட்டமைப்பு, வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவிடப்படும். பயிர் காப்பீடு உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு ரூ.27,500 கோடி செலவிடப்படும் வகையில் மாதிரி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
2024-25-ம் ஆண்டு நீர்ப்பாசன திட்டங்களை முழுவீச்சில் செயல்படுத்தும் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீர்ப்பாசனத் திட்ட செயலாக்க ஆணையம் என்ற பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
சாகுபடி பரப்பை அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 15 ஆயிரம் ஏரிகளில் சாத்தியமானவை மீட்டெடுக்கப்படும். இதற்காக ஏரிகள் மேலாண்மை வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்படும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை 3,600-ல் இருந்து 4 ஆயிரமாக உயர்த்தப்பட்டு, நெல் சேமிப்பு கிடங்குகள் 400 ஆக உயர்த்தப்படும். வேளாண் தொழில்நுட்ப கண்காட்சி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும். காவிரி-தருமபுரி உபரிநீர்த்திட்டம், அரியலூரில் சோழர் பாசனத்திட்டம் அடிக்கல் நாட்டப்படும்.
கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் வறட்சியை போக்க நடைபெறும் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டப்பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்கப்படும். ஆறுகளில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தும் ஜூலை மாதத்திற்குள் மூடப்படும்.
சேலத்தில் தோட்டக்கலை பல்கலைக்கழகமும், வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியமும் உருவாக்கப்படும்.
பாலாறு நீர்ப்பாசனத் திட்டம், தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம், தென்பெண்ணையாறு-துரிஞ்சலாறு இணைப்பு திட்டம் போன்றவைகள் செயல்படுத்தப்படும். வேளாண் துறை 3 ஆக பிரிக்கப்பட்டு, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் சந்தை என 3 அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
கோயம்பேடு சந்தைபோல அனைத்து மாநகரங்களிலும் தோட்டக்கலை பொருட்களுக்கான சந்தைகள் அமைக்கப்படும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். புரோட்டீன் சத்து மிகுந்த, கொழுப்பு சத்து குறைந்த முயல்கறியை பிரபலப்படுத்தி, ஆடு, மாடு இறைச்சிகளின் பயன்பாடு குறைக்கப்படும்.
வேளாண்மையை தொழில் வடிவமாக்குதல், தமிழகத்திற்கான நிலப் பயன்பாட்டுக் கொள்கை, உணவு தன்னிறைவு, ஊரக பொருளாதார மறு மலர்ச்சிக்கான மும்முனை திட்டம் போன்றவைகள் உருவாக்கி நிறைவேற்றப்படும் என்பன போன்ற 110 அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.






