search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airline"

    • துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது.
    • விமான நிலையத்தில் ஓடு பாதைகள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது.

    சென்னை:

    துபாயில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததால் துபாய் நகரம் வெள்ளத்தில் சிக்கி தவித்தது. வரலாறு காணாத மழை காரணமாக துபாய் விமான நிலையம் பாதிப்புக்குள்ளானது. விமான ஓடுதளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து துபாய்க்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் துபாயில் மழை ஓய்ந்ததால் வெள்ளம் வடிந்தது. இதையடுத்து விமான நிலையத்தில் ஓடு பாதைகள் சரி செய்யப்பட்டு விமான போக்குவரத்துக்கு தயாரானது. அதன் பிறகு துபாய்க்கு விமான போக்குவரத்து தொடங்கியது.

    சென்னையில் இருந்து துபாய்க்கு இன்று விமான போக்குவரத்து தொடங்கியது. சென்னையில் இருந்து இன்று காலை துபாய்க்கு விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 267 பயணிகள் பயணம் செய்தனர்.

    • பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது.
    • ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. வருமானம் குறைவாக வந்ததால் விமான சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மீண்டும் விமான சேவையை தொடங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் பயனாக 3 1/2 மாதங்கள் கழித்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மூலம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு மீண்டும் அக்டோபர் மாதம் முதல் விமானம் இயக்கப்பட்டு வந்தது.

    அதன்படி, தினமும் மதியம் 10.25 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.10 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. மதியம் 12.35 மணிக்கு புதுவையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.

    மதியம் 2.10 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு 3.15 மணிக்கு புதுச்சேரி வந்தடைகிறது. அதன் பிறகு, மாலை 3.40 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு ஹைதராபாத் சென்றடைகிறது.

    இந்நிலையில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் செலவை ஈடுசெய்யும் வகையில் கூட டிக்கெட் முன்பதிவாக இல்லை.

    விமானத்தில் உள்ள 78 இருக்கைகளில் போதிய அளவு பயணிகள் இல்லாமல் தினமும் புதுவையில் இருந்து பெங்களூருக்கும். ஹைதராபாத்துக்கும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருகிற 31-ந் தேதி முதல் விமான சேவையை முழுமையாக நிறுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதை உறுதி செய்யும் விதமாக வருகிற 31-ந் தேதி முதல் பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கான விமான டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

    • 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோான பரவல் அதிகரித்த போது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. பின்னர் நிலைமை சீரானதும் சென்னைக்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், மீண்டும் படிப்படியாக விமான சேவைகளை தொடங்கின. ஆனால் ஹாங்காங், மொரிஷியஸ் நாட்டில் இருந்து சென்னைக்கு விமான சேவை மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் ஹாங்காங்- சென்னை- ஹாங்காங், இடையே இயக்கப்பட்டு வந்த, கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் விமான சேவையை, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து, இயக்க உள்ளது. முதலில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும், இந்த விமான சேவைகள், பயணிகள் வரவேற்பை பொறுத்து, வாரத்தில் 7 நாட்களும், தினசரி இயக்கப்பட இருக்கிறது.

    இதேபோல் சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு, ஏர் மொரிஷியஸ் விமான சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளன. வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்கள் இயக்கப்பட்ட இந்த விமான சேவைகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விமான சேவையை தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் விமான சேவைகளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஹாங்காங், மொரிஷியஸ் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட இருப்பது பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக ஹாங்காங் விமான சேவை, தொழில்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவைகளாக விளங்கி இருந்தது. அதோடு ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு, இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் தொழில் துறையினர் மத்தியில் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதைப்போல் ஏர் மொரிஷியஸ் விமானம், மாணவ மாணவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவையாக செயல்பட்டது. மொரிசியஸ் நாட்டில் பல்வேறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள், ஏராளமான மாணவ மாணவிகள், மொரிஷியசில் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக, விமான சேவைகள் இல்லாததால், இந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் சென்று மொரிசியஸ் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அதிகம் பண செலவு, பயண நேரம் ஏற்பட்டு மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவது மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
    • தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு ஏற்கனவே, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும், யூ.எஸ். பங்களா விமான நிறுவனமும், தினசரி நேரடி விமான சேவையை இயக்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை- டாக்கா இடையே பயணிகள் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து பீமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம், டாக்கா- சென்னை இடையே, புதிதாக நேரடி விமான சேவையை, இன்று முதல் தொடங்கியது. வாரத்தில் திங்கள், வியாழன், சனி, ஆகிய 3 தினங்களில் இந்த விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.

    இந்த விமானம் வாரத்தின் 3 நாட்களிலும், பகல் 12.50 மணிக்கு டாக்காவில் புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறது. அதே விமானம் மீண்டும், மாலை 4.15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு,

    இரவு 7.30 மணிக்கு டாக்கா விமான நிலையம் சென்றடைகிறது.

    இப்போது வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த விமான சேவை, பயணிகளின் வரவேற்பை பொறுத்து, தினசரி விமான சேவையாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னை-கொச்சி இடையே இருந்த 8 விமான சேவைகள் 10 விமான சேவையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    • கோவாவில் இருந்து சென்னை வருவதற்கும் தினமும் 2 விமான சேவைகள் இருந்தன.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமான சேவைகளும் அதே போல் மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் 6 விமான சேவைகளும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் கூடுதலாக சென்னை-மதுரை இடையே 2 சேவைகளும், மதுரை-சென்னை இடையே 2 சேவைகளும் அதிகரித்துள்ளது.

    இதைப்போல் சென்னை-கொச்சி இடையே இருந்த 8 விமான சேவைகள் 10 விமான சேவையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய கோவாவிற்கு, சென்னையில் இருந்து இதுவரையில் காலையில் ஒரு விமான சேவை, மாலை ஒரு விமான சேவை என்று 2 விமான சேவைகள் மட்டும் இருந்தது. கோவாவில் இருந்து சென்னை வருவதற்கும் தினமும் 2 விமான சேவைகள் இருந்தன.

    தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து இன்று முதல் மதியம் 1:50 மணிக்கு சென்னையில் இருந்து கோவாவுக்கு கூடுதலாக ஒரு விமான சேவையும், மாலை 6:55 மணிக்கு கோவாவில் இருந்து சென்னைக்கு அந்த விமானம் திரும்பி வருகிறது. இதனால் சென்னை-கோவா இடையே விமான சேவை 6 ஆக உயர்ந்து இருக்கிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேவை தொடங்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.
    • சேவையால் கோவையில் இருந்து பல உலக நாடுகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பயன்தரும்.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    2020-ம் ஆண்டு வரை கோவை- இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமான நிறுவனம் சார்பில் சேவை வழங்கப் பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேவையை அந்நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்தது.

    இந்த விமான சேவையை விரைவில் மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை-இலங்கை இடையே கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை விமான சேவை வழங்கப்பட்டு வந்தது. நிர்வாக காரணங்களால் அது நிறுத்தப்பட்டது.

    இலங்கை நாட்டின் கொழும்பு நகருக்கு கோவையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவை கடந்த 2017-ல் தொடங்கியது. முதலில் ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமை என வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டது.

    அதன் பின்னர் வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டது.

    கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 2.35 மணியளவில் கோவையில் தரையிறரங்கும். மீண்டும் 3.35 மணியளவில் கோவையில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்லும்.

    சேவை தொடங்கப்பட்ட நாள் முதல் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. கொரோனா தொற்று பரவலால் 2020-ம் ஆண்டு முதல் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேவை தொடங்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது.

    கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ஓடுதள புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 24 மணி நேரமும் விமான நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    எனவே இலங்கை நாட்டுக்கு மீண்டும் தொடங்கப் பட உள்ள விமான சேவைக்கு ஸ்லாட் என்று சொல்லக்கூடிய நேரம், ஓடுபாதை, விமானம் நிறுத்துமிடம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிவு செய்தபின் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கொங்கு குளோபல் போரம் இயக்குனர் நந்தகுமார் கூறும்போது, ஒரு மணி பயண நேரத்தில் இலங்கை சென்றடையும். இந்த விமான சேவையால் கோவையில் இருந்து ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு செல்பவர்களுக்கு மிகுந்த பயன்தரும் என்றார்.

    ×