என் மலர்
இந்தியா

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் கடும் பாதிப்பு.. விமான டிக்கெட் விலைகள் பன்மடங்கு உயர்வு
- DGCAவின் உதவி எண்கள் - 011-24610843, 011-24693963, 096503-91859
- சென்னையில் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.
இந்நிலையில் இன்றும் நாடு முழுவதும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
டெல்லியில் 225 விமானங்கள், மும்பையில் 104 விமானங்கள், பெங்களூருவில் 102 விமானங்கள், ஐதராபாத்தில் 92 விமானங்கள், ஜெய்ப்பூரில் 34 விமானங்கள், புனேவில் 32 விமானங்கள், சென்னையில் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதனால் பயணிகள் கடைசி நேரத்தில் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்நிலையில் விமானிகளுகு விடுப்பு வழங்கும் விமான இயக்குநரகத்தின்(DGCA) புதிய விதிகளால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விமானிகளுக்கு வாரம் 48 மணி நேரம் ஓய்வு வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை விமான இயக்குனரகம் திரும்பப்பெற்றது.
இந்தநிலையில், இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பால், மற்ற உள்நாட்டு விமான சேவை நிறுவனங்கள் டிக்கெட்டுகளின் விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளன.
உதாரணமாக சென்னையில் இருந்து டெல்லி செல்ல ரூ.7000 ஆக இருந்த டிக்கெட் விலை, இன்றும் நாளையும் ரூ. 40,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. பயணிகள் வேறு வலி ஏதும் இல்லாமல் விழி பிதுங்கி உள்ளனர். இதற்கிடையே இந்த பிரச்சனையால் பயணிகளுக்கு ஏதுவாக ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான இயக்குனரகம் புதிய விதிகளை திரும்பப்பெற்றதால் விமான சேவைகள் ஓரிரு நாளில் நிலைமை சீராகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு உதவ DGCAவின் உதவி எண்கள் - 011-24610843, 011-24693963, 096503-91859 ஆகியவற்றில் அழைக்கலாம் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.






