search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை உதவியாளர் பணிக்கு குவிந்த பட்டதாரி இளைஞர்கள்
    X

    கால்நடை உதவியாளர் பணிக்கு குவிந்த பட்டதாரி இளைஞர்கள்

    • கால்நடை உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதும் என தெரிவிக்கப்பட்டது.
    • அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை.

    திண்டுக்கல்:

    நாட்டில் வேலைவாய்ப்பின்மை என்பது இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருந்து வருகிறது. படித்தால் வேலை கிடைக்கும் என நம்பி பட்டப்படிப்புகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பின்னர் அதனை புதுப்பித்து வேலை கிடைக்காத நிலையில் கிடைத்த வேலையை செய்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

    குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்த படிப்பு படித்திருந்தாலும் வேலை கிடைக்காத நிலையில் ஓட்டல், டீக்கடைகளுக்கு வேலைக்கு செல்லும் நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று திண்டுக்கல்லில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் 66 காலியிடங்களுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    இந்த பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தோல்வியே தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் கடந்து இளநிலை, முதுநிலை, எஞ்ஜினீயரிங், டிப்ளமோ, பி.ஹெச்.டி படித்த மாணவர்கள் விண்ணப்பம் அளித்திருந்தனர்.


    விண்ணப்பம் செய்திருந்த 6167 பேர்களில் தினசரி 1200 பேர் வீதம் நேர்காணல் தேர்வு வருகிற 3ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேர்முகத் தேர்வுக்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அந்த இடமே கடும் போக்குவரத்து நெரிசலானது. போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் ராம்நாத் தலைமையில் நேர்காணல் தேர்வு நடைபெற்றது. தேர்வுக்கு வந்த மாணவர்களிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

    கால்நடை உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியே போதும் என தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் பட்டதாரி இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பம் செய்திருந்தனர். செய்முறை தேர்வாக சாணி அள்ளுதல், மாடுகளுக்கு ஊசி போடுதல், நோய்தொற்று ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளித்தல், மாடுகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கயிறு மூலம் இழுத்து கட்டுதல் ஆகியவையே போதுமானது. மேலும் மாடுகளின் பால் கறக்கும் மடிகளில் புண்கள் இருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த பணிகளை கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்களே எளிதாக செய்ய முடியும்.

    ஆனால் வேலை இல்லாத காரணத்தால் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இருந்த போதும் அனைத்து சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறை தேர்வு முடிந்த பிறகு தகுதியின் அடிப்படையில் 66 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும் என்றார்.

    இதுகுறித்து நேர்காணலுக்கு வந்த பட்டதாரி இளைஞர்கள் தெரிவிக்கையில்,

    படித்த படிப்புக்கு வேலைகிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கிறோம். வேலை இல்லாததால் திருமணம் கூட நடைபெறவில்லை. அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த பல்வேறு தேர்வுகளிலும் பங்கேற்றும் வேலை கிடைக்கவில்லை. பெற்றோருக்கு பாரமாக இருப்பதைவிட ஏதேனும் ஒரு வேலையை பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதுவும் இந்த பணி அரசு வேலை என்பதால் ஏராளமான இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பையும் நினைக்காமல் வந்துள்ளனர்.

    குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,900 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஓரளவுக்கு கட்டுபடியான சம்பளம் என்பதால் பலர் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். அனுபவம் இல்லையென்றாலும் போகப்போக சரியாகிவிடும் என நினைக்கிறோம் என்றனர். ஆண்கள் மட்டுமின்றி பட்டதாரி பெண்களும் இந்த நேர்காணலுக்கு வந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×