search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது.
    • குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அக்கும்பல் திடீரென்று அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியது. அந்த குண்டு அம்பேத்கர் சிலை மீது பட்டு பழைய ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க விரட்டினர்.

    ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அந்த பகுதியில் திரண்டனர். குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் அம்பேத் மற்றும் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அந்த பகுதியில் மீண்டும் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பால் ஊற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் சிலை மற்றும் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    • சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது முள்ளிகிராம் பட்டு சாலையில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக கலெக்டர் காரின் எதிர்புறத்தில் அதிவேகமாக 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கலெக்டர் காரில் மோதுவது போல் வந்தனர். அப்போது கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார். அப்போது காரில் இருந்த போலீஸ் மற்றும் அதிகாரி உடனடியாக கீழே இறங்கி அந்த 2 வாலிபர்களை பிடித்தனர்.

    அப்போது அவர்கள் அதிவேகமாக வந்ததற்கு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர். இருந்தபோதிலும் போலீஸ் மற்றும் அதிகாரிகள் 2 பேரையும் கடும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து மீண்டும் ஆய்வு பணிகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஈடுபட்டார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி காலம் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
    • மாத்திரைகளை ஏரி பகுதி சாலை ஓரத்தில் கொண்டு வந்து கொட்டியது யார்?

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வதிஷ்டபுரத்தில் உள்ள பீமன் ஏரி மற்றும் அதன் அருகில் உள்ள சாலை ஓரத்தில் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு காலாவதியான மாத்திரைகள், ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் மற்றும் காலாவதி ஆவதற்கு 3 மாதங்கள் உள்ள அல்பெண்டாசோல் எனும் மாத்திரைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டுள்ளன.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது, மாத்திரைகளின் அட்டை மற்றும் மருந்துகளின் மூடி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு என்று அச்சிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவை அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் என்பது தெரியவந்தது. மருந்து, மாத்திரைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டாமல், பரவலாக குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு சில குவியல்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டிருந்தது.

    இதில் சில மருந்துகள் கடந்த சில மாதத்துடன் காலாவதியாகி இருந்த நிலையில், பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி காலம் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மாத்திரைகளை ஏரி பகுதி சாலை ஓரத்தில் கொண்டு வந்து கொட்டியது யார்? காலாவதியான மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள நிலையில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல், அவற்றை தூக்கி வீசிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மேலும் ஆற்றில் அவை வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஏரி சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்தி, அவற்றை அங்கு வீசிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி ஆகாத அல்பெண்டாசோல் எனும் மாத்திரைகள், ஊசி மருந்து குப்பிகள், குளுக்கோஸ் பவுடர் உள்ளிட்டவையும் அப்பகுதியில் வீசப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.
    • திருநங்கைகள் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    திருநாவலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 9-ந் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து 10-ந் தேதி முதல் மகாபாரத சொற்பொழிவு, சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதலில் உள்ளூரில் வசிக்கும் திருநங்கைகளுக்கும், இன்று காலை 7 மணி முதல் வெளியூர் திருநங்கைகளுக்கும் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

     மேலும், இன்று மாலை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி தாலி கட்டுவார்.

    இன்று இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.

    நாளை (24-ந் தேதி) சித்திரை தேரோட்டம் தொடங்கும். தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது தாலிக் கயிறை அறுத்து விட்டு அருகில் உள்ள கிணறு, குளங்களில் குளித்து வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

    25-ந் தேதி விடையாற்றி உற்சவமும், 26-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி கள், கிராம பொதுமக்கள், திருநங்கைகள் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர்.

    • 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    • வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கரின் மனைவி சங்கீதா. இவர் ராமாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவியாக உள்ளார். அதே ஊரில் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மகன் கலைமணி. இவர் மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றிக்கொண்டதாகவும், இதனை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அங்கு ஆஸ்பத்திரி கட்ட சங்கீதா முயற்சி செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஜெய்சங்கர்-சங்கீதா தம்பதியரின் மகள் ஜெயப்பிரியா, கடந்த 19-ந் தேதி வாக்களித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த கலைமணி தரப்பினர், ஜெயப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் அறிந்த ஜெய்சங்கர், அவரது அண்ணன் ஜெயக்குமார், அவரது மனைவி கோமதி, மகன்கள் ஜெயப்பிரகாஷ், சதீஷ்குமார் ஆகியோர் கலைமணி தரப்பினரை தட்டிக்கேட்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கலைமணி, அவரது மனைவி தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் உள்ளிட்ட 10 பேர் ஜெய்சங்கர் தரப்பினரை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே கோமதி துடிதுடித்து இறந்து போனார். படுகாயமடைந்த மற்றவர்களை அப்பகுதியினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கலைமணி, தீபா, அறிவுமணி, ரவி, மேகநாதன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகி உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இளம்பெண் ஜெயப்பிரியா, பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால் அவரிடம் கைது செய்யப்பட்டவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், மேலும், இதனை தட்டிக்கேட்ட அவரது உறவினர்களும் பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் கோமதி இறந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    இது தொடர்பாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, இத்தகவலை சமூக வளைதலங்களில் பரப்பியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் "வட இந்தியர்" என்ற பெயரில் ரோஷன் என்பவர் இதனை வெளியிட்டது தெரியவந்தது. மேலும், இதனை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரி பிரபாகரன் ஷேர் செய்ததும், பிரபல யூடியூபர் சண்முகம் இது குறித்து கருத்து வெளியிட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கூறுகையில், இது போன்று தவறான கருத்துக்களை பதிவிடுபவர்கள், பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார்.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க.விற்கு வாக்களித்ததால், கடலூர் மாவட்டத்தில் பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் வடமாநில சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலின் அசுவ பூஜைக்காக குதிரை வளர்க்கப்படுகிறது. ராஜா என்ற பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக இங்கிருந்த குதிரைக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த குதிரை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. கடந்த 4 வருடங்களாக தில்லை நடராஜரின் இறைபணியில் ஈடுபட்ட குதிரை ராஜாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில், மருத்துவ சான்று பெற்று பக்தர்களும் தீட்சிதர்களும் மலர் அஞ்சலி செலுத்தி சடங்குகள் செய்து மயானத்தில் அடக்கம் செய்தனர். இத்தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

    • தொடர் போராட்டம் காரணமாக வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
    • போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கப்பட்டது.

    இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பார்வதிபுரம் மக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தொடர் போராட்டம் காரணமாக வள்ளலார் சர்வதேச மையம் கட்டும்படி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமான பணிகள் தொடங்கியது.

    போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகின்றது.

    • தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம்.
    • சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    சிதம்பரம்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அவரது மனைவி ஜான்சிராணியுடன் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினார்.

    பின்னர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் காலையிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டை விட இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும். சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொல்.திருமாவளவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

    தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் தெளிவாக உள்ளார்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது தெரிந்து கொண்டோம். வட இந்தியாவில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில் 2019-ல் வட இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றார். அதேபோல் இம்முறை வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

    கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பது, மதசார்பின்மையை பாதுகாப்பது, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பது, இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்பது, மக்களுடைய வாழ்வாதாரம், வேலை இல்லா திண்டாட்டம் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தோம். இந்த பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு கடையில் இருந்த மூட்டையை திறந்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு இடையார்குப்பத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இதில் ஒரு கடையில் இருந்த மூட்டையை திறந்து பார்த்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் கடையின் உரிமையாளர் இடையார் குப்பத்தை சேர்ந்த குணசுந்தரி (வயது 30) என்பதும், மூட்டையில் சுமார் 750 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரமாகும். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து குணசுந்தரியை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்து சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி பெரியகாட்டுபாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர், திடீரென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரை, மோட்டார் சைக்கிளில் மீது மோதாமல் அதன் டிரைவர் சாதுர்யமாக நிறுத்தினார்.

    இதனை தொடர்ந்து கார் பின்னால் வந்த மற்றொரு காரும் நின்ற நிலையில், 3-வதாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதற்கு பின்னால் வந்த 4-வது காரும் மோதி விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து முதலில் நின்ற கார் மீது, 2-வதாக நின்ற கார் மோதியது.

    இந்த விபத்தில் 4 காரும் சேதமடைந்தது. காரில் பயணம் செய்த புதுவை மாநிலம் மணமேட்டை சேர்ந்த பூவரசன், கடலூர் மாவட்டம் உள்ளேரிப்பட்டை சேர்ந்த கதிரேசன், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த கோகுல்ராஜ், அஜய், சரத்குமார் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

    இவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    • பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் சுற்றாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    கடலூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில வினாடிகள் லேசான தூறல் மழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தற்போது அதிகபட்சமாக 97 டிகிரி வெயில் பதிவாகி வரும் நிலையில், கணிசமாக வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது.

    பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும் இளைஞர்கள், பெரி யவர்கள் குடைப்பிடித்த படியும், பெண்கள் தலையில் ஷால் மற்றும் புடவைகளை போர்த்திய படி செல்கின்றனர்.நேற்று முதல் சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் சுற்றாமல் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆகையால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதோடு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு வெளியில் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

    • கண்காணிப்பு குழுவினர் 28 மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட புதிய ஆடைகளை கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் வைத்தனர்.

    கடலூர்:

    பாராளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ஆனந்தி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தபோது பல்வேறு மூட்டைகள் இருந்தன. இதில் சந்தேகம் அடைந்த கண்காணிப்பு குழுவினர் அதனை பிரித்து பார்த்தபோது புதிய ஆடைகள் இருந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து டிரைவரிடம் ஆடைகள் கொண்டு செல்வதற்கு உரிய ஆவணம் உள்ளதா? என கேட்டனர். அப்போது ஆவணம் இல்லாததால் உடனடியாக கண்காணிப்பு குழுவினர் 28 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 8 லட்சமாகும்.

    பறிமுதல் செய்யப்பட்ட புதிய ஆடைகளை கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் வைத்தனர். இதனை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் பலராமன் உடன் இருந்தார்.

    ×