search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில்"

    • குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • நாகர்கோவில் மாநகரப்பகுதியில் ரோடுகளில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுகிறார்கள்.

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடந்தது. ஆணையாளர் ஆனந்த மோகன், துணை மேயர் மேரி பிரின்சிலதா, என்ஜினீயர் பால சுப்பிரமணியன், மாநகர் நல அதிகாரி ராம்குமார், மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சி லர்கள் நவீன் குமார், ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், அய்யப்பன், டி.ஆர்.செல்வம், அனிலா சுகுமாரன், ரோசிட்டா, வளர்மதி, ரமேஷ், வீரசூரபெருமாள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் முன்னாள் நகராட்சி தலைவர் ஜெமீலா ஜேம்ஸ் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப்பகுதியில் ரோடுகளில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றுகிறார்கள். மணல்களை அகற்றவில்லை. பெயர் மாற்றம், வரிவிதிப்பு தொடர்பாக மனுக்கள் அளித்து ஏராளமான புகார் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. வருவாய்துறை பிரிவில் பல்வேறு ஊழியர்கள் பணிக்கு வராத நிலை உள்ளது. இதனால் ஊழியர்களின் மேஜைகளில் கோப்புகள் மலை போல் தேங்கி கிடக்கின்றன. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில் மாநக ராட்சியில் உள்ள மண்டல அலுவலகத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 17 மாதம் ஆகியும் மண்டல அலுவலகம் திறக்கப்படாததால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் உள்ள கழிவறைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. குடும்பத்தோடு சென்றால் மூக்கை பிடித்து விட்டு கழிவறைக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. உடனே அதை சரி செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல சூரங்குடி பகுதியில் பாசன கால்வாயில் வீட்டு கழிவுகள் விடப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முக்கடல்அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திராயன் 3 வெற்றி பெற்றதற்கு மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். செட்டிகுளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும் என்று கூறி பல மாதங்கள் ஆகியும் ரவுண்டானா அமைக்கப்பட வில்லை. ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து மேயர் மகேஷ் பேசியதாவது:- சாலையில் உள்ள குப்பைகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்களும். தனியார் மூலம் நியமிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களும் அகற்றி வருகிறார்கள். ஆனால் மணல்களை. மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து மட்டுமே அகற்ற முடியும். இதுதொடர்பாக தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.

    நாய் தொல்லையை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருத்தடைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கருத்தடை செய்யப்பட்ட நாய்களை ஒரே இடத்தில் வைப்பதற்கு போதுமான இட வசதி தற்பொழுது இல்லை. எனவே ஒரே இடத்தில் 100 முதல் 200 நாட்களை நாய்களை கட்டி வைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    தேங்கி கிடக்கும் கோப்பு களை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவல கங்களையும் சீரமைக்க தலா ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 மண்டல அலுவலகத்திற்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் .

    முக்கடல் அணையில் இருந்து நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் கடந்த 2 மாதங்களாக மைனஸ் அடியில் இருந்து வருகிறது. அந்த அணையை தூர் வாரும் காலம் முடிந்து விட்டது. இனி வரும் காலங்களில் அது பற்றி ஆலோசிக்கப்படும்.

    புத்தன் அணையில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை பொது மக்களுக்கு தற்பொழுது சப்ளை செய்து வருகிறோம். ஏற்கனவே சோதனை ஒட்டம் செய்தபோது ஒரு சில இடங்களில் நீர்க்கசிவு இருந்தது. அதை சரி செய்து தற்போது புத்தன் அணை தண்ணீரை பொது மக்களுக்கு வழங்கி வரு கிறோம்.

    மழை கை கொடுத்தால் மட்டுமே, குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். அனைத்து வீடுகளிலும் உறிஞ்சி குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுடன் கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும். நாகர்கோவில் செட்டி குளம் பகுதியில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நெடுஞ்சாலை துறை அனுமதி கிடைத்தவுடன் செட்டி குளம் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்படும். செட்டிகுளத்தில் இருந்து சவேரியார்கோவில் செல்லும் சாலையை, இருவழி பாதையாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து கவுன்சிலர் உதயகுமார் கூறும் போது நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலை, என்.எஸ்.கே. சிலையை வைக்க வேண்டும் என்றார். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர் சேகர், த.மா.கா கவுன்சிலர் டி. ஆர். செல்வம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளை வைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

    • 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்கள் பறிமுதல்
    • நாகர்கோவிலில் போக்கு வரத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவிலில் போக்கு வரத்து விதிமுறையை மீறுபவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    குறிப்பாக ஆட்டோக்களில் அதிக மாணவிகளை ஏற்றி செல்லும் டிரைவர்களுக்கும், இருசக்கர வாகனங்களில் லைசன்ஸ் இல்லாமல் செல்ப வர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. லைசென்ஸ் இல்லாமல் 18 வயதுக்கு குறைவாக வாகனம் ஓட்டுபவர்களின் வாக னங்களை பறிமுதல் செய்யும் போலீசார் அவர் பெற்றோ ருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் தலை மையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்ல சாமி மற்றும் போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது 18 வயதுக்கு குறைவாக மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர்கள் 10 பேர் இந்த சோதனையில் சிக்கினர். அவர்களது மோட்டார் சைக்கிளை போலீ சார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து வாக னங்கள் பறிமுதல் செய்தது குறித்து அவரது பெற்றோர்க ளுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். வாகனங்களை ஓட்டி வந்தோரின் பெற் றோருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 10 பேருக்கு அபராதம் விதிப்பட்ட நிலையில் 4 பேர் மட்டுமே அபராத தொகையை கட்டிவிட்டு மோட்டார் சைக்கிளை திரும்ப பெற்று சென்றனர். 6 பேரின் மோட டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஒரே மோட்டார் சைக்கி ளில் 3 பேர் வந்தவர்களையும் போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். நேற்று 6 பேர் சிக்கினார்கள். இதேபோல் நேற்று ஒரே நாளில் 140 பேருக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.2 லட்சம் அபராதம் வசூல் ஆகியுள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் நாகர்கோவில் மாநகரில் ரூ.30 லட்சத்திற்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து விதி முறைகளை பொதுமக்கள் மீறக்கூடாது. சிறுவர்களுக்கு பெற்றோர் வாகனங்களை ஓட்ட கொடுக்கக்கூடாது. அவ்வாறு ஓட்டினால் அவரது மோட்டார் சைக் கிள்கள் பறிமுதல் செய்யப்ப டும். எனவே இனி வரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை பெற்றோர் கடைபிடிக்க வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஹெல்மெட் அணிவது உயிர் கவசம். எனவே அனைவரும் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படுமா?
    • நாகர்கோவில் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் உள்ள மழை நீர் வடிகால் அவ்வப்போது ஏற்படும் அடைப்புகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்து வருகின்றன.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் உள்ள மழை நீர் வடிகால் அவ்வப்போது ஏற்படும் அடைப்புகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்து வருகின்றன.

    சிதம்பரம் நகர் ஜங்ஷன் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கழிவுகள் பீ. டபுள் .யு .டி. ரோடு வழியாக செட்டிகுளம் சிக்னலை கடந்து அங்குள்ள பெரிய வாய்க்காலில் சென்று கலக்கிறது.

    இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மழை நீர் வடிகால்கள் ,கழிவுகள் மற்றும் சகதிமணல்களால் அடிக்கடி நிரம்பி விடுகின்றன. இதனால் பல இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீர் தடையின்றி செல்ல முடியாமல் உடைப்புகள் வழியாக வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது.

    அதன் பிறகு மாநகராட்சி ஊழியர்கள் வந்து மழை நீர் வடிகால்கள் மேல் உள்ள ஸ்லாப்புகளை உடைத்து, அகற்றி அடைப்பை சரி செய்து முடித்த பிறகு தான் மீண்டும் கழிவுநீர் செல்லும் நிலை ஏற்படுகிறது.

    இந்த நிலை அடிக்கடி ஏற்படுவதால் ஸ்லாப்புகள் அடிக்கடி மாற்றபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாநகராட்சி சீரமைத்தாலும் இந்த செலவை வசதிகள் கருதி அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தொழில திபர்கள் பொதுமக்கள் ஆகியோரே கூடுதலாக செய்யும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஆண்டுக்கு பல ஆயிரம் வரை செலவு ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

    ஆண்டுக்கு 2முறை இது போன்ற செலவுகளை வியாபாரிகள் பொதுமக்கள் சந்திக்க வேண் டியதாககூறு கிறார்கள்.பாதாள சாக்கடை பணி யின் போது உண்டான மணல் சகதிகழிவுகளே மழை நீர் வடிகால்களில்தேங்கி இது போன்ற அடைப்பு களை அடிக்கடி ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அடிக்கடி ஸ்லாப்புகளைஉடைத்து வியாபாரிகள் மற்றும் மாநகராட்சிக்கு செலவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள மழை நீர் வடிகால்களை ஆழமாக தூர்வாரி மீண்டும், மீண்டும் அடைப்புகள் ஏற்படா வண்ணம் தடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வீண்செலவு ,சுகாதார சீர்கேடு உள்ளிட்ட சிரமங்களை தவிர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி தொழிலதிபர்கள், வியாபா ரிகள் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கத்தரிக்காய் ரூ.50-க்கு விற்பனை
    • தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணபபட்டது.

    கன்னியாகுமரி:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கணிசமான அளவு உயர்ந்திருந்தது. காய்கறி விலைகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நட வடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணபபட்டது. குமரி மாவட்டத்திலும் காய்கறிகளின் விலை அதிகமாகவே இருந்தது. மார்க்கெட் டுக்கு உள்ளூர் பகுதியில் இருந்து வரக்கூடிய காய்கறிகள் குறைவான அளவில் இருந்தது.

    இதேபோல் ஓசூர், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், பெங்களூர் பகுதியிலிருந்தும் காய்கறிகள் குறைவாக வந்ததால் காய்கறிகளின் விலை ஏறுமூகமாக இருந்தது. குறிப்பாக தக்காளி, இஞ்சி, மிளகாய், பூண்டு விலை அதிகமாக உயர்ந்தது. தற்போது காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் விலை குறைய தொடங்கியுள்ளது. தக்காளி கிலோ ரூ.135-ல் இருந்து ரூ. 120 ஆக குறைந்துள்ளது. மிளகாய் ரூ.120-ல் இருந்து ரூ.100 ஆக குறைந்துள்ளது.

    இதேபோல் கேரட், பீன்ஸ், புடலங்காய், கத்தரிக்காய், வழு தலங்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் குறைந்து வருகிறது. நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:- தக்காளி ரூ.120, இஞ்சி ரூ.280, மிளகாய் ரூ.100, பூண்டு ரூ.180, கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, புடலங்காய் ரூ.30, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, வெள்ளரிக்காய் ரூ.35, வெண்க்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.50, காலிபிளவர் ரூ.50, சேனைக் கிழங்கு ரூ.70, தடியங்காய் ரூ.30, உருளைக் கிழங்கு ரூ.25, பல்லாரி ரூ.25-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தற்பொழுது காய்கறிகள் வரத்து சற்று அதிகரித்துள்ளது. மேலும் ஆடி மாதம் என்பதால் காய்கறிகள் குறைவான அளவில் விற்பனை ஆகி வருகின்றன. இதனால் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது என்றார்.

    • தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவையொட்டியுள்ள குமரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

    ஆன்லைன் லாட்டரி விற்பனை மட்டுமின்றி கேரளா லாட்டரி சீட்டுகளும் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கோட்டார் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் அதிரடி சோ தனை மேற்கொண்டனர். அப்போது லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.55 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். விசாரணையில் லாட்டரி சீட்டு விற்பனை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லாட்டரிசீட்டு விற்பனை நடைபெற்று வரும் கடையில் வேலை பார்த்த பெண்க ளுக்கு தனியாக செல்போன் வாங்கி கொடுத்து உள்ளனர். அந்த செல்போன் மூலமாக லாட்டரி சீட்டு வாங்கு பவர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

    லாட்டரி சீட்டு வாங்கு பவர்கள் தினமும் வந்து லாட்டரி சீட்டு வாங்காத பட்சத்தில் பெண்களே தொடர்பு கொண்டு பேசி லாட்டரி சீட்டுகளை வாங்கு மாறு தெரிவித்துள்ளனர். செல்போன் மூலமாக அதிகளவு லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று உள்ளது.

    குறிப்பிட்ட அளவு லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் விற்பனை செய்தவர்களுக்கும் கமிஷன் வழங்கப்பட்டு உள்ளது. லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் பகுதிக்கு புதிதாக நபர்கள் வரும் பட்சத்தில் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் ரகசிய குறியீட்டு எண்களும் பயன் பத்தப்பட்டுள்ளது. அலாரம் உள்பட சிவப்பு பச்சை லைட்டுகளும் பொருத்தப்பட்டு உள்ளது.

    லாட்டரி சீட்டு விற்பனையின் பின்னணியில் உள்ள வர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். லாட்டரி சீட்டு விற்பனை செய்த பகுதியில் சோதனை நடத்தி 2 நாட்களே ஆன நிலையில் மீண்டும் நாகர்கோவில் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெறுவதாக சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஆனால் போலீசார் இதை கண்டு கொள்ளாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி அனுமதி இன்றி லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பூங்காவை சீரமைக்க உத்தரவு
    • பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் மாநகராட்சி 35-வது வார்டுக்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் மேயர் மகேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தெரு இறுதியில் உள்ள வீட்டின் முன்பக்கம் நீர் உறிஞ்சி குழி அமைக்கவும், கழிவு நீரோடை மற்றும் கல்வெட்டு அமைக்கவும், பூங்காவிலுள்ள தண்ணீர் தொட்டியை பில்லர் போட்டு வைக்கவும் உத்தரவிட்டார். அந்த பகுதியில் உள்ள பூங்காவில் மின்விளக்குகள்அமைக்கவும், பூங்கா காம்பவுண்ட் ஓரம் உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

    மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தை மக்கள் பயன்பாட்டிற்கான கட்டிடம் அமைக்கவும், வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவுநீர் முறையாக நீர் உறிஞ்சி குழி அமைத்து பராமரிக்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜேஷ், மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் ராணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட நிர்வாகிகள் ஆய்வின் போது உடனிருந்தனர்.

    நாகர்கோவில் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் ரூ.9 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியையும் 48-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ரூ.27 லட்சம் செலவில் குளத்தூர் காலனி பகுதியில் அலங்கார தரை கற்கள், பரசுராமன் தெருவில் தார்சாலை அமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் ஒடை அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    • ஒரே நாளில் ரூ.2¾ லட்சம் வசூலானது
    • தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரி சாலையில் மாணவர்கள் 'பைக்' ரேசில் ஈடுபடுவதாக போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    கோணம் பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் சாலையின் இருபுறமும் பேரிகாடுகள் அமைத்து வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடத்திய சோதனையில் ஹெல்ெமட் அணியாமல் வந்த பலரும் சிக்கினர். லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டியவர்களும் போலீசாரிடம் சிக்கி தவித்தனர். அவர்களுக்கு தலா ரூ.5ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். கோணம் பகுதியில் மட்டும் மாலை நடந்த சோதனையில் 40 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் நகர் முழுவ தும் நேற்று ஒரே நாளில் 225 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஹெல்மெட், லைசென்சு, போக்குவரத்து விதிமுறை மீறல் போன்ற காரணங்களுக்காக போலீசார் அபரா தம் விதித்துள்ளனர். இதன் மூலமாக ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூல் ஆகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே போக்கு வரத்து போலீசார் நாகர்கோவில் நகர் முழுவதும் காலை, மாலை நேரங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களுக்கும் அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. கடந்த 12 நாட்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரூ.20 லட்சம் வசூலாகியுள்ளது.

    இதே போல் மார்த்தாண்டம் போக்குவரத்து போலீசா ரும் போக்குவரத்து விதி முறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    • கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்
    • கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்வோடு, பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர், விளவங்வோடு, பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியும் உள்ளது. இங்கு தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், தோவாளை தாலுகா அலுவலகத்திலும் வைக்கப்பட்டு வந்தது. இந்த எந்திரங்களை நாகர்கோவில் கலெக்டர் வளாகத்தில் வைக்க மின்னணு வாக்கு ப்பதிவு எந்திர கிடங்கு கட்டப்பட்டது.

    ரூ.2 கோடியே 93 லட்சம் செலவில் கட்டிடம் கட்டுமான பணி நடந்தது. தற்பொழுது இந்த பணிகள் முடிவடைந்து இன்று திறக்கப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கை கலெக்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். தேர்தல் தாசில்தார் சுசிலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அலுவலகம் திறக்கப்பட்டதையடுத்து திங்கள்நகர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் தோவாளை தாலுகா அலுவ லகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது. லாரிகள் மூலமாக அந்த எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இங்கு கொண்டுவரப்பட்டது.

    5,204 மின்னணு எந்திரங்களும் 3,760 கட்டுப்பாட்டு கருவியும், 2612 வி.வி.பேட் எந்திரங்கள் என மொத்தம் 11,582 எந்திரங்களை இந்த கட்டிட த்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தரை தளம், முதல் தளம், இரண்டாவது தளத்தில் இந்த எந்திரங்கள் அனை த்தும் வைக்கப்படுகிறது. எந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்ட பிறகு அந்த அறைகளை பூட்டி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டிடத்தில் 13 சி.சி.டி.வி. காமிராக்கள் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு கருவி, லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    • மிளகாய் விலை 2 மடங்கு உயர்ந்தது.
    • இல்லத்தரசிகள் அதிர்ச்சி

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தைக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    பெங்களூர், ஓசூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது. கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்திலிருந்து வரும் காய்கறிகளின் வரத்து குறைய தொடங்கியது. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் காய்கறிகளும் குறைவான அளவில் மார்க்கெட்டுக்கு வருவதால் விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளது.

    பெங்களூரில் இருந்தும், குமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கிறது. தற்பொழுது குமரி, நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த தக்காளிகளின் வரத்து அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில் இருந்து மட்டுமே குறைவான அளவு தக்காளி வந்து கொண்டிருக்கிறது. இதனால் தக்காளி விலை கடந்த 2 நாட்களில் கிலோ ரூ.60 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. 28 கிலோ எடை கொண்ட ஒரு பாக்ஸ் தக்காளி கடந்த வாரம் ரூ.1000 முதல் ரூ.1,400 வரை விற்பனையானது. இன்று ரூ.2,900 முதல் ரூ.3,300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் மிளகாய் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

    ஒட்டன்சத்திரத்தில் இருந்து மிளகாய் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட மிளகாய் இன்று ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் பீன்ஸ், கத்தரிக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய்களின் விலையும் அதிகரித்து உள்ளது.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    நாட்டு கத்தரிக்காய் ரூ.100, வரி கத்தரிக்காய் ரூ.70, பச்சை மிளகாய் ரூ.170, குடமிளகாய் ரூ.100, பீட்ரூட் ரூ.50, கேரட் ரூ.90, பீன்ஸ் ரூ.120, உருளைக்கிழங்கு ரூ.32, பல்லாரி ரூ.25, வெள்ளரிக்காய் ரூ.40, புடலங்காய் ரூ.50, சேனை ரூ.70, வெண்டைக்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.30, காலிபிளவர் ரூ.45, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, சிறிய வெங்காயம் ரூ.100, பூண்டு ரூ.150.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், காய்கறிகளின் வரத்து கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. வெளியூர்களில் இருந்து மிக குறைவான அளவில் காய்கறிகள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தக்காளி, மிளகாய்கள் வரத்து 75 சதவீதம் குறைந்துள்ளது. காய்கறிகளின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் மேலும் அதிகரிக்கும் என்றனர்.

    இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், வழக்கமாக காய்கறிகள் வாங்குவதற்கு சென்றால் தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 செலவாகும். ஆனால் தற்பொழுது தக்காளி விலை மட்டுமே கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மிளகாய் விலையும் உயர்ந்துள்ளதால் அதை வாங்க முடியவில்லை. இதேபோல் மற்ற காய்கறிகளும் விலை உயர்ந்து காணப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது என்றனர்.

    • அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
    • நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழில் மையத்தில் கணக்கராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் சரக்கல் விளை பகுதியை சேர்ந்தவர் ஞானதாஸ் (வயது 62). இவர் நாகர்கோவில் கோணத்தில் உள்ள தொழில் மையத்தில் கணக்கராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

    ஞானதாஸ் நேற்று மதியம் புன்னைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானதாஸ் படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு பொது மக்கள் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஞானதாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    ஞானதாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

    இது தொடர்பாக போக்கு வரத்து பிரிவு போலீசார் அரசு பஸ் டிரைவர் அனீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    • 65 கிலோ பறிமுதல்
    • போலீசார் அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள்.

    நாகர்கோவில் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப்டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலை மையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். 4கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 40 கிலோ குட்கா புகை யிலை பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளின் உரிமை யாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகர்கோ வில் பகுதியில் கடைகளில் விற்பனை செய்ய வைத்திருந்த குட்கா புகையிலையை பறிமுதல் செய்ததுடன் கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மார்த்தாண்டம் இரணியல் குளச்சல் தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    குட்கா புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் கடையில் இருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 66 கிலோ புகையிலை பறிமுதல் செய்ததுடன் 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • பாரதிய ஜனதா கட்சியினருக்கு கண்டனம்
    • அமைச்சர் மனோதங்கராஜ் பற்றி அவதூறு பரப்புவோர் மீது வழக்கு

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார்‌. அப்போது அவர் கூறியதாவது:

    மக்களால் தேர்வு செய்யப்பட்டு பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து 2-வது முறையாக வெற்றி பெற்று, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மந்திரிசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமாரகோவில் முருகன் கோவிலில் தேர் திருவிழாவில் வடம் பிடிக்க சென்ற போது வேண்டுமென்றே பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஆட்சியில் திருக்கோவில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்த ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜனதா கட்சியினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தி.மு.க. ஆட்சியில் ரூ.43 கோடி குமரி மாவட்டத்தி லுள்ள திருக்கோயில்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக பிரசித்திபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு மூலவருக்கு தங்க கவசம் செய்ய ரூ10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாகர்கோவில் நாகராஜா கோயில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிதாங்கோடு மகாதேவர் கோவில் உள்பட பல்வேறு கோயில்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த ஆண்டு இதுவரை 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் குமரி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை பாரதிய ஜனதாவினரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று பரப்பி வந்தவர்களால் அதிக நிதி ஒதுக்கியதால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். அமைச்சர் பற்றி வீண் வதந்திகளை பரப்புவோர் மீது முறையாக புகார் கொடுத்து வழக்கு தொடர்வோம். தமிழகத்தில் தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில் மாநகராட்சியை பொருத்த மட்டில் அரசின் கொள்கை முடிவு படி தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மண்டலங்கள் மாற்றப்படவில்லை.

    நாகர்கோவில் நகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைபணிகள் கடந்த மாதம் 31ம் தேதி முடிப்பதாக தெரிவித்தனர்.

    ஆனால் சில பணிகளின் காரணமாக பணிகள் முடிக்கப்படவில்லை. தற்பொழுது சவேரியார் ஆலயம் முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

    இன்னும் 2 மாத காலத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் .இவ்வாறு அவர் கூறினார்.

    ×