என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து"

    • கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் சோளிங்கர்-வாலாஜா சாலையில் வந்தது.
    • தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    புலிவலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் சோளிங்கர்-வாலாஜா சாலையில் வந்தது.

    பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியில் வந்தபோது எதிரே வந்த தனியார் நிறுவனத்தின் லாரி கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் கல்லூரி பஸ்சில் வந்த மாணவிகள், 2 டிரைவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடந்த சில நாட்களாகவே திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
    • சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவில் சென்று கொண்டிருந்தனர்.

    பெரம்பலூர்:

    சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் நடைபெறும் பல்வேறு விசேஷங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    குறிப்பாக பூச்சொரிதல், தைப்பூசம், சித்திரை திருவிழாக்களின்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் செலுத்துவது வழக்கம்.

    அதேபோல் திருச்சி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வந்து சமயபுரம் மாரியம்மனை தரிசித்து செல்கிறார்கள். அந்த வகையில் தற்போது தைப்பூச திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (31-ந்தேதி) தெப்பத்திருவிழாவும், நாளை (1-ந்தேதி) கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பாடும், அன்று இரவு வட திருக்காவேரி கரையில் ரெங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாகவே திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    அதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள தொழார் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து நேற்று காலை ஒரு குழுவாக சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். வழியில் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்தவாறு வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சுமார் 5 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பக்தர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த பகுதி முழுவதும் பெண் பக்தர்கள் மரண ஓலக்குரல் ஒலித்தது.

    இதைப்பார்த்த அந்த குழுவில் இடம்பெற்றிருந்த நடந்து வந்த பக்தர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். அதேபோல் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் உடனடியாக நிறுத்தி விட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். இந்த கோர விபத்தில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம், தொழார் குடிக்காட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்கொடி (வயது 35), திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47), சுப்ரமணி மனைவி விஜயலட்சுமி (40), சேலம் மாவட்டம், கெங்க வல்லியை சேர்ந்த மருத முத்து மனைவி சித்ரா (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் தொழார் குடிக்காட்டை சேர்ந்த பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி (57) என்பவர் படுகாயமடைந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காகவும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கவுதம் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விபத்துகளில் சிக்கி பலியாவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க பாதுகாப்பு கவசங்கள் அணிய பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார்.
    • ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் போய வசுந்தரா (வயது 34). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு டாக்டரும் காதலித்து வந்தனர். ஆனால் இந்த காதல், திருமணம் வரை செல்லாமல், இடையிலேயே முறிந்தது.

    அந்த டாக்டர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணும் ஒரு டாக்டர்தான். கர்னூலில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    ஆனால், தனது முன்னாள் காதலரை வேறு ஒரு பெண் திருமணம் செய்ததை போய வசுந்தராவால் ஜீரணிக்க முடியவில்லை. பொறாமை அடைந்த அவர், முன்னாள் காதலரை பழிவாங்கவும், தம்பதிகளை பிரிக்கவும் திட்டமிட்டார்.

    அதற்காக முன்னாள் காதலரின் மனைவிக்கு எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்த திட்டமிட்டார். அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார். ஆராய்ச்சிக்கு தேவைப்படுவதாக பொய் சொல்லி, அதை பெற்றார்.

    அந்த ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.

    சம்பவத்தன்று, போய வசுந்தராவின் முன்னாள் காதலரின் மனைவி, கல்லூரியில் பணி முடிந்து, மதிய உணவுக்காக வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, தனக்கு தெரிந்த நர்ஸ் காங்கே ஜோதி (40) என்பவரின் 2 மகன்களை மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று, பெண் டாக்டரின் ஸ்கூட்டர் மீது மோதச் செய்தார்.

    அவர் நினைத்ததுபோல், பெண் டாக்டர் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவருக்கு உதவுவதுபோல் போய வசுந்தரா நெருங்கினார். ஒரு ஆட்டோவை வரவழைத்தார்.

    ஆட்டோவில் பெண் டாக்டரை ஏற்றியபோது அவருக்கு எச்.ஐ.வி. கலந்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தினார். பெண் டாக்டர் கத்தி கூச்சலிட்டார். அதற்குள் போய வசுந்தரா அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதுபற்றி அவரின் முன்னாள் காதலரான டாக்டர், கர்னூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    போய வசுந்தரா, நர்ஸ் காங்கே ஜோதி, அவரின் 2 மகன்கள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • பள்ளப்பட்டியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
    • ஆம்னி பேருந்து விபத்தில் கனகரஞ்சிதம், சுதர்சன், திவ்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர்.

    பள்ளப்பட்டியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து மீது மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மேலூர், மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த கனகரஞ்சிதம், சுதர்சன், திவ்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    விபத்து குறித்து சம்பவ இடத்தில் டி.எஸ்.பி. சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

    • பனி மூட்டத்தால் முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தன.
    • கிராம சாலை வழியாக சென்றபோது லாரி விபத்துக்குள்ளானது.

    பாகிஸ்தானில் மோசமான பனி மூட்டம் காரணமாக டிரைவருக்கு சாலை தெரியாமல் போனதால், பாலத்தில் இருந்து லாரி கவிழ்ந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.

    பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் உள்ளது சர்கோதா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள கோட் மொமின் என்ற பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

    கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்தது. இதனால் டிரைவர் கிராமம் வழியாக உள்ளூர் சாலை வழியாக லாரியை ஓட்டிச் சென்றார். லாரியில் 23 பேர் இருந்தனர். இவர்கள் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார்.

    பனி மூட்டத்தை சமாளித்து டிரைவர் லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென பாலம் ஒன்று வந்தது. பனி மூட்டத்தால் டிரைவரால் அதை சரியான பார்க்க முடியவில்லை. திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து லாரி பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில் லாரியில் இருந்து 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 8 பேர் குழந்தைகள் ஆவார்கள். காயம் அடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள் ஆவார்கள்.

    • கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.
    • தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள்.

    கன்னியாகுமரி:

    ஆந்திர மாநிலம் அதலாபாத் பகுதியை சேர்ந்தவர் பாலகுருதி சத்யநாராயணா (வயது62). இவரது மனைவி ரமா (வயது 60). இவர்களும் அதே பகுதியை சேர்ந்த 50 ஐயப்ப பக்தர்களும் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.

    இவர்கள் வந்த பஸ் கன்னியாகுமரி நான்கு வழி சாலை பகுதியில் நிறுத்தி வைத்துவிட்டு அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். இதில் கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக தண்ணீர் கேன் ஏற்றி வந்த டெம்போ இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்கள் இருவரின் உடலும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலைக்கு சென்று விட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்து ஒன்றுக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.
    • உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

    புதுடெல்லி:

    சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி, சண்டிகாரில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. பின்னர், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

    இந்நிலையில், விரைவில் நாடு முழுவதும் இத்திட்டத்தை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

    அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்து மந்திரிகளின் வருடாந்திர கூட்டம், நிதின் கட்காரி தலைமையில் நடந்தது. அதில், சாலை பாதுகாப்பு, பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நிதின் கட்காரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது இத்தகவலை தெரிவித்தார். கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தின்படி, நாட்டின் எந்தவகையான சாலையிலும் மோட்டார் வாகன பயன்பாட்டின் மூலம் ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்களுக்கு நபர் ஒருவருக்கு விபத்து ஒன்றுக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.

    உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

    அதே சமயத்தில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பரிசோதனை அடிப்படையில் அமலுக்கு வந்ததில் இருந்து 20 சதவீத கட்டணமில்லா சிகிச்சை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
    • அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்

    வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் (49) காலமானார்.

    சமீபத்தில் அமெரிக்காவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது அக்னிவேஷ் விபத்தில் சிக்கினார்.

    இதைத்தொடர்ந்து நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.

    தனது மகனின் மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் அனில் அகர்வால் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று என் வாழ்வின் இருண்ட நாள். தனது குழந்தைக்கு விடை கொடுக்கும் பெற்றோரின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    ஒரு மகன் தனது தந்தைக்கு முன்பே செல்வது இயற்கை அல்ல. அவர் வெறும் என் மகன் மட்டுமல்ல, என் நண்பன் மற்றும் பெருமையும் கூட" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த பதிவில், " நாட்டில் எந்தக் குழந்தையும் பசியுடன் உறங்கக் கூடாது, எந்தக் குழந்தைக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது, ஒவ்வொரு பெண்ணும் தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும், ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் அர்த்தமுள்ள வேலை கிடைக்க வேண்டும் என்ற கனவை நாங்கள் இருவரும் பகிர்ந்துகொண்டோம்.

    நாங்கள் சம்பாதிப்பதில் 75 சதவீதத்திற்கும் அதிகமானதை சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்போம் என்று அக்னியிடம் நான் உறுதியளித்திருந்தேன்.

    இன்று, அந்த வாக்குறுதியை நான் புதுப்பித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழத் தீர்மானிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    அக்னிவேஷின் மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 

    • கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர்.
    • விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    காதலில் விழுந்தவர்கள் அதில் வெற்றி பெற பல்வேறு யுக்திகளை கையாளுவது சகஜமான விஷயம் தான். அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால் காதலிக்கும் பெண்ணை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரின் மனதையும் கவர வேண்டும் என்று நினைப்பர்.

    அப்படி நினைத்த ஒருவர், தான் காதலித்த பெண்ணின் மீது நண்பன் மூலமாக மோதச்செய்து விபத்தை ஏற்படுத்தி உள்ளார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையால், விபத்தை வாலிபர் திட்டமிட்டு அரங்கேற்றிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோன்னி மம்மூத்து பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் ராஜன்(வயது24). இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதுகுறித்து அந்த பெண்ணிடம் ரஞ்சித்ராஜன் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணோ பெரிய அளவில் விருப்பம் காட்டாமல் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனதை கவர்ந்து, அதன் மூலமாக இளம்பெண்ணை காதலிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தார். தான் காதலிக்கும் பெண்ணின் குடும்பத்தினரை கவர, விபத்து நாடகத்தை சினிமா பாணியில் அரங்கேற்ற திட்டமிட்டார்.

    அதாவது தான் காதலிக்கும் பெண்ணை ஏதாவது ஒரு வாகனத்தை விட்டு மோதச்செய்து, அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பதன் மூலம் பெண்ணின் குடும்பத்தினரிடம் நல்ல பெயர் வாங்குவதே அவரது திட்டம் ஆகும்.

     

    கைதானவர்கள்

    இதுகுறித்து தனது நண்பரான கோன்னி பையனமான் பகுதியை சேர்ந்த அஜாஸ்(19) என்பவரிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார். இதையடுத்து விபத்தை எங்கு வைத்து நடத்துவது? எப்படி அரங்கேற்றுவது? என்று இருவரும் திட்டமிட்டனர்.

    ரஞ்சித் ராஜன் மற்றும் அஜாஸ் வெவ்வேறு கார்களில் செல்வதும், அஜாஸ் தனது காரால் ரஞ்சித் ராஜன் காதலிக்கும் பெண்ணின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துவதுமே அவர்களது திட்டமாகும். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி இருவரும் வெவ்வேறு கார்களில் சென்றனர். பின்பு இருசக்கர வாகனத்தில் சென்ற ரஞ்சித்ராஜன் காதலிக்கும் பெண்ணை, அஜாஸ் தனது காரில் பின்தொடர்ந்து சென்றார். பத்தினம்திட்டா அருகே உள்ள வாழமுட்டம் பகுதிக்கு சென்றதும் அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தின் மீது காரால் அஜாஸ் மோதினார்.

    பின்பு அவர் சம்பவ இடத்தில் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். கார் மோதிய வேகத்தில் அந்த பெண் தூக்கிவீசப்பட்டார். அதில் அவரது கை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு காரில் ரஞ்சித் ராஜன் விபத்து நடந்த இடத்துக்கு வந்தார்.

    அவர் காயமடைந்து கிடந்த தான் காதலிக்கும் பெண்ணை மீட்டு, தனது காரில் கொண்டு சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து, அதனை ஓட்டியது அஜாஸ் என்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண்ணை காப்பாற்றிய ரஞ்சித்ராஜனின் நண்பர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்து நடந்தவுடன் சம்பவ இடத்துக்கு ரஞ்சித் ராஜன் உடனடியாக வந்தது எப்படி? என்ற கேள்வி போலீசாருக்கு எழுந்தது.

    இதனால் இந்த விபத்து தற்செயலாக நடந்திருக்காதோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அஜாஸ் மற்றும் ரஞ்சித் ராஜன் ஆகியோரிடம் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

    இறுதியில் ரஞ்சித்ராஜன் தனது நண்பருடன் சேர்ந்து விபத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரஞ்சித்ராஜன் மற்றும் அஜாஸ் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்தனர். காதலித்த பெண்ணின் குடும்பத்தினரை கவருவதற்காக, திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணின் மீது காரால் மோதச்செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.
    • விபத்தில் பலியான குமார் என்ற மாரிச்சாமி ஆண்டிபட்டியில் மருந்து கடை வைத்துள்ளார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மேலத்தெருவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வருடம் தோறும் அதே பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்ற குருசாமி தலைமையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அதன்படி மாரிச்சாமி (வயது55) தலைமையில் ராம்கி (35) மற்றும் 7 பேருடன் ஆண்டிபட்டியில் இருந்து நேற்று இரவு பாதயாத்திரையாக சபரிமலைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை அவர்கள் சின்னமனூர் அருகில் உள்ள கோட்டூர்-சீலையம்பட்டி சத்தியா கார்டன் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மேலப்பாடியூரை சேர்ந்த சிவக்குமார் (34) என்பவர் வேனில் ஐயப்ப பக்தர்களுடன் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணி அளவில் மற்றவர்கள் முன்னே சென்று விட மாரிச்சாமி, ராம்கி மட்டும் பின்னால் வந்துகொண்டிருந்தனர். இவர்கள் மீது அந்த வேன் பயங்கரமாக மோதியது. இதில் மாரிச்சாமி மற்றும் ராம்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சின்னமனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரன், மோகன்தாஸ், காந்தி ஆகியோர் வழக்குப்ப திவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான குமார் என்ற மாரிச்சாமி ஆண்டிபட்டியில் மருந்து கடை வைத்துள்ளார். இவரது மனைவி கல்பனாதேவி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். மகள் கல்லூரியிலும், மகன் 12-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    இதேபோல் விபத்தில் பலியான ராம்கி சலவை தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் 3-ம் வகுப்பும் மற்றொரு மகன் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் மீது சபரிமலைக்கு சென்ற வேன் மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பாதசாரிகள், பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது.

    மும்பையில் நேற்று இரவு 10 மணியளவில் மாநகராட்சிப் பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மும்பையின் பாண்டூப் (Bhandup) ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஸ்டேஷன் சாலையில், ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து மாநகர் அரசுப்பேருந்து (BEST bus) அங்கு நின்றிருந்த பாதசாரிகள் மற்றும் பேருந்துக்காகக் காத்திருந்தவர்கள் மீது மோதியது.

    இதில் 4 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்குவர். காயமடைந்த 9 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் சந்தோஷ் ரமேஷ் சாவந்த் (52) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் 

    • கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக இறந்தனர்.

    திருவண்ணாமலை வேங்கிக்காலை சேர்ந்தவர் சக்திவேல். இவரது தாயார் பவுனு அம்மாளுக்கு (வயது 70) உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி பவுனுஅம்மாளை காரில் விழுப்புரத்துக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தனர். காரில் சக்திவேலின் மனைவி கனகவல்லி (வயது 36). சக்திவேலின் தம்பி கோவிந்தராஜ் (42), அவரது மாமனார் கலைவாணன் (60, ஆகியோர் சென்றனர்.

    திருவண்ணாமலையை அடுத்த ராஜந்தாங்கல் பகுதியில் விழுப்புரம் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் எதிரே விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சின் முன் பக்கத்தில் சிக்கிக் கொண்ட கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லபட்டதில், காரின் ஒரு பக்க மேற்கூரை முழுவதும் நசுங்கி சேதமானது.

    இந்த சம்பவத்தில் சக்திவேலின் மனைவி கனகவல்லி, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் காரில் சென்ற கோவிந்தராஜ், கலைவாணன், பவுனு அம்மாள் ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் துடிதுடித்தனர். அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணனும், பவுனு அம்மாளும் பரிதாபமாக இறந்தனர். கோவிந்தராஜனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவல்லியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் மாமியார், மருமகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×