search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்"

    • திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல் கொண்ட மால் கோவில் உள்ளது.
    • பொங்கலை ஒட்டி 3 நாட்கள் திருவிழாவில் ஆல் கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து உருவாரம் வைத்து பக்தர்கள் வழிபடுவர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆல் கொண்ட மால் கோவில் உள்ளது. இங்கு கால்நடை வளம் பெருகவும் அவற்றிற்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவும் உருவாரங்களை வைத்து வழிபடுவது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது .குறிப்பாக பொங்கலை ஒட்டி 3 நாட்கள் நடக்கும் திருவிழாவில் ஆல் கொண்டமாலுக்கு பாலாபிஷேகம் செய்து உருவாரம் வைத்து வழிபட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். மார்கழி மாதம் துவங்கியதுமே தைப்பொங்கலை வரவேற்கும் ஆல் கொண்டமால் கோவில் திருவிழாவை கொண்டாடவும் உடுமலை பகுதி கிராம மக்கள் தயாராகி விடுவர்.

    இதையடுத்து புக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் கால்நடை உருவார பொம்மைகள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரமடைந்துள்ளது .முன்பு இந்த தொழிலில் அதிக அளவு குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு காரணங்களால் மண்பாண்டம் மற்றும் உருவார பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தொழிலாளர் குடும்பத்தினர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது சில குடும்பத்தினர் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து உருவார பொம்மை தயாரிப்போர் கூறும்போது, கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் சிறப்பாக கொண்டாட கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.அதற்கேற்ப உருவார பொம்மைகளை அதிக அளவு ஆர்வத்துடன் தயாரிக்கிறோம். குளத்து மண்ணில் மணல், சாணம் உள்ளிட்டவற்றை கலந்து பொம்மைகள் செய்வதற்கான மண் தயார் செய்கிறோம். தேவையான உருவங்களை ஈர மண்ணில் கொண்டு வந்து சூளையில் விட்டு வேகவைக்கிறோம். தொடர்ந்து சுண்ணாம்பு மற்றும் பல வர்ணங்களை தீட்டி விற்பனை செய்கிறோம். உருவாரங்களை பொறுத்து ரூ. 50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்கிறோம். போதியலாபம் கிடைக்காவிட்டாலும் பாரம்பரிய தொழிலை கைவிடாமல் தொடர்கிறோம் என்றனர்.   

    • முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன், ஆய்வகத்தில் ஊழியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என விவசாய தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • 100 நாள் வேலையை முறையாக 100 நாட்களும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர்,

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விவசாய தொழிலாளர் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார்.

    தாலுகா செயலாளர் அங்குதன் தொடங்கி வைத்தார். மாநிலதுணை தலைவர் வசந்தாமணி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு செயலாளர் முருகன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    100 நாள் வேலையை முறையாக 100 நாட்களும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும். வைகை ஆற்றில் வரும் தண்ணீர் வீனாக கடலில் கலக்கிறது. இதை முறைப்படுத்தி பரலை ஆறு, கூத்தன் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி, அனைத்து கண்மாய்கள்- ஊரணிகளுக்கு, குடி நீருக்கு, பாசனத்துக்கு, பயன் பெறும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயி களுக்கும் தட்டுபாடின்றி யூரியாவும், உரங்களும் வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர் புறவழி சாலை வேலையை உடனே தொடங்க வேண்டும். முதுகுளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில். சி.டி.ஸ்கேன், ஆய்வகத்தில் உள்ள ஊழியர் பற்றாக்கு றையை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பொருளாளர் கிறிசாந்துமேரி மற்றும் துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • இதில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் செல்ல சாமி உள்பட ஆண்கள், பெண் கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    நாகர்கோவில், அக். 27-

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூ ராட்சிகளிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆண்டிற்கு 150 நாட்கள் வேலையில் ரூ.600 கூலி வழங்க வேண்டும்.

    அரசு அறிவித்த தினக்கூலி ரூ.281-ஐ குறைக்காமல் வழங்கிடவும், நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் கிறிசாந்துமேரி மற்றும் துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் செல்ல சாமி உள்பட ஆண்கள், பெண் கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.
    • வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் .

    பல்லடம் :

    பல்லடம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு 1.12. 2019 முதல் மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பிரிவுகளுக்கு மின் இணைப்பு எண்ணிக்கையையும், வட்டம் மற்றும் மண்டலங்களை உருவாக்குவது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அனைத்து மின்வாரிய தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். காத்திருப்பு போராட்டத்தை தமிழ்நாடு மின்வாரிய அனைத்து மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பல்லடம் கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

    • தொழிலாளர்கள் சங்க போராட்டம் கைவிடப்பட்டது
    • அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பொது செயலாளர் முகமதுஅலிஜின்னா முன்னிலை வகித்தார்.

    அப்போது ஊராட்சியில் வேலை செய்யும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள் மற்றும் தூய்மைப்ப ணியாளர்களுக்கு 34 சதவீத அகவிலைப்படியை அமுல்படுத்த வேண்டும். 7- வது ஊதியக்குழு ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மூலம் ஊதியம் நேரடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தினை தொடர்ந்து துறை அதிகாரிகள் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்ததையடுத்து தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் ஆப்பரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தக்காளி சீசன் என்பதால் அதிக அளவிலான டெம்போ வேன்களில் தக்காளி வந்து இறங்குகிறது.
    • டெம்போ வேன்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை வாரச்சந்தைக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை கொண்டு வந்து கடைக்காரர்களிடம் விற்பனை செய்கின்றனர். தற்பொழுது தக்காளி சீசன் என்பதால் அதிக அளவிலான டெம்போ வேன்களில் தக்காளி வந்து இறங்குகிறது. ஆனால் உடனடியாக லோடுகளை இறக்க முடியாததாலும் கடைகள் முன்பு நீண்ட நேரம் வண்டியை நிறுத்தி வைப்பதாலும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

    இது தொடர்பாக விவசாயிகள் ,கலாசு தொழிலாளர்கள் , வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விவசாயிகள் தக்காளி வண்டிகளை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கலாசு தொழிலாளிகள் இது குறித்து கூறுகையில், வாரச்சந்தை வளாகம் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடை முன்பு வண்டியை நிறுத்தக்கூடாது என்கின்றனர். எனவே காய்கறிகளை ஏற்றி இறக்க முடியவில்லை என்றனர். விவசாயிகள் கூறுகையில் லோடு வந்தால் இறக்க ஆட்கள் வருவதில்லை. முதல் நாள் வந்தால் மறுநாள் வருவதில்லை.

    அதனால் தான் இன்று வண்டியை நிறுத்தி உள்ளோம். இனி நாங்களே இறக்கி கொள்கிறோம். கூலியை அவர்கள் வைத்துக் கொள்ளட்டும் என்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த உடுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.

    • சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு
    • புதிய ஊதிய உயர்வு வழங்கும் வரை உள்ள நிலுவை தொகையை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்குவது என முடிவு

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் ஆரல்வாய் மொழி, ஆண்டிப்பட்டி, எட்டயபுரம், அறந்தாங்கி, ஊத்தாங்கரை, ராமநாத புரம் ஆகிய 6 இடங்களில் கூட்டுறவு நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 31.12.2020-ம் ஆண்டு முடிவுற்றது.

    இதையடுத்து மத்திய தொழிற்சங்கங்கள் கைத்தறி துறை உதவி இயக்குன ருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி கைத்தறி துறை அமைச்சர் முன்னிலையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வும், ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவுற்ற மாதத்தில் இருந்து புதிய ஊதிய உயர்வு வழங்கும் வரை உள்ள நிலுவை தொகையை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டதாக தொழிற்சங்கம் சார்பில் கூறப்பட்டது.

    ஆனால் அறிவிக்கப்பட்ட புதிய ஊதிய உயர்வு, நிலுவை தொகை இதுவரை வழங்கப்பட வில்லை. எனவே, புதிய ஊதிய உயர்வையும், நிலுவை தொகையையும் தொழிலாளர்கள் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்தார்.
    • மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துலட்சுமி பிணமாக கிடந்தார்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவரது மனைவி முத்துலட்சுமி (62). இவர்களது மகன்கள் அருண்குமார், ஜீவானந்தம். இதில் அருண்குமார் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். ஜீவானந்தம் குடும்பத்துடன் கோவையில் குடியிருந்து வருகிறார். கோபால் தனது மகன் அருண்குமாருடன் சேர்ந்து கதர் துண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் கோபால் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் முதல் தளத்தில் 6 வீடுகள் மற்றும் கீழ் தளத்தில் 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். கீழ்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் கோபால் தனது மனைவி முத்துலட்சுமியுடன் வசித்து வந்தார்.

    நேற்று மதியம் கோபால் வழக்கம் போல் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் அருகில் உள்ள தனது நிறுவனத்திற்கு சென்றார். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். மாலை 6 மணிக்கு கோபால் வீட்டிற்கு வந்தபோது வீடு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துலட்சுமி பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.

    இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் துணை கமிஷனர் அபினவ்குமார், உதவி கமிஷனர்கள் அனில்குமார், நல்லசிவம், இன்ஸ்பெக்டர்கள் தாமோதரன், ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று முத்துலட்சுமியின் உடலை பார்வையிட்டனர். அப்போது முத்துலட்சுமியின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. முத்துலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து அவரை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.25லட்சம் இருக்கும். அதன் பின்னர் முத்துலட்சுமியின் உடலை துக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் ஹண்டர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கொலை நடந்த வீட்டின் வளாகம் மற்றும் அங்கிருந்து வெளியே சென்று சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதன் பின்னர் போலீசார் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலையாளிகள் தாங்கள் வந்து சென்ற தடயங்களை கண்டுபிடிக்க முடியாத வகையில் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். முத்துலட்சுமிக்கு நன்றாக தெரிந்த நபர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். 2 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. எனவே அந்த கட்டிடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த கட்டிடத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    அவர்கள் அப்பகுதியில் உள்ளகண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் முத்துலட்சுமி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் யார், வடமாநில கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டனரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கொலை நடந்த வீட்டின் அருகே கட்டிட வேலை செய்த கொடுமுடி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் 42 பவுன் நகை மற்றும் ரூ.9.82 லட்சம் பணம் இருந்தது. அது பற்றி கேட்ட போது அவர்கள் முன்னுக்குபின் முரணான பதில்களை தெரிவித்தனர். இதனால் அவர்கள் முத்துலட்சுமியை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள்அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீசார் கொள்ளை சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புச்சாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புச்சாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

    இந்த தரவு தளத்தில் கட்டுமான தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், தச்சுவேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், முடி திருத்துவோர், தெரு வியாபாரிகள் உள்ளிட்ட 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படாத அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

    அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. http://eshram.gov.in என்ற இணையதளத்தில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வழிவகை உண்டு.

    பதிவு செய்து கொள்ளும் தொழிலாளர்களின் வயது 18 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

    வங்கி கணக்கு புத்தகம் போன்ற தேவையான விவரங்களும், இத்தரவுகளை பதிவேற்றம் செய்த பிறகு பயனாளிகளுக்கு 12 இலக்கு எண் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள், வேலை காரணங்களுக்காகவோ அல்லது வேறு எங்கும் புலம் பெயர்ந்தாலும் அரசிடம் இருந்து பெற வேண்டிய சலுகைகளை தொடர்ந்து பெற இந்த அடையாள அட்டை உதவியாக இருக்கும்.

    இந்த தரவுதளத்தில் இணைத்து கொள்ளும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்கப்படும். எனவே, சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த தரவு தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
    • மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே கல்லடிவிளையை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சிவகுமார் (வயது 32). மீன்பிடி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா டேனியலுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அம்மாண்டிவிளையில் செல்லும்போது அங்கு வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அப்பகுதியினர் இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டேவிட் ராஜா டேனியல் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி கோடிமுனையை சேர்ந்த ஆன்றனிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொ.மு.ச நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • போக்குவரத்து தொழிலாளர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சம்பள பேச்சு வார்த்தையின் முடிவுகள் அமையும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    சிவகாசி

    தமிழக போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் தலைவர் மு.சண்முகம் எம்.பி. மற்றும் பேரவையின் பொருளாளர் நடராஜன் ஆகியோருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனைக்கு பின் தொ.மு.ச. நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சீரழிக்கப்பட்ட போக்குவரத்து துறையை மறுசீரமைப்பு செய்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி போக்குவரத்துத்துறை அமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறார்.

    பொதுவாகவே விடுப்பு எடுக்காமல் நீண்டகாலம் பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களின் மீது இதுவரை கடுமையான நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய அமைச்சர் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்து வேலைக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

    அதுபோலவே போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு விரயம் செய்துவிட்டனர். தொழிலாளர்களின் பாதுகாவலனாக எப்போதுமே திகழ்கின்ற தி.மு.க. அரசு தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் விரைவாகக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.

    போக்குவரத்து தொழிலாளர்கள் தி.மு.க.வின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக தொ.மு.ச. நிர்வாகிகளுடன் இணைந்து அமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும் வகையில் சம்பள பேச்சு வார்த்தையின் முடிவுகள் அமையும் என்று தொ.மு.ச. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    ராமநாதபுரம்

    நாளை (12-ந்தேதி) குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு சாரா அமைப்புகள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து அரண்மனை வரை விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தலைமையில் நடந்தது. தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர், சைல்டு லைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் மனிதவள ஆள்கடத்தல் தடுப்புபிரிவு குழுவினர் கலந்து கொண்டனர். கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    ×