search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லடம்"

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81- ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளது. இதற்கிடையே திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டுகிறது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) சுப முகூர்த்த நாள் என்பதால் கார் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்த வண்ணம் சென்றது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. இதற்கிடையே போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் -ஒழுங்கு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அப்படி இருந்தும் அதிகமான வாகன போக்குவரத்தால் பல்லடம் நகரை கடந்து செல்வதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    • செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.
    • அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் காந்தி ரோட்டில் செல்வ விநாயகர், பாலதண்டபாணி கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.

    பின்னர் திருப்பணி செய்ய பாலாலய பூஜை நடைபெற்றது.இதை தொடர்ந்து சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டு, அருகே உள்ள பொன்காளியம்மன் கோவிலில், தனி அறையில் பாதுகாப்புடன் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கோவில் கட்டுவதற்கு முன் அங்கு பாசிப்பயிர், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்களை வளர்த்து அதனை கால்நடைகளை விட்டு மேய விட வேண்டும் என்பது ஐதீகம். இதன்படி செல்வ விநாயகர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் கட்டப்பட உள்ள இடத்தில் மாடுகள், மற்றும் குதிரை ஆகியவற்றை விளைந்த தானிய பயிர்களை மேய விட்டனர்.

    இதுகுறித்து திருப்பணி குழுவினர் கூறுகையில், செல்வ விநாயகர், பால தண்டபாணி திருக்கோவில் கட்டுவதற்காக அரசின் ஸ்தபதியிடம் கட்டுமான வரைபடம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கட்டுமான வரைபடம் வந்தவுடன் அதனை அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் திருப்பணிகள் துவங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.நீண்ட காலமாக திருப்பணி நடைபெறாமல் இருந்த செல்வ விநாயகர், தண்டபாணி கோவிலில் தற்பொழுது திருப்பணிகள் நடைபெறுவது பல்லடம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    பல்லடம்:-

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளிநகர் தொட்டி அப்புச்சி கோவில் பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து சுகாதாரத் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன்படி அந்தப்பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.இதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் டாக்டர் காவியா, வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துக்குமாரசாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடுவதில் 2பேருக்கும் இடையே தொழில் போட்டியும் இருந்து வந்தது.
    • கதிரவன் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய படி செல்வகுமார் மீது மோதினார்

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார், பா.ஜ.க., ஓ. பி .சி. அணி நிர்வாகி.மேலும் பொக்லைன் எந்திரம் சொந்தமாக வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். பொங்கலூர் எஸ்.ஏ.பி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவரும் பொக்லைன் எந்திரம் வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்.

    இந்நிலையில் எஸ்ஏபி., ரெசிடென்சி குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சாக்கடை அமைப்பதில் கதிரவனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விடுவதில் 2பேருக்கும் இடையே தொழில் போட்டியும் இருந்து வந்தது.

    இந்தநிலையில் நேற்று மாலை செல்வகுமாரின் எதிர்ப்பை மீறி கதிரவனுக்கு சொந்தமான பொக்லைன் எந்திரத்தை கொண்டு சாக்கடை கால்வாயை மண் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் பொக்லைன் வாகனத்தின் குறுக்கே நின்று கொண்டு, அதனை தடுத்து ஆபரேட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையடுத்து அங்கு சென்ற கதிரவன் தனது பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுனர் வசந்திடம், எதிரே நின்று கொண்டிருந்த செல்வகுமார் மீது ஏற்றும் படி கூறியதாக தெரிகிறது. வசந்த் மறுத்ததால் அவரை இறக்கி விட்ட கதிரவன் பொக்லைன் எந்திரத்தை இயக்கிய படி செல்வகுமார் மீது மோதினார்.பலமாக மோதியதில் செல்வகுமார் எந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டுவரவே, கதிரவன், வசந்த் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அப்பகுதியினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனிடையே இந்த கொடூர கொலை முயற்சி சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக படம் எடுத்து வாட்ஸ் அப் , பேஸ்புக் என சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி பொது மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் கதிரவன், வசந்த் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.மேலும் பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • மாதாந்திர மின் பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பல்லடம் :

    பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :- பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகர், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் கல்குவாரி உள்ளது.
    • பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் தனியார் கல்குவாரி உள்ளது. இன்று காலை அங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாபன்சிங்(வயது 48) என்பவர் மண் சரிவில் சிக்கிக்கொண்டார்.

    இதையடுத்து மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பாபன்சிங் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • பல்லடம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     பல்லடம் :

    கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஓன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடம் அருகே சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் வேன் நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த குமரேசன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பல்லடம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் நடைபெறவுள்ளது.
    • பொதுமக்கள் அரசு இ- சேவை மையத்தின் இணையதளம் மூலம் மனுக்களை பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் பல்லடம் உள் வட்டம், கரடிவாவி உள் வட்டம், சாமளாபுரம் உள் வட்டம், பொங்கலூர் உள் வட்டம் ஆகிய கிராம பகுதிகளுக்கு ஜமாபந்தி நடைபெறவுள்ளது. ஜமாபந்தி தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் அரசு இ- சேவை மையத்தின் இணையதளம் மூலம் மனுக்களை பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்.

    மனுக்கள் மீது ஜமாபந்தி நடைபெறும் நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என்று பல்லடம் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு பணியாளர் உள்ளார்.
    • நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு, நகர்மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமையில் கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் பின் வருமாறு:- பாலகிருஷ்ணன், (தி.மு.க.):- கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் மற்றும் சப்பை தண்ணீர் விநியோகம் செய்ய ஒரே ஒரு பணியாளர் உள்ளார். அவரையும் வரி வசூல் செய்ய அழைத்து விடுகின்றீர்கள். அதனால், தண்ணீர் சப்ளை பாதிக்கிறது .எனவே கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும்.

    ராஜசேகரன், (தி.மு.க.):- நகராட்சி சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு, நகர் மன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு இல்லை. சென்ற வாரத்தில் நகராட்சி கூட்ட அரங்கில், அமைச்சர் கலந்து கொண்ட விழா நடைபெற்றது. அதற்கு அழைப்பு இல்லை. பெரிய திட்டப் பணிகள் நடைபெறும் போது அதன் துவக்க விழாவிற்கும் அழைப்பு விடுப்பதில்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள். நகராட்சி தலைவர் கவிதா மணி : இனி இது போல் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த கூட்டத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த 6 வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி : - ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்ததை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளேன். என்று பேசினார் அப்போது இடைமறித்த 18 வது வார்டு பாஜக. நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா, நகர்மன்ற கூட்டத்தில் உள்ளூர் விஷயத்தை பேசுங்கள் என கூறினார். இதற்கு பதில் அளித்த ஈஸ்வரமூர்த்தி பிரதமருக்கு நன்றி தெரிவித்து நீங்கள் இந்த கூட்டத்தில் பேசலாமா, நான் எனது கருத்தை இங்கு பதிவு செய்வதற்கு உரிமை உள்ளது என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் இருவரையும் சமரசம் செய்தார். பின்னர் 12 வது வார்டு அண்ணா நகரில் ரூ.15 லட்சம் செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டி அமைப்பது உள்ளிட்ட 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, சினேகா சமூக சேவை மையம் ஆகியவை இணைந்து உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவியர் கலந்து கொண்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பல்லடம் அரசு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிகளில், பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் சக்தி தேவி, சுதாகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், மற்றும் சினேகா மையத்தைச் சேர்ந்த ரோஸ்லின் மேரி மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்தில், கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி,மதுரை போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு ரோட்டில் இறக்கி விடப்படுவதால் பயணிகள் அவதிபடுகின்றனர். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    இரவு மற்றும் காலை நேரங்களில், திருச்சி, மதுரை போன்ற வெளியூர் செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். இது ஒரு புறம் பயணிகளுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்துகிறது மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.

    • 18 வாா்டுகளிலும் மக்களின் குறைகளை தீா்க்க தீவிர கவனம் செலுத்தப்படுகிறது.
    • மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுக்கப்படும்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை சமா்ப்பிக்கும் வகையில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கூறியதாவது: -

    பல்லடம் நகராட்சியில் உள்ள 18 வாா்டுகளிலும் மக்களின் குறைகளை தீா்க்க தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் குறை தீா்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகள், நிறைகள், பிரச்சினைகளை தெரிவிக்க வேண்டி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் புகாா் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக நேரத்தில் பொதுமக்கள் தங்களது மனுக்களை இப்பெட்டியில் செலுத்தலாம். இந்த புகாா் மனு பெட்டி ஒவ்வொரு வாரமும் திறக்கப்பட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    ×