search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுவார்த்தை"

    • பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது.
    • அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், வரும் 6ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது.

    தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • தேர்தல் தேதி அறிவிப்பு வராவிட்டாலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
    • அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் விவரங்களை விரைவிலேயே முழுமையாக அறிவிக்க உள்ளன.

    திருவனந்தபுரம்:

    மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் சில நாட்க ளுக்கும் வெளியிடும் என்று கருதப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வராவிட்டாலும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்க தொடங்கிவிட்டன. அந்த கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுபவர்களின் விவரங்களை விரைவிலேயே முழுமையாக அறிவிக்க உள்ளன.

    இந்நிலையில் கேரள மாநில மக்களவை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடுமா? என்பது சந்தேகமாக உள்ளது. தேர்தலில் போட்டியிடும் விவகாரத்தில் அந்த கட்சி மத்தியில் குழப்பம் நிலவுவதால் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் கட்சியின் புதிய தலைமை பொறுப்பேற்று சில மாதங்களே ஆகிறது. கேரளாவில் போட்டியிடுவது குறித்தும், தனது நிலைப்பாடு குறித்தும் இதுவரை எந்தமுவும் எடுக்கவில்லை என்று ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அப்படி தேர்தலில் போட்டியிடாவிட்டால் யாருக்கு ஆதரவளிக்கும் என்பதும் தெரியவில்லை. கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை ஆம்ஆத்மி கடைபிடிக்கும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கேரளாவில் ஆம்ஆத்மி கட்சி கடந்த 2014-ம் ஆண்டு 11 தொகுதிகளில் போட்டியிட்டது. கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • நாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்துகொள்ள முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளன.

    இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியுடன் இன்று 2-வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. குழு தலைவர் டி.ஆர்.பாலு முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.

    20 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு சுப்பராயன் எம்.பி., நிருபர்களை சந்தித்தார்.

    40 தொகுதிகளிலும் தி.மு.க. அணி வெற்றி பெறும் என்பதை தமிழ்நாட்டின் கிராமப்புற நகர்ப்புற கள நிலவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

    அதன் அடிப்படையில் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தைக்கு 2-வது கட்டமாக நாங்கள் வந்தோம். பேச்சுவார்த்தை மிகமிக சுமூகமாக நடைபெற்றது. நல்ல முறையில் திருப்தி அளிக்கிற வகையில் பேச்சு வார்த்தை நடந்தது.

    நாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு தொகுதி கேட்டிருக்கிறோம். அவர்கள் பரிசீலிப்பதாக கூறி உள்ளனர். 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருகிற 3-ந் தேதி வர உள்ளேம். அப்போது தொகுதி உடன் பாடு ஏற்பட்டுவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்கனவே திருப்பூர் மற்றும் நாகை தொகுதிகள் தருவதாக கூறப்பட்டிருந்த நிலையில் இப்போது கூடுதலாக ஒரு தொகுதி கேட்பதால் இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாக வில்லை.

    • கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.
    • தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைவதால், 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றன.

    அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கேரள மாநிலத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது மட்டுமின்றி, தங்களது கூட்ட ணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் வயநாடு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, பாலக்காடு, திருச்சூர், ஆலத்தூர், காசர்கோடு ஆகிய 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.

    அந்த தொகுதிகள் மட்டுமின்றி, மீதமுள்ள 5 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

    காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், த.மு.மு.க. தலைவர் குஞ்சாலிக்குட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனக்காடு சயீத் சாதிக் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி இரு கட்சி தலைவர்களும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை திருப்தி கரமாக இருந்ததாக கூறி யுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    அதுபற்றி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் கூறும்போது, ராஜ்யசபா சீட் காலியாகும்போது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏற்க தயாராக இருந்தால், அதை அவர்களுக்கு நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தார். தங்களது தொகுதி பங்கீடு முடிவுகளை நாளை (27-நதேதி) அறிவிப்போம் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

    • கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.
    • கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

    கடந்த தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

    இந்த முறை கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியை கேட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு பொதுத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் அல்லாத பிற சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவினை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எடுத்துள்ளார்.

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திருமாவளவன் பொதுத் தொகுதியின் அவசியத்தை விளக்கி கூறினார்.

    ஆனால் தி.மு.க. தரப்பில் சிதம்பரம் மற்றும் திருவள்ளூர் தொகுதியை ஒதுக்க விரும்புகிறது. பொதுத் தொகுதியை தவிர்க்குமாறு வலியறுத்தப்பட்டது. ஆனால் கட்டாயம் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் விடுதலை சிறுத்தையுடன் 2-வது கட்ட பேச்சு வார்த்தைக்கு இன்னும் அழைப்பு கொடுக்கப் படவில்லை என்று கூறப்படுகிறது. இன்று மாலையில் புதுப்பிக்கப்பட்ட கலைஞர் நினைவிடம் திறப்பு விழா நடைபெறுவதால் நாளை (27-ந்தேதி) பேச்சு வார்த்தைக்கு அழைக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

    எனவே அக்கூட்டத்தில் 3 தொகுதிகளை கேட்டு பெறுவதில் திருமாவளவன் உறுதியாக இருக்கிறார். தி.மு.க.வும் அவரது கோரிக்கையை பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

    • பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

    புதுடெல்லி:

    வேளாண் விலை பொருட்களின் குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13-ந்தேதி தொடங்கினர்.

    பஞ்சாபில் இருந்து புறப் பட்ட விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இன்று 6-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது.

    போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மூன்று முறை நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இன்று 4-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

    பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் கூறும்போது, அரசுடன் நான்காவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக கூறியுள்ளது என்றார்.

    இந்நிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வருகிற 21-ந்தேதி உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 இடங்களை எப்படியாவது கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் உறுதியாக உள்ளனர்.
    • வருகிற 17-ந் தேதி கமல்ஹாசன் சென்னை திரும்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப் படுத்தியுள்ளன.

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்டவை தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.

    இந்த பேச்சுவார்த்தையின் போது தி.மு.க.விடம் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியுள்ளன.

    தி.மு.க. கூட்டணியில் புதிதாக இடம்பெற உள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடனும் விரைவில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணியில் கோவை, தென் சென்னை, மதுரை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளை குறி வைத்து கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார்.

    3 இடங்களை எப்படியாவது கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக வெளிநாட்டில் இருக்கும் கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    வெளிநாட்டில் இருந்து கமல்ஹாசன் நேற்றே சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வருகிற 17-ந் தேதி கமல்ஹாசன் சென்னை திரும்புவதற்கு வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இதன் பின்னர் அடுத்த வாரம் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் கமல் ஹாசன் பேச்சு நடத்த வாய்ப்பு இருப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை திரும்பியதும் கமல்ஹாசன் தி.மு.க. தலை வர் மு.க.ஸ்டாலினை சந் தித்து பேசவும் திட்டமிட்டு உள்ளார். 17-ந் தேதி கமல் ஹாசன் சென்னை திரும்பி னாலும் உடனடியாக சந்திப்பு நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. வருகிற 22-ந் தேதி வரைவில் சட்ட சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டம் முடிந்த பின்னர் 23 அல்லது 24 ஆகிய தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, கமல்ஹாசன் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
    • கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கழகத்தின் சார்பில் கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சி. சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, பா. பென்ஜமின் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கு கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், இரா. விசுவநாதன், சி.பொன்னையன், பொள்ளாச்சி வி. ஜெயராமன், டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செ. செம்மலை பா. வளர்மதி, ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், டாக்டர் மு. தம்பிதுரை, கே.ஏ. செங்கோட்டையன், என். தளவாய்சுந்தரம், செல்லூர் கே. ராஜூ, ப. தனபால், கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், எஸ். கோகுல இந்திரா, உடுமலை கே. ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி இடம் பெற்றுள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் தேர்தல் சம்பந்தமான விளம்பரப் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.

    இதில், டாக்டர் சி. விஜய பாஸ்கர், கடம்பூர் சி. ராஜூ, கே.டி. ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ண மூர்த்தி, டாக்டர் பி. வேணு கோபால், டாக்டர் வி.பி.பி. பரமசிவம், ஐ.எஸ். இன்பதுரை, எஸ். அப்துல் ரஹீம், வி.வி.ஆர். ராஜ் சத்யன், வி.எம். ராஜலெட்சுமி இடம் பெற்றுள்ளனர்.

    இவர்களுக்கு, கழக உடன் பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

    • அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
    • தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 9-ந் தேதி ஸ்டிரைக் கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.

    இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

    இதன்படி சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சு நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் நிதி செலவாகும் என்பதால் அதுபற்றிய விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.

    இதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படுவதால் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி பல்லவன் இல்லத்தில் நாளை காலை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இதில் அண்ணா தொழிற் சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் நாளை மறுநாள் (8-ந் தேதி) தொழிலாளர் நல ஆணையாளரும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை நாளை மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.

    இதற்கிடையே அமைச்சருடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற போக் குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

    பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலை படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடுவையும் அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
    • இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையும் மாற்றி அமைத்தது. பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் இலங்கையில் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே கடந்த ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இதையடுத்து அவர் நாட்டில் நிலவி வந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீளுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இலங்கையில் வசித்து வரும் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் கட்சி தலைவர்களுடன் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகள் வழங்குதல், நல்லிணக்கம், மீன்பிடி தொடர்பாக சட்டங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    மேலும் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், அவர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    • இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    கடலூரில் பலத்த மழை பெய்த காரணத்தினால் 28-வது வார்டு திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீதேவி நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் சக்திவேல், பா.ஜனதா மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நத்தவெளி- சரவணா நகர் இணைப்பு சாலையில் ஆகாய தாமரைகளுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    • பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
    • கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டனந்தல் என்ற கிராமத்தில் கடந்த 10 தினங்களாக குடிநீர் முறை யாக வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை காட்டணந்தல் கிராம மக்கள் தங்கள் ஊரில் கள்ளக்குறிச்சியிலிருந்து ஈரியூர் கிராமம் செல்லக் கூடிய அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு எழுந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பழனி வேல், ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ஆறுமுகம், கிராம ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி, மற்றும் சின்ன சேலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என உறுதி அளித்தனர். பின்னர் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் காட்டனந்தல் கிராமத்தில் இன்று பரபரப்பு காணப்பட்டது.

    ×