என் மலர்
இந்தியா

சண்டை நிறுத்தம்: இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை?
- 4 நாட்கள் போரில் பாகிஸ்தான் 140 பேரை பலி கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.
- அமெரிக்கா கேட்டுக் கொண்டதால் இந்தியா சமரசமாக செல்ல சம்மதம் தெரிவித்தது.
புதுடெல்லி:
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த 7-ந்தேதி இரவு இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்டன. இதில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. ஆனால் இந்தியாவின் வலிமையான வான் பாதுகாப்பு அமைப்பு அந்த ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் நடுவானில் தடுத்து அழித்தன. இதனால் இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை.
அதே சமயத்தில் 8, 9, 10-ந்தேதிகளில் 3 நாட்கள் பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியாவின் முப்படைகள் மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டன. 4 நாட்கள் நடந்த தொடர் தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்தது.
நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், 35-க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். இதனால் 4 நாட்கள் போரில் பாகிஸ்தான் 140 பேரை பலி கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நேற்றும், இன்றும் போரில் தாங்கள் வெற்றி பெற்றது போல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இதையடுத்து இந்திய ராணுவம் தரப்பில் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக ஆதாரப்பூர்வ செய்திகள் இன்று வெளியிடப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ராணுவ நிலைகள், விமானப்படை நிலையங்கள், ரேடார் சாதனங்கள் இருந்த பகுதிகள், முன்பு எப்படி இருந்தன? இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு அவை எப்படி உருக்குலைந்து கிடக்கின்றன என்பதை செயற்கை கோள் படங்களை வெளியிட்டு இந்திய ராணுவம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 11 ராணுவ தளங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெள்ள தெளிவாக தெரிய வந்தது.
அது மட்டுமின்றி பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்ட செயற்கைகோள் படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் தலைமை பயிற்சி முகாம் தரைமட்டமாக்கப்பட்ட படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த அடி கொடுத்து இருப்பதும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்திய விமானப்படை நேற்று முன்தினம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி வரை ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவ தலைமையகத்தின் ரேடார் நிலையம், வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை அழித்து இருப்பதற்கு இந்திய விமானப்படைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மேலும் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் போலாரி விமானப்படை தளம் இந்திய ஏவுகணைகளால் துவம்சம் செய்யப்பட்டது. செயற்கைகோள் படங்கள் மூலம் துல்லியமாக தெரிய வந்துள்ளன. அந்த விமானப்படை தளத்தில் கட்டிடங்கள் நொறுக்கப்பட்டு இருப்பது தெள்ள தெளிவாக பாதுகாப்பு அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.
சீன செயற்கைகோள் படங்களும் பாகிஸ்தானில் விமானப்படை தளங்கள் நொறுக்கப்பட்டு இருப்பதை துல்லியமாக காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமாபாத் அருகே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நூகான் விமானப்படை தளம் பெரும்பகுதி அழிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கான செயற்கைக் கோள் படத்தையும் இந்தியா வெளியிட்டு இருக்கிறது. இந்த விமானப்படை தளத்தில் ஓடும் தளங்கள் முற்றிலும் சேதம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த விமானப்படை தளத்தை இனி பயன்படுத்த இயலாது என்ற நிலை உருவாக்கப்பட்டதன் எதிரொலியாகத் தான் பாகிஸ்தான் பயந்து பணிந்து அமெரிக்காவுடன் கெஞ்சி இந்தியாவுடன் சமரசம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா கேட்டுக் கொண்டதால் இந்தியா சமரசமாக செல்ல சம்மதம் தெரிவித்தது. அதோடு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒத்துக்கொண்டது.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 19 நாட்களாக பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தனர். நேற்று பீரங்கி தாக்குதல் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் எல்லையில் அமைதி நிலவியது.
மீண்டும் பீரங்கி தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா பாகிஸ்தானை எச்சரித்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.






