search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை - கட்டிட தொழிலாளர்கள் 3பேர் சிக்கினர்
    X

    கொலை செய்யப்பட்ட முத்துலட்சுமி.

    திருப்பூரில் பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை - கட்டிட தொழிலாளர்கள் 3பேர் சிக்கினர்

    • வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்தார்.
    • மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துலட்சுமி பிணமாக கிடந்தார்.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவரது மனைவி முத்துலட்சுமி (62). இவர்களது மகன்கள் அருண்குமார், ஜீவானந்தம். இதில் அருண்குமார் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். ஜீவானந்தம் குடும்பத்துடன் கோவையில் குடியிருந்து வருகிறார். கோபால் தனது மகன் அருண்குமாருடன் சேர்ந்து கதர் துண்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். மேலும் கோபால் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் முதல் தளத்தில் 6 வீடுகள் மற்றும் கீழ் தளத்தில் 3 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். கீழ்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் கோபால் தனது மனைவி முத்துலட்சுமியுடன் வசித்து வந்தார்.

    நேற்று மதியம் கோபால் வழக்கம் போல் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு, மீண்டும் அருகில் உள்ள தனது நிறுவனத்திற்கு சென்றார். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்தார். மாலை 6 மணிக்கு கோபால் வீட்டிற்கு வந்தபோது வீடு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்றபோது படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் முத்துலட்சுமி பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.

    இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் துணை கமிஷனர் அபினவ்குமார், உதவி கமிஷனர்கள் அனில்குமார், நல்லசிவம், இன்ஸ்பெக்டர்கள் தாமோதரன், ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று முத்துலட்சுமியின் உடலை பார்வையிட்டனர். அப்போது முத்துலட்சுமியின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன. முத்துலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து அவரை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

    பின்னர் முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.25லட்சம் இருக்கும். அதன் பின்னர் முத்துலட்சுமியின் உடலை துக்கில் தொங்கவிட்டுச் சென்றுள்ளனர்.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் ஹண்டர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் கொலை நடந்த வீட்டின் வளாகம் மற்றும் அங்கிருந்து வெளியே சென்று சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதன் பின்னர் போலீசார் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலையாளிகள் தாங்கள் வந்து சென்ற தடயங்களை கண்டுபிடிக்க முடியாத வகையில் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். முத்துலட்சுமிக்கு நன்றாக தெரிந்த நபர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். 2 தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. எனவே அந்த கட்டிடத்தின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த கட்டிடத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    அவர்கள் அப்பகுதியில் உள்ளகண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் முத்துலட்சுமி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் யார், வடமாநில கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டனரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கொலை நடந்த வீட்டின் அருகே கட்டிட வேலை செய்த கொடுமுடி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் 42 பவுன் நகை மற்றும் ரூ.9.82 லட்சம் பணம் இருந்தது. அது பற்றி கேட்ட போது அவர்கள் முன்னுக்குபின் முரணான பதில்களை தெரிவித்தனர். இதனால் அவர்கள் முத்துலட்சுமியை கொன்று நகை-பணத்தை கொள்ளையடித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள்அச்சத்தில் உள்ளனர். இந்தநிலையில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே போலீசார் கொள்ளை சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×