search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மாவட்டங்களில் மழை"

    • கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.
    • நெல்லை கே.டி.சி. நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

    நெல்லை கே.டி.சி. நகரில் காலை 11 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடக்கும் விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்குகிறார்.

    • தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    • அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும்.

    சென்னை:

    தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை. ஒரு சில பகுதிகளில் மழை வெள்ளம் வடியவில்லை. அரசு எந்திரம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழை) மதியம் 1-ந் தேதி ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும் லேசான மழை பெய்யும்.

    நாளை (30-ந் தேதி) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

    31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் உஷார் நிலையில் உள்ளன. வானிலை ஆய்வு மையத்தின் தகவலை தொடர்ந்து 4 மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், முன் எச்சரிக்கை நட வடிக்கையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும். யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், அணைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்ற பயம் நிலவுகிறது. ஆனால் அத்தகைய நிலை ஏற்படுமானால் தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
    • முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களது வீடுகள் மற்றும் உடைமைகள் முழுவதும் சேதமானது. தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் சேதமான ஆவணங்களுக்கு மாற்று ஆவணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதமான ஆவணங்களை பெறுவதற்கு இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி வட்டத்தில் தூத்துக்குடி தாசில்தார் அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களிலும், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பழைய தாசில்தார் அலுவலகம், தாசிதார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஏரல் வட்டத்தில் பழையகாயல் மரிய அன்னை மேல்நிலைப்பள்ளி, நாசரேத் கிராம நிர்வாக அலுவலகம், ஆழ்வார்திருநகரி கிராம நிர்வாக அலுவலகம், பெருங்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சாயர்புரம் கிராம நிர்வாக அலுவலகம், ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    திருச்செந்தூர் வட்டத்தில் ஆத்தூர் சமுதாயநலக்கூடம், புன்னைக்காயல் புனித வளனார் திருமணமண்டபம், சுகந்தலை சமுதாய நலக்கூடம், திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகம், மெஞ்ஞானபுரம், பரமன் குறிச்சி, மானாடு தண்டு பத்துக்கு வெள்ளாளன் விளை சர்ச் மகால், நங்கைமொழி, லெட்சுமி புரம், செட்டியா பத்து, உடன்குடிக்கு உடன்குடி வருவாய் அலுவலகம், சாத்தான்குளம் வட்டத்தில் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது. சாதிச்சான்று, இருப்பிச்சான்று, வருமானச்சான்று, வாரிசுச்சான்று, விதவை, ஆதரவற்றோர் சான்று உள்ளிட்டவைகள் வருவாய்த்துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.

    ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன்கார்டு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, பட்டா நகல்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம்.கார்டு, டிரைவிங் லைசென்சு, பத்திர ஆவணங்கள் மற்றும் சிலிண்டர் இணைப்பு புத்தகம் ஆகியவைகள் சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.

    எனவே இன்றும், நாளையும் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மழை வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து தொடர்ந்து களத்தில் நின்று, தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
    • கண் பார்வை குறைபாடுள்ள 7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி. அவரை அருகில் அழைத்து பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16, 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பேய் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் அந்த பகுதிகளை பெருமளவில் பாதித்தது.

    இந்தநிலையில் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, அந்த பகுதியில் மழை வெள்ளம் ஏற்பட்டதில் இருந்து தொடர்ந்து களத்தில் நின்று, தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர்-சொக்கப்பழங்கரை ஊராட்சியில் கனிமொழி எம்.பி. நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு கண் பார்வை குறைபாடுள்ள 7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமியை கண்ட கனிமொழி எம்.பி. அவரை அருகில் அழைத்து பேசினார். அப்போது அந்த சிறுமி 'தனக்கு கண் பார்வையில் பிரச்சனை இருக்கிறது என்றும், அதற்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும்' என்றும் வேண்டுகோள் வைத்தார். சிறுமியின் அந்த வார்த்தையை கேட்டதும், உடனடியாக கண் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார்..

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை : தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    29.12.2023 மற்றும் 30.12.2023: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    31.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    01.01.2024 மற்றும் 02.01.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வங்கிகள் மூலமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம்.
    • சுனாமி ஏற்பட்ட போது கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு, சேதாரங்கள் ஏற்பட்டது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

    பாதிப்பு குறித்த விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அவருக்கு விளக்கி கூறினார். அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மழை வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி., வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் சிங் பேடி, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாக செயலாளர் கார்த்திகேயன், மேலாண்மை துறை ஆணையர் அபூர்வா, சிறு தொழில் துறை ஆணையர் அட்சயா பட்நாயக், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்து 'பவர் பாயிண்ட் பிரசன்டேசன்' மூலம் விளக்கி கூறினர்.

    முன்னதாக கலெக்டர் அலுவலக ஆலோசனை கூட்டம் 45 நிமிடங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 1¾ மணி நேரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள சேதங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள், கொடுக்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தேவையான நிவாரணம் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு 78 பக்க ஆய்வு அறிக்கையை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.

    அதனை முடித்து கொண்டு தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட குறிஞ்சி நகர் பகுதி, உடைப்பு ஏற்பட்ட கோரம்பள்ளம் குளம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி தாலுகா கோரம்பள்ளம், மறவன்மடம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, முறப்ப நாடு, கோவில்பத்து மற்றும் ஏரல் தாலுகாவில் உள்ள ராஜபதி தெற்கு வாழ வல்லான் ஆகிய பகுதிகள் என மாவட்டத்தில் சுமார் 120 கிலோ மீட்டருக்கு பயணித்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது, உமரிக்காடு பொதுமக்கள் வரலாறு காணாத மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், பொதுவாக மழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என தெரிவித்தார்.

    வங்கிகள் மூலமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம். மாநில அரசுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.

    இதுவரை தேசிய பேரிடர் என எப்போதும் அறிவிக்கப்பட்டது இல்லை. சுனாமி ஏற்பட்ட போது கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

    எனினும் மாநில அரசின் அதிகாரிகள் இயற்கை பேரிடரை அறிவிப்பதில் நடவடிக்கை எடுத்தவுடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க எஸ்.எல்.பி.சி. செயல்முறை மூலம் முன் முயற்சிகள் எடுக்க அறிவுறுத்தினார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதி வாய்ந்த 2.5 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை தகுந்த நேரத்தில் வழங்கி அறுவடை பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    (பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.38 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளது). வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து தொடர் முகாம்களை நடத்த வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

    தோட்டக்கலை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெள்ளத்தின் போது வீடுகளை இழந்து காப்பகங்களில் தங்கி உள்ள பெண்கள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொண்டனர்.

    அப்போது தகுதியான பெண்களின் வீடுகளை மீண்டும் கட்டித்தரவும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வராதவர்களுக்கு மீண்டும் வீடுகளை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி தாங்கள் தயாரித்து வைத்த பொருட்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பெண் தொழிலாளர்கள் கூறினர்.

    அப்போது மண்பாண்ட பொருட்கள் மற்றும் ரங்கோலி வண்ணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்ளூர் பெண்கள் மீண்டும் தொழில் தொடங்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    மேலும் மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள், தொழில் அதிபர்கள் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

    ஏற்கனவே வாங்கிய கடனுக்கு செலுத்தும் மாதாந்திர தவணை 2 ஆண்டிற்கு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழகம் முழுவதும் செல்லவில்லை.
    • எனக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அங்கு சென்றேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழகம் முழுவதும் செல்லவில்லை. தூத்துக்குடிக்கு மட்டுமே சென்றேன். அங்கு மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

    மக்கள் கூறிய கருத்தை நான் வெளிப்படுத்தினேன். அது என்னுடைய கருத்து கிடையாது. மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    என் சொந்த ஊர். நான் போட்டியிட்ட இடத்தில் எனக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அங்கு சென்றேன்.

    அமைச்சர் சேகர்பாபு கூறியது போல போட்டியிட செல்லவில்லை. தமிழக அரசில் தலையிட செல்லவில்லை.

    சபாநாயகர் அப்பாவு, இவர் யார் அங்கு ஆய்வு செய்வதற்கு? என கேள்வி எழுப்புகிறார். தி.மு.க.வை குற்றம்சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இல்லை. ஆனால் தவறு இழைக்கப்பட்டுள்ளது என்பதை கூறினேன்.

    என் சகோதர, சகோதரிகள் துன்பத்தில் பங்கேற்க ஆறுதலுக்காக சென்றேனே தவிர, ஆய்வுக்காக செல்லவில்லை. இதை தி.மு.க.வினர் கொச்சைப்படுத்த வேண்டாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசியல் கட்சியை விமர்சிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை. தி.மு.க.வின் திராவிட மாடல் குறித்து தமிழிசை விமர்சித்து பேசியுள்ளார். இதனால் மத்திய அரசு அவரை கவர்னர் பதவியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என கூறிப்பிட்டு இருந்தார். மேலும் ஒரு கவர்னர் அரசியல் செயல் குறித்து விமர்சித்துள்ளதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளம் பாதித்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிகிறார்.
    • சிறு,குறு வணிகர்களையும் சந்தித்து பேச உள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 16,17,18-ந் தேதிகளில் வரலாறு காணாத கனமழை கொட்டியது.

    இரண்டு மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்த மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தூத்துக்குடி மாவட்டத்தில் 1,000 கிராமங்கள் தனித்தீவாக மாறியது.

    பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டும், ரெயில் தண்டவாளங்கள் மண் அரிப்பால் அந்தரத்தில் தொங்கியதாலும் சாலை, ரெயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விமான சேவையும் பாதிக்கப்பட்டது. உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கடற்படை, விமானம், ராணுவம் என முப்படைகளும் தூத்துக்குடியில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.

    கடந்த 21-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் வெள்ள சேத நிவாரணத்தை அறிவித்தார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு அதிக நிவாரண தொகை வழங்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெள்ள சேதங்களை பார்வையிட இன்று தூத்துக்குடி வந்தார்.

    இதற்காக நேற்று டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.


    பின்னர் அவர் அங்கிருந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நிவாரண பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு விளக்கி கூறினர்.

    இந்த கூட்டத்தை முடித்து கொண்டு தூத்துக்குடி மாநகரில் வெள்ளம் அதிகம் பாதித்த குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்ய உள்ளார்.

    அப்போது வெள்ளம் பாதித்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிகிறார்.

    இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் சாலை வழியாக கார் மூலம் சென்று மாவட்டத்தில் மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேலும் சிறு,குறு வணிகர்களையும் சந்தித்து பேச உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
    • வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி, வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.

    சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட வட்டங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

    • கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும்.
    • 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு நிவாரணமாக வழங்க மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

    கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும். குடும்ப அட்டை அடிப்படையில் பொருட்களை வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, அனைத்து வட்ட அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் குடும்பத்தினர் பரிதவித்தனர்.
    • நர்ஸ் ஜெயலட்சுமி பிரசவத்திற்கு தேவையான முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு ரம்யாவை கொண்டு சென்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பட்டாண்டிவிளையைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். இவரது மனைவி ரம்யா (வயது 24). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 18-ந் தேதி காலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அப்போது, கனமழை பெய்தது. இதனால் ரம்யாவின் தாயார் பாத்திமா, அவரது தம்பி ஜேசுபால் மற்றும் உறவினருடன் அன்று காலையில் சரக்கு ஆட்டோவில் ஏரல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் ஏரல் அருகே உள்ள சூழைவாய்க்கால் சாலையில் வெள்ளம் அதிகமாக சென்றதால் ஆட்டோவில் செல்ல முடியவில்லை.

    இதனால் ஜேசுபால், ரம்யாவை தோளில் தூக்கிக் கொண்டும், அப்பகுதி மக்கள் சேர்ந்து கையை பிடித்து சேர்த்து கொண்டு தண்ணீரைக் கடந்து ஏரலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் குடும்பத்தினர் பரிதவித்தனர். மாலை 6 மணி அளவில் வெள்ளம் ஆஸ்பத்திரி உள்ளே வந்தது. அப்போது, ரம்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது.

    அங்கிருந்த நர்ஸ் ஜெயலட்சுமி பிரசவத்திற்கு தேவையான முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு ரம்யாவை கொண்டு சென்றார். முட்டளவுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தபோது, ரம்யாவுக்கு, ஜெயலட்சுமி பிரசவம் பார்க்க தொடங்கினார். இரவு 7 மணிக்கு ரம்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    வெள்ளம் குறைந்த 3 நாட்களுக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து ரம்யா, குழந்தை மற்றும் குடும்பத்தினரை படகு மூலம் சிறுத்தொண்டநல்லூரில் கொண்டு விட்டனர். அங்கிருந்து போலீசார் தங்களது வாகனத்தில் பட்டாண்டிவிளையில் விட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

    இதுகுறித்து ரம்யாவின் தாயார் பாத்திமா கூறுகையில், 'எங்களுக்கு நர்ஸ் ஜெயலட்சுமிதான் தெய்வம். நாங்கள் எப்படி தப்பிப்போம். குழந்தையை எப்படி காப்பாற்றுவோம் என நினைத்தோம். ஆனால் கடவுள் அருளால் ஜெயலட்சுமி எங்களுக்கு உதவி செய்தார்' என்றார்.

    இதுதொடர்பாக நர்ஸ் ஜெயலட்சுமி கூறுகையில், 'ரம்யா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வரும்போது தண்ணீர் இல்லை. பிறகு கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளம் வந்தபோது, எனக்கு பயமாக தான் இருந்தது.

    மின்சாரமும் இல்லாததால் இன்வெர்ட்டர் மூலம் ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த பல்ப்பை நாடித்துடிப்பு பார்க்கும்போது இயக்குவேன். சரியாக இரவு 7 மணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமாக இருந்தனர். அப்போது, பல்ப்பும் அணைந்து விட்டது. கடவுள் புண்ணியத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை' என்றார்.

    • மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடியில் உப்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    திருச்சி:

    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

    * 4 மாவட்டங்கள் உற்பத்தி திறன் இழந்துள்ளது.

    * தூத்துக்குடியில் உப்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    * மழை வெள்ளத்தால் தமிழக அரசுக்கு படிப்பினை இல்லை.

    * மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×