search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி"

    • ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் குடும்பத்தினர் பரிதவித்தனர்.
    • நர்ஸ் ஜெயலட்சுமி பிரசவத்திற்கு தேவையான முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு ரம்யாவை கொண்டு சென்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பட்டாண்டிவிளையைச் சேர்ந்தவர் ஜோன்ஸ். இவரது மனைவி ரம்யா (வயது 24). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    கடந்த 18-ந் தேதி காலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அப்போது, கனமழை பெய்தது. இதனால் ரம்யாவின் தாயார் பாத்திமா, அவரது தம்பி ஜேசுபால் மற்றும் உறவினருடன் அன்று காலையில் சரக்கு ஆட்டோவில் ஏரல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அந்த சமயத்தில் ஏரல் அருகே உள்ள சூழைவாய்க்கால் சாலையில் வெள்ளம் அதிகமாக சென்றதால் ஆட்டோவில் செல்ல முடியவில்லை.

    இதனால் ஜேசுபால், ரம்யாவை தோளில் தூக்கிக் கொண்டும், அப்பகுதி மக்கள் சேர்ந்து கையை பிடித்து சேர்த்து கொண்டு தண்ணீரைக் கடந்து ஏரலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லாததால் குடும்பத்தினர் பரிதவித்தனர். மாலை 6 மணி அளவில் வெள்ளம் ஆஸ்பத்திரி உள்ளே வந்தது. அப்போது, ரம்யாவுக்கு பிரசவ வலி அதிகமானது.

    அங்கிருந்த நர்ஸ் ஜெயலட்சுமி பிரசவத்திற்கு தேவையான முக்கியமான பொருட்களை எடுத்துக் கொண்டு பிரசவ வார்டுக்கு ரம்யாவை கொண்டு சென்றார். முட்டளவுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தபோது, ரம்யாவுக்கு, ஜெயலட்சுமி பிரசவம் பார்க்க தொடங்கினார். இரவு 7 மணிக்கு ரம்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    வெள்ளம் குறைந்த 3 நாட்களுக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து ரம்யா, குழந்தை மற்றும் குடும்பத்தினரை படகு மூலம் சிறுத்தொண்டநல்லூரில் கொண்டு விட்டனர். அங்கிருந்து போலீசார் தங்களது வாகனத்தில் பட்டாண்டிவிளையில் விட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

    இதுகுறித்து ரம்யாவின் தாயார் பாத்திமா கூறுகையில், 'எங்களுக்கு நர்ஸ் ஜெயலட்சுமிதான் தெய்வம். நாங்கள் எப்படி தப்பிப்போம். குழந்தையை எப்படி காப்பாற்றுவோம் என நினைத்தோம். ஆனால் கடவுள் அருளால் ஜெயலட்சுமி எங்களுக்கு உதவி செய்தார்' என்றார்.

    இதுதொடர்பாக நர்ஸ் ஜெயலட்சுமி கூறுகையில், 'ரம்யா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வரும்போது தண்ணீர் இல்லை. பிறகு கொஞ்சம், கொஞ்சமாக வெள்ளம் வந்தபோது, எனக்கு பயமாக தான் இருந்தது.

    மின்சாரமும் இல்லாததால் இன்வெர்ட்டர் மூலம் ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. அந்த பல்ப்பை நாடித்துடிப்பு பார்க்கும்போது இயக்குவேன். சரியாக இரவு 7 மணிக்கு குழந்தை பிறந்தது. குழந்தையும், தாயும் நலமாக இருந்தனர். அப்போது, பல்ப்பும் அணைந்து விட்டது. கடவுள் புண்ணியத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை' என்றார்.

    • பிரசவ வலி அதிகமாகி அலறித்துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது.
    • இரவு நேரங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இல்லாதது வேதனையாக உள்ளது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 32).

    இவரது மனைவி சுபத்ரா தேவி (24). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் 2-வது பிரசவத்திற்கு சுபத்ரா தேவி திசையன்விளை அருகே உள்ள நாலந்துலாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

    இரவு பிரசவத்திற்கான வலி வந்ததால் திசையன்விளையில் உள்ள 33 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது கணவர் ராஜ் மற்றும் சித்தியுடன் பிரசவம் பார்க்க சென்றுள்ளார்.

    ஆனால் அங்கு இரவு நேரம் பணியில் உள்ள டாக்டர்களோ, நர்சுகளோ இல்லாததால் 1 மணி நேரமாக மருந்து, மாத்திரை, ஊசி என எந்த மருத்துவம் கொடுக்காமல் பிரசவ வலியில் சுபத்ரா ஜோதி அலறி துடித்துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் ஒரு பயிற்சி செவிலியரும், துப்புரவு பணியாளர் ஒருவரும் இருந்துள்ளனர்.

    அவர்களிடம் 108 ஆம்புலன்சை வர சொல்லுங்கள், நாங்கள் நெல்லை அரசு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுகிறோம் என்று கூறியும் ஒன்றரை மணி நேரமாக எந்த ஆம்புலன்சும் வரவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் பிரசவ வலி அதிகமாகி அலறித்துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவம் பார்க்காமலேயே பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் வெகுநேரம் கழித்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கர்ப்பிணி பெண்ணை தையல் போடுவதற்கான பிரசவ வார்டுக்கு ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்து கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 33 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயர்தான் உள்ளதே தவிர இன்னும் சரியான மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் தான் இயங்கி வருகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் விபத்து போன்றவைகளில் சிக்கிய நோயாளிகள் கடும் அவதிக்கும், வேதனைக்கும் உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 27-ந் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு செய்து பணியில் இல்லாத ஊழியர்களுக்கு மெமோ கொடுத்து சென்றார்.

    ஆனால் இங்கு 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என விளம்பர பலகையில் வைக்கப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணியில் இல்லாதது வேதனையாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து முழுநேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • படுகாயமடைந்த மீரா காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
    • துப்பாக்கியால் சுடப் பட்டதில் படுகாயமடைந்த மீராவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் அமெரிக்கா வந்திருக்கின்றனர். அவர்களது 3 வயது மகன் டேவிட் கோட்டயத்தில் தனது தாத்தா-பாட்டி பராமரிப்பில் வளர்ந்திருக்கிறான். அவனை கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவுக்கு மீரா அழைத்துச் சென்றார்.

    இந்நிலையில் மீரா மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவர், தனது சகோதரியுடன் செவிலியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரவு மீரா தனது கணவர் அமலுடன் காரில் சென்றார். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

    கணவன்-மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அமல் ரெஜி, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மீராவை துப்பாக்கியால் சுட்டார். சுமார் 10-க்கும் மேற்பட்ட முறை அவர் சரமாரியாக சுட்டிருக்கிறார்.

    இதில் படுகாயமடைந்த மீரா காருக்குள் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஆத்திரத்தில் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்ட அமல் ரெஜி, சிறிது தூரம் சென்றதும் அங்கிருந்த தேவாலய பார்க்கிங் பகுதியில் தனது காரை நிறுத்தினார்.

    பின்பு அங்கிருந்தவர்களிடம் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக கூறிய அவர், அதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மீராவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    மனைவியை துப்பாக்கியால் சுட்ட அமல்ரெஜியை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியால் சுடப் பட்டதில் படுகாயமடைந்த மீராவுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டது.

    அமல் மீது கொலை முயற்சி மற்றும் பிறக்காத குழந்தையை வேண்டு மேன்றெ கொன்றதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமைடைந்த மீரா கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

    • மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தனர்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூலித்தொழிலாளி, இவரது மனைவி அஞ்சலி தேவி (வயது 34), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பிரசவத்திற்காக உறவினர்கள் ஒரத்தநாடு தாலுகா, தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கிருந்து அஞ்சலிதேவியை மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து, அவர் ஆலத்தூரில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இந்நிலையில், தஞ்சை செல்லும் வழியில் அஞ்சலி தேவிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஓட்டுநர் முரளி சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை நிபுணர் சிதம்பர கண்ணன் அஞ்சலி தேவிக்கு பிரசவம் பார்த்தார்.

    இதில் அஞ்சலி தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர், மீண்டும் ஆம்பு லன்ஸ் தொண்ட ராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தாயும், சேயும் அழைத்து செல்லப்பட்டனர்.

    உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தை யையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • 21 வகையான சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
    • கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    கோட்டூர் அடுத்த ஆதிச்சபுரத்தில் குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா கோட்டூர் ஒன்றிய தலைவர் மணிமேகலை தலைமையில், கோட்டூர் வட்டார திட்ட அலுவலர் அபிநயா முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தாம்பூலம், குங்கும சிமிழ், புடவை, வெற்றிலை, பாக்கு, பூ, வளையல், பழங்கள் உள்பட 21 வகையான சீர்வரிசை பொருட்களை 100 கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.

    விழாவில் தாய்பால் கொடுப்பதன் அவசியம் குறித்தும், கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும் கர்ப்பிணிகளுக்கு எடுத்துரைக்க ப்பட்டது.

    இதில் டாக்டர் பிரியங்கா, மேற்பார்வையாளர்கள் தமிழ்செல்வி, சுசீலா, விஜயா, திட்ட உதவியாளர் பிரபு, அலுவலக உதவியாளர் அருண்ராஜ், கோட்டூர் வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை பணியாளர் கவிதா தொகுத்து வழங்கினார்.

    முடிவில் பணியாளர் கனகா நன்றி கூறினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

    பூதப்பாண்டி:

    தோவாளை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் திட்டுவிளையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லாவண்யா தலைமை தாங்கினார். தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் புனிதம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ், ஒன்றிய கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை செயலாளர் பார்வதி, பேரூர் செயலாளார் ஜான்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கு மதிய வேளை அறுசுவை உணவளிக்கும் நிகழ்ச்சி.
    • அரசு மருத்துவர் காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இசிஜி உள்ளிட்ட பொருட்கள் வேண்டுமென அரிமா சங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டூர், மீஞ்சூர், அத்திப்பட்டு, பொன்னேரி, ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் கர்ப்பிணிமார்களுக்கு பொன்னேரி அரிமா சங்கம் சார்பில் மதிய வேளையில் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. அதன் படி இந்நிகழ்வானது 100 வது வாரமாக நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கு மதிய வேளை அறுசுவை உணவளிக்கும் நிகழ்ச்சியில் அரிமா சங்க முதல் துணை மாவட்ட ஆளுநர் ரவிச்சந்திரன், இரண்டாவது துணை மாவட்ட ஆளுநர் மணி சேகர், முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ்குமார், மாவட்டத் தலைவர் சரவணன், மண்டல தலைவர் எஸ்.சரஸ்வதி, மற்றும் காட்டூர் அரசு மருத்துவர் மதுசுதர்சனன், பொன்னேரி பகுதி அரிமா சங்கத் தலைவர் ராஜா, செயலாளர் சுகுமார், பொருளாளர் கோபி, நிர்வாகிகள் வினோத், சந்திரசேகர், பிரவீன்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு மதிய வேளை அறுசுவை உணவு வழங்கினர்.

    முடிவில் அரசு மருத்துவர் காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர், இசிஜி உள்ளிட்ட பொருட்கள் வேண்டுமென அரிமா சங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.

    • கணவன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
    • அவரது உடலை கணவனின் வீட்டின் முன்பு புதைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரசேரி பகத்சிங் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது35) கொத்தனார். இவரது மனைவி சுபா லட்சுமி(25). இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்பொ ழுது சுபாலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    அய்யப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுவந்தது. இந்தநிலையில் சுபாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தூங்கினார். இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து சுபாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைய டுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். ஆனால் சுபாலட்சுமி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுபாலட்சுமி சாவிற்கு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் 2பேர் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் அவரது உடலை கணவனின் வீட்டின் முன்பு புதைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினா ர்கள். இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் உடலை பெற்று கொள்வதாக கூறினார்கள். பின்னர் சுபாலட்சுமி உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.
    • அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த முருகன் மகள் பவித்ரா. இவர் மயக்கவியல் உதவியாளர் கல்வி பயின்றுள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த மே மாதம் 22-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில் பவித்ரா 3 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    வரதட்சணை

    இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓம லூருக்கு வந்த மோகன்ராஜை அவரது பெற்றோர் மறைத்து வைத்து கொண்ட தாகவும், இதுகுறித்து கேட்டபோது தன்னை மிரட்டி 100 பவுன் நகை ரூ.20 லட்சம் பணம் வாங்கி வா என கூறியதாகவும் பவித்ரா மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டிடம் புகார் அளித்தி ருந்தார். இந்த நிலையில் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி நேற்று முன்தினம் முதல் கணவரின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மோகன்ரா ஜின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

    வழக்கு பதிவு

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீ சார் நேரில் சென்று விசா

    ரணை நடத்தினர். தொடர்ந்து பவித்ராவின் கணவர் மோகன்ராஜ், அவ ரது தந்தை முருகன், தாய் சாரதா என்கிற சத்தியா, உறவினர்கள் பூபதி, சவுமியா, செல்வி, பிரபு ஆகிய 7 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
    • கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் புருகீஸ்பேட்டையை சேர்ந்தவர் ரவிக்குமார் .இவரது மனைவி கல்பனா (வயது 33). கல்பனா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் கல்பனாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று கல்பனாவுக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்பனாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். செல்லும் வழியிலே பரிதாபமாக கல்பனா உயிரிழந்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நல்வாழ்வுத்துறையின் சார்பில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் 5.௦ தொடங்கப்பட்டது.
    • 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

     திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தீவிர மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் 5.0 கீழ் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுபட்ட தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டத்தின்படி விடுபட்ட மற்றும் பகுதி தடுப்பூசி போடப்படாத 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1897 குழந்தைகள் மற்றும் 305 கர்ப்பிணி பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் சுற்றான ஆகஸ்ட் 7 முதல் 14 வரை தடுப்பூசி வழங்கப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடைபெறும்.

    மேலும் இந்த விபரங்களை யு-வின் என்ற இந்திய அரசின் கணினி மென்பொருள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்த சான்றிதழ்களை பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜிகிரியப்பனவர் , துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், மாநகர நல அலுவலர் கௌரிசரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
    • பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும்.

    உத்திரபிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது.

    அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளித்து கண்காணித்து வருவதாக மீரட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 16 மாதங்களில் 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியின் ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி மையத்தின் அறிக்கையின்படி, "லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு குழந்தைப் பிரசவத்திற்காக வந்த 81 கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

    81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

    ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி (ஏஆர்டி) மையத்தின் அறிக்கையின்படி, 2022-23ம் ஆண்டுக்கு இடையில், மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியில் கர்ப்பிணிப் பெண்களிடையே 33 புதிய எச்ஐவி பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூலை 2023 வரை 13 புதிய பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 35 கர்ப்பிணிப் பெண்கள் ஏற்கனவே எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரியின் ஏஆர்டி மையத்தில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

    பிறந்த குழந்தைகளின் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, ஏஆர்டி மையத்தின் நோடல் அதிகாரியிடம், பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும் என்றார்.

    ×