என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆட்டோவில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் போலீஸ்
    X

    ஆட்டோவில் வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் போலீஸ்

    • பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதால் பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே அவருக்கு பிரசவம் பார்த்தார்.
    • கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

    திருப்பூர்:

    சுதந்திர தினத்தையொட்டி நேற்றிரவு திருப்பூர் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு ஏ.வி.பி., பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. அதில் வந்த பெண் கதறி அழுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கோகிலா மற்றும் போலீசார் உடனே ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாரதி என்பவரை பிரசவத்திற்காக இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அவரது கணவர் அழைத்து செல்வது தெரியவந்தது.

    மேலும் பாரதிக்கு பாதி குழந்தை வெளியே வந்த நிலையில் அவர் கதறி துடித்தார். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்கு முன் குழந்தை பிறந்து விடும் என்பதாலும், பாரதியின் உயிருக்கு ஆபத்து என்பதாலும் நர்சிங் படித்திருந்த பெண் போலீஸ் கோகிலா தைரியமாக ஆட்டோவில் வைத்தே பாரதிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதனைத்தொடர்ந்து உடனடியாக பாரதி மற்றும் குழந்தையை திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த நிலையில் தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

    பாரதிக்கு பிரசவம் பார்த்து அவரது உயிரை காப்பாற்றிய கோகிலாவை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.

    இதுதொடர்பாக கோகிலா கூறுகையில், நர்சிங் படித்துள்ள நான் மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளேன். பிரசவங்களும் பார்த்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்புதான் தமிழக காவல்துறை பணியில் சேர்ந்தேன். பிரசவம் பார்த்த அனுபவம் இருந்ததால் எந்தவித பதற்றமின்றி நேற்றிரவு பாரதிக்கு பிரசவம் பார்த்தேன். தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.

    Next Story
    ×