search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது: நிர்மலா சீதாராமன் மீண்டும் திட்டவட்டம்
    X

    மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது: நிர்மலா சீதாராமன் மீண்டும் திட்டவட்டம்

    • வங்கிகள் மூலமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம்.
    • சுனாமி ஏற்பட்ட போது கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு, சேதாரங்கள் ஏற்பட்டது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

    பாதிப்பு குறித்த விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அவருக்கு விளக்கி கூறினார். அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மழை வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி., வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் சிங் பேடி, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, நகராட்சி நிர்வாக செயலாளர் கார்த்திகேயன், மேலாண்மை துறை ஆணையர் அபூர்வா, சிறு தொழில் துறை ஆணையர் அட்சயா பட்நாயக், மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் குறித்து 'பவர் பாயிண்ட் பிரசன்டேசன்' மூலம் விளக்கி கூறினர்.

    முன்னதாக கலெக்டர் அலுவலக ஆலோசனை கூட்டம் 45 நிமிடங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் 1¾ மணி நேரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள சேதங்கள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள், கொடுக்கப்பட வேண்டிய நிவாரணங்கள் குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தேவையான நிவாரணம் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு 78 பக்க ஆய்வு அறிக்கையை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் வழங்கினார்.

    அதனை முடித்து கொண்டு தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகம் பாதிக்கப்பட்ட குறிஞ்சி நகர் பகுதி, உடைப்பு ஏற்பட்ட கோரம்பள்ளம் குளம் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி தாலுகா கோரம்பள்ளம், மறவன்மடம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, முறப்ப நாடு, கோவில்பத்து மற்றும் ஏரல் தாலுகாவில் உள்ள ராஜபதி தெற்கு வாழ வல்லான் ஆகிய பகுதிகள் என மாவட்டத்தில் சுமார் 120 கிலோ மீட்டருக்கு பயணித்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது, உமரிக்காடு பொதுமக்கள் வரலாறு காணாத மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

    எனவே மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், பொதுவாக மழை, வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என தெரிவித்தார்.

    வங்கிகள் மூலமாக என்ன உதவி செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்வோம். மாநில அரசுக்கு வங்கிகள் மூலமாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.

    இதுவரை தேசிய பேரிடர் என எப்போதும் அறிவிக்கப்பட்டது இல்லை. சுனாமி ஏற்பட்ட போது கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

    எனினும் மாநில அரசின் அதிகாரிகள் இயற்கை பேரிடரை அறிவிப்பதில் நடவடிக்கை எடுத்தவுடன் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கடன் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க எஸ்.எல்.பி.சி. செயல்முறை மூலம் முன் முயற்சிகள் எடுக்க அறிவுறுத்தினார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தகுதி வாய்ந்த 2.5 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை தகுந்த நேரத்தில் வழங்கி அறுவடை பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    (பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1.38 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் உள்ளது). வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து தொடர் முகாம்களை நடத்த வேண்டும் என காப்பீட்டு நிறுவனங்களை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

    தோட்டக்கலை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெள்ளத்தின் போது வீடுகளை இழந்து காப்பகங்களில் தங்கி உள்ள பெண்கள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொண்டனர்.

    அப்போது தகுதியான பெண்களின் வீடுகளை மீண்டும் கட்டித்தரவும், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வராதவர்களுக்கு மீண்டும் வீடுகளை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி தாங்கள் தயாரித்து வைத்த பொருட்கள் மற்றும் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பெண் தொழிலாளர்கள் கூறினர்.

    அப்போது மண்பாண்ட பொருட்கள் மற்றும் ரங்கோலி வண்ணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்ளூர் பெண்கள் மீண்டும் தொழில் தொடங்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    மேலும் மழை வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள், தொழில் அதிபர்கள் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது கூட்டுறவு வங்கி அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

    ஏற்கனவே வாங்கிய கடனுக்கு செலுத்தும் மாதாந்திர தவணை 2 ஆண்டிற்கு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தினர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவது குறித்து மத்திய அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×