search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி நீர்"

    • 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
    • நாங்கள் விவசாயிகளை காப்பாற்றி இருக்கிறோம். காவிரி விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    பெங்களூரு:

    தமிழகம்-கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக போதிய மழை பெய்யாத காலக்கட்டத்தில் இந்த பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. இதனால் காவிரி நீரை நம்பி இருக்கும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை. ஏற்கனவே இதுபோல் தண்ணீர் திறக்க அறிவுறுத்தியும் கர்நாடக அரசு கண்டுகொள்ளவில்லை.

    இதனால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கர்நாடக அரசு முழுமையாக தண்ணீர் திறக்க மறுத்து பெயரளவிலேயே கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

    இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் மண்டியா மாவட்டத்தில் மட்டும் 20 நாட்களுக்கும் மேல் விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். மேலும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

    இதற்காக பெங்களூருவில் வருகிற 26-ந் தேதி (நாளை மறுநாள்) முழுஅடைப்பு போராட்டம் நடத்த கர்நாடக நீர் பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. அன்றைய தினம் காலையில் டவுன்ஹாலில் இருந்து மைசூரு வங்கி வரை பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பெங்களூரு சுதந்திர பூங்காவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வருகிற 26-ந் தேதி நடைபெற உள்ள முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் என 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    போராட்டத்திற்கு பா.ஜ.க, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. மேலும் வாடகை கார்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், கர்நாடக சினிமா வர்த்தக சபை, தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளன.

    கர்நாடக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், பெங்களூருவில் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்து கடைகள் மற்றும் அவசர சேவைகள், அரசு அலுவலகங்கள், மெட்ரோ சேவைகள், போக்குவரத்து சேவைகள், அவசர சேவைகளை தவிர்த்து தகவல் தொழில்நுட்பத் துறை, வங்கித் துறை, வணிக நிறுவனங்கள், பல்வேறு துறைகள், தொழில் அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகளின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. ஆனால் இந்த விவகாரத்துக்கு எதிர்க்கட்சிகள் அரசியல் சாயம் பூசுகின்றன.

    எனவே முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் அவசியம் இல்லை. மாநில நலனை காப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. எனவே பெங்களூரு முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து தவறிழைக்கக்கூடாது. சட்டம்-ஒழுங்கை யாரும் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

    விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள், சினிமா சங்கங்கள், எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் அரசு தலையிடாது. போராட்டங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது. நாங்கள் எங்கள் கடமையை செய்து வருகிறோம். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் புதிய தெம்புடன் அரசியல் செய்ய தொடங்கி உள்ளனர். ஆனால் நாங்கள் விவசாயிகளை காப்பாற்றி இருக்கிறோம். காவிரி விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றன.

    காவிரி கர்நாடகத்தின் சொத்து அல்ல என்று தி.மு.க. நிர்வாகி ஒருவர் பேசி இருக்கிறார். காவிரி தென்னிந்தியா முழுமைக்கும் சொந்தமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெங்களூருவில் நாளை மறுநாள் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி மேட்டூர் அருகே உள்ள தமிழக-கர்நாடகா எல்லை நுழைவாயில், ஓசூர் அருகே உள்ள நுழைவு வாயில், ஈேராடு மாவட்டம் தாளவாடி நுழைவுவாயில் வழியாக தமிழக பஸ்கள் மற்றும் கனரக, இலகு ரக வாகனங்கள் இயக்கப்படாது என தெரிகிறது. எல்லையில் உள்ள சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு.
    • தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை.

    காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இன்று தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 5ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்திருக்கிறார்.

     

    இந்த விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது, "மாநிலத்தில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், உச்சநீதிமன்ற உத்தரவின் படி தமிழ் நாட்டிற்கு தண்ணீர் திறக்கும் நிலையில் நாங்கள் இல்லை. பாராளுமன்ற சிறப்பு கூட்டம் துவங்கும் முன்பு, இந்த விவகாரம் தொடர்பாக எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி திட்டமிட்டு வருகிறோம்," என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

    காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூட்டி இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் பி.எஸ். எடியூரப்பா, பசுவராஜ் பொம்மை, ஹெச்.டி. குமாரசுவாமி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர்களான பசுவராஜ் பொம்மை மற்றும் குமாரசுவாமி ஆகியோர் மற்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதால், கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

    அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள காவிரி பகுதி அமைச்சர்கள், அனைத்து கட்சிகளை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள், மூத்த அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்து இருந்தார். 

    • உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டம்
    • கர்நாடக அரசின் எதிர்ப்பை சந்தித்து, மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தருகிறோம்

    சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். நாங்கள் மறுபரிசீலனை இல்லாமல் தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

    கே: உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறி உள்ளாரே?

    ப: உச்சநீதிமன்றம் என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அதுதான் உச்சநீதிமன்றம். சென்னைக்கு இந்த பிரச்சினை ஆரம்பித்ததோ, என்றைக்கு இதே பிரச்சினைதான். அவங்க முதலில் நடுவர் மன்றத்தையே ஒத்துக் கொள்ளவில்லை. அதற்கு பிறகு நடுவர் மன்றத்துக்கு வாதாடி அதை பெற்றோம். நடுவர் மன்றத்தில் ஒரு இடைக்கால தீர்ப்பு கேட்டோம். அதை கொடுக்க கூடாது என்று கர்நாடகா முட்டுக்கட்டை போட்டது.

    அதற்கு பிறகு உச்சநீதிமன்றம் சென்று அதற்கும் தீர்வு கண்டோம். அதன் பிறகு கெஜட்டில் வெளியிடக் கூடாது என்றனர். அப்போதும் உச்சநீதிமன்றம் சென்றனர்.

    காவிரி நீர் பிரச்சினையில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    அதை நாங்கள் சந்தித்து தமிழ்நாடு மக்களுக்கு வேண்டிய உரிமையை பெற்றுக் கொண்டுதான் வந்துள்ளோம். இனியும் பெறுவோம்.

    கே: சேப்பாக்கத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் மத்தியில் அமலாக்கத்துறை சோதனை நடத்துள்ளதே?

    ப: அதெல்லாம் எனக்கு தெரியாது.

    கே: இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடிய தமிழக முதல்-அமைச்சர் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். அங்குள்ள கர்நாடக முதல்-மந்திரியிடம் பேசினார் என்றால் சுமூகமாக முடியும் என்று சொல்கிறார்களே?

    ப: அப்படி பேசினால் குளோஸ் ஆகிவிடுவோம். பேச்சுவார்த்தை சரியில்லை என்றுதான் கோர்ட்டுக்கு சென்று இவ்வளவு தூரம் வந்துள்ளோம். மறுபடியும் பேச சென்றால் நாம் சட்டரீதியாக செல்வதை விட்டு விடுவதாக அர்த்தமாகிவிடும்.

    கே: கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்-அமைச்சர் அழுத்தம் கொடுத்தால் இது முடிவுக்கு வரும் என கூறப்படுகிறதே?

    ப: எங்களை கெடுப்பதற்கு அப்படி சொல்கிறார்கள். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே கடைசி வாய்ப்பு. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு இதில் நடவடிக்கை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் இருந்து நீர்மட்டம் 97.96 அடியாக சரிந்துள்ளது.

    சேலம்:

    கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மற்றும் இரு மாநில எல்லை பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    இந்நிலையில் கர்நாடக மாநில அரசு நேற்று கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் 2,787 கன அடி உபரி நீர் திறந்துவிட்டது.

    தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதே அளவு நீர் திறந்து விட்டுள்ளது. அதாவது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,678 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3,502 கன அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் இருந்து நீர்மட்டம் 97.96 அடியாக சரிந்துள்ளது.

    அதேபோல் கபினி அணையில் இருந்து 1,100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 4,223 கன அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் இருந்து 75.92 அடியாக சரிந்துள்ளது.

    இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படுகிற தண்ணீர் முழுவதும் முறையாக தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதிக்கு வந்து சேருகிறதா? என மத்திய நீர்வளத்துதுறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,550 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,266 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 670 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 46.54 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 45.90 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் மேலும் குறைந்து 45.01 அடியானது.

    • சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
    • வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும்

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நேற்றுடன் நிறுத்திவிட்டது. காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    காவிரியில் தண்ணீர் திறந்து விட ஆணையிடக்கோரி, சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதுவரை காத்திருந்தால் குறுவை பருவ நெற்பயிர்கள் முற்றிலுமாக கருகிவிடும். எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதியை அவசரமாக அணுகி, இந்த வழக்கில் 21-ந்தேதி விசாரணை தொடங்கும் வரை, இடைக்கால ஏற்பாடாக வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒரு நீதிபதி விடுமுறை என்பதால் பட்டியலில் இருந்து நீக்கம்
    • இதே அமர்வு விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்ட நிலையில், 21-ந்தேதிக்கு மாற்றம்

    தமிழகத்துக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல் கர்நாடகா அரசு ஏமாற்றியதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. பின்னர் இது தொடர்பாக விசாரணையை நடத்துவதற்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.பி.நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. இந்த அமர்வு முன்பு கடந்த மாதம் 28-ந்தேதி தமிழக அரசின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது தமிழக அரசின் சார்பில் காவிரியில் கர்நாடக அரசு 15 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    ஆனால் கர்நாடக அரசோ, எங்களிடம் அவ்வளவு தண்ணீர் இல்லை என்று வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நதிநீர் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

    அதே நேரத்தில் இந்த விஷயத்தில் உடனடியாக முடிவு எடுக்க நாங்கள் நிபுணர்கள் அல்ல. உரிய விசாரணை நடத்தப்பட்ட பிறகே முடிவெடுக்க முடியும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்திருந்தனர்.

    இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசு 5 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிட உத்தர விட்டது. இதை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மற்றும் காவிரி நதி நீர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இன்று விசாரணை நடைபெறவில்லை.

    தமிழக அரசின் மனு மீதான விசாரணை நீதிபதி கவாய் முன்பு இன்று வந்தபோது தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை நடத்த இயலாது என்று அவர் தெரிவித்தார். 3 நீதிபதிகளில் ஒருவர் இல்லாத நிலையில் வேறு ஒரு தேதியில்தான் விசாரிக்க முடியும் என்றும் நீதிபதி கூறினார்.

    இதையடுத்து தமிழக அரசு சார்பில் தமிழக விவசாயிகளின் நலன் கருதி வருகிற திங்கட்கிழமையாவது மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நீதிபதி கவாய் அடுத்த வாரம் நான் விசாரணை நடத்தும் சூழலில் இல்லை. எனவே வருகிற 21-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தார்.

    அதற்கு முன்பாக நீங்கள் தீர்வு காண வேண்டும் என்று எண்ணினால் சுப்ரீம் கோர்ட்டு தனி நீதிபதியை அணுகிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

    கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீரை திறந்துவிடாத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு மீது விசாரணை நடத்தப்பட்டு காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    ஆனால் இன்னும் 2 வாரங்கள் கழித்தே தமிழக அரசின் மனு மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த சுகுமாறன் கூறும்போது,

    "தமிழக அரசின் மனு மீது இன்னும் 2 வாரங்கள் கழித்தே விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பதன் மூலம் நெற்பயிர்கள் முற்றிலுமாக கருகிக்போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்."

    இது தொடர்பாக விவசாயிகள் கூறும்போது, 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிப் போய் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த கட்டமாக தமிழக அரசு எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசித்து வருகிறது.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பாசனத்திற்கு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி இருந்தது. இதனால் இம்முறை குறுவை பாசனத்தில் நல்ல விளைச்சல் பெறலாம் என விவசாயிகள் நம்பிகையில் இருந்தனர்.

    ஆனால் அணை திறக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. மேலும் தமிழகத்திற்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரையும் கர்நாடக அரசு திறந்து விடவில்லை. மிக குறைந்த அளவே தண்ணீரை திறந்து விட்டது. இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரும் வரவில்லை. கர்நாடக அரசின் இந்த வஞ்சிக்கும் செயலால் தண்ணீர் இன்றி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்கள் காய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனையின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட 1¼ லட்சம் ஏக்கரில் பல பகுதிகளில் பயிர்கள் கருக தொடங்கின. இதைத்தொடர்ந்து கருகி வரும் குறுவை நெற்பயிர்களுக்கு விவசாயிகள் நிவாரணம் கேட்டனர்.

    இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை ஆணையர் எல்.சுப்பிரமணியன் குறுவை சாகுபடி நெற்பயிர்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய வந்துள்ளார்.

    திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை நெற்பயிர்களை நேரில் ஆய்வு செய்த அவர், திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை, கோட்டூர் வட்டாரங்களிலும் ஆய்வு செய்தார்.

    அருகில் உள்ள நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சுவதற்கான சாத்தியங்கள், பயிர்கள் தொடர்ச்சியாக காய்ந்து போகாமல் இருக்க அடிக்க வேண்டிய ஸ்பிரேயர்கள் போன்றவை குறித்து களத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் வடபாதி மங்கலம் அருகே ஓவை பேரையூர் என்ற இடத்தில் வேளாண் ஆணையர் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள விவசாயிகள் அவரிடம் எங்கள் பகுதியில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது என குற்றம் சாட்டினர். உடனடியாக அந்தப் பகுதிக்கு வேளாண் ஆணையர் சென்று ஆய்வு செய்தார். வேளாண்துறை ஆணையரின் இந்த ஆய்வு காவிரி டெல்டா விவசாயிகளிடம் முக்கியத்துவம் பெற்று உள்ளது. இந்த ஆய்வின் போது திருவாரூர் கலெக்டர் சாரூஸ்ரீ மற்றும் வேளாண் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதற்கிடையே குறுவை சாகுபடி நிவாரணம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் வேளாண்துறை வருவாய்த்துறை பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் கூட்டம் தொடங்கியவுடன் விவசாயிகள் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அடுத்த 15 தினங்களுக்கு 5000 கன அடி வீதம் கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

    இந்நிலையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கு தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட வேண்டும் தண்ணீரை பெற்று தருவதற்கான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும், கருகி வரும் குறுவை பயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    சம்பா சாகுபடியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகை தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

    • பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயிற்சி போன்று நடைபயணம் மேற்கொள்கிறார்.
    • கர்நாடக காங்கிரஸ் அரசு எப்போதுமே தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் தடையாக இருந்ததில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், கோவா மாநில பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மும்பையில் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து இக்கூட்டணி தெளிவாக இருக்கிறது. மக்களிடம் மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சியை எடுத்துக் கூறுவதே இக்கூட்டணியின் முக்கிய நோக்கம். எனவே பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து அந்தந்த கட்சிகள் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தான் தேர்தலை சந்திக்கவுள்ளது. நாங்கள் ராகுல் காந்தி பிரதமரானால் இந்தியாவுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதை முன்வைத்தே வாக்கு சேகரிக்க உள்ளோம்.

    மழை, வெள்ளம், வறட்சி, விபத்து, மணிப்பூர் போன்ற மனித பேரழிவுகள் என மக்களுடைய எந்த பிரச்னையாக இருந்தாலும், அந்த இடத்துக்கு மோடி செல்வதில்லை. அவர் விழாக்களுக்கு மட்டுமே செல்வார். மக்களுடைய பிரச்னைகள், கஷ்டங்களில் பங்கு கொள்ளமாட்டார். ஆனால் ராகுல் காந்தி மக்களுடைய பிரச்னைகள், கஷ்டங்கள், துன்பங்களில் உடனிருந்து சந்திக்கக்கூடிய தலைவராக உள்ளார்.

    சந்திராயன்-3 நிலவில் தடம் பதித்தது இஸ்ரோவின் வெற்றி. இந்த அறிவியல் சார்ந்த வெற்றியை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. எனவே, விஞ்ஞானிகள் என்ன பெயர் வைக்க வேண்டும் என நினைக்கின்றனரோ, அதைத்தான் வைக்க வேண்டும்.

    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயிற்சி போன்று நடைபயணம் மேற்கொள்கிறார். அதனால் அவரது நடைபயணம் எங்கே இருக்கிறது என்பது கூட தெரியவில்லை.

    கர்நாடக காங்கிரஸ் அரசு எப்போதுமே தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் தடையாக இருந்ததில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் என்ன சொல்கிறதோ, அதை கர்நாடக காங்கிரஸ் அரசு செய்கிறது. ஆனால் இதற்கு பா.ஜ.க. தடையாக இருக்கிறது. கர்நாடக பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் குமாரசாமி ஆகியோர்தான் விவசாயிகளைப் போராட்டத்துக்கு தூண்டுகின்றனர்.

    கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் போராட்டம் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை தடுப்பதற்காக அண்ணாமலையும், பசவராஜ் பொம்மையும் போடுகிற இரட்டை வேடத்தைத் தமிழக மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவு
    • காவிரியில் நேற்றை அளவைவிட இன்று அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது

    காவிரி மேலாண்மை வாரியம் செப்டம்பர் 12-ந்தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவு தங்களுக்கு சாதகமாக இல்லை என்று கருதிய போதிலும், உத்தரவை பின்பற்றும் வகையில் நேற்றில் இருந்து தண்ணீர் திறக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதை காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்காரணமாக கே.ஆர்.எஸ். அணை, கபினி அணையில் இருந்து நேற்று 6398 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 9279 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    முதலில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது போதிய மழையின்மை காரணத்தினால் அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், அவ்வளது நீர் திறந்து விடமுடியாது என்று கர்நாடகா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா என இரண்டு அரசுகளும் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளன. கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

    • காவிரி மேலாண்மை ஆணையம் 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவு
    • கார்நாடகா சார்பில் தண்ணீர் திறந்து விட வற்புறுத்துவது சரியல்ல எனத் தெரிவிக்கப்பட்டது

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விவகாரத்தில மோதல் இருந்து வருகிறது. காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அப்போது கார்நாடக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை வாரியம் கூடியது. அப்போது கர்நாடக அரசு வினாடிக்கு 5000 கனஅடி நீர் வீதம், 15 நாளைக்கு திறந்து விட வேண்டும் எனத் உத்தரவிட்டிருந்தது.

    இதற்கு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டனையாக இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளார்.

    விவசாயி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தனர். மெழுகுவர்த்தி ஏந்தி வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தை தொடர்ந்து, காவிரி நீர் தொடர்பாக ஆலோசனை நடத்த துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

    இதற்கிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால், அணைகளின் நீர் இருப்புகள் குறைந்து, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இதனால் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இல்லை என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

    நேற்று காவிரில் நீர் வரத்து அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 4200 கனஅடியாக இருந்து நீர்வரத்து 6300 அடியாக அதிகரித்திருந்தது.

    • வரைவு திட்டத்துக்கான ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கியது.
    • பா.ஜனதா காவிரியை மையமாக வைத்து அரசியல் செய்கிறது.

    சென்னை:

    தமிழகத்துக்கு கர்நாடக அரசு தர வேண்டிய காவிரி தண்ணீரை தர மறுக்கிறது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசை பா.ஜனதா எப்படி குறை சொல்கிறதோ அதே போல் கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை அங்குள்ள பா.ஜனதா குறை சொல்கிறது. அவர்களுக்கு காவிரி முக்கியமல்ல. அரசியல் தான் முக்கியம்.

    காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முன் வந்ததும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது பொம்மை. அடுத்ததாக எடியூரப்பா. 3-வதாக குமாரசாமி.

    ஆரம்பத்தில் தண்ணீர் திறக்க முடியாத சூழலில் இருக்கிறோம் என்று துணை முதல்-மந்திரி சிவகுமார் கூறியதும் காங்கிரசாக இருந்தாலும் முதலில் கண்டனம் தெரிவித்தது தமிழக காங்கிரஸ். மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு துணை நிற்போம் என்ற அறிவித்தோம்.

    ஆனால் இப்போது அங்குள்ள பா.ஜனதா தூயவர்கள் எதிர்ப்பதை தமிழக பா.ஜனதா கண்டிக்க வில்லை. இந்த நிமிடம் வரை கண்டித்து ஒரு வார்த்தை கூட அண்ணாமலை பேசவில்லை.

    கடந்த முறை பா.ஜனதா ஆட்சியின் போது தான் மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கினார்கள். வரைவு திட்டத்துக்கான ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கியது. இப்போதும் காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்பதில் அந்த அரசு உறுதியாக இல்லை. ஆனால் தயங்குகிறது. இந்த தயக்கத்துக்கு காரணம் பா.ஜனதாவின் எதிர்ப்பு தான். பா.ஜனதா காவிரியை மையமாக வைத்து அரசியல் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடகத்தின் பிடிவாதமும், காவிரி ஒழுங்குமுறை குழு காட்டும் பாகுபாடும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.
    • உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க ஆணையிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 5ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு ஆணையிடப்பட்டிருக்கிறது. காவிரி படுகையின் தண்ணீர் தேவைக்கு இது போதாது என்பது ஒருபுறமிருக்க, இந்த அளவு குறைவான நீரைக் கூட தமிழகத்திற்கு தர முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது. கர்நாடகத்தின் பிடிவாதமும், காவிரி ஒழுங்குமுறை குழு காட்டும் பாகுபாடும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

    டெல்லியில் இன்று நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், குறுவைப் பயிர்களைக் காப்பாற்றுவதற்காக வினாடிக்கு 24,000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசின் பிரதிநிதிகள், காணொலி மூலமாக அல்லாமல் நேரில் சென்று வலியுறுத்த வேண்டும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால், குறுவை பயிர்களை காக்க வேண்டியதன் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, காவிரி வழக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி விசாரணைக்கு வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க ஆணையிடும்படி தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×