search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவிரி விவகாரத்தில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது மட்டும்தான்- துரைமுருகன்
    X

    காவிரி விவகாரத்தில் கடைசி வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவது மட்டும்தான்- துரைமுருகன்

    • உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டம்
    • கர்நாடக அரசின் எதிர்ப்பை சந்தித்து, மக்களுக்கு காவிரி நீரை பெற்றுத் தருகிறோம்

    சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர். நாங்கள் மறுபரிசீலனை இல்லாமல் தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

    கே: உச்சநீதிமன்றம் வரை செல்வோம் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறி உள்ளாரே?

    ப: உச்சநீதிமன்றம் என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் அதுதான் உச்சநீதிமன்றம். சென்னைக்கு இந்த பிரச்சினை ஆரம்பித்ததோ, என்றைக்கு இதே பிரச்சினைதான். அவங்க முதலில் நடுவர் மன்றத்தையே ஒத்துக் கொள்ளவில்லை. அதற்கு பிறகு நடுவர் மன்றத்துக்கு வாதாடி அதை பெற்றோம். நடுவர் மன்றத்தில் ஒரு இடைக்கால தீர்ப்பு கேட்டோம். அதை கொடுக்க கூடாது என்று கர்நாடகா முட்டுக்கட்டை போட்டது.

    அதற்கு பிறகு உச்சநீதிமன்றம் சென்று அதற்கும் தீர்வு கண்டோம். அதன் பிறகு கெஜட்டில் வெளியிடக் கூடாது என்றனர். அப்போதும் உச்சநீதிமன்றம் சென்றனர்.

    காவிரி நீர் பிரச்சினையில் ஒவ்வொரு அங்குலத்திலும் கர்நாடக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    அதை நாங்கள் சந்தித்து தமிழ்நாடு மக்களுக்கு வேண்டிய உரிமையை பெற்றுக் கொண்டுதான் வந்துள்ளோம். இனியும் பெறுவோம்.

    கே: சேப்பாக்கத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் மத்தியில் அமலாக்கத்துறை சோதனை நடத்துள்ளதே?

    ப: அதெல்லாம் எனக்கு தெரியாது.

    கே: இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடிய தமிழக முதல்-அமைச்சர் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவராக உள்ளார். அங்குள்ள கர்நாடக முதல்-மந்திரியிடம் பேசினார் என்றால் சுமூகமாக முடியும் என்று சொல்கிறார்களே?

    ப: அப்படி பேசினால் குளோஸ் ஆகிவிடுவோம். பேச்சுவார்த்தை சரியில்லை என்றுதான் கோர்ட்டுக்கு சென்று இவ்வளவு தூரம் வந்துள்ளோம். மறுபடியும் பேச சென்றால் நாம் சட்டரீதியாக செல்வதை விட்டு விடுவதாக அர்த்தமாகிவிடும்.

    கே: கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்-அமைச்சர் அழுத்தம் கொடுத்தால் இது முடிவுக்கு வரும் என கூறப்படுகிறதே?

    ப: எங்களை கெடுப்பதற்கு அப்படி சொல்கிறார்கள். காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதே கடைசி வாய்ப்பு. தமிழக விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசு இதில் நடவடிக்கை மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×