search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் விபத்து"

    • தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    வேங்கிக்கால்:

    ஆந்திராவைச் சேர்ந்த 4 பேர் காரில் இன்று அதிகாலை திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி புதூர் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. அதில் இருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    தீயணைப்பு துறையினர் உதவியுடன், இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

    விபத்தில் பலியான 4 பேரும் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள். அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் அடிக்கடி விபத்து நடப்பதால், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். சாலை நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    தற்போது பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கார் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.
    • வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை.

    உத்தரப் பிரதசேம் மாநிலம் மதுராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பரபரப்பு சம்பவம் ஏற்பட்டது.

    அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து- கார் மோதி விபத்துக்குள்ளானது.

    பேருந்தின் பின்பக்கம் கார் மோதியதில், நிலை தடுமாறிய பேருந்து சென்டர் மீடியனில் மோதியது.

    மோதிய வேகத்தில் பேருந்து மற்றும் காரில் தீ பிடித்தது.

    இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தோஷியும், அமிதாவும் காரில் அம்பாஜி கோவிலுக்கு சென்று திரும்பினர்
    • காயங்களுடன் காரிலிருந்து வெளியேற முடியாமல் அமிதா சிக்கி கொண்டார்

    குஜராத் மாநில நர்மதா மாவட்டத்தை சேர்ந்தவர் 55 வயதான பரேஷ் தோஷி. இவரது மனைவி அமிதா.

    பரேஷ் தோஷி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இரு தினங்களுக்கு முன் தோஷி, தனது மனைவி அமிதாவுடன், காரில், பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.

    திரும்பி வரும் வழியில், சபர்காந்தா பகுதியில், தான் மஹுதி கிராமத்தில் கெரோஜ்-கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென அவர்கள் காரின் குறுக்கே ஒரு நாய் வந்தது.


    அந்த நாய் மீது மோதுவதை தவிர்க்க தோஷி காரை திருப்பிய போது, அது எதிர்பாராத விதமாக அங்கிருந்த தூண்கள் மற்றும் சாலை தடுப்புகளிலும் மோதியது.

    அப்போது சாலை தடுப்புகளில் ஒன்று அவர்களது கார் கண்ணாடியை துளைத்து கொண்டு அமிதாவை தாக்கியது. இதில் காரிலிருந்து இறங்க முடியாமல், பலத்த காயங்களுடன் அமிதா சிக்கித் தவித்தார்.

    அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், விபத்தை கண்டு உதவ ஓடி வந்தனர். அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே அமிதாவை வெளியே மீட்டு, இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அமிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்ற தோஷி, கவனக்குறைவாக கார் ஓட்டிய குற்றத்தை புரிந்ததாக தனது பெயரிலேயே முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவு செய்து கொண்டார்.

    ஆங்காங்கே சுற்றி திரியும் நாய்களால், பொதுமக்கள் கடும் சிரமத்தை அனுபவிப்பதாகவும், காலையில் நடைபயிற்சி செய்வதும் கடினமாகி வருவதாக, கடந்த வருடம், அம்மாநில உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மோசமான வானிலையால் ஹெலிகாப்டரில் செல்லவில்லை.
    • காரில் கொல்கத்தா செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    கொல்கத்தாவுக்கு சென்றுகொண்டிருக்கும் போது மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதாக செய்திகள் வெளியாகின.

    பர்த்வானில் இருந்து கொல்கத்தாவுக்கு சாலை வழியாக சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டரில் செல்லவில்லை என கூறப்படுகிறது.

    • நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.
    • விபத்து குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ரமேஷ் (வயது 30). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் தனது நண்பர்கள் 2 பேருடன் ஒரு காரில் பாபநாசத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

    பின்னர் நள்ளிரவு நேரத்தில் 3 பேரும் காரில் பாபநாசத்தில் இருந்து செட்டிகுளத்துக்கு புறப்பட்டு வந்துள்ளனர். காரை ரமேஷ் ஓட்டி வந்துள்ளார்.

    பாபநாசத்தை அடுத்த வடமலை சமுத்திரம் பகுதியில் இருந்து கருத்தப்பிள்ளையூர் கிராமம் வழியாக அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்தது.

    தொடர்ந்து அந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் 2 ஆக உடைந்தது. அதன் பின்னரும் கட்டுக்குள் வராத அந்த கார் அடுத்ததாக இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் காரின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். மற்ற 2 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தார்.
    • முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சங்கம் என்ற இடத்தில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியின் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், அவர் காயமின்றி உயிர் தப்பினார். 

    தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மெகபூபா சென்றுக் கொண்டிருந்த வாகனம் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மெகபூபாவின் தனிப்பட்ட பாதுகாப்பில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பிடிபி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    • திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்ததாக தகவல்.
    • விபத்து காரணமாக திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

    திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி இன்று காலை கேரளா பதிவு எண் கொண்ட ஒரு கார் புறப்பட்டு சென்றது. இந்த காரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்தனர்.

    இந்த கார் இன்று காலை 7 மணி அளவில் திருச்சி - சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், கொள்ளிடம் ஆற்று பாலத்தில் சென்றபோது விபத்தில் சிக்கியது.

    டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள பாலத்தின் தடுப்புக் கட்டையை உடைத்துக் கொண்டு 50 அடி கீழே உள்ள ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் அந்தக் கார் சுக்கு நூறாக உடைந்து அதில் இருந்த இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இது பற்றி அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலைய போலீசாரும், ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்புத் துறையினரும் சம்பவ இடம் விரைந்தனர்.

    பின்னர் ரோப் கிரேன் வாகனத்தின் உதவியுடன் காரையும், இறந்தவர்களின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய காரில் இருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தபோது, திருச்சி விமான நிலைத்திற்கு வந்திறங்கிய, கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருக்கு சொந்தமான உடைமைகள் என்பது தெரியவந்தது.

    அதில் விமான நிலைய சீல்களும் இருந்தன. ஆகவே விபத்தில் இறந்தவர் ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய தனது கணவரை, மனைவி அழைத்து செல்ல வந்த போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

    சென்னை மாநகரில் வெள்ளப்பெருக்கு காரணமாக விமான போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில் ஸ்ரீநாத் திருச்சி வந்து சென்னைக்கு செல்ல நினைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து திருச்சி மாநகர வடக்கு போக்குவரத்துக் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தினை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

    • கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.
    • சாலை விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூளகிரி:

    சூளகிரி அருகே பயங்கரம் சாலையோரமாக நிறுத்த முயன்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 வாலிபர்கள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடன் வந்த மற்ற 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி என்னுமிடத்தில் இன்று அதிகாலை சரக்கு லாரி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு முன் அறிவிப்பு இன்றி சாலையோரமாக உள்ள கடையின் அருகே நிறுத்த முயன்றார்.

    அப்போது அந்த வழியாக 5 பேர் பயணித்த கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக சரக்கு லாரியின் பின்னால் மோதி பயங்கர விபத்திற்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் வந்த சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகினர். மேலும் காரில் இருந்த 2 வாலிபர்கள் பலத்த காயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 வாலிபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சம்பவ இடத்தில் காரில் உயிரிழந்த 3 வாலிபர்களின் உடல்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த சந்தோஷ், திருப்பூரைச் நரேன்யஷ்வந்த், சேலம் மாவட்டம் தாரமங்கலம் தமிழ்அன்பன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்கள் என்பதும், காயமடைந்த வாலிபர்கள் மேட்டூர் தர்வின், திருச்சியைச் சேர்ந்த பர்வின் ஆகியோர் என்பது தெரியவந்தது. காரில் வந்த 5 பேரும் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர் என்பதும், அவர்கள் திருப்பூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு இன்று அதிகாலை சூளகிரி அருகே வந்தபோது விபத்துக்குள்ளானது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    • விபத்தில் காரில் வந்த நபர் படுகாயம் அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம்:

    சப்பாணிப்பட்டி அருகே இன்று காலை 7 மணிக்கு தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கார் ஒன்று அதிவேகமாகச் சென்று மரத்தில் மீது மோதியது. இதனை அடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் காரில் வந்த நபர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு நெடுஞ்சாலை துறை துறையினர் வந்து விபத்துக்குள்ளான காரை மீட்டனர். அப்பொழுது அதில் 33 குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றார்.

    இது குறித்து போலீசார் விசாரித்தபோது, இன்று காலை சப்பாணிப்பட்டி அருகே கார் ஒன்று வேகமாக சென்று விபத்துக்குள்ளானது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அதில் 2 நபர்கள் வந்ததாகவும் ஒரு நபர் முகத்தில் பலத்த அடிபட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், காரில் வந்த மற்றொரு நபர் தப்பி ஓடி தலைமறைவு ஆகிவிட்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் தறிக்கெட்டு ஓடியது
    • கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர்

    ஆலங்காயம்:

    சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 42). இவர் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி கிராமத்தில் உள்ள தனது உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பத்தினருடன் காரில் வந்தார்.

    பின்னர் இன்று காலை அனைவரும் சென்னை நோக்கி புறப்பட்டனர். கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது புது அருகே வந்தபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறிக்கெட்டு ஓடியது. மேலும் முன்னாள் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் தியாகராஜன், அவரது குடும்பத்தினர் சுஜாதா (34), ஜெகதீஸ்வரி (52) மற்றும் ஆட்டோவில் வந்த வாணியம்பாடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த அருண்வின்சென்ட் பால் (37) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான கார் மற்றும் ஆட்டோவை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.

    • மதுரை நோக்கி வந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    மதுரையில் இருந்து பொன்னமராவதிக்கு பயணிகளுடன் வாடகை கார் ஒன்று புறப்பட்டது. இந்த காரை லியாகத் அலி என்பவர் ஓட்டி வந்தார். பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அந்த கார் மதுரையை நோக்கி செல்லும்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூருக்கு வரும்போது திடீரென்று அந்த கார் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் கார் தலை குப்புற கவிழ்ந்தது. டிரைவர் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அந்த மின்கம்பம் சேதமானதால் அந்த பகுதி களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக நெற்குப்பை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சுந்தர பாண்டி யன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • அதிவேகமாக வந்த கார் உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் மீது மோதல்.
    • 68 வயதான டிரைவர் மதுபோதையில் காரை ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு. நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல ஹோட்டல் ஒன்று உள்ளது.

    இந்த ஹோட்டலில் சலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடம் உள்ளது. நேற்று மாலை இந்தப் பகுதியில ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.

    அப்போது திடீரென வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார், இந்த பகுதிக்குள் புகுந்தது. இதில் ஒரு பையன், இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அப்போது, காரை ஓட்டிவந்தது 68 வயது நபர் எனத் தெரியவந்துள்ளது. அவர் மது அருந்தி கார் ஓட்டவில்லை என போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் எடுத்துக் கொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாகன போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காரை வேகமாக ஓட்டி வந்ததுதான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ×